பாஜக தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் இன்று (ஆகஸ்ட் 24) மதியம் காலமானார்.

கடந்த 2014ஆம் ஆண்டு பாஜக அரசு மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்றபோது, நிதித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டவர் அருண் ஜெட்லி. ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கை உள்ளிட்ட நடவடிக்கைகளைப் பிரதமரின் ஆலோசனையின் பேரில் அமல்படுத்தியவர். இதனிடையே அண்மைக்காலமாக ஜெட்லி உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வருகிறார். கடந்தாண்டு அமெரிக்காவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த அருண் ஜெட்லிக்கு அப்போது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அந்த காலகட்டத்தில் ஜெட்லியின் பொறுப்பு மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பியூஸ்கோயலுக்கு கூடுதலாகக் கொடுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நடந்து முடிந்த 2019 மக்களவைத் தேர்தலிலும் அருண் ஜெட்லி போட்டியிடவில்லை. மேலும் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தனக்கு அமைச்சர் பதவி எதுவும் வேண்டாம் என்றும் மறுத்து அரசியலிலிருந்து சற்று ஒதுங்கியிருக்கிறார் அருண் ஜெட்லி.

இந்நிலையில், கடந்த 9ஆம் தேதி உடல் நலக் குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் அருண் ஜெட்லி. அதற்கு அடுத்த நாள் ஜெட்லியின் உடல் நிலை மிகவும் மோசமானதால் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

மேலும் அவரது உடல்நிலை மோசமடைந்ததையடுத்து அவருக்கு உயிர்காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. மத்திய அமைச்சர்கள் உட்பட பல்வேறு தலைவர்களும் சந்தித்து வந்தனர். அருண் ஜெட்லியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது. இன்று மதியம் 12.07 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. அருண் ஜெட்லிக்கு வயது 66. இவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.