இந்தியாவின் தலைநகரில் இரண்டு டஜன் மனித உயிர்கள் பறிபோயிருக்கின்றன. நூற்றுக்கணக்கானோர் காயமடைந்திருக்கிறார்கள். பிரதமர் அமைதியையும் சகோதரத்துவத்தையும் பற்றிப் பேசுகிறார். ஆனால் அவர்தான் நாட்டை இந்த இடத்திற்கு இழுத்து வந்திருக்கிறார்.

கடந்த பல பத்தாண்டுகளில் தலைநகர் தில்லி பார்த்திராத வகுப்புவாத வன்முறை இது. வெறுப்பு அரசியல் இவ்வாறு வெடித்துக் கிளம்பியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பல நூற்றாண்டு கால வகுப்புவாத மோதலின் தவிர்க்கவியலாத வெளிப்பாடு என்று இதைக் கூறமுடியாது. கணித்து, தடுக்க முடியாத வன்முறையின் வெளிப்பாடு என்றும் இதை வகைப்படுத்த முடியாது. மாறாக, இந்த 24 மரணங்களும் நூற்றுக்கணக்கானோருக்கான காயங்களும் கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்திக் கொண்டு வரப்பட்டவை. வெறுப்புப் பேச்சுக்கள் வளர்ந்துகொண்டே இருந்தன. அந்தக் காரியங்களை அரசியல் கட்சிகளின் தலைவர்களே செய்தார்கள், தூண்டிவிட்டார்கள். பன்மைத்துவம், சமத்துவம் ஆகிய இந்தத் தேசத்தின் அஸ்திவாரங்கத்தைத் தகர்த்து, சகிப்பின்மை, வெறுப்பின் பாதையில் இழுத்துச் செல்லும் முயற்சி இது.

இதற்கான உடனடி காரணம் இவைதான்: நரேந்திர மோதியின் நியாயமற்ற குடியுரிமை திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ), தில்லி தேர்தலில் மத்தியில் ஆளும் பா.ஜ.க பயன்படுத்திய ஆபத்தான மிரட்டல் அரசியல், கபில் மிஸ்ரா போன்ற அக்கட்சியின் தலைவர்கள் விடுத்த வெளிப்படை மிரட்டல்கள், தலைநகர் தில்லியின் வட மேற்கு பகுதியில் முஸ்லிம்  போராட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபடுவதைப் பலவந்தமாக தடுக்க முயற்சித்தது. கைகலப்பு மிக வேகமாகக் கட்டுப்பாட்டை மீறி சென்றது. ஆனால், காப்பாற்றுவோர் இல்லாத முஸ்லிம்களே முதன்மையாக இலக்கானார்கள் என்பது வெளிப்படை உண்மை. தேசியவாத கோஷங்கள் எழுப்பிய, துப்பாக்கியால் கண்டபடி சுட்டுக்கொண்டிருந்த கூட்டத்துடன் இணைந்துகொண்டு போலீஸ்காரர்கள் இதை வேடிக்கை பார்த்தார்கள் என கண்ணால் கண்ட சாட்சிகள் கூறுகிறார்கள். “துரோகிகளை சுட்டுக் கொல்லுங்கள்” என்று பி.ஜே.பி தலைவர்கள் மீண்டும் மீண்டும் சொல்வது பதிவாகியுள்ளது. அமைதியான முறையில் போராடியவர்களைப் பார்த்து “ரேப்பிஸ்ட்கள், கொலைகாரர்கள்” என்று பி.ஜே.பிகாரர்கள் கூறியதும் பதிவாகியுள்ளது. இது கேவலமானது என்றாலும் இதெல்லாம் நடக்கும் என்பது ஆச்சரியம் தரவில்லை.

எளிதில் இலக்காகக்கூடிய மத சிறுபான்மையினர் மீது வன்முறையை ஏவித்தான் பி.ஜே.பியின் இந்து தேசியவாத அரசியல் கட்டமைக்கப்பட்டது. காவல் துறையினரின் இழிவான செயலின் பின்னணியில் மோதியின் உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி கோரியுள்ளார். முஸ்லிம்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட பங்களாதேசத்திலிருந்து வந்த சட்ட விரோத அகதிகளை “கரையான்கள்”, “அவர்களை வங்காள விரிகுடாவில் கிடாச வேண்டும்” என்று சொன்னவர்தான் அமித் ஷா. எல்லாம் முடிந்த பிறகு மோதி அவர்கள் “அமைதியும் சகோதரத்துவமும்” திரும்ப வேண்டும் என்று கூறியிருப்பது இத்தனை நாள் மெளனத்திற்கு எந்த வகையிலும் ஈடாகாது. பிரிவினையைத் தூண்டும் தனது அரசியலை மறைக்கும் திரையாகவும் அது மாற முடியாது. சுமார் 1,000 முஸ்லிம்கள் கொல்லப்பட்ட 2002இல் இனப் படுகொலையை ஒட்டி அமெரிக்காவுக்குள் வர அப்போதைய குஜராத் முதல்வர் மோதிக்கு இதற்கு முன்பு தடைவிதிக்கப்பட்டிருந்தது. வேண்டுமென்றே முஸ்லிம்களைக் காகக்த் தவறினால் என்ற குற்றச்சாட்டிலிருந்து உச்ச நீதிமன்றம் அவரை விடுவித்தாலும், சர்வதேச அளவில் அவருக்கு ஒரு மீள் பிம்பம் கிடைத்திருப்பது மோதி இந்திய பிரதமராக உயர்ந்திருப்பதால் மட்டும்தான். இந்தியாவுக்கு முதல் முறையாகச் செல்லும் டொனால்ட் டிரம்ப் ஒரு சர்வாதிகார, தேசியவாத தலைவருடன் கட்டிப்பிடி வைத்தியம் செய்வதில் ஆச்சரியமில்லை. ஏராளமானோர் மோதியின் ஆபத்தான வலதுசாரியைத் திருப்திப்படுத்தும் அரசியலை ஏற்கத்தான் செய்கிறார்கள்.

கடந்த வருடம் பெரு வெற்றி பெற்ற பிறகு தனது செயல் திட்டங்களில் அவர் பெரிதும் வேகம் காட்டுகிறார். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்த ஒரே மாநிலமான காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தார். அந்த மாநிலத்தையே பூட்டிப் போட்டார். அசாமில் குடியுரிமைச் சட்டத்தை நிறைவேற்றச் செய்தார், தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் நிறைவேற்றச் செய்தார். இது 20 லட்சம் பேரை நாடற்றவர்களாக்கியது. அரசியல்ரீதியான எதிர்க்கட்சிகள் பலவீனமாக இருக்கின்றன. சிவில் சமூகத்தின் வாயை அடைக்கும் பல்வேறு காரியங்களை அவர் தொடர்ந்து செய்து வருகிறார். எனினும் சிவில் சமூகம் தொடர்ந்து போராடி வருகிறது. இந்தியா இந்தத் திசையில் இழுத்துச் செல்லப்படுவதில் அந்தத் தேசத்தின் பிரஜைகள் உவர்க்களிக்கிறார்கள். அரசியல் சாஸனத்திற்கு விரோதமானது என பலர் கருதும் குடியுரிமை சட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் மந்தமாக செயல்படுவதாக அவர்கள் கருதுகிறார்கள். நீதிபதிகளில் பலவே மோடி புகழ் பாடுபவர்களாக இருக்கிறார்கள். ஆனால் அதே உச்ச நீதிமன்றம் சமீபத்திய தில்லி வன்முறையில் காவல் துறையின் சுணக்கத்தைக் கடுமையாக கண்டித்திருக்கிறது. வன்முறையை தூண்டிவிடும் பேச்சுக்களை உங்கள் பார்வைக்கு வருவதில்லையா என தில்லி உயர் நீதிமன்றம் போலீஸ் கமிஷனரை கேள்வி கேட்டிருக்கிறது. கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குப் பாதுகாப்பு வழங்கவும் உதவி செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியா இப்போது பயணிக்கும் திசையிலான சரிவைத் தடுக்க முடியாது என்று கூற முடியாது. ஆனால் தனிநபர்களும் அமைப்புகளும் உரிய உதவியின்றி அதைச் சாதிக்க முடியாது என்பதுதான் ஒரே பிரச்சனை.

நன்றி: https://www.theguardian.com/commentisfree/2020/feb/26/the-guardian-view-on-delhis-violence-modi-stoked-this-fire?CMP=share_btn_fb

தமிழில்: செந்தில்குமார்