பாஜக அரசுக்கு மேலும் ஒரு பின்னடைவு. உச்ச நீதிமன்றம் புதன்கிழமை ரஃபேல் வழக்கின் தீர்ப்பை எதிர்த்துத் தொடரப்பட்ட சீராய்வு மனுவில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை ஏற்கக் கூடாது என்ற மத்திய அரசின் ஆட்சேபனைகளை நிராகரித்தது. அவற்றை ஆதாரங்களாக ஏற்கலாம் என்று தெரிவித்துள்ளது. இந்த ஆவணங்களை  ‘தி இந்து’ பத்திரிக்கை முதலில் வெளியிட்டது அதன் பின்னர் ‘ஏ‌என்‌ஐ’ செய்தி நிறுவனம் வெளியிட்டது.

இப்படி வெளியிட்ட ஆவணங்கள் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் இருந்து திருடப்பட்டவை என்று முதலில் வாதிட்ட மத்திய அரசு. இது தேசத்தின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. இந்தத் திருட்டு, இந்தியத் தண்டனை சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றங்கள் என்ற வாதத்தை முன்வைத்து ஆவணங்களை ஏற்கக் கூடாது என்று வலியுறுத்தியது. அந்த வாதத்தை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்து தள்ளுபடி செய்துவிட்டது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், நீதிபதிகள் கிஷன் கவுல், ஜோஸப் ஆகியோர் கொண்ட அமர்வால் விசாரிக்கப்பட்டது. மூன்று நீதிபதிகளும் ஒருமனதாகச் சீராய்வு மனுவில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை ஏற்றுக்கொள்ளலாம் என்று தீர்பளித்தனர். இது 2018 தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த உத்தரவுக்கு மறு ஆய்வு மனுவைத் தாக்கல் செய்த அருண் ஷோரி, “பாதுகாப்புத் துறையில் தவறு நடக்கவில்லை என்று மத்திய அரசு வாதிட்டது. மேலும் ஆவணங்களை ஏற்றுக் கொள்ளுதல் குறித்த மத்திய அரசாங்கத்தின் வினோதமான வாதத்தைத் தள்ளுபடி செய்த இந்த ஒருமனதான தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம்” என்றார்.

மத்திய அரசின் சார்பாக வாதிட்ட அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால், சீராய்வு மனுக்களைத் தள்ளுபடி செய்யவேண்டும், சில ஆவணங்கள் திருடப்பட்டு தி இந்து(ஆங்கிலம்) நாளேட்டில் வெளியிடப்பட்டுள்ளது என்று வாதிட்டார்.

இந்த ஆவணங்கள் அதிகாரப்பூர்வ ரகசிய சட்டம் 1923 கீழ் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் தேச பாதுகாப்புக்கு உகந்தவை, போர் விமானத்தின் தன்மையை விளக்குபவை என்பதால், அதை வெளியிடக்கூடாது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு கடந்த டிசம்பர் விசாரணைக்கு வந்தபோது “ரஃபேல் போர் விமானக் கொள்முதல் விவகாரத்தில் விசாரணை நடத்துவதற்கும், நீதிமன்றம் தலையிடுவதற்கும் எந்தவிதமான முறைகேடு இருப்பதாகத் தெரியவில்லை. ஆதலால், ரஃபேல் போர்விமானங்கள் கொள்முதலில் விசாரணை நடத்த வேண்டிய அவசியமில்லை” என நீதிமன்றம் டிசம்பர் 18-ம் தேதி தீர்ப்பளித்தது.

இந்தநிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து  முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி,  ஆம் ஆத்மி நாடாளுமன்ற உறுப்பினர். சஞ்சய் சிங் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த ஆவணங்களை ஏற்றுக் கொள்ளும் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு மற்றும் மனுதாரர்களான முன்னாள் மந்திரிகள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி மற்றும் வழக்கறிஞரான பிரசாந்த் பூஷன் ஆகியோரின் வாதங்களைக் கேட்ட மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, மார்ச் 14-ம் தேதி தீர்ப்பை ஒத்திவைத்த நிலையில், இன்று இந்தத் தீர்ப்பை  வழங்கியது.

இந்த தீர்ப்பின் மூலம் ரஃபேல் வழக்கு குறித்து செய்திகளில் இடம் பெற்ற ஆவணங்களை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

நாட்டின் பாதுகாப்பு மக்களின் பாதுகாப்பு என்ற மிக அத்தியாவசியமான விஷயங்களில் கூட அரசியல்கட்சிகளும் அரசியல்வாதிகளும் அவர்களுக்கு இணக்கமான தொழிலதிபர்களும் கொள்ளையடிப்பது வெட்கக்கேடானது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு அவர்களைத் தூங்கவிடாது என் நம்புவோம்.