செய்தி வலைத்தள பத்திரிக்கையொன்று 370 தொகுதிகளிலுள்ள மின்னணு வாக்கு எந்திரத்தில் எண்ணிக்கையின்போது வாக்குகள் பொருத்தமற்று இருப்பதைக் கண்டறிந்துள்ளதாக அதிர்ச்சியளிக்கும் செய்தி வெளியிட்டுள்ளது.

‘தி குயிண்ட்’  இணையப் பத்திரிக்கை நடத்திய விசாரணையில் முதல் நான்கு கட்ட தேர்தலின்போது 373 தொகுதிகளில் இந்த முரண்பாடுகள் நடந்துள்ளதைக் கண்டறிந்துள்ளது.

இந்த பத்திரிக்கை அடுத்த மூன்று கட்ட தேர்தல் வாக்கு எண்ணிக்கை  பற்றி ஆராயவில்லை எனத் தெரிவித்துள்ளது.

இதில் கவலைப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் இந்த பத்திரிக்கை இது தொடர்பாகத் தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்டபோது ஆணையம் தன்னுடைய இணைய தளமான eciresults.nic.in இல் இருந்த தகவல்களை நீக்கியது தான்.

முரண்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்ட தொகுதிகள் எனத் தமிழகத்தின் காஞ்சிபுரம், தர்மபுரி மற்றும் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் மதுரா போன்றவை அடங்கும். இந்த நான்கு தொகுதிகளில்தான் அதிக வாக்கு வித்தியாசங்கள்  இருந்தன. இதில் மதுரா தொகுதியில் பாஜகவைச் சேர்ந்த ஹேமாமாலினி வெற்றி பெற்றார். பீகாரிலுள்ள அவுரங்காபாத் தொகுதியிலும் அதிக வித்தியாசங்கள் இருந்ததாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.

‘தி குயிண்ட்’  இணையப் பத்திரிக்கை தேர்தல் ஆணையத்திற்கு மே 27 அன்று அனுப்பிய இமெயிலில் 373 தொகுதிகளில் நடத்த இந்த குளறுபடி பற்றி கேள்வி எழுப்பி இருந்தது.

முன்னாள் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் “இது ஒரு கவலை தரக்கூடிய செய்தி, நான் பொறுப்பில் இருக்கும்போது இது போன்ற நிகழ்வுகள் ஏதும் நடக்கவில்லை”  என்றார்.

இந்த செய்திக்குக் காங்கிரஸ் கட்சி “ ஜனநாயகத்தில் தேர்தல் மட்டுமே மக்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு, அவர்களுக்கு அந்த நம்பிக்கையை அரசாங்கம்தான் தரவேண்டும். வாக்குப் பதிவுகளுக்கும் மின்னணு இயந்திரத்திலுள்ள வாக்கு எண்ணிக்கைக்கும் உள்ள வித்தியாசத்தைத் தேர்தல் ஆணையம் கண்டிப்பாக விளக்கவேண்டும்.” என்றது.

ஜெகனாபாத்தில் பதிவான வாக்குகளைவிட 23,079 வாக்குகள் அதிகமாக இருந்தாக சொல்லி அவற்றைச் செல்லாததாக அறிவித்தனர். இந்த தொகுதியில் ஜனதா தள வேட்பாளர் 1751 வாக்குகள் அதிகம் பெற்று ராஷ்ட்ரீய ஜனதா தள வேட்பாளரை தோற்கடித்தார். இதில் கணக்கில் கொள்ளாத அந்த வாக்குகளை எண்ணியிருந்தால் முடிவுகள் வேறாக இருந்திருக்கும்.

மக்கள் தங்களுக்குப் பிடித்த நிலையான அரசைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு ஐந்து வருடங்களுக்கு ஒரே முறையே கிடைக்கிறது. அதிலும் முன்னேறிய நாடுகள் இன்னமும் மின்னணு வாக்கு எந்திரங்களை அதன் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்கள் காரணமாகப் பயன்படுத்தாமல் இருக்கும்போது அடிப்படை வசதிகள் குறைவாக உள்ள இந்தியா போன்ற பெரிய நாட்டில் மின்னணு வாக்கு எந்திரங்கள் கொண்டு நடத்தப்படும் தேர்தல் குறித்து உலகமெங்கும் பல்வேறு விமர்சனங்களும் நிபுணர்களின் சந்தேகமும் நிலவும் நேரத்தில் இதுபோன்ற செய்திகள் ஜனநாயகத்திற்கு நல்லது அல்ல.