திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய மூன்று மாவட்டங்களை சேர்ந்த மக்கள் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை நிறைவேற்றக்கோரி, கடந்த 60 ஆண்டுகளாமாக வலியுறுத்திவந்த நிலையில், இத்திட்டத்திற்க்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று (பிப்ரவரி 28) நடைபெற்றுள்ளது.

அத்திக்கடவு அவிநாசி திட்டம்

தமிழகத்தில் உள்ள ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய மூன்று மாவட்ட தண்ணீர் பிரச்னையை கருத்தில் கொண்டு மக்கள் பயன்பெறும் வகையில் திட்டமிடப்பட்டதுதான் அத்திக்கடவு அவிநாசி திட்டம். இத்திட்டம் மூலம் திருப்பூர், கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 843 ஊராட்சிகளில் உள்ள 74 குளங்கள் மற்றும் 971 குட்டைகளில் நீர் நிரப்பப்பட்டு, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதுடன் 24,468 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறும். இதனால் சுமார் 50 லட்சம் மக்கள் வரை பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது.

இந்த திட்டம் கடந்த 60 ஆண்டுகளாக ஒவ்வொரு தேர்தலின் போதும் எல்லா கட்சிகளும் செயல்படுத்தப்படும் என தங்களின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு, நிறைவேற்றப்படாமல் இருந்தது. கடந்த 2016 சட்ட மன்ற தேர்தலின் போது, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அத்திக்கடவு அவிநாசி திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்திருந்தார். அதோடு ரூ. 1,862 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

அடிக்கல் நாட்டினார் முதல்வர்

திருப்பூரில் கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவின்போது அத்திக்கடவு அவிநாசி திட்டம் செயல்படுத்தபடும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். பின்னர் அத்திட்டம் இறுதி செய்யப்பட்டு, ரூ.1,652 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் எனத் தமிழக அரசு அறிவித்தது. அதைத்தொடர்ந்து கடந்த ஒரு வருடமாக அதற்கான அரசு நடவடிக்கைகள் ஒவ்வொன்றாக அரங்கேற்றப்பட்டன.

கடந்த 8ஆம் தேதி சமர்ப்பிக்கப்பட்ட நடப்பாண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் 1000 கோடி ரூபாய் நிதி அத்திக்கடவு-அவினாசி திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டது. மேலும் நபார்டு வங்கி மூலமாக 132.80 கோடி ரூபாய் மதிப்பில் இத்திட்டத்தின் சுய பயன்பாட்டிற்காக அரசு புரம்போக்கு நிலங்களில் 30 மெகா வாட் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அத்திக்கடவு – அவிநாசி திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழா அவிநாசியில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு, அடிக்கல் நாட்டினார். இதில், சபாநாயகர் தனபால் மற்றும் அமைக்கர்கள் பலர் கலந்து கொண்டனர். சுமார் 60 ஆண்டு கால கனவு நிறைவேறியதை அடுத்து, அப்பகுதி மக்கள் இதனை மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடிவருகிறார்கள்.