பதின்ம வயதிலிருந்து பழக்கமான நெடுநாள் நண்பர் ஒருவரை இழந்துவிட்ட உணர்வுதான் மேலோங்குகிறது. நகைச்சுவை என்பது மனிதனின் உணர்தல்களில் ஒன்று. எல்லோரும் பற்றிக்கொள்ள விரும்பும் கரம் போன்றது. கலையுலகின் போலி செய்ய முடியாத கடினங்களில் ஒன்று. நல்ல சம்பளத்துடனான வேலையிலிருந்து முழுநேர வேலையாகத் தன் எழுத்து என்பதைப் பற்றிக்கொண்டு வந்த எழுபதுகளின் மனிதர்களில் சினிமாவிற்கு உள்ளேயும் வெளியேயும் ஓங்கி ஒளிர்ந்த இரண்டு பெயர்களில் பாலகுமாரனுக்குச் சமமான பெயராக இவரைச் சொல்ல முடியும்.

எடுத்த எடுப்பிலேயே சூப்பர்ஹிட் என்பார்களே அதுதான் நடந்தது. க்ரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம் தொடங்கி மேடை நாடகங்கள் தொலைக்காட்சித் தொடர்கள் சினிமாக்கள் எனத் தானும் தன் பேனாவுமாய் நுழைந்த எல்லா இடங்களிலும் ஜெயித்தார் க்ரேஸி.

பத்திருபது இடங்களில் சிரிக்கவைத்துவிட்டால் போதும் அதன் பெயர்தான் ஹ்யூமர் ட்ராமா என்று கண்டிக்க ஆளில்லாத துறையாக இருந்த நகைச்சுவை நாடகத் துறையினை அதற்குண்டான சிறப்பை உறுதி செய்தவர்களில் எஸ்.வி.சேகருக்கும் க்ரேஸி மோகனுக்கும் மிகுந்த பங்கு உண்டு. அதிலும் சேகருடைய நாடகங்களில் அவர் வேறு வழியின்றி நாயகனாகவே வரவேண்டிய கட்டாயம் இருந்தது. அப்படி எதுவுமற்று மையத்தை உடைத்து கதையை சகல திசைகளிலும் நகர்த்திச் சென்று அதிரி புதிரி ஆக்கும் சுதந்திரத்தைக் கொண்டிருந்தார் க்ரேஸி மோகன்.

சின்னஞ்சிறு இழையைப் பற்றிக் கொண்டு நகைச்சுவை நாடகத்தைப் பின்னுவதில் அவர் வித்தகராயிருந்தார். மத்யம வாழ்வின் சிக்கல்களை தனி மனிதனின் பொய்புரட்டுகள் உறவின் முரண்கள் தொடங்கிப் பல விடயங்களை அவர் தன் நாடகங்களுக்கான கருப்பொருளாக்கினார். சிலந்தி மட்டுமே அறிந்த அதன் வலைபின்னும் ரகசியம்போலவே தன் நாடகத்துக்கான முதற்பொறியைக் கைக்கொண்டார்.

எண்பதுகளில் தொடங்கி இறுதிக்காலம் வரைக்கும் தன் நாடகங்களில் தொடர்ந்து பல விசயங்களைப் பகடி செய்து வந்தார். அவை யாரையும் உறுத்தாமல் அதே சமயம் வரம்புக்குள் இயங்குகிற தன்மையோடு நிகழ்ந்ததை எல்லோரும் ரசித்தார்கள். கடவுள் பக்தி என்பதில்கூட மோகன் ஒரு பழுத்த ஆன்மீகவாதியாகவே இறுதிவரை வாழ்ந்தார் பாயிரங்களைப் பக்திப் பாடல்களைத் தொடர்ந்து எழுதி அனைவரையும் வியக்க வைத்தார் என்றபோதும் சடங்குகள் சம்பிரதாயங்கள் தொடங்கி மூடப்பழக்க வழக்கங்கள்வரைக்கும் யதார்த்தத்தில் காண வாய்க்கும் எல்லாவற்றையுமே தன் நாடகங்களுக்குள் எள்ளினார். இந்த இரண்டு எல்லைகளுக்குள் இயங்குவதென்பது போகிற போக்கில் நிகழ்ந்துவிடுவதோ வெறும் புகழ்ச்சிக்கென்று உரைத்துச் செல்வதோ அல்ல இந்தப் பண்பு எந்த ஒரு கலைஞனும் தன் அகத்தே கைக்கொள்ள வேண்டிய கலை சார்ந்த அறம் என்றே உணரமுடிகிறது. அதனை நிக்ழ்த்திய உன்னத மனிதர் க்ரேஸி மோகன்.

மாது சீனு, ஜானகி மைதிலி ஆகிய பெயர்களை எல்லாம் நிரந்தரமாகவே நம் குடும்பங்களில் செல்வாக்குப் பெற வைத்தார் க்ரேஸி மோகன். வசனங்களில் அவர் காட்டிய துல்லியமும் செறிவும் சிறப்பானவை. எங்கே இன்னொன்று கொடுங்கள் பார்க்கலாம் என்று யாராலும் கோர முடியாத அயர்த்தும் மகா உத்தம வசனங்கள் இன்னும் பெரு நெடுங்காலம் தமிழ்த் திரை சரிதத்தில் வாழ்ந்துகொண்டே இருக்கும்

தமிழ் சினிமாவின் ஹைலி பெய்ட் உச்சபட்ச விருப்பத்திற்குரிய வசனகர்த்தா எனும் புகழ் கலைஞர் கருணாநிதி உள்ளிட்ட சிலருக்கே உண்டு. கதாசிரியர்களில் ஆர்.செல்வராஜ் வசனகர்த்தாக்களில் ஆரூர்தாஸ் என வெகு சிலரே கோலோச்சிய அரியணை அது. அங்கே தன் நுழைதல் காலம் தொடங்கி இந்தக் கணம்வரைக்கும் இருந்து சென்றிருப்பவர் க்ரேஸி மோகன். அருணாச்சலம், சின்ன வாத்தியார், சின்னமாப்ளே, ரட்சகன், தேடினேன் வந்தது தொடங்கித் தான் வசனம் எழுதிய எல்லாப் படங்களிலும் சிரிப்பை வாரி வழங்கிய நகைச்சுவை வள்ளல் க்ரேஸி மோகன்.

கமலும் க்ரேஸி மோகனும் இணைந்த ஒவ்வொரு படமும் தமிழ் நகைச்சுவைப் பட வரிசைகளில் இன்னொரு படத்தை அதிகம் செய்தபடியே விளைந்தன. கமல்தான் க்ரேஸியை முதலில் திரை நோக்கி அழைத்து வந்தவர். அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், சதிலீலாவதி, காதலா காதலா, அவ்வை சண்முகி, தெனாலி, பம்மல் கே சம்மந்தம் மற்றும் பஞ்ச தந்திரம், வசூல் ராஜா எம்பிபிஎஸ். என டஜனுக்குக் குறையாத படங்களில் கமலும் அவரும் சமகாலத் தமிழ் நிலத்தின் சிரிப்புச் சித்திரங்களுக்கான தன்னிறைவை துல்லியமாக எய்தித் தந்தார்கள்.

கமலின் திரைவாழ்வில் ஒட்டுமொத்த நகைச்சுவைப் பங்கேற்பில் எண்பது சதவீதத்துக்கு மேல் க்ரேஸி மோகன் எனும் நபரின் துணையோடே நிகழ்ந்திருப்பது வேறு யாராலும் இட்டு நிரப்ப இயலாத வெற்றிடம் ஒன்றைக் கமல்ஹாஸன் எனும் பெருங்கலைஞனின் திரை வாழ்விலிருந்தே தொடங்கி வைக்கக்கூடும். சமகாலத்தின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக அழுந்திப் புழுங்கும் மனங்களை இளக்கும் மனவள மருத்துவர் போலவே விளங்கினார் க்ரேஸி அவருடைய இழப்பென்பது தமிழ் ரசனை நிலத்தின் மீது மாபெரும் மூட் அவுட் மன இறுக்கத்தைப் படர்த்தி இருக்கிறது. இதிலிருந்து மீள்வதற்கும் அவருடைய நகைச்சுவைக் காட்சிகளைத்தான் பற்றிக்கொள்ள வேண்டும்.

வாழ்க க்ரேஸி மோகன் புகழ்.