தொழில்நுட்ப உலகின் ஜாம்பவான்களான  கூகுள் மற்றும் ஃபேஸ்புக் ஆகிய இரண்டு நிறுவனங்களிடமிருந்தும் எந்த ஒரு சிரமமும் இன்றி அவர்கள் வாங்காத பொருளுக்கான பில்லை தயார்செய்து எவால்டாஸ் ரிமாசாஸ்கஸ் என்பவர் 800 கோடி திருடியுள்ளார்.

தைவானைச் சேர்ந்த குவான்டா கம்ப்யூட்டர் (Quanta Computer Inc) என்ற நிறுவனம் கூகுள் மற்றும் ஃபேஸ்புக்குக்குத் தேவைப்படும் ஹார்டுவேர்களை அனுப்பி வந்தது.  அதற்கான பில்லை(bill) தைவானிலிருந்து அவர்கள் அனுப்பி வைப்பார்கள். அதை எப்படியோ தெரிந்துக் கொண்டுள்ளார் லித்துவேனியா நாட்டைச் சேர்ந்த  எவால்டாஸ். அதனையடுத்து,  குவான்டா கம்ப்யூட்டர் நிறுவனத்தினர் அனுப்பும் பில்லைப் போன்று  போலியான பில் ஒன்றை இவர் தயார் செய்து அதன் மூலமாக மோசடி செய்யத் திட்டமிட்டிருக்கிறார். இந்த மோசடி பற்றி தெரியாமல் கூகுள் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனங்களும் பில்லில் குறிப்பிடப்பட்டிருக்கும் பொருளுக்கான பணத்தை இவருக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள்.

இதனையடுத்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், இந்த மோசடிக்குப் பின்னால் இவர் மட்டுமல்ல; மிகப் பெரிய ஒரு குழுவே இருந்திருக்கிறது என்பது தெரிய வந்துள்ளது. ஒவ்வொரு பில்லும் ஒரிஜினலைப் போலவே இருக்க வேண்டும் என்பதற்காகப் பார்த்துப் பார்த்து வேலை செய்திருக்கிறார்கள். பின்னர், அந்தப் போலியான பில்லை இமெயில் மூலமாக இரண்டு நிறுவனங்களுக்கும் அனுப்பி வைத்துவிடுவார்கள். அனைத்துமே ஒரிஜினல் பில்லைப் போன்றே இருந்ததால் யாருக்குமே சந்தேகம் வரவில்லை. மேலும், கூடுதலாகக் குவான்டா கம்ப்யூட்டர்  என்ற பெயரில் லாட்வியா நாட்டில் போலியான நிறுவனம் ஒன்றையும் பதிவு செய்திருக்கிறார் எவால்டாஸ். அவருடைய கூட்டாளிகளும் உண்மையான நிறுவனத்தின் பிரதிநிதிகள் போன்றே நடித்திருக்கிறார்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

இவர்கள் அனுப்பி வைத்த பில்லை இரண்டு நிறுவனங்களும் பெரிதாகச் சோதிக்கவே இல்லை என்பதுதான் இங்கே முக்கியமான விஷயம். அது இவர்களுக்குச் சாதகமாக அமைந்துவிட்டது. பில் உண்மையானதுதான் என்று நினைத்து அவரது வங்கிக் கணக்குக்குப் பணத்தை அனுப்பிவைத்திருக்கிறார்கள். இப்படி பில்களை அனுப்பிக்கொண்டே இருக்க இருக்க பணமும் வந்துகொண்டே இருந்திருக்கிறது. அதை உடனடியாக சைப்ரஸ், லித்துவேனியா, ஹங்கேரி, ஸ்லோவாகியா மற்றும் லாட்வியா எனப் பல்வேறு நாடுகளிலிருந்த வங்கிக் கணக்குகளுக்கு மாற்றி அனுப்பி வைத்திருக்கிறார். 2013 – 2015-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இரண்டு நிறுவனங்களிடமிருந்து அவர் பெற்ற மொத்த தொகை மட்டும் சுமார்  $121 மில்லியன் அமெரிக்க டாலர்கள். இது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 800 கோடிக்குச் சமம். எவால்டாஸ் அனுப்பும் பில்லில் ஏதோ ஒரு சிக்கல் இருக்கிறது என்பதை எப்படியோ மோப்பம் பிடித்துவிட்ட கூகுள் பணமோசடியை உறுதி செய்து  2016-ம் ஆண்டில் அமெரிக்காவில் எவால்டாஸ் மீது வழக்கு பதிவுசெய்துள்ளது.

அதன் பின்னர் 2017-ம் ஆண்டில் அவர் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டார். அடையாளத் திருட்டு, பண மோசடி உட்பட ஐந்து குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டன. தனது நடவடிக்கைகள் அனைத்தும் மோசடியானவை என்பதைக் கடந்த வாரம் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டிருக்கிறார் எவால்டாஸ். இவர் சுருட்டிய பணத்தில் அதிகம் இழந்தது ஃபேஸ்புக் நிறுவனம்தான். 2015-ல் ஃபேஸ்புக்கிடமிருந்து $98 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இவரால் மோசடி செய்யப்பட்டுள்ளது. மோசடி நடவடிக்கைகள் தெரியவந்த சில நாள்களில் பணத்தை மீட்க முடிந்ததாக ஃபேஸ்புக், செய்தி நாளிதழ் ஒன்றனுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்த்து. அதே நேரம் கூகுள் இதைப் பற்றி முதலில் அறிந்திருந்தாலும் பணத்தை மீட்டதா என்ற விவரங்கள் தெரியவில்லை. இந்தக் குற்றங்களுக்காக வரும் ஜூலை 24-ம் தேதியன்று இறுதித்தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தொழில்நுட்ப தடுப்புச் சுவர்களின் தடிமன் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வரும் நிலையில், ஹேக்கிங் மூலம் கைவரிசையைக் காட்டும் ஹேக்கர்களுக்கும் பஞ்சம் இல்லாமல் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஆனால் எந்த சிரமமும் இல்லாமல் வெறும் பில்லை வைத்து தொழில்நுட்ப உலகின் டிஜிட்டல் ஜாம்பவான்களான கூகுள் மற்றும் ஃபேஸ்புக் இடமிருந்து திருடியிருப்பது பெரும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.