சீர்மரபினர் (டி.என்.சி.) சமூகத்தினரை சீர்மரபினர் பழங்குடியினர் (டி.என்.டி) என்று அழைக்கும் வகையில் தமிழக அரசு அரசாணையை பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் கள்ளர், மறவர், வலையர், செட்டிநாடு வலையர், வேட்டுவ கவுண்டர் உள்ளிட்ட 68 சாதிகளுக்குப் பிற்படுத்தப்பட்ட பழங்குடிகள் (டி.என்.டி-சீர்மரபினர்) என்று சான்றிதழ் வழங்கப்பட்டது. தமிழகத்தில் சீர்மரபினர் பட்டியலில் இவர்கள் இருந்துவந்ததால், மத்திய, மாநில அரசுகள் வழங்கிவரும் சலுகைகள் இவர்களுக்குக் கிடைத்துவந்தது. 1979ஆம் ஆண்டுக்கு முன்பு வரை சீர்மரபினர் பழங்குடியினர் என அழைக்கப்பட்ட இவர்கள், சீர்மரபினர் என்று மட்டுமே அழைக்க வேண்டும் என்றும் அவர்கள் பழங்குடியினர் என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என்றும் 1979ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இதைதொடர்ந்து, கள்ளர், மறவர் உள்ளிட்ட பிரிவினரை சீர்மரபினர் பழங்குடியினர் (டி.என்.டி) பட்டியலிருந்து எடுத்து டி.என்.சி. பட்டியலில் சேர்த்துள்ளனர். இதனால் சீர்மரபின பழங்குடியினர் மாணவர்களுக்கு மத்திய அரசு வழங்கி வரும் பல்வேறு சலுகைகள், கல்வி உதவித்தொகை உள்ளிட்டவை தமிழகத்தில் உள்ளவர்களுக்குக் கிடைக்கவில்லை. இதுகுறித்து பல ஆண்டுகளாக அவர்கள் கோரிக்கை விடுத்தும், போராட்டம் நடத்தியும் அவர்களை மீண்டும் சீர்மரபினர் பட்டியலில் சேர்க்கப்படாமல் இருந்தனர்.

இந்நிலையில், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை வெளியிட்டுள்ள அரசாணையில், சீர்மரபினர் சமூகத்தினர் என்பது தமிழகத்தை பொருத்தவரை சீர்மரபினர் பழங்குடியினரை மட்டுமே குறிப்பிடுவதாக சமூக நலத்துறை அமைத்த குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சீர்மரபினர் பழங்குடியினர் என்ற பட்டியலுக்கு தங்களை மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு சீர்மரபினர் (டி.என்.சி) தொடர்ந்து கோரிக்கை வைத்துவந்த நிலையில், இது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டது. வருவாய் நிர்வாக முதன்மை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்தக் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் 1979ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை திரும்பப் பெற்ற தமிழக அரசு, புதிய அரசாணையை பிறப்பித்துள்ளது.