யாரோ மனிதர்கள்- 1

அவருக்கு ஐம்பது வயதிருக்கலாம். நெற்றி வியர்வை மூக்கில் சொட்டு சொட்டாய் விழ நாற்பத்து ஐந்து degree கோணத்தில் அந்த கை வண்டியை இழுத்துக்கொண்டிருந்தார். கை வண்டி முழுக்க பெரும் மூட்டைகள். கீழிருந்து மேலே ஏறும் பாலத்தின் மையத்தை நோக்கிய அவரின் இழுவை அவருக்கு மிகுந்த சிரமத்தைக் கொடுப்பதை, அங்கே நடந்து கொண்டிருந்த நான் .  உணர்ந்தவுடன் கை வண்டிக்கு பின்னே சென்று தள்ள முயற்சித்தேன். அவரிடம் இருந்து வேகமாக ஒரு குரல் .

” வேண்டாம் வேண்டாம் .. யாருங்க அது ? முன்னாடி வாங்க இங்க. எனக்கு உதவ வேண்டாம் ”

முன்னே இழுக்க கூப்பிடுகிறாரோ என்று முன்னே செல்ல நினைத்த எனக்கு ” எனக்கு உதவ வேண்டாம் ” என்னும் வரி ஆச்சர்ய அதிர்ச்சியாய் இருந்தது. முன்னே வந்து

” நானும் இழுக்கறேனே ” என்றேன்.

கையால் வேண்டாம் என்று சைகை செய்துவிட்டு தானே இழுத்தார். அவரால் முடியவே இல்லை. ஆனாலும் மெல்ல மெல்ல முன்னேறி கொண்டே இருந்தார். வியர்வை இப்போது இன்னமும் அதிகமாகி இருந்தது. மத்திய வெயில். மதுரை.

கையறு நிலையில் நின்றேன். என்ன சொன்னாலும் பரவாயில்லை என்று மீண்டும் கை வண்டிக்கு அருகே சென்ற போது …

” சொல்றேன்ல. வேண்டாம் ” என்று அதட்டலாக கத்தினார். அமைதியாகி கூடவே நடந்தேன்.

மைய்யப்பகுதிக்கு வர இன்னும் 100 மீட்டர் இழுக்க வேண்டும். அவரின் வயிற்று பகுதி உள்ளேயும் வெளியேயுமாய் … துடித்தது. வாய் மொத்த ஆக்சிஜன் ஐ உள்ளே இழுத்தும், கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றியும் துடித்து கொண்டு இருந்தது.

” வேண்டாம். இன்னும் கொஞ்சம் தா

.. இழுத்துடுவேன் ”

சொல்லிக்கொண்டே இழுத்தார். பெரும் மூட்டைகள் அசைந்து ஆனால் நிலை பெற்று கை வண்டியின் அசைவுக்கு அசைந்து கொண்டே இருந்தன. 50, 30, 10 … மெதுவாக மையப்பகுதிக்கு வந்து சேர்ந்தபின் ..  வண்டி இழுப்பதை நிறுத்தி விட்டு என்னை பார்த்து சிரித்தார். மூச்சு இப்போது மேலும் கீழுமாக வாங்கிக்கொண்டு இருந்தது.

” அட .. அதுக்குத்தான் நானும் இழுக்கறேன்னு சொன்னேன் ” என்று நான் சொல்ல …

” இல்ல சார். நீங்க இன்னைக்கு கூட இருந்து இழுத்திட்டு போயிடுவீங்க. நாளைக்கு யார் வருவா ? இந்த உடம்பு சுகத்தை பார்த்திட்டா உடனே மறுநாள் அதே போல உதவியை தேடும் ! ” என்று சிரித்தார்.

கன்னத்தில் அறைந்தாற்போல இருந்தது எனக்கு.

” இந்த Load ஐ ஏற்றும்போதே .. என் உடம்பு அதற்கு தயாராகிடும். அப்படித்தான் அதை பழக்கி இருக்கேன். நான் சொல்வதை அது கேட்கவில்லை என்றால் எப்படி ? ” என்று மீண்டும் சிரித்தார்.

“அவ்வளவு தான் …இனிமேல் சரியாகிடும். ” என்று பாலத்தின் கீழ் நோக்கிய பகுதியை பார்த்துச் சிரித்தார்.

அவர் என்னை கடக்க ஆரம்பிக்க , எனக்குள் அந்த வரிகள் அதிர்ந்து கொண்டே இருந்தன.

” நீங்க இன்னைக்கு கூட இருந்து இழுத்திட்டு போயிடுவீங்க. நாளைக்கு யார் வருவா ? இந்த உடம்பு சுகத்தை பார்த்திட்டா உடனே மறுநாள் அதே போல உதவியை தேடும் ! ”

எவ்வளவு பெரிய பாடம் ! உடல் சுகத்தை பார்த்துவிட்டால் உடனே அதேபோன்ற சுகத்தை தேடும் ! என்ன ஒரு ஆழமான வாழ்க்கை பாடம் ! சரிதானே ? மிதிவண்டியில் ஏறியவுடன் நடப்பது நமக்கு பெரும் சவால். இருசக்கர மோட்டார் வாகனத்தில் ஏறியவுடன் நமக்கு மிதிவண்டி  பெரும் பிரச்சினை. நான்கு சக்கர வாகனம் வந்தவுடன் இரு சக்கர வாகனம் நமக்கு தேவையற்றதாக மாறுகிறது.

“இந்த Load ஐ ஏற்றும்போதே .. என் உடம்பு அதற்கு தயாராகிடும். அப்படித்தான் அதை பழக்கி இருக்கேன். நான் சொல்வதை அது கேட்கவில்லை என்றால் எப்படி ? ”

பொறுப்பை ஏற்றுக்கொண்டவுடன் அதற்கு உடலை பழக்கி விடுகிறோமா ? அப்படி பழக்கினால் … அது நாம் சொல்வதை கேட்கும். பழக்கவில்லை  எனில் அது சொல்வதை நாம் கேட்கவேண்டும். சரியான நேரத்திற்கு செல்ல வேண்டும் என்ற பொறுப்பை ஏற்றுக்கொண்டால் .. காலை 5 நிமிடம் முன்னமே எழ உடல் பழகிவிடும் இல்லையா ?

அவர் யாரென்று எனக்கு தெரியாது. அந்த ” யாரோ மனிதர் ” பல வருடங்களுக்கு முன் எனக்கு சொல்லிய இந்த பாடம் இன்னும் என் மனதில் நீர் உறிஞ்சும் ஆழமான வேராய் நிற்கிறது ! இந்த ” யாரோ மனிதர்கள் ” ஆச்சர்யமானவர்கள். போகிற போக்கில் அவர்கள் சொல்லும் பாடங்கள் பெரும் வலிமை நிறைந்தவை.  நாம் அதை எடுத்துக்கொள்கிறோமா என்பதே கேள்வி !

இப்போதெல்லாம் ஒரு பொறுப்பை ஏற்றுக்கொண்டால் உடலை அதற்கு தயார் செய்து விடுகிறேன். தான் செய்ய வேண்டிய வேலைகளுக்கு அது தயாராகி விடுகிறது. தான் செய்ய வேண்டிய வேலைகளுக்கு எம் உடல் யாரையும் எதிர்பார்ப்பதில்லை. அப்படியும் யாராவது உதவ வந்தால் எனக்குள் அந்த ” யாரோ மனிதரின் ” குரல் ஒலிக்கிறது. அதே சமயத்தில் சமூக வாழ் சூழ்நிலையில், பிறரின் உதவிகளை நான் கண்டிப்பாக எடுத்துகொள்கிறேன். உதாரணத்திற்கு ஒரு மருத்துவ உதவியை, நான் மறுக்கிறேன் என்றால் அது தவறு. இங்கே நான் சொல்வது ‘ நான் பொறுப்பு ஏற்று கொண்டவைகளை ‘ பற்றி மட்டுமே. நான் சார்ந்து இயங்க வேண்டியவற்றில் இருந்து நான் உதவிகளை பெறுகிறேன். ” நான் பொறுப்பு ஏற்பவற்றில் ” மட்டுமே நான் ‘யாரோ மனிதரின் ‘ குரல் என்னுள் கேட்டுகொண்டே இருக்கிறது.

” நீங்க இன்னைக்கு கூட இருந்து இழுத்திட்டு போயிடுவீங்க. நாளைக்கு யார் வருவா ? இந்த உடம்பு சுகத்தை பார்த்திட்டா உடனே மறுநாள் அதே போல உதவியை தேடும் ! ”

என்ன – உங்களின் பொறுப்பை நீங்களே சுமக்க தயாரா ? இல்லை எனில் இந்த ” யாரோ மனிதர் ” உங்களையும் கேள்வி கேட்கக்கூடும்.

( இன்னொரு யாரோ மனிதருடன் அடுத்த பகுதியில் … )

கோட்டுச் சித்திரங்கள்: சிவதர்ஷிகா கல்கி