தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சேலம், தருமபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என்றும், 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

”வரும் 18ஆம் தேதி வரை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதேநேரத்தில் சில இடங்களில் வெயிலின் தாக்கம் தொடரும். சென்னையைப் பொறுத்தவரையில், அடுத்த 24 மணி நேரத்தில் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும்” என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தமிழகத்தில் நேற்று (மே 14) 11 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது. திருத்தணியில் அதிகபட்சமாக 109 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. அதேநேரத்தில், சேலம், ஈரோடு, வேலூர், திண்டுக்கல், ராசிபுரம், தருமபுரி ஆகிய இடங்களில் மழை பெய்தது. ஆரணி அருகே இடி மின்னல் சூறாவளிக் காற்றுடன் பெய்த கன மழையினால் நெடுஞ்சாலையில் மரம் விழந்ததில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் ஓடியது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் சூறைக்காற்றுடன் மிதமான மழை பெய்ததால் மக்கள் குளிர்ச்சியான சூழலை அனுபவித்து மகிழ்கின்றனர். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பலத்த சூறைக்காற்றுடன் நேற்று கனமழை பெய்துள்ளது.