தேசிய தரவரிசையில் சென்னை பல்கலைக்கழகம் முதல் 20 இடங்களுக்குள் முன்னேறி வந்துள்ளதாகத் துணைவேந்தர் துரைசாமி தெரிவித்துள்ளார்.

தேசிய தரவரிசையில் 2 ஆண்டுகளுக்கு முன் 41ஆவது இடத்தில் இருந்த சென்னை பல்கலைக்கழகம் தற்போது முதல் 20 இடங்களுக்குள் முன்னேற்றியிருப்பதாகத் தெரிவித்த துணைவேந்தர் துரைசாமி, பல்கலைக்கழகத்தில் தொழில்முனைவோர் மற்றும் சுய வேலைவாய்ப்பு பயிற்சி மண்டலம் அமைக்க மத்திய அரசிடம் 15 கோடி ரூபாய் நிதி கோரப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

பி.எச்.டி. மாணவர்களின் சிறப்பான செயல்பாட்டிற்காகப் பிழை கண்டறிதல் மற்றும் உண்மைத்தன்மை பரிசோதிக்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பல்கலைக்கழகத்தில் 50 சதவீத பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் பல்கலைக்கழக மானியக்குழு உள்ளிட்டவற்றிடம் நிதி பெறுவதில் சிக்கல் நிலவுவதாக தெரிவித்த துரைசாமி, தமிழக அரசுடன் ஆலோசித்து பேராசிரியர்கள் நியமனம் மற்றும் நிதிப்பற்றாக்குறைக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.