கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிர்மலா தேவிக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்க நேற்று (மார்ச் 12) உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை. ஜாமீனுக்கான ஆவணத்தில் கையெழுத்திட நிர்மலா தேவியின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மறுத்துவிட்டதால், அவருக்கு ஜாமீன் கிடைப்பதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நிர்மலா தேவி கைது

விருதுநகர்  மாவட்டம்  அருப்புக்கோட்டை  தனியார்  கல்லூரியைச்  சேர்ந்தவர்  பேராசிரியை நிர்மலா தேவி. சில  மாணவிகளைத்  தவறான  பாதைக்கு  அழைத்த ஆடியோ  வெளியானதையடுத்து, கடந்த  ஆண்டு(2018) ஏப்ரல்  மாதம்  இவர்  கைதுசெய்யப்பட்டார். நிர்மலா  தேவியிடம்  நடத்தப்பட்ட  விசாரணையைத்  தொடர்ந்து,  அவர்  கொடுத்த வாக்குமூலத்தின்  அடிப்படையில்  மதுரை  காமராஜர்  பல்கலைக்கழகத்தைச்  சேர்ந்த பேராசிரியர்  முருகன்,  ஆராய்ச்சி  மாணவர்  கருப்பசாமி  இருவரும்  கைது செய்யப்பட்டனர். இவர்கள்  மூவரும்  மதுரை  மத்தியச்  சிறையில்  அடைக்கப்பட்டிருந்தனர்.

குற்றப்பத்திரிக்கை தாக்கல்

மாவட்ட  நீதிமன்றங்களில்  இவர்கள்  மூன்று  பேரும்  ஜாமீன்  கோரி  பலமுறை  மனு தாக்கல்  செய்திருந்த நிலையில், மூன்று  பேருக்கும்  நீதிமன்றம்  ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.  இவர்கள்  மூன்று  பேரும்  விருதுநகர்  குற்றவியல்  நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தப்பட்டு  தொடர்ந்து  காவலில் வைக்கப்பட்டிருந்தனர். இந்த  வழக்கினை  ஸ்ரீவில்லிபுத்தூர்  மகளிர்  நீதிமன்றம்  தினமும்  விசாரித்து  வருகிறது.

விபச்சாரத்  தடுப்பு  மற்றும்  பெண்கள்  வன்கொடுமை  தடுப்புச்  சட்டப்பிரிவுகளில்  குற்றம்சாட்டப்பட்டு, இவர்கள் மீதான  200  பக்கங்கள்  கொண்ட  குற்றப்பத்திரிகையை சி.பி.சி.ஐ.டி. போலீசார் நீதிமன்றத்தில்  தாக்கல்  செய்துள்ளனர். நிர்மலா  தேவி  வழக்கில்  மதுரை  காமராஜர்  பல்கலைக்கழகத்தைச்  சேர்ந்த  பலருக்கும்  தொடர்பு  இருப்பதால்,  இதனை  சி.பி.ஐ.க்கு  மாற்றக் கோரி  அனைத்து  இந்திய மாதர் சங்க  பொதுச் செயலாளர் சுகந்தி  என்பவர் கடந்த நவம்பர் மாதம் உயர் நீதிமன்ற  மதுரைக்  கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

நிர்மலாவுக்கு பாலியல் தொல்லை

உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஜாமின் வழங்கக் கோரி, நிர்மலா தேவி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “11 மாதங்களுக்கு மேல் சிறையில் நான் இருக்கிறேன். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. நான் சாட்சிகளைக் கலைக்க மாட்டேன். நீதிமன்றத்தின் உத்தரவுக்கு கட்டுப்படுவேன். இதனால் எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும், சிறையில் நிர்மலா தேவிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்படுவதாகவும், போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்றும் அவரது வழக்கறிஞர் புகார் தெரிவித்திருந்தார்.

நிபந்தனை ஜாமீன்

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு, இன்று அவரை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டனர். இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, நேற்று மதியம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் நிர்மலா தேவி. அப்போது, நிர்மலா தேவிக்கு ஜாமின் வழங்குவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து, விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும், இந்த வழக்கு விவகாரம் தொடர்பாக ஊடகங்களிடம் பேசக்கூடாது என்றும் நிர்மலா தேவிக்கு நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய முருகன், கருப்பசாமி ஆகியோருக்குக் கடந்த மாதம் 12ஆம் தேதி உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

மிகுந்த மகிழ்ச்சி 

இந்த வழக்கு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா தேவி வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன், ‘நிர்மலா தேவிக்கு ஜாமின் வழங்கப்பட்டது மிகந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நீதிமன்றத்தின் உத்தரவை நிர்மலா தேவி மதித்து நடப்பார். ஜாமின் வழங்குவதற்கு காவல் துறை சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. வரும் வியாழக்கிழமை நிர்மலா தேவி சிறையிலிருந்து வெளியே வருவார்’ என்று தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிர்மலா தேவிக்கு தற்போது ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதால், 330 நாள்களுக்குப் பிறகு அவர் ஜாமீனில் வெளியே வருகிறார்.

ஜாமீன் கிடைப்பதில் சிக்கல்

நிர்மலா தேவி இன்று அல்லது நாளை ஜாமீனில் வெளிவருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜாமீனுக்கான ஆவணத்தில் கையெழுத்திட அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மறுத்துவிட்டதால், நிர்மலாவுக்கு ஜாமீன் கிடைப்பதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.

“நிர்மலா தேவியின் உறவினர்களிடம் தொடர்ந்து, பேசி வருகிறோம். நாளை மாலைக்குள் நிர்மலா தேவியை ஜாமீனில் கொண்டுவர முயற்சி செய்துவருகிறேன்.” என நிர்மலா தேவியின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.