மழை  ஜன்னல் தேநீர் – 2

If you obey all the rules

You miss all the Fun

-Katherine Hepburn

எங்கு திரும்பினாலும் பெண்களுக்கு ஏதோவொரு அடையாளத்தை, கட்டுப்பாடுகளைப் புகுத்தி அவர்களைச் சுதந்திரமாக இயங்க விடாத இச்சமூகத்தில், அவற்றையெல்லாம் உடைத்தெறிந்து தங்கள் விருப்பப்படி செயல்பட்டு உயர்நிலையை அடைகிற பெண்கள் மற்றவர்களுக்கும் வழிகாட்டிகளாக மாறுகின்றனர். விதிமீறல்களே மாற்றுச் சிந்தனையுடன் கூடிய சாதனையாளர்களை உருவாக்குகின்றன..

மகளிர் தினம் என்பது ஒரு  கொண்டாட்டம் அல்ல.. அது ஒரு குருதி தோய்ந்த போராட்டங்களின் வரலாறு.

1789-ம் ஆண்டு ஜூன் 14-ம்‌ தேதி  பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிஸில் உள்ள பெண்கள், ஆணுக்கு நிகராக பெண்களுக்கும் உரிமைகள் வேண்டும் என்றும், சம ஊதியம், எட்டுமணி நேர வேலை, வாக்குரிமை எனும் கோரிக்கைகளோடு  போராட்டத்தில் ஈடுபட்டனர்.  1910ல் ஜெர்மனியின் கிளாரா செர்கினே, 1920ல் ரஷ்யாவின் அலெக்சாண்ட்ரா காலன்ரா போன்றவர்களின் தொடர் முன்னெடுப்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு அதில் வெற்றியும் பெற்றனர். அதன் நினைவாக மார்ச் 8, சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

ஆனால் இங்கே நடப்பது என்ன? மகளிர் தினத்தன்று தான் பெண்கள் கரிசனம் துளிர்த்துப் பெருகி வழிந்தோடும். பெண்கள் தியாகத்தின் சொரூபம் என விதந்து பதிவு எழுதுவார்கள்.

மேலும், பெண் குழந்தைகள் பிறந்ததாகப் பகிரப்படும் செய்திகளில் வரும் வாழ்த்துகளைக் கவனித்திருக்கிறீர்களா? தேவதைக்கு நல்வரவு..  தேவதை பிறந்து விட்டாள்..இன்னும் பிற..

உண்மையில் ஒரு பெண்ணின் துயரம் என்பது அந்த வார்த்தையிலிருந்துதான் துவங்குகிறது.. பிறந்தவுடனேயே அவளைத் தேவதையாக்கி அதீத உயரத்தில் வைத்து, கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்து, வீட்டின் மகாராணியாக வளர்க்கிறீர்கள் ..

ஆனால், பருவ வயது வந்தவுடன், தேவதையின் சிறகுகளை முறித்து விட்டு, அதிகளவு கண்டிஷன்களோடு அவளை வெளியில் எங்கும் அனுமதிக்காமல், ஆண்களிடமிருந்து, சிலர் அப்பாவிடமிருந்தே பிரித்து, தனியே வைக்கிறீர்கள்.. சுதந்திரமாக  திரிந்தவள்.. இப்போது அடை காக்கப்படுகிறாள்.. பெண்ணை தேவதையாக அல்லது வெறும் உடலாகப் புனிதத்தன்மையோடு பார்ப்பதை விடுத்து சக மனுஷியாக மதிக்க, நேசிக்கத் துவங்குவது தான் இன்றைய தேவை..

இப்போதுள்ள சமூக சூழ்நிலையில் பெண் குழந்தைகளிடம், ஆண்களிடம் எச்சரிக்கையாக இரு என்று சொல்லியே வளர்க்கிறோம்.. அதுவே ஆண் விரோத மனோபாவத்தைப் பெண்களிடம் வளர்த்து விடுகிறது.. ஆண் விரோதப் போக்கு என்பது பெண் விடுதலை ஆகாது. பாலினச் சமத்துவத்தைச் சொல்லித் தர வேண்டிய தேவையும் கடமையும் நமக்கு இருக்கிறது.

பெண்ணியம் என்பது ஒரு பெண் தன் விருப்பப்படி எந்தவித சமூக கட்டுப்பாடுகளுமின்றி சுதந்திரமாக, சுயமரியாதையுடன் வாழ்வது மட்டுமே. ஆண்களுக்கு எதிரானதோ.. தன் கடமைகளை சரியாகச் செய்யாமலிருப்பதோ அல்ல… தடைகள் வரும் போது அவற்றைத் தகர்த்தெறிந்து முன்னேற வேண்டும்..

பெண்களின் அடையாளமாக கல்வி, வேலை, தனித்திறன், தொழில் என்றிருக்க வேண்டும்..ஆனால், அழகு நிலையங்களின் ஆஃபர்கள், காஸ்மெடிக்ஸ்  பொருட்களின்  தள்ளுபடிகளோடு கூடிய பெண்கள் தினம் என்பது அவர்களின் வலிமையை உணர விடாமல், வெறும் உடலாக மட்டுமே இன்னமும் கருதுபவர்களின் வியாபார உத்தியே..

பெண்களுக்காகப் பரிசளிக்கப்படும் நகைகள், உடை, டெடிபியர் பொம்மைகள், சாக்லேட்ஸ்…. இன்னும் பிறவும், அவர்களை சாக்லேட்ஸ் சாப்பிட வைத்து, பொம்மையை வைத்து விளையாடும் குழந்தைகளாகவே பார்க்க விரும்புகிற சமூகத்தையே குறிப்பிடுகிறது.. எதையும் சிந்திக்க விடாமல் அழகான பாதுகாத்தலுக்குள் அடைகாக்கிற அன்பும் தவறானதே… இங்கு கிளாரா செர்கினே, அலெக்சாண்ட்ரா கேலன்ரா போன்ற போராட்டப் பெண்மணிகளை தான் நாம் முன்னோடிகளாக எடுத்துக் கொள்ள வேண்டும்.. ஜெனிலியாக்களையோ, யாமினிகளையோ அல்ல..

இங்கு ஆண்-பெண் ஈகுவாலிட்டி வேண்டுமென்று தான் அனைவருமே விரும்புகிறோம்.. என்னைக் கேட்டால் பெண்களுக்கென்று தனி பஸ், தனி ரயில், தனிப்பட்ட சலுகைகளே அவசியமில்லை.. எல்லோர்க்குமான பாதுகாப்பு உறுதி செய்யப்படும் பட்சத்தில் பெண்களுக்கும் சேர்த்தே தானே..!

அதுவும் மகளிர் வார இதழ்கள் மீண்டும் மீண்டும் கோலங்கள், சமையல் குறிப்புகள், கைவேலைப்பாடுகள், எப்போதேனும் அரிதாக..பெண் தொழிலதிபர்கள் பற்றிய கட்டுரைகள் என்று அவர்களை அந்த அடையாளங்களிலிருந்து விடுபட்டு வர இயலாத அளவிற்கு அதற்குள்ளேயே முடக்குகின்றன…பெண்களுக்கானதொழில்கள் இவையிவை தான் என்று காட்டப்படும் பட்டியலை நான் வெறுக்கிறேன்.

பொதுவெளியில் இயங்கும் பெண்கள், அரசியல் பேசும் பெண்கள் மீது  கடுமையான விமர்சனங்களை வைத்து அவர்களை செயல்பட விடாமல் செய்பவர்கள் நிறைந்த கூட்டத்தில்,  நான் இன்றிருக்கும் நிலை எளிதில் கிடைத்ததல்ல… பள்ளி, கல்லூரி, வேலை, திருமணம் என எல்லாவற்றிலும் எதிர்ப்புகள் பக்கத்து வீடு, எதிர்வீடு வழியாக வரும் போதெல்லாம் பெற்றோர்க்கும், கணவர்க்கும் சரியாக நம்மைப் புரிய வைத்து அவர்களையும் நம்மோடு இணைத்துக் கொள்வதில் இருக்கிறது நம் அடுத்த தளத்திற்கான பயணம்..

வீட்டில் இருப்பவர்களை சுயமாக  செயல்படப் பழக்கி விட்டால் மட்டுமே  பெண்களால் வெளியுலகத்தில்  சுதந்திரமாக இயங்க முடியும்.. அவர்கள் நம்மை விடவும் சிறப்பாகச் செய்வார்கள்..  இலக்கிய விழாக்கள், கட்சிக் கூட்டங்களில் பெண்கள் அதிகளவில் வருவதில்லை எனக் கூறும் தோழர்களில் பெரும்பான்மையோர், தங்கள் வீட்டுப் பெண்களை அழைத்து வந்ததேயில்லை..

பெண்கள் தங்கள் விருப்பங்களில் உறுதியாக இருந்தால், எத்தகைய சூழ்நிலையையும், சவாலையும் எதிர்கொண்டு தங்கள் இலக்கை எட்ட முடியும் என்பதற்கு என் இரு தோழிகளின் வாழ்க்கையே உதாரணம்..

திரைத்துறையில் இயங்க பெண்களை அனுமதிக்காத நம் சமூகத்தில், எந்த திரையுலகப் பின்புலமும் இல்லாமல், சினிமாவின் மேலிருந்த காதலால், அதிகளவு சம்பளம் பெற்றுக் கொண்டிருந்த ஐடி துறை வேலையை உதறி தள்ளி திரையுலகில் தடம் பதித்து பல்வேறு அவமானங்களைச் சந்தித்தாலும், விடாமுயற்சி செய்து இன்று உதவி இயக்குநராக பணிபுரிந்து கொண்டிருக்கிறாள் என் தோழி.. என்றாவது அவள் இயக்கத்தில்  நிச்சயமாகப் புதிய சிந்தனைகளை முன் வைக்கும் திரைப்படம் வெளிவரும்..

மிகவும் கட்டுப்பாடுகள் நிறைந்த ஆர்த்தோடக்ஸ் குடும்பத்தில் வளர்ந்து வாழ்க்கைப்பட்ட என் தோழி, குடும்பத்தினரின் மிகுந்த எதிர்ப்புகளிடையே அழகுக்கலை பயிற்சி முடித்து, பிரைடல் மேக்கப்பில் தனிச்சிறப்பு பெற்று, இன்று பல விருதுகளுடன் தன் துறையில் மிக உயர்ந்த  இடத்தைப் பிடித்துள்ளார்.

பெண்கள் நன்கு படித்து, நல்ல வேலையில் பொருளாதார சுதந்திரத்தோடு இருப்பதே, அவர்களை எந்த சூழ்நிலையிலும் தன்னம்பிக்கையோடு செயல்பட வைக்கும்..

என்னைப் பார்க்கும் பலரும் என்னிடம் கேட்பதுண்டு.. நான் ஃபெமினிஸ்ட்டா, பெரியாரிஸ்ட்டா, அம்பேத்கரிஸ்ட்டா என்று… நான் எந்த ஸ்ட்டும் இல்லை.. என் விருப்பப்படி வாழ்கிறவள் என்பது தான் என்னுடைய பதில்.. இந்த பதிலுக்குள்ளேயே மூவரின் சிந்தனையும்  இருக்கிறது..

நம் சமூகத்தில் குடும்பம் என்பது  தவிர்க்க  முடியாத ஆணிவேர்… இங்கிருந்து தான் சாதி, ஆணாதிக்கம் மற்றும் இன்ன பிற பிரச்னைகளும் ஆரம்பிக்கின்றன…. ஆதலால் நம் வீடுகளிலிருந்து தான் மாற்றங்களையும், தீர்வுகளையும் செயல்படுத்தத் துவங்க வேண்டும்.. இன்றளவும் ஆணியத் தன்மை கொண்டதாகவே நம் வீடுகள் இருக்கின்றன.. அப்பா வீட்டில் இருக்கிறார் என்றால் ஒரு வித காட்சிகளோடும்..  இல்லையென்றால் வேறு விதமான சுதந்திரத்துடனும் தான் இருக்கின்றன..

வீடுகளில் நாம் உருவாக்கும் மாற்றங்கள் மெல்ல சமூகத்திலும் புதிய அதிர்வுகளை ஏற்படுத்தும்.. வீடும், சமூகமும் வேறு வேறல்ல.. நாம் தான்அனைத்துமே..

புரையோடிப் போயிருக்கிற பலவற்றையும் மாற்ற ஆரம்பிப்போம்.. வீட்டிலிருப்பவர்களுடன் இணைந்து சமூகத்தை நோக்கியும்.

முந்தைய தொடர்: 

1.வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் நமக்காக வாழத் துவங்குவோம்..! – https://bit.ly/3a1kbXi

 

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. கொரோனாவும், பயணமும் - அகிலா ஸ்ரீதர்
  2. வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் நமக்காக வாழத் துவங்குவோம்..! - அகிலா ஸ்ரீதர்