புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, அதற்குக் காரணமான ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவர் மசூத் அசார்த்தை ஐ.எஸ்.ஐ. பயங்கரவாத கருப்பு பட்டியலில் சேர்க்க சீனா மறுப்பு தெரிவித்துள்ளது. இதைதொடர்ந்து, சீன பொருட்களை புறக்கணிக்கிறோம் என இந்திய தேசியவாத குழு மற்றும் இந்தைய வர்த்தக அமைப்பு தெரிவித்துள்ளது.

சீனாவின் நிலைபாடு

கடந்த மாதம் 14ஆம் தேதி அன்று புல்வாமாவில் இந்திய ராணுவ வீரர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 44 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. நாடுமுழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்தத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, பாகிஸ்தான் உடனான அனைத்து உறவுகளையும் நிறுத்திகொண்டது இந்தியா.

இந்தியாவில் தாக்குதல் நடத்திய ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார் பெயரை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலிடம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இதற்கு அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட 10 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மசூத் அசாருக்கு எதிராக உலக நாடுகளுடன் ஆயுத விற்பனைச் செய்ய அதிகாரப்பூர்வ தடை, உலகளவில் பயணம் செய்ய தடை மற்றும் சொத்துகளை முடக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் சில நாடுகள் கோரிக்கை விடுத்திருந்தன.

சீன பொருட்கள்

மசூத் அசார் பெயரை ஐ.நா.வின் தடை செய்யப்பட்ட கருப்பு பட்டியலில் சேர்க்கும் தீர்மானத்தில் கடந்த 13ஆம் தேதிக்குள் சர்வதேச நாடுகள் கருத்து தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தநிலையில், அந்தத் தீர்மானத்தின் மீது எந்தக் கருத்தையும் சீனா தெரிவிக்கவில்லை. “சீனாவின் இந்த முடிவு இந்தியாவுக்கு அதிருப்தி அளிக்கிறது. தீவிரவாதிகளைக் காப்பாற்ற சீனாவின் உதவியை நாடுகிறது பாகிஸ்தான். சீனாவின் இந்த நடவடிக்கை கண்டனத்திற்குரியது” என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே பொருளாதாரரீதியாக அழுத்ததில் இருக்கும் சீனாவின், இந்தச் செயலால், அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் பொருளாதாரரீதியான உறவுகளை நிறுத்த இருப்பதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. சீனாவில் இருந்து உற்பத்தி செய்யப்படும்  பொருட்களைப் புறக்கணிக்கிறோம் என இந்திய தேசியவாத குழு மற்றும் இந்தைய வர்த்தக அமைப்பு நேற்று தெரிவித்துள்ளது.

சொத்துக்களை முடக்கிய பிரான்ஸ்

பிரான்ஸ் நாட்டில் உள்ள பயங்கரவாதி மசூத் அசாரின் சொத்துக்களை முடக்குவதாக பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது. பிரான்ஸ் உள்துறை அமைச்சகம், நிதி அமைச்சகம், வெளியுறவுத் துறை அமைச்சகம் ஆகியவை வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.