தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கும் மாற்றுச்சான்றிதழில் சாதிப்பெயரைக் குறிப்பிட வேண்டாம் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. நடப்பாண்டில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டன.

தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டு வரும் நிலையில், பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மாற்று சான்றிதழில் சாதி பெயரை குறிப்பிட வேண்டாம் எனக் கூறப்பட்டுள்ளது. பொதுவாக தங்களது படிப்பினை முடித்தப்பிறகு மாணவர்களுக்கு பள்ளிகளில் மாற்றுச் சான்றிதழ் வழங்கப்படுவது வழக்கம். அதில் மாணவர்களது சாதி குறிப்பிடப்பட்டிருக்கும்.

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், தனியாக சாதிச்சான்றிதழ் வழங்குவதால், மாற்றுச்சான்றிதழில் மாணவரின் சாதியைக் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை என்றும், மாணவரின் மாற்றுச்சான்றிதழில் ‘வருவாய்த்துறையால் வழங்கப்பட்ட சாதி சான்றிதழை’ பார்க்கவும் என்று மட்டுமே குறிப்பிட வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. சாதி தொடர்பான கேள்வியை நிரப்ப வேண்டாம் என பெற்றோர் தெரிவித்தால் அந்த இடத்தை காலியாக விட்டு மாற்றுச்சான்றிதழை கொடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அதில் குறிப்பிட்டுள்ளது.