மத்திய மருந்து ஒழுங்குமுறை ஆணையமானது மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள அனைத்து மருந்து கட்டுப்பாட்டு நிறுவனங்களுக்கும் மின் சிகரெட் மற்றும் ஹூக்கா உள்ளிட்ட மின்னணு நிகோடின் டெலிவரி சிஸ்டம்ஸ்களை தயாரித்தல், விற்பனை, இறக்குமதி மற்றும் விளம்பரம் ஆகியவற்றை செய்ய அனுமதிக்ககூடாது என உத்தரவிட்டுள்ளது.

மருந்து மற்றும் ஒப்பனைப் பொருட்கள் சட்டம் 1940ன் கீழ் உள்ள விதிகளின்படி எலக்ட்ரானிக் நிகோடின் டெலிவரி சிஸ்டம்ஸ்களான ஈ-சிகரெட், வெப்பம்-இல்லாத எரிக்கக்கூடிய சாதனங்கள், ஈ-ஷீஷா, ஈ-நிகோடின்  ஹூக்கா, மற்றும் இதுபோன்ற பொருட்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. நிகோடின் மிகவும் நச்சுத்தன்மை மற்றும் புற்றுநோயை உருவாக்கக் கூடியது. நிகோடின், கடுமையான மருத்துவ மேற்பார்வையின் கீழ் தயாரிக்கப்பட வேண்டும்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், எலக்ட்ரானிக் சிகரெட்டினால் ஏற்படும் அச்சுறுத்தலை போக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய அரசுக்கு தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதனையடுத்து சுகாதாரத்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் மின்னணு நிகோட்டின் டெலிவரி சிஸ்டம்ஸ்களை உற்பத்தி, விற்பனை மற்றும் இறக்குமதி செய்வதை நிறுத்துமாறு அறிவுரை வழங்கியிருந்தார். மின் சிகரெட்டுகளின் அனைத்து இறக்குமதி பொருட்களும் முதலில் மருந்து கட்டுப்பாட்டு மூலம் அகற்றப்பட வேண்டும் என மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியமும் அறிக்கையை வெளியிட்டிருந்தது.

குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஆகியோரின் ஆரோகியத்பை் பாதுகாக்க உலகெங்கிலும் இந்தியா உட்பட 36 நாடுகளிலும் சுகாதாரப் பாதிப்புக்கு காரணமான மின் சிகரெட்டின் விற்பனையை தடைசெய்து இருந்தனர். இந்தியாவில் பஞ்ஜாப், மஹாராஷ்ட்ரா, கர்னாடகம், கேரளம், பிஹார், உ.பி, ஜம்மு-காஷ்மீர், இமாச்சல பிரதேசம், தமிழ்நாடு, புதுவை மற்றும் ஜார்கண்ட் ஆகிய 12 மாநிலங்களில் மட்டுமே மின் சிகரெட்டுகளை தடை செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.