ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து ஜீவா ஒளிப்பதிவு செய்து 1996-ல் திரைக்கு வந்த படம் இந்தியன்.  வசூல்ரீதியாக பெரும் வரவேற்பை பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை இந்தியன்-2 என்ற பெயரில் படமாக்கும் முயற்சியில் இயக்குனர் ஷங்கர் ஈடுபட்டுவந்தார்.

இதையடுத்து இந்தியன்-2 படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. ஒரு சில காட்சிகள் படமானதும் கமலின் வயதான தோற்றம் திருப்தியாக இல்லை என்றும் தயாரிப்பாளர் பிரச்சினை என்றும் கமல் பிக்பாஸுக்கு சென்றுவிட்டார் என்றும் பல காரணங்களால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இதனை மறுத்த படக்குழுவினர் விரைவில் இந்தியன்-2 படப்பிடிப்பு தொடங்கும் என்று உறுதிப்படுத்தினர். பின்னர் வெளிநாட்டு கலைஞர்களை வைத்து கமல்ஹாசனின் வயதான தோற்றத்தை மாற்றி தற்போது படப்பிடிப்பு நடந்துவருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் இந்தியன்-2 படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி அருகே நேற்று(12.08.2019) தொடங்கியது. படப்பிடிப்பில் கலந்துகொண்ட புகைப்படத்தை ரகுல்பிரீத் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இதனை உறுதிப்படுத்தி உள்ளார். கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் படப்பிடிப்பு நடக்கும் இடத்தின் அருகிலேயே இந்தியன்-2 படப்பிடிப்பையும் நடத்துகின்றனர்.

இந்தியன் 2 படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். ரகுல்பிரீத் சிங்குடன் ஐஸ்வர்யா ராஜேஷ், பிரியா பவானி சங்கர் ஆகியோரும் நடிக்கின்றனர். வித்யூத் ஜமால் வில்லனாக வருகிறார். அனிருத் இசையமைக்கிறார்.