ஒரு குடும்பத்தில் மூன்றாவதாக பிறக்கும் குழந்தைக்கு ஓட்டுரிமை ரத்து செய்யப்படவேண்டும் என யோகா குரு பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.

இந்தியாவின் மக்கள் தொகை சுமார் 135 கோடியை தொட்டுவிட்டது. உலக மக்கள் தொகையில் இந்தியாவின் பங்கு 17.74 சதவீதமாகும். மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் இருக்கின்றன. இந்நிலையில் இந்தியாவின் மக்கள் கட்டுப்படுத்த இரண்டு குழந்தைகளுக்கு மேல் யாரும் குழந்தை பெற்றுக்கொள்ளக்கூடாது என்று தெரிவித்துள்ளார் பாபா ராம்தேவ்.

உத்ரகாண்ட் மாநிலம், ஹரித்துவாரில் யோகா குரு பாபா ராம்தேவ் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்தியாவில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த மூன்றாவதாகப் பிறக்கும் குழந்தைக்கு ஓட்டுரிமை ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார். மேலும், அந்த குழந்தை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது என்றும் அரசு உதவிகள் ஏதும் அந்த குழந்தைக்கு வழங்கக் கூடாது எனவும் அவர் கூறினார்.

மேலும், “ இன்னும் 50 ஆண்டுகளில் இந்தியாவின் மக்கள் தொகை 150 கோடியை தாண்டாமல் இருக்கவேண்டும். அவ்வாறு 150 கோடியை தாண்டினால், அதை சமாளிக்கும் அளவுக்கு நாடு தயாராக இல்லை. இந்த திட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும். அப்படிச் செய்தால், எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் சரி, அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளமாட்டார்கள்.“ என்று தெரிவித்தார் பாபா ராம்தேவ்.