ச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதியான பினாக்கி சந்திர கோஷ் இந்தியாவின் முதல் லோக்பால் எனப்படும் ஊழல் தடுப்பு ஆணையத்தின் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அரசியல்வாதிகள் மற்றும் அரசு ஊழியர்கள்மீதான ஊழல் குறித்த புகார்களை லோக்பால் அமைப்பு விசாரிக்கும்.

லோக் ஆயுக்தா மசோதா

லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா மசோதா என்பது இந்தியாவில் ஊழலுக்கு எதிரான சட்டத்தைக் கொண்டுவர ஏற்படுத்தப்பட்டது. ஊழல், பொதுமக்கள் பணத்தை கையாடல் செய்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடும் அரசியல்வாதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் மக்களால் நேரடியாக தண்டிக்கப்படவேண்டும் என்ற அடிப்படையில் இம்மசோதா கொண்டுவரப்பட்டது.

கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி இந்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. எனினும் மாநிலங்களவையில் இம்மசோதா கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பர் 29ஆம் தேதி  நிராகரிக்கப்பட்டது. மாநிலங்களவையின் தேர்வுக் குழுவுக்கு இம்மசோதா பரிந்துரைக்கப்பட்டு அதில், சில திருத்தங்கள் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, இம்மசோதா கடந்த 2013 டிசம்பர் மாதம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் மூலம் மத்தியில் லோக்பால் என்ற அமைப்பும் மாநிலங்களில் லோக் ஆயுக்தா என்ற அமைப்பும் உருவாக வழி ஏற்பட்டது.

மசோதா நிறைவேற்றப்பட்டு இத்தனை ஆண்டுகளான நிலையில், இந்த லோக்பால் மற்றும் லோக் ஆயுத்தா அமைப்புக்கான தலைவரையும் உறுப்பினர்களையும் நியமிக்கவில்லை. இதுதொடர்பாக சமூக ஆர்வலர் அன்ன ஹசாரே உள்ளிட்ட பலரும், பல்வேறு அமைப்புகளும் போராட்டங்கள் நடத்தினர். இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. பிப்ரவரி மாத இறுதிக்குள் லோக்பால் அமைப்பின் தலைவர்கள், உறுப்பினர்களைத் தேர்வு செய்து அறிக்கை அளிக்க உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

லோக்பால் அமைப்பின் தலைவர்

லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா அமைப்பில் நியமனம் செய்யவேண்டிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கொண்ட குழுவை பிரதமர் தலைமையிலான குழு முடிவுசெய்யும். இந்தக் குழுவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, சபாநாயகர் சுமித்ரா மகாஜனும் அடங்குவர். இந்நிலையில், லோக்பால் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான குழுவின் கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சமீபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் இல்லாத சூழலில் சிறப்பு அழைப்பாளர் என்ற பெயரில் காங்கிரஸின் மல்லிகார்ஜூன கார்கேயை மத்திய அரசு அழைத்தது. ஆனால், சிறப்பு அழைப்பாளர் என்ற பெயரில் லோக்பால் கூட்டத்தில் பங்கேற்பதை அவர் புறக்கணித்தார்.

இந்நிலையில் இந்தக் குழு லோக்பால் அமைப்பின் தலைவராக முன்னாள் நீதிபதி பினாக்கி சந்திர கோஷ்ஷை தேர்ந்தெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் இதுவரை வரவில்லை. ஆனால்,  மத்திய அரசு வட்டாரங்கள் இதை உறுதியாகக் கூறுகின்றன.

விதிகளின்படி, லோக்பால் குழுவில் ஒரு தலைவர் மற்றும் 8 உறுப்பினர்கள் இடம்பெறுவார்கள். அதில், 4 பேர் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியாகவும், 4 பேர் ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளும் இடம்பெறுவர் என்று கூறப்படுகிறது.

கோஷின் பதவியும், தீர்ப்புகளும்

உச்ச நீதிமன்ற நீதிபதியாக 5 ஆண்டுகள் பணியாற்றிய பினாக்கி சந்திர கோஷ், கடந்த 2017இல் ஓய்வுபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாகவும், ஆந்திர மாநில உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் பதவியில் இருந்தார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கில், நன்கு அறியபட்டவர் நீதிபதி கோஷ். சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மறைந்துவிட்ட நிலையில் அவர்மீதான குற்றச்சாட்டுகளை கைவிடுவதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாக்கி சந்திர கோஷ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு அறிவித்திருந்தது. அத்துடன் சசிகலா உள்ளிட்டோருக்குச் சிறைதண்டனை விதித்த கர்நாடக நீதிமன்ற தீர்ப்பை உறுதிசெய்தும் இந்த அமர்வு உத்தரவிட்டது. மேலும், இவர் பாபர் மசூதி இடிப்பு வழக்கையும் சந்தித்துள்ளார்.

லோக்பால் தலைவர் நியமனம் குறித்து பலமுறை உண்ணாவிரத போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, “இந்தச் செய்தி மகிழ்ச்சியானது. இந்த அமைப்பு ஊழலை ஒழிக்க உதவும். விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்க்க உதவும். எங்களுடைய 48 ஆண்டுகால போராட்டம் வெற்றிபெற்றுள்ளது.” என்று தெரிவித்தார்.