பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் போராட்டம் இன்று நடைபெறும் என்று அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
பொதுத்துறை வங்கி தலைவர்களுடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று ஆலோசனை நடத்தினார். பொதுத்துறை வங்கி தலைவர்களைச் சந்தித்த பிறகு நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், பஞ்சாப் நேஷனல் வங்கி, ஓரியண்டல் பாங்க ஆஃப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் வங்கி ஆகியவை இணைக்கப்படுவதாகவும், இதேபோல், 27 பொதுத்துறை வங்கிகளை 12 பொதுத்துறை வங்கிகளாக மாற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இந்நிலையில், வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் போராட்டம் இன்று நடைபெறும் என்று அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் வெங்கடாச்சலம் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், வங்கிகள் இணைப்பு நடவடிக்கைக்கு வங்கி ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை குறைவால் தனியார் நிதி நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தும். வாராக்கடன் குறைந்திருப்பது தொடர்பான புள்ளி விவரங்கள் உண்மைக்குப் புறம்பாக உள்ளது என்று வங்கி ஊழியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
வங்கிகளை ஒன்றாக இணைப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சி மற்றும் அதிக லாபம் ஈட்டமுடியும் என்ற நிதித்துறை அமைச்சரின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும், பொதுத்துறை வங்கிகள் இனி மொத்தம் 12 மட்டுமே செயல்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்ததை வங்கி ஊழியர் சங்கம் கடுமையாக எதிர்த்துள்ளது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பால் வங்கிகள் மூடப்படும் அபாயம் ஏற்படும். வாராக்கடன்களையும், தொழிலதிபர்களுக்குக் கொடுத்த கடனையும் முறையாக வசூலித்தால் வங்கிகள் லாபத்தோடு இயங்கும் என்றும்  வங்கி ஊழியர் சங்கம் கூறியுள்ளது.இந்நிலையில் சென்னை அயனாவரத்தில் வங்கிகள் இணைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து சிண்டிகேட் வங்கி ஊழியர்கள் கருப்பு பட்டை அணிந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.