கட்டுமான நிறுவனங்களிடம் பணம் செலுத்திவிட்டு வீடு எப்போது கிடைக்கும் என வாங்குவோர் காலவரையின்றி காத்திருக்க முடியாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

2006ஆம் ஆண்டில் கொல்கத்தாவைச் சேர்ந்த கட்டுமான நிறுவனத்திடம், தேவசிஸ் ருத்ரா என்பவர் வீடு வாங்குவதற்காக 39 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் செலுத்தியுள்ளார். இதற்கான ஒப்பந்த படிவமும் கையெழுத்தானது. அதில், 2008ஆம் ஆண்டு இறுதிக்குள் வீடு தேவசிஸ் ருத்ரா வசம் ஒப்படைக்கப்பட்டுவிடும், அதிகபட்சமாக 6 மாத கால தாமதம் ஏற்படலாம் என குறிப்பிடப்பட்டிருந்த்து. அதைத் தொடர்ந்து, வீடு குறிப்பிட்ட காலத்திற்குள் ஒப்படைக்கப்படாததால் 2011ஆம் ஆண்டில், மாநில நுகர்வோர் ஆணையத்தில் புகார் அளித்தார் தேவசிஸ் ருத்ரா.

ஒன்று வீட்டை ஒப்படைக்க வேண்டும் அல்லது ஆண்டுக்கு 12 சதவீத வட்டி மற்றும் 20 லட்ச ரூபாய் இழப்பீட்டுடன் பணத்தை திருப்பித் தர உத்தரவிடவேண்டும் என அந்த புகார் மனுவில் அவர் தெரிவித்திருந்தார். இந்தப் புகாரை விசாரித்த நுகர்வோர் ஆணையம், 5 லட்ச ரூபாய் இழப்பீடு மற்றும் ஆண்டுக்கு 12 சதவீத வட்டியுடன் பணத்தை திருப்பித் தருமாறு உத்தரவிட்டது.

இதுதொடர்பாக தேசிய தீர்ப்பாணையத்திற்குக் கட்டுமான நிறுவனம் மேல்முறையீட்டுக்குச் சென்றது. அங்கு இழப்பீட்டுத் தொகை மட்டும் 5 லட்ச ரூபாயில் இருந்து 2 லட்சமாகக் குறைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட் ஹேமந்த் மேத்தா அமர்வு விசாரித்தது.

வீடு ஒப்படைக்கப்படுவதற்காக, வாங்குவோர் காலவரம்பின்றி காத்திருக்க வேண்டும் என எதிர்பார்க்க முடியாது என்று குறிப்பிட்ட நீதிபதிகள், 7 ஆண்டுகளாக வீடு ஒப்படைக்கப்படவில்லை என்பது ஏற்கமுடியாத அளவிற்கு தாமதம் எனக் கூறினார்கள். மேலும் மாநில நுகர்வோர் ஆணையமும், அதைத் தொடர்ந்து தேசிய தீர்ப்பாணையமும் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதன்மூலம் ஆண்டுக்கு 12 சதவீத வட்டி மற்றும் இழப்பீட்டுத் தொகையுடன், வாடிக்கையாளர் செலுத்திய பணத்தை திருப்பித் தரவேண்டும் என கட்டுமான நிறுவனத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.