ஆண்டுதோறும் மார்ச் மாதம் கடைசி சனிக்கிழமை அன்று உலக இயற்கை நிதியம் சார்பில் `எர்த் ஹவர்’ எனப்படும் பூமி நேரம் அனுசரிக்கபட்டு வருவதை அடுத்து , இன்று(மார்ச்,30) 108 நாடுகளில் ஒருமணி நேரம் மின்விளக்குகள் மற்றும் மின்கருவிகள் நிறுத்தி வைக்க்குமாறு வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

2007-ம் ஆண்டு முதல் உலக இயற்கை நிதியம் சார்பில் `எர்த் ஹவர்’ அனுசரிக்கப்பட்டு வருகிறது. பூமியின் வெப்பநிலை மாற்றத்தை அனைவருக்கும் உணர்த்துவதுடன் மின் சேமிப்பை ஊக்குவிப்பது, கரிம வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவது, ஒளி மாசடைவதைக் குறைப்பது உள்ளிட்டவற்றை வலியுறுத்தும் வகையில் உலகம் முழுவதும் இந்நிகழ்வு நடத்தப்படுகின்றது. இந்நிகழ்வின்போது, அனைவரையும் தங்கள் வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் உள்ள மின்விளக்குகளையும்  மின் கருவிகளையும் ஒரு மணி நேரம் நிறுத்தி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படும்.

இந்நிலையில், இந்த நிகழ்வு இன்று (சனிக்கிழமை) இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை நடைபெற உள்ளது.  இதன்படி பல இடங்களில் விளக்குகள் அணைத்து வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர். இந்த நிகழ்வில் உலகம் முழுவதும் உள்ள 180 நாடுகள் கலந்துகொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு, மும்பையில் 27 லட்சம் மின் நுகர்வோர் மின் இணைப்பைத் துண்டித்து இந்த நிகழ்வுக்கு ஒத்துழைப்பு தரப்போவதாக மின்வாரிய உயர்அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எனவே, இன்று இரவு ஒரு மணி நேரம் அனைவருன் மின் இணைப்பை துண்டித்து ஒத்துழைக்குமாறு உலக இயற்கை நிதிய அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.