க்ரீஷ் கர்னார்ட் (19.05.1938 – 10 06 2019)

அவரால் எதையும் தன் தோற்றத்தில் வரவழைத்துவிட முடியும். எதையும் என்றால் உடனே எல்லாவற்றையுமா எனக் கேட்பீர்கள் எனத் தெரியும். நடிப்பெனும் கலையைத் தன் இறுதி சுவாசம் வரைக்கும் சுமந்துகொண்டே திரிந்த பிடிவாதி அவர். அவர் நடித்து பிவி காரத் உடன் இணைந்து இயக்கிய படமான வம்ச விருஷாவில் மேற்கத்திய உடையணிதலுடன் ஒரு நெடிய இரண்டு நிமிட மாண்டேஜ் ஷாட்டில் சட் சட்ட்டென்று எண்ணிலடங்கா உணர்வுகளைத் தன் முகத்தில் படர்த்திக் களைந்தபடி நடிப்பின் மிக அபூர்வமான தன் தோன்றலை நிகழ்த்தியிருப்பது இன்னும் நினைவிலாடுகிறது.

அவரது முகமொழியும் பாவனையும் மிகை நடிப்பு பொங்கிக் கொண்டிருந்த காலத்தில் விளைந்த மாற்று ரக வைரம். அதே படத்தில் கலைந்த மனிதனாக ஒரு நாற்காலியில் அமர்ந்திருப்பார் க்ரீஷ். காலத்தின் இருவேறு ஒப்பனைகளை கச்சிதமாக வழங்கினார் கிரீஷ் கர்னாட் எஸ்.எல் பைரப்பா எழுதிய நாவலைப் படமாக்கி அதில் நடிக்கவும் செய்த இருவரும்தான் அந்தப் படத்தை இயக்கியதற்காக தேசிய விருதைப் பெற்றனர்.

ஞானபீட விருது, காளிதாஸ் சம்மான் விருது, சாஹித்ய அகாடமி, சங்கீத நாடக அகாடமி, பத்ம விருதுகள் எனத் தன் கலைக்காகவும் எழுத்துக்காகவும் எண்ணிலடங்கா கவுரவங்களையும் விருதுகளையும் பெற்றவரான கிரீஷ் கர்னாட் நாடகத்தைத் தன் உயிரருகே வைத்து நேசித்தார். வெறியற்ற மொழிப்பற்று அவருக்கு இருந்தது என்றபோதும் சகல மொழிகளுக்கும் ஊடுபாவக் கூடிய தடையற்ற நதியாகவே அவர் தனக்கு வசமான அனைத்துக் கலாவடிவங்களையும் நம்பினார்.

ஊடக மனிதராகவும் சாமான்யர்களுக்கு ஆதுரமான முதற்குரலாகவும் எப்போதும் ஒலித்தார். தேசிய சர்வ தேச கவுரவங்களைப் பெற்ற கிரீஷ் கர்னார்ட் கலைப்பள்ளி என்றே நடிப்பிலும் நாடகத்திலும் எண்ணற்ற தொடரிகளை உருவாக்கியபடியே வாழ்ந்தார். தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி உள்ளிட்ட பன்மொழித் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். தமிழில் நான் அடிமை இல்லை, குணா, காதலன், ரட்சகன், செல்லமே, மின்சாரக் கனவு, ஹேராம், காதல் மன்னன், முகமூடி போன்ற படங்களில் நடித்தார்.

நாடக எழுத்தாளர் நடிகர் இயக்குனர் என்பது போன்ற பல முகங்கள் கொண்டிருந்தாலும் இறுதிவரைக்கும் மென்மையும் உறுதியும் மிக்கவராகவே திகழ்ந்தார் க்ரீஷ் கர்னார்ட். கர்நாடை சென்னையில் 2012 இல் அவரது புத்தகத்தின் தமிழாக்க வெளியீட்டு விழாவில் பார்த்தபோது எந்த ஒப்பனையுமில்லாத எளிய மனிதனாகவே தோன்றினார்.

மென்மையாகக் கரம் பற்றிக் குலுக்கினார். புத்தகத்தின் முதற்பக்கத்தில் கலை என்பது மகத்தானது என்று ஆங்கிலத்தில் எழுதிக் கையெழுத்திட்டார். அந்த நூலை மொழிபெயர்த்த பாவண்ணனிடமும் அதன் கீழேயே கையொப்பம் வாங்கிக்கொண்டு அவரைப் பார்த்தபோது சட்டென்று மலர்ந்து சிரித்தார். ஒரு கலைஞனால்தான் அப்படி மலரவும் மலர்த்தவும் முடியும். தான்வாழ்ந்த காலத்தை மலர்த்தியவர் க்ரீஷ் கர்னார்ட். வாழ்க அவர் புகழ்.