மணிரத்னத்தின் பள்ளியிலிருந்து வந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் அழகம்பெருமாள். மெட்ராஸ் டாகீஸ் என்ற நாமதேயத்திலான மணிரத்னத்தின் சொந்தப் பட நிறுவனத்தின் வாயிலாக அவர் தயாரித்த படம் டும்டும்டும். தமிழில் தென் நிலம் என்றாலே மதுரை என்ற தோற்ற மயக்கம் பலகாலமாக நிகழ்ந்துவருவது. அதனைப் புறந்தள்ளி நெல்லைப்புறத்து வாழ்வியலை முன்வைத்த படங்களின் வரிசையில் டும்டும்டும்முக்கு தனித்த இடமொன்று எப்போதும் உண்டு.

மருதப்பிள்ளை வசதியானவர். அவர் மகன் ஆதி பட்டண வாசி. மருதப்பிள்ளையிடம் முன் காலத்தில் வேலை பார்த்த வேலுத்தம்பி இன்றைக்கு ஓரளவு தனித்து நின்று தன் வசதியைப் பெருக்கிக் கொண்டவர் எனினும் பழைய முதலாளி மீதான விசுவாசம் குன்றாதவர்.வேலுத்தம்பியின் இரண்டாம் மகள் கங்கா மாநிலத்தில் இரண்டாவது மாணவி எனும் பெருமையோடு ப்ளஸ் டூ படிப்பில் தேறுகிறாள்.ஊர் பாராட்டுகிறது மருதப்பிள்ளை தன் மகன் ஆதிக்கு கங்காவைப் பெண் கேட்கிறார். மனம் மகிழும் வேலுத்தம்பியும் நெகிழ்ந்து சம்மதிக்கிறார்.படிப்பு பாழாகாது என உறுதி கூறப்பட்டாலும் முன் பின் தெரியாத ஆதியை எப்படி மணப்பது எனச் செய்வதறியாமல் திகைக்கிறாள் கங்கா.தனக்கென்று தனிக்கனவுகள் கொண்ட ஆதியும் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்று அழைத்து வரப்பட்டு கல்யாணப் பேச்சு முன்வைக்கப்படுவதைத் தடுக்க முடியாமல் தவிக்கிறான்.பெண்ணும் மாப்பிள்ளையும் ஒற்றுமையாய் முயன்று இந்த நிச்சயதார்த்தத்தை நிறுத்த வேண்டுமென முயன்று அதில் வெல்கிறார்கள்.இரண்டு குடும்பங்களுக்கும் இடையே பெரும்பகையாவதற்கு வேலுத்தம்பி மீது சுமத்தப்படுகிற பொய் அனுமானம் ஒன்றைக் கண் மூடித் தனமாக நம்புகிறார் மருதப்பிள்ளை என்பது காரணமாகிறது.கலியாணம் நின்று குடும்பங்கள் பிரிகின்றன.

பட்டணத்தில் தன் ஒன்று விட்ட தம்பி வக்கீல் சிவாஜி வீட்டில் தங்கி கங்காவைப் படிக்க வைக்கிறார் வேலுத்தம்பி.அவருடைய மூத்த மகளின் கணவர் சின்னஞ்சிறு குழந்தையோடு தன்னைத் தவிக்க விட்டு இறந்துபோன மனைவியையே எண்ணி வாடியபடி வாழ்வை நகர்த்துவதை நினைத்து உருகுகிறார்.பட்டணத்தில் யதேச்சையாக சந்தித்துக்கொள்ளும் ஆதியும் கங்காவும் மெல்ல ஸ்னேகிதமாகி காதலிக்கத் தொடங்குகின்றனர்.வேண்டாமென்று தாங்கள் நிறுத்திய கல்யாணத்தை மறுபடி என்ன செய்தாவது நடத்த வேண்டுமென்ற ஆவலில் திரிகிறான் ஆதி.அதை எப்படியாவது கெடுத்து விட வேண்டுமென அவனது நண்பன் ஜிம் முயல்கிறான்.சிவாஜியிடம் ஜூனியர் வக்கீலாக சேர்கிறான் ஆதி.

பட்டணத்துக்கு வருகை தரும் மருதப்பிள்ளைக்கு ஆதி சிவாஜியிடம் பணி புரிவது தெரிய வந்து கடுமையாக ஆட்சேபிக்கிறார்.அங்கே யதார்த்தமாக சந்திக்க நேர்கையில் அவருக்கும் வேலுத்தம்பிக்கும் இடையே பெரும் வாக்குவாதம் வருகிறது.வேலுத் தம்பி தன் மூத்த மருமகனுக்கே கங்காவை இரண்டாம் தாரமாக கல்யாணம் செய்து வைக்கப் போவதாகக் கூறுகிறார்.இத்தனை குழப்பங்களுக்கும் இடையே தான் தவறாகப் புரிந்து கொண்டுவிட்டதையும் வேலுத்தம்பி குற்றமற்றவர் என்பதும் தெரிய வரும் மருதப்பிள்ளை ஊரறிய வேலுவிடம் மன்னிப்பு கோருகிறார்.மனம் நெகிழும் வேலுவும் தன் சொற்களால் ஆதுரம் காட்ட தங்கள் திருமணத்தை நிறுத்திய பிறகு காதலிக்கத் தொடங்கிய கங்கா ஆதி இருவருக்கும் கல்யாணம் இனிதே நடக்க டும்டும்டும் கொட்டுகிறது. சுபம்.

இந்தப் படத்தின் சீரான கதையும் உறுத்தாத அதே நேரத்தில் தென் வட்டாரத்து உரையாடல்களைக் கண் முன் கொணர்ந்த வசனங்களும் திரைக்கதை அமைப்பும் ராம்ஜியின் ஒளிப்பதிவும் கார்த்திக் ராஜாவின் இசையும் என எல்லாமே இதன் ப்ளஸ் பாயிண்ட்களாகின.ரகசியமாய் ரகசியமாய் புன்னகைத்தால் பொருளென்னவோ எனும் பாடல் காலம் கடந்து ஒளி குன்றாமல் நிரந்தரித்த ஒரு கலாவைரமாக மாறியது.மற்ற பாடல்கள் எல்லாமுமே கச்சித அற்புதங்களாகவே தனித்தன. விவேக்கின் காமெடி இருவித இழையோடல்களுடன் கதையினை ஒட்டியும் சற்றே நகர்ந்துமென பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியது. இந்தக் கதையில் எளிதில் யூகிக்க முடியாத கௌதம் கல்பனா இருவரின் பாத்திரங்களுடைய சித்தரிப்பு மானுடம் மீதான வாஞ்சையைப் பறை சாற்றிற்று.

மனிதன் சொற்களால் ஆவதும் அழிவதுமாக இவ்வாழ்வு இருக்கிறது எனும் ஒற்றை வரியைக் கொண்டு பின்னப் பட்ட குடும்பச் சித்திரம் டும்டும்டும் இதில் பங்கேற்ற ஆர்.மாதவன் ஜோதிகா டெல்லி குமார் மலையாள நடிகர் முரளி கௌதம் சுந்தர்ராஜன் கல்பனா விவேக் எம்.எஸ்.பாஸ்கர் வையாபுரி மணிவண்ணன் விகேராமசாமி கலைராணி ரிச்சா மற்றும் சின்னி ஜெயந்த் ஆகியோர் யாவருமே சொல்லிக் கொள்ளத் தக்க பூரிப்பாகவே இந்தப் படத்தை வழங்கினார்கள்.

எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத சித்திரம் டும்டும்டும்.

முந்தைய படம்: https://bit.ly/2Xy4foX