தீராத பாதைகள்-11

சிறு வயதிலிருந்தே எனக்கு அதிபுனைவுகளின் மீது தீராத ஆர்வமுண்டு. அப்போதெல்லாம் படத்தில் ஒரு கிராபிஃ காட்சி இருந்துவிட்டால் போதும் எத்தனைமுறை வேண்டுமானாலும் பார்த்துக்கொண்டேயிருப்பேன். நான் சிறுவனாக இருந்த போது ஹாலிவுட் ஃபேன்டசி படம் கோலிவுட் ஃபேன்டசி படம் என்றெல்லாம் வகைப் பிரிக்கத் தெரியாது இங்கிலீஸ் பேய்ப்படம், தமிழ் பேய்ப்படம் (இங்க்லீஸ் பேய்ப்படத்தில் அனகோண்டா, ஜுராசிக் பார்க், ப்ரடேட்டர், மம்மி போன்றவைகளும் தமிழ் பேய்ப்படங்களில் அம்மன், பாளையத்தம்மன், ராஜராஜேஸ்வரி போன்ற பக்திப்படங்களும் அடங்கும்). திருச்சியில் ஆரம்ப வகுப்புகள் படித்துக்கொண்டிருந்த போது என் பாட்டியுடன் படங்களுக்குப் போவேன். பாளையத்தம்மன் பார்க்க போனபோது பயங்கரக் கும்பல். தியேட்டருக்கு வெளியே கோவில் போன்ற செட் அமைப்பு. படம் ஓடிக்கொண்டிருக்கும் போது ஒன்றும் தெரியவில்லை கடைசிப் பாடல் வந்தபோது எங்களுக்கு அருகில் இருந்த பெண்மணிக்கு சாமி வந்துவிட்டது. முடிந்திருந்த கூந்தலை அவிழ்த்துவிட்டுக்கொண்டு பயங்கரமாக ஆடிக்கொண்டிருக்கிறது. சிறுவனான நான் இதைக்கண்டு பயங்கரமாக அலற ஆரம்பித்துவிட்டேன். இதற்கிடையில் எங்கிருந்தோ வந்த வேறு இரண்டு பெண்கள் சாமியாடும் பெண்ணின் மீது விபூதி அடித்துச் சாந்தபடுத்திவிட்டுச் சென்றார்கள். அதன்பிறகு தியேட்டரில் எழுந்து நின்று பார்த்தால் ஏறக்குறைய இருபது பெண்கள் அப்படிச் சாமியாடிக்கொண்டிருந்தார்கள். ஆகவே படம் பார்க்கும் போது இப்படிப்பட்ட த்ரில்லிங் அனுபவங்களுக்காகவே அதிபுனைவு படங்களுக்குச் செல்லத் தொடங்கினேன். தமிழில் அதிபுனைவுக் கதைகள் என்பது பக்தி படங்களாக மட்டும்தான் இருக்கிறது, ஒரு ஆத்மாவை மிகப் பயங்கரமாகச் சித்தரித்துவிட்டுக் கடைசியில் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு பழித் தீர்த்துக்கொள்ள வந்தது என முடிகிறது இதில் கடைசியில் வில்லன் தெய்வத்திடம் சரணடைகிறான் ஆனாலும் ஆத்மா அவனைக் கதாநாயகன் அல்லது நாயகி வழியாகப் பழித் தீர்த்துக்கொண்டு சாந்தமடைகிறது இதுதான் இத்தனை வருடம் நான் பார்த்த அதிபுனைவுக் கதைகள்.

இந்த அடிப்படை கதையின் மீது ஏதாவது ஒரு மசாலாவை கொஞ்சம தூக்கலாகச் சேர்த்துவிட்டால் படம் சூப்பர் டூப்பர் ஹிட். இப்போதெல்லாம் தங்கச்சி செண்டிமெண்ட், காதல் பிரிவு போன்ற மசாலாவை குறைத்து காமெடியை அதிகம் கலந்துவிடுகிறார்கள் மற்றபடி புதிய முயற்சிகள் என வரும் ஒருசில படங்கள் ஹாலிவுட் சினிமா ஒன்றின் நகலாகதான் இருக்கிறது. தமிழில் அதிபுனைவுக்க கதைகள் வர சாத்தியமே இல்லையா? இதைப் பற்றி சமீபத்தில் நடந்த ஒரு விவாதம் என்னை தூங்கவிடாமல் செய்துவிட்டது. இவ்வளவு தூரம் அதிபுனைவுக் கதைகளைப் பற்றிப் பேசக்காரணம் ஃபௌனின் புதிர்வட்ட பாதை என்ற ஸ்பானிஸ் திரைப்படம்.

இந்தப் படம் ஒரு மாயாஜாலத்திரைபடம். குழந்தைகள் முதல் பெரியவர்வரை அனைவரும் பார்க்கலாம். படத்தின் பெயர் Pan’s Labyrinth. அதாவது ஃபௌனின் புதிர்வட்டப்பாதை. ஃபௌன் என்பது ரோம் நாட்டின் நாட்டுப்புற கதைகளில் வரும் ஆட்டுகாலும் மனிதத்தலையும் கொண்ட ஒரு உயிரினம். மாயாஜாலத் திரைப்படங்களுக்கு என்றுமே வரவேற்பு அதிகம். எது நம்மை இம்மாதிரியான அதிபுனைவுகளின் பக்கம் ஈர்க்கின்றது? யாராவது ஒருவர் நம் துன்பங்களில் இருந்து விடுவித்துவிட மாட்டார்களா என்ற ஆழ்மனது ஏக்கங்கள்தான். இதன் வெளிபாடுதான் சூப்பர் மேன், ஸ்பைடர் மேன். அதீத சாகச மனப்பான்மையும் இதில் அடங்கும். இதன் வெளிபாடுகள்தான் ஆலிஸின் அற்புத உலகம், ஹாரிபாட்டர் சினிமாக்கள். இந்தச் சினிமா இதில் எதிலும் சேராத புதுமாதிரியான கதை. இதுவரை உலக அளவில் கவனம் பெற்ற மாயாஜால கதைகள் செய்யத் தவறிய ஒன்றை இந்தப் படம் செய்திருக்கிறது.

இதுவரை வந்த படங்கள் அனைத்திலும் வரலாறு மறைக்கப்பட்டு அல்லது ஒரு உருவகமாக வந்தது. உதாரணமாக வெர்னர் ஹெர்சாக்கின் நோஸ்ஃபராது. இரத்தக்காட்டேரியின் கதை. இவை வெவ்வேறு வடிவங்களில் உலகம் முழுவதும் இருந்தாலும் ‘ட்ராகுலா’ என்ற பெயரில் இந்தக் கதையை முதன்முதலில் நாவலாக எழுதியவர் ப்ரேம் ஸ்டாக்கர்ஸ். ட்ராகுலா என்ற கொடுங்கோலனை ரத்தக்காட்டேறியாக உருவகப்படுத்தி எழுதியுள்ளார் என்பதைத் தாண்டி வௌவால் எலி போன்ற உருவகங்கள் இதில் நிறைய உள்ளன அதை ஒரு சாதாரண ரசிகன் பேய் என்ற பயத்துடன் கடந்து போய்விடுவதோடு நின்றுவிடுகிறது. ஆனால் ஒரு ஐரோப்பியனுக்கோ அல்லது மேற்குலகை சார்ந்த ரசிகனுக்கு அவை வரலாறு. நவீன யுகம் தொடங்கும் முன் நடந்த சிலுவைp போரும் அதைத் தொடர்ந்து வந்த ப்ளேக் நோயும் பற்பல உயிர்களைப் பலி கொண்டன. இதில் இந்த ப்ளேக் நோய் பரவுவதற்குக் காரணம் எலிகள். எலிகள் பெருக யார் காரணம்? தெரியவில்லை. எங்கிருந்தோ வந்த ட்ராகுலாதான் காரணம் என்று சூசகமாகக் கதையை எழுதி செல்கிறார் ஸ்டாக்கர்ஸ். அதை அப்படியே காட்சியாக்கியுள்ளார் ஹெர்சாக். ஆனால் படம் பார்க்கும்போது நாம் பேசிய எந்தவொரு கறுப்பு வரலாறும் காட்டப்படாது. ஆனால் ஃபானின் புதிர்பாதை என்னும் இப்படம் உண்மையான வரலாற்றின் பின்னணியில் நடக்கிறது. இப்படியெல்லாம் உண்மையில் நடந்திருக்குமோ என்ற கேள்வியை எழுப்பும் அதே சமயம் நான் யார்? நான் எதற்காக இந்தப் பூமியில் இருக்கிறேன் என்ற ஆழமான கேள்விகளை மனதில் எழுப்பிவிடுகிறது.

இந்தப் படம் 2006ஆம் ஆண்டு வெளியாகியுள்ளது. படத்தை இயக்கியவர் Guillermo Del Toro (எலியாரமோ தல் தோரோ என்று உச்சரிக்க வேண்டும்). மூன்று அகெடமி விருதுகள் உட்பட உலகெங்கும் நடத்தப்பட்ட போட்டிகளில் கலந்து கொண்டு மொத்தம் இருபத்து எட்டு விருதுகளை வென்றுள்ளது. இந்தக் கதையை ஒற்றைவரியில் அறிமுகப்படுத்துவதென்றால் இரண்டு பெண்களின் வாழ்க்கைப் போராட்டத்தைப் பேசுகிறது என்று சொல்லலாம். 1944 ஆம் ஆண்டு ஸ்பெயின் தேசத்தில் உள்நாட்டுப்போர் நிகழ்ந்த காலம் யார்யாரெல்லாம் கம்யூனிஸ்ட் என்று அறியப்பட்டார்களோ சந்தேகிக்கப்பட்டார்களோ அவர்களெல்லாம் கொல்லப்பட்டார்கள். இந்த யுத்த காலத்தில் ராணுவ தளபதியான கேபிதன் விதால் தன் கருவுற்ற மனைவி தன்னோடு இருக்க வேண்டும் என்று விரும்புகிறான். கருவுற்ற அந்தப் பெண் ஏற்கனவே ஒரு தையல்காரனின் மனைவியாக இருந்து ஒரு பெண் குழந்தையைப் பெற்றவள் (இந்தக் குழந்தைதான் படத்தின் முதல் நாயகி!). தன் கணவன் ஏதோ ஒரு விபத்தில் இறந்து போகவே தன்னை விரும்பிய இந்த ராணுவதளபதியை மணந்து கொள்கிறாள். தன் மகளுடன் (அவள் பெயர் ஒஃபிலியா) தன் புதிய கணவன் விருப்பத்துக்கு இணங்க அந்த ராணுவ தளவாடத்திற்குச் செல்கிறாள். இந்தக் காட்சியில் இருந்துதான் படம் தொடங்குகிறது. தாயுடன் செல்லும் அந்தச் சிறுமி உண்மையில் பாதாள உலகின் இளவரசி.

பூமியை பார்க்க ஏற்பட்ட ஆர்வத்தால் யாருக்கும் தெரியாமல் பாதள உலகைவிட்டு ஓடி வருகிறாள். அப்படி வந்தவளின் நினைவுகள் சூரிய ஒளியினால் அழிக்கப்பட்டு உடல் நலம் குன்றி மாண்டு போகிறாள். இறந்த அவளின் ஆத்மா வேறொரு பெண்ணின் உடல் வழியாக மறுபிறப்பு அடைகிறது. அந்தக் குழந்தைதான் ஒஃபிலியா – தன் வளர்ப்பு தந்தையைக் காண தாயுடன் சென்றுகொண்டிருக்கிறாள். ஒஃபிலியாவிற்குத் தனது கடந்த பிறவியைப் பற்றி ஒன்றும் தெரியாது ஆனால் பாதள உலக அரசருக்கு தன் மகளை எப்படியாவது தன்னிடம் கொண்டு வந்துவிட வேண்டும் என்று ஆசை. கடைசியில் சிறுமி ஒஃபிலியா பாதள உலகிற்குச் சென்றாளா என்பது மீதிக்கதை. சிறுமி எதிர்கொள்ளும் போராட்டங்கள் மாயாஜால உலகை சார்ந்ததாயிருக்க அதற்கு இணையாக மெர்சிடெஸ் இராணுவ தளவாடத்தில் பணிப்பெண்ணாகப் போராடிக்கொண்டிருக்கிறாள். உள்நாட்டுப்போர் என்ற பெயரில் அங்குச் சர்வாதிகாரம் நடந்துக்கொண்டிருந்தது இது வரலாறு. இதில் கலகக்காரர்கள் என அறியப்பட்ட குழு ஒன்றை வழிநடத்தும் பேத்ருவின் சகோதரிதான் மெர்சிடெஸ். அவ்வப்போது மருந்துகளையும் உணவையும் எடுத்துக்கொண்டு வந்து தருவதோடு மட்டுமல்லாமல் சில இராணுவ ரகசியங்களையும் தெரிந்துகொண்டுவந்து சொல்கிறாள். இவளுக்கு அங்குப் பணிபுரியும் மருத்துவரும் உதவி செய்கிறார். விரோதிகள் என்று தம் சொந்தங்களை வேட்டையாடும் இரக்கமற்றவர்கள் மத்தியில் எந்நேரம் என்ன நிகழுமோ என்று தத்தளித்துக்கொண்டிருக்கிறாள் மெர்சிடெஸ். இந்தப் பெண்கள் இருவரின் போராட்டம்தான் ஃபௌனின் புதிர்வட்டப்பாதை.

ஒரு சர்வாதிகார ஆட்சியின் கீழ் என்னென்ன நிகழும் என்பதைப் படம் பிடித்துக்காட்டும் அதே வேளையில் மாயா உலகின் உயிரிகளோடு நம்மை ஒன்ற வைக்கிறது இப்படம். வழக்கமான தேவதைக்கதைகளில் இருந்து இது ஒரு மாறுபட்ட படம், காரணம் எல்லாத் தேவதைக்கதைகளிலும் நாயகனோ நாயகியோ ஏதாவது ஒரு குறிப்பிட்ட சவாலை எதிர்கொண்டு முடித்து வெற்றி அடைகிறார்கள் (அப்படி அடையாவிட்டால் அடுத்தப் பாகம் இருக்கிறது என்று அர்த்தம்!). ஆலிஸின் அற்புத உலகம், ஸ்னோவொயிட் சாகசங்கள் முதல் ஹாரிபாட்டர் வரை இந்த ஒரு டெம்ப்லேட்தான். ஆனால் இந்தப் படத்தில் மனித சிறுமியாக இருக்கும் பாதள உலக இளவரசியால் அற்புதங்களை நம்ப முடிவதில்லை. தேவதை கதைகள் அதிகம் படிக்கும் ஒஃபிலியா நிஜ வாழ்வில் கதைகளில் நடப்பதை போன்ற அற்புதங்களை ஏற்பதில் தயக்கம் ஏற்படுகிறது. இதுதான் இந்தப் படத்தை வேறொரு புதிய பரிணாமத்தில் காண வைக்கிறது. பாதாள உலக இளவரசியாக இருந்தாலும் இப்போது வராலாற்றின் ஒரு அங்கமாகிவிட்டால் ஒஃபிலியா. வரலாறு என்பது என்ன? காலமும் இடமும் சேர்ந்த ஒன்றுதான் வரலாறு. ஆகவே தன் இருத்தலை தாண்டி தனக்குப் புனையப்படும் கதைகளை நம்புவதில் சிரமம் ஏற்படுகிறது. அதே சமயம் போராட்டங்களும் போர்களும் நிறைந்த இந்த உலகத்தில் இருக்கவும் பிடிக்கவில்லை.

ஒருவகையில் சிறுமி ஒஃபிலியா நம் ஒவ்வொருவரையும் பிரதிபலிக்கிறாள். துன்பங்களே இல்லாத ஒரு இன்பமயமான வாழ்வுக்கு மனம் ஏங்கிக்கொண்டே இருக்கிறது. அதே வேளை அந்த இன்பவாழ்வு இவ்வுலகில் இல்லை என்பதையும் ஏதோ ஒரு வகையில் நாம் அறிந்திருக்கிறோம். ஆகவேதான் எல்லா மதங்களும் இறப்புக்கு பிறகு அந்த இன்ப வாழ்வு உண்டு எனப் போதிக்கிறது. இந்தக் காரணத்தினால்தான் மதத்தை அபின் என விமர்சித்தார் காரல் மார்க்ஸ். எப்போதும் ஒஃபிலியாவிடம் இதைச் செய் இதைச் செய்யாதே என எதையாவது சொல்லிக்கொண்டிருக்கும் ஃபௌன் மற்றும் குட்டி தேவதைகள் ஒரு வகையில் மதத்தின் மாற்று உருவங்களாக இருக்கிறார்கள்.

ஒவ்வொரு திரைப்படத்தையும் இரசவாதம் என்றுதான் குறிப்பிட தோன்றுகிறது. கதை, திரைக்கதை, ஒலி மற்றும் ஒளி, படத்தொகுப்பு, ஒப்பனை, கலை இதர பிற தொழில்நுட்பங்கள் சரியான் விகிதத்தில் சேரும்போது திரைப்படம் தங்கமாகிறது. இதில் ஏதாவதொன்று சரியாக இல்லாத நிலையில் பார்வையாளன் பரிதாபத்துக்குரியவனாகிவிடுகிறான். சமீப காலத்தில் படம் எப்படியிருக்கிறது என்று கேட்டால், ‘க்ளைமேக்ஸ் மட்டும் சொதப்பிட்டான்! இல்லனா படம் சூப்பர்’ என்கிறார்கள், அல்லது “படத்தின் முதல் பாதி அட்டகாசம் இரண்டாம் பாதி அறுத்துட்டான்” என்கிறார்கள். படம் என்றால் எல்லாவற்றையும் சேர்த்ததுதான் என ஏன் இன்னும் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள் என்று புரியவில்லை. ஒரு நல்ல படத்தை யாரும் இது என்னுடைய படம் என்று சொந்தம் கொண்டாட முடியாதபடி இருக்க வேண்டும். மேலே சொன்ன ஒவ்வொரு தொழில்நுட்ப விற்பனர்களும் தங்களது சிறப்பான பங்களிப்பை தரும்போது அதியற்புதமான திரைப்படம் உருவாகிறது. நான் சொல்வது புரியவில்லையென்றால் இந்தப் படத்தை ஒருமுறை பாருங்கள். நடிகர்களுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ள ஒப்பனைகள் மிக நேர்த்தியாக உள்ளது. படத்தில் வரும் ஃபௌன் கிராஃபிக்ஸ் உருவாக்கம் என நினைத்திருந்தேன் பின்னரே அது ஒப்பனை என்று தெரிந்தது. அதேபோலப் படத்தில் கையில் கண்கள் கொண்ட ஒரு அரக்கனின் பாத்திரம் வரும் அதுவும் ஒப்பனை என்பது பின்னரே தெரிந்தது. அதுமட்டுமல்லாமல் இந்த ஒப்பனைகள் செய்யப் பல மணி நேரம் ஆகும் என்பதால் இந்த இரு வேறு கதாபத்திரத்துக்கும் ஒரே நடிகரை நடிக்க வைத்துள்ளனர். Doug Jones என்ற இந்நபர் இப்படிப் பல சிறப்பு ஒப்பனைக்குப் பொருத்தமானவர் என்பதாலும் இவ்வளவு ஒப்பனைகள் செய்ய அசாத்திய பொறுமை வேண்டும் என்பதாலும் இவரைத் தேர்ந்துள்ளனர்.

படத்தில் சர்வாதிகாரியான கேப்டனிடம் ஒரு தகப்பனையும் மகனையும் கொணர்ந்து நிறுத்தி விசாரணை நடைபெறும் காட்சியை என் வாழ்வில் மறக்க முடியாது. அவர்களிடமிருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்படுகிறது அவற்றை முயல் வேட்டைக்குப் பயன்படுத்தியதாக அவர்கள் கூறுகிறார்கள். அப்போது விசாரிக்கப்படும் அந்த இளைஞனை அவன் தந்தையின் முன்பாகவே தூப்பாக்கியின் பின்புறத்தால் முகத்தில் அடிக்கிறார் அந்தக் கேப்டன். முகத்தில் அடிக்கிறார் என்று சொல்வது அந்தக் காட்சியை முழுமையாக விவரிக்கவில்லை எனத் தெரிகிறது, ‘மூஞ்சியைப் பேத்துடுவேன்’ எனச் சொல்வார்கல்லவா? அதுதான் அங்கு நிகழும். அந்தக் காட்சி ஒவ்வொரு பார்வையாளனையும் ஒருவிதமான பதைபதைப்புக்கு உள்ளாக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இந்த ஒரு காட்சி மட்டுமல்ல சர்வாதிகார ஆட்சி என்றால் என்ன என்பதை விவரிக்கும் அனைத்து காட்சிகளும் இப்படிதான் இருக்கிறது. கிராஃபிக்ஸ் தொழில்நுட்பத்தின் பங்கும் மிக அற்புதமாக இருக்கிறது. இது கிராஃபிக்ஸ் இது ஒப்பனை என்று எவராலும் பிரித்துப் பார்க்க முடியாதபடி கச்சிதமாக வடிவமைத்துள்ளார்கள். துப்பாக்கியால் ஒருவரை சுடும் காட்சி மிகத் தத்ரூபமாக வருவதற்காகக் காட்சியை எடுத்தபின்னர் தோட்டா அந்த நபரை துளைத்துச் செல்லும்போது அது அவர் அணிந்துள்ள துணியில் எவ்வித மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை ஆய்ந்தறிந்து பின்னர் அதைக் கிராஃபிக்ஸ் தொழில்நுட்பத்துடன் காட்சியாக்கியுள்ளனர்.

இந்தக் கட்டுரைக்காக இயக்குனர் Guillermo Del Toroவின் மூன்று திரைப்படங்களைப் பார்த்தேன், கிரிம்சன் பீக், மிமிக், க்ரோனோஸ். இம்மூன்று படங்களுமே சாதரணப் படங்கள் இல்லை. க்ரிம்சன் பீக் பேய் படம் (கிட்டதட்ட நம் தமிழ் பேய்ப்படம் மாதிரி இருக்கிறது. ஆனால் படத்திற்கு அவர்கள் செய்துள்ள ஒப்பனை மற்றும் செட் போன்றவை படத்தை வேறுவிதமாகப் பார்க்க வைக்கிறது). கதாநாயகியின் தந்தை கொல்லப்படும் காட்சி நம்மை உறையவைத்துவிடும். மிமிக் ஒரு அறிவியல் புனைவுக் கதை யூதாஸ் வண்டு என்ற புது வகைப் பூச்சியின் அட்டகாசங்களைச் சொல்கிறது. க்ரோனோஸ் மரணமில்லாத வாழ்வின் துயரத்தை சொல்லும் அதிபுனைவுக் கதை. இவருடைய எல்லாப் படங்களிலும் மனித உடலின் வதையைத் தத்ரூபமாகக் காட்சிப்படுத்தியுள்ளார். The Shape of Water இவரது இன்னொரு முக்கியமான திரைப்படம். இவரின் மற்றுமொரு தனி அம்சமாக நான் காண்பது சிறுவர்களின் பிரச்சனையைத் தனது ஒவ்வொரு படத்திலும் தொட்டுச் செல்கிறார். பெரியவர்களான அனைவரும் குழந்தை பருவத்தை மறந்துவிடுகிறார்கள். இந்த மறதிதான் சிறுவர்களின் மீதான வதைக்குக் காரணமாகிவிடுகிறது. சிறுவயதில் நாம் செய்து இன்புற்ற ஒரு செயலை நம் குழந்தைகள் செய்யும்போது அதைக் கண்டிக்கிறேன் என்கிற பெயரில் குழந்தைகளை இன்னலுக்குள்ளாக்குகிறோம். சமுதாயத்தில் அதிகம் கஷ்டப்படுவது ஆண்களா பெண்களா என விவாதிக்கும் நமக்குக் குழந்தைகள்தான் அதிகம் பாதிப்புள்ளாகிறார்கள் என்பது புரிவதெப்போது? குழந்தைகள் என்றாலே ஆனந்தமான வாழ்வு என்பது ஒரு போலியான கட்டமைப்பு அதைத் தாண்டி அவர்களது உளவியல் பிரச்சனைகள் யாருக்கும் புரிவதில்லை. உதாரணமாக இந்தப் படத்தில் வரும் ஒஃபிலியாவின் வாழ்வை எடுத்துக்கொள்ளுங்கள். தன் சொந்த வீட்டைவிட்டு ஒரு ராணுவ தளவாடத்தில் வாழ்க்கை. தன் தாயார் யாரோ ஒரு ராணுவ அதிகாரியை அப்பா என அழைக்கச் சொல்கிறாள். அதுபோக அந்த இடத்தைச் சுற்றி எப்போதும் பதற்றமான சூழ்நிலை. எப்படி இருக்கும் ஒரு பன்னிரண்டு வயது சிறுமியின் உலகம்? (இதைவிடப் படத்தின் இறுதிக்காட்சி மிகக்கொடூரமானது!).

இந்தப் படம் தத்வார்த்தமாக நம் முன் பல செய்திகளைச் சொல்லாமல் சொல்லிச் செல்கிறது. அதிசயங்களை நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் நாடித்தேடிக் கொண்டேயிருக்கிறோம். ஆனால் அதிசயங்கள் நம்மைச் சுற்றியும் நமக்குள்ளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அவைகளை அதிசயங்களாகப் பார்க்க முடிவதில்லை என்பதில்தான் பிரச்சனையிருக்கிறது. நாம் தூங்கினாலும் தூங்காத உள்ளுறுப்புகளும் நம்மைச் சுற்றியுள்ள காற்றும் கடலும் மலையும் அதிசயம்தான். மனிதர்கள் இல்லாமல் இந்த உலகம் பிழைத்திருக்கும் என்ற நிலையிலும் நீங்களும் நானும் இவ்வுலகில் இருப்பதே அதிசயம்தான். என்றாவது இப்படி நினைத்துப் பார்த்துள்ளீர்களா? தேவையற்ற உயிரியாக இருந்தாலும் இங்கே நம் இருத்தல் நிகழ்ந்துள்ளது என்றால் நம் வாழ்வின், நம் இருத்தலின் நோக்கம்தான் என்ன? பாதள உலக இளவரசியின் நீட்சியாக ஒஃபிலியா இருப்பது போல நீங்களும் நானும் யாருடைய நீட்சியாக இவ்வுலகில் இருக்கிறோம் போன்றவை இப்படம் நம்முன் எழுப்பும் சில கேள்விகள்.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. சூன்யக்காரிகளின் வேட்டை நிலம் - வளன்
  2. இசைப்பேரழகிகளும் உன்மத்த இசைஞர்களும் – வளன்
  3. கலங்க வைத்த ஹாலிவுட் பேய்ப்படங்கள் -வளன்
  4. ட்ரம்பிற்கு கோயில் கட்டியவர்-வளன்
  5. பாம்புக்கடி பியரும் ஹேலோவீன் திருவிழாவும்-வளன்
  6. "கொஞ்சம் சாப்பாட்டுப் புராணம்" - வளன்
  7. வெறுப்பிற்கு எதிராக ஆனந்த் பட்வர்த்தனின் மூன்று படங்கள் - வளன்
  8. Chick-fil-A : அமெரிக்காவை ஆக்ரமித்திருக்கும் பர்கர் உணவகம்- வளன்
  9. இசை நாடகங்களும் படங்களும் – வளன்
  10. கிசுசிசு எழுதுவது எப்படி?- வளன்
  11. அதிகாரத்தின் முகங்கள்: அமெரிக்காவும் இந்தியாவும்- வளன்
  12. கொரோனா போதையும் பாரதி பாட்டும்- வளன்
  13. சிக்கன் பக்கோடா கேட்ட மனுஷ்- வளன்
  14. பெண்களுடனான உரையாடல்- வளன்
  15. ஹிட்லரின் விஷவாயுக்கூடத்திலிருந்து எழுதிய கடிதம் - வளன்
  16. மூன்று திரைப்படங்கள்: பாசிச இருளினூடே மானுட வெளிச்சம் – வளன்
  17. Twilight Zone: கற்பனைகளின் விளையாட்டு-வளன்
  18. Black Mirror: அதிரவைக்கும் அறிவியல் புனைவுகள்- வளன்
  19. தடை செய்யப்பட்ட சிரிப்பு - வளன்
  20. இயேசு சிரித்தார்: சில அற்புதமான திரைப்படங்கள்- வளன்
  21. வேட்டையாடமுடியாத திமிங்கலம் – வளன் (அமெரிக்காவிலிருந்து)
  22. ஓம்னியா : மனித குல மீட்பிற்கு ஒரு இசைப்போர்- வளன்
  23. மூன்று இசை தேவதைகள் - வளன்
  24. 'ஓ க்ரேஸ் இந்த இரவில் என்னை இறுக்கி அணைத்துக்கொள்' - வளன்