காற்றினிலே வரும் கீதம்- 1

தமிழ்நாட்டில் ஏராளமான மேடைக்கலைஞர்கள்  இருக்கிறார்கள். எம்ஜிஆர், சிவாஜி, ஜெயலலிதா, ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், நாகேஷ், சந்திரபாபு, விக்ரம், சிம்பு, விஜய்சேதுபதி என அச்சு அசலாக வேடமிட்டு நடனமாடுகிறார்கள்.

இன்னும் சில மிமிக்ரி கலைஞர்கள் இருக்கிறார்கள். நடிகவேள் எம்ஆர்.ராதா முதல் இன்றைய ஜெயம்ரவி வரை அத்தனை பேரின் குரலையும் அசல்ட்டாக பேசுகிறார்கள். இன்னும் சிலர், நிஜத்தில் தங்களுக்குப் பிடித்தவரை போன்று நடை, உடை பாவனை செய்வார்கள்.

பண்டித ஜவஹர்லால் நேரு போலவே, மதுரையில் லயன்துரை என்பவர் சாகும் வரை சட்டையில் ரோஜாப் பூவைக் குத்தியிருந்தார்.  மதுரை கோ.புதூர் மண்மலைமேடு மாயகிருஷ்ணன்,   நடிகர் ரஜினிகாந்த் ஒவ்வொரு படத்திலும் உடையணிந்ததை போல நிஜத்திலும் உடை அணிந்து வித்தியாசப்படுத்தினார்.  தங்கமகன் படம் வந்த போது அருண் என பெயர் மாற்றினார். இப்படி வித்தியாசம் காட்ட பலர் உள்ளனர்.

பாடகர் டிஎம்.சௌந்தரராஜன்  எதிரொலியான கோவை சௌந்தராஜன் அப்படியே அச்சு அசலாக பாடினார். அதில், மெல்லப் பேசுங்கள் சிலர் கேட்கக்கூடாது உள்ளிட்ட  அற்புதமான பல பாடல்களும் உள்ளன.  அவருடைய பல பாடல்கள் டிஎம்.சௌந்தரராஜன்  பாடியதோ என நினைக்க வைத்தது. இதே போல கோவை முரளியின் பாடல்களும் அந்த நினைப்பைத் தருபவை தான்.

“இது எப்படியிருக்கு” படத்தில் அவர் பாடிய” கைரேகை ஜோசியம் பார்த்து சொல்லுறேன் கேளுங்க” பாடல் கேட்கும் போது ஏற்கனவே, டிஎம்எஸ் தான் இருக்கிறாரே, அவரைப் போல இத்தனை பேர் எதற்கு என்ற கேள்வியை எழுப்பியது.

1984ம் ஆண்டு “ஒரு கைதியின் டைரி” படத்தில் “பொன்மானே கோபம் ஏனோ” பாடிய விஜய் என்ற உன்னிமேனன் குரல், அப்படியே கேஜே.யேசுதாஸின் பிரதி எடுத்தது போல குரல் இருந்ததால், அவர் தொடர்ந்து பல ஆண்டுகளாக மிளிர முடியாமல் போனது. இதன் பின் நீண்ட காலம் கழித்து தனது ஸ்டைலில் பாடி தான் அவர் பல ஹிட் பாடல்களைத் தர முடிந்தது.

ஆனால்,  இசைஞானி இளையராஜா இசையில் பல ஹிட் பாடல்களைக் கொடுத்த கலைஞரின் குரலை பிரதி எடுத்தது போல இன்றளவும்  பாடி வருகிறார். இது களத்தில் நிற்பவரைப்  பற்றிய பதிவல்ல. இசைஞானி இசையில் பல ஹிட் பாடல்களைத் தந்தவரைப் பற்றியது.

இந்த பதிவின் கதாநாயகன் பிறந்தது “ஆந்திராவின் பாரீஸ்” என அழைக்கப்பட்ட தெனாலி கிராமம் தான். அவரது அண்ணன்   நந்தி விருது பெற்ற இசையமைப்பாளர்.  ஆந்திராவில் மாதவப்பெட்டி பரம்பரையைச் சேர்ந்தவர்.  அதனால், அவரது குடும்பப் பெயர்களில் மாதவப்பெட்டி ஒட்டிக் கொண்டது.

இந்த பதிவின் கதாநாயகன் பெயர் எம்.ரமேஷ். அதாவது மாதவப்பெட்டி ரமேஷ். அவரது அண்ணன் பிரபல இசையமைப்பாளர் மாதவப்பெட்டி சுரேஷ்.

தமிழ் சினிமாவில் மரபு மாறாமல் பாரம்பரிய இசைக்கருவிகளை அதிகம் பயன்படுத்திய இசைஞானி இளையராஜா, இசைஞானம் உள்ளவர்கள் எங்கிருந்தாலும் தேடிப்பிடித்து வாய்ப்பளித்தார். அப்படி அவர் வாய்ப்பளித்து உயர்ந்தவர் தான் எம்.ரமேஷ்.

ரமேஷின் பாடல்களைக் கண்களை மூடிக் கொண்டு கேட்டால்,

” மனோ என்னம்மா பாடுறாரு” என சொக்கிப் போவார்கள். அப்படி தான் பலரும் ரமேஷ் பாடிய பல பாடல்களை இன்னும் மனோ பாடியதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில்  மனோவின் பாடும் ஸ்டைல் ரமேஷிடம் இருந்து தான் பின்பற்றப்பட்டிருக்க வேண்டும். அதற்காக திறமையான கலைஞன் மனோவை குறைத்து மதிப்பிடத் தேவையில்லை. ஒருவரைப் பின்பற்றல் தவறில்லை. அவர் ரமேஷின் ஸ்டைலைப் பின்பற்றியிருக்கலாம்.

அதற்கு உதாரணமாக 1985ம் ஆண்டு இசைஞானி இசையில் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான “உன்னைத் தேடி வருவேன்” படப்பாடலைச் சொல்லலாம்.  சுரேஷ், சாதனா நடித்த இப்படத்தில் எம்.ரமேஷ் பாடிய இந்த பாடலைக் கண்களை மூடிக் கொண்டு கேளுங்கள். அப்படியே மனோ பாடுவது போல இருக்கும். எஸ்.ஜானகி இப்படித் துவங்குவார்,

ஒரு நாளில் வளர்ந்தேனே மலர்ந்தேனே தேவனே

உன்னைப் பார்த்த பின்பு இமைகளும் பாரமா ?

இன்று தூங்கவில்லை தலையணை தாங்குமா?…..

இந்த பாடலின் இடையே

பார்வையாலே பாலை வார்க்கிறாய்..

என் பக்கம் வந்து என்னை ஈர்க்கிறாய்.. ஹோய்…

என ரமேஷ்  பாடும் தொனியைக் கேட்டு சொக்கிப் போவோம். இந்த பாடலை பலமுறை கேட்டாலும் துவக்க கால மனோ குரலைப் போலவே அச்சு அசலாய் ரமேஷ் குரல் உள்ளது. உண்மையில் ரமேஷ் குரல் அது தான். இந்த பாடல் குளியல் அறை காட்சியாக எடுக்கப்பட்டால் என்னவோ, பெரிதாக இந்தப் பாடல் பேசப்படாமல் போய் விட்டது.  கவிஞர் வைரமுத்துவின் அற்புதமான வரிகள் விரவிக்கிடக்கும் இந்த பாடலை கேட்டால் என்னைப் போல நீங்களும் உணரலாம்.

1984ம் ஆண்டு மோகன், ராதா,அம்பிகா, ஊர்வசி நடித்த படம் “அம்பிகை நேரில் வந்தாள்”. இசைஞானி இசையில் படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். கே.பாக்யராஜ் படங்களில் அம்மா வேடங்களில் நடித்த  சங்கீதா, மோகனுடன் டூயட் பாடிய படம் இது. இந்த பாடலின் மெட்டும் புதுசு. எஸ்.ஜானகியும், ரமேசும் இணைந்து பாடிய அந்த பாடல்,

இது இளமை இளமை இளமை

தங்க பதுமை பதுமை பதுமை

மெல்ல மெல்ல முல்லை 

துள்ளி விடும் உன்னைக் கண்டு….

கேட்க கேட்க தித்திக்க வைக்கும் பாடல் இது. இதே படத்தில் மோகன், ஊர்வசியோடு பாடும் டூயட் பாடல்,  அப்படியே மனோவின் துள்ளல் குரல் போலவே இருக்கிறது ரமேஷின் குரல்.

கன்னி தேனே இவள் மானே தினம்

சந்திக்க கண்களும் தந்தி அடிக்குது தானே

உன்னை எண்ணி நானே கண்ணே

உள்ளம் இழந்தேனே

இனி தித்திக்கும் முத்தங்கள்

எத்தனை சொல்லிவிடு …..

என பாடலை  ரமேஷ் துவங்கும் இடமே பிரமாதமாய் இருக்கும். அவருடன் வாணி ஜெயராம்  இணைந்து பாடியிருப்பார். இதைப் போலவே ரமேஷ் பாடிய சில பாடல்கள்  எஸ்பி.பாலசுப்பிரமணியம்  பாடியதாக இன்னும் சிலரால் நினைக்கப்படுகிறது. கொண்டாடப்படுகிறது.

இயக்குநர் எஸ்பி.முத்துராமன் இயக்கத்தில் 1985ம் ஆண்டு வெளியான படம் ஜப்பானில் கல்யாணராமன். கமல்ஹாசன், ராதா நடித்த இப்படத்திற்கு இளையராஜாவின் பாடல்கள் பக்க பலமாய் இருந்தன. கமல், ராதா, டிங்கு பாடும் இந்த பாடல் கொஞ்சம் வித்தியாசமானது. ஏனெனில் டிங்கு குரல் பொம்மையின் குரல் போலிருக்கும்.

ராதே என் ராதே ராதே என் ராதே 

வா ராதே வா ராதே

கண்ணே நீ கண்டால் காதல் வராதா

ராதா ராதா என் தாகம் ஆறாதா..

இந்த பாடல் கமல்ஹாசனின் சூப்பர்ஹிட் பாடல்களில் ஒன்று. அவருக்கு இப்பாடலுக்கு குரல் கொடுத்தது எம்.ரமேஷ் தான். ராதாவிற்கு எஸ்.ஜானகியும், டிங்குவிற்கு டி.சுந்தரராஜனும் குரல் கொடுத்திருப்பார்கள்.

கன்னட நடிகர் வி.ரவிச்சந்திரன் இயக்கி கதாநாயனாக அறிமுகமான படம் பருவராகம். அத்துடன்  ஜூஹி சாவ்லா தமிழில் அறிமுகமான படம் இது. இப்படத்தில் பெரிதும், சிறிதுமாக 10க்கும் மேற்பட்ட பாடல்கள். அத்தனையும் ஆட்டம் போட வைக்கும். வைரமுத்துவின் வரிகளில் அம்சலேகாவின் அற்புதமான இசையில் உருவான இப்படத்தில் ரமேஷ் பாடிய இந்த பாடல், பல இணையதளங்களில் எஸ்பி.பாலசுப்பிரமணியம் பாடியதாக பதிவாகியுள்ளது.

ஒரு மின்னல் போல எங்கள் முன்னால்

போவது யாரு? அட பாலு.. அட பாலு….

இந்த பாடலை துள்ளோடு பாடிய ரமேஷ், இப்படியான பாடல்களை மட்டுமின்றி  துயர் நிறைந்த பாடலை மிகச்சர்வ சாதாரணமாக  பாடியுள்ளார்.

அப்படி அவர் பாடிய பாடல் தான் தமிழ் சினிமாவில் அவருக்கு புகழைப் பெற்றுத் தந்தது.அந்த பாடல் இடம் பெற்ற படம் பகல் நிலவு. 1985ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் முரளி, ரேவதி உள்பட பலர் நடித்திருந்தனர்.

இசைஞானி இளையராஜா  இசையில் ரமேஷ் பாடிய,

வாராயோ வான்மதி தாராயோ நிம்மதி

ஏதேதோ என்னாசை  கேட்டுப்போ நீ

காதல் தூது போ நீ  என் மனம் உன் வசம்

இனி அது மதுவசம்..

இந்த பாடல் மெல்லிய காதல் சோகத்துடன் ரமேஷ் பாடியிருப்பார். அத்துடன் இருமிக்கொண்டே அவர் பாட அவருடன் இணைந்து பாடியிருப்பார் உஷா ஸ்ரீனிவாசன். இவர் இசைஞானி இசையில்,” நானே ராஜா நானே மந்திரி” படத்தில் இடம் பெற்ற “கேளாயோ கண்ணா, நான் பாடும் கீதம்” என்ற மிகச்சிறந்த பாடலை பி.சுசீலாவுடன் இணைந்து பாடியவர்.

இதே போன்ற மற்றொரு காதல் சோகம், கவிஞர் முத்துலிங்கம் வரிகளில் பாடல் இடம் பெற்ற படம் “என்றாவது ஒருநாள்”. சங்கர் கணேஷ் இசையில் 1986ம் ஆண்டு வெளியான இப்படத்தில் உமாரமணனுடன் ரமேஷ் இணைந்து பாடியிருப்பார்.

வானம் போல விருந்து தினம்

விருந்து இந்த காதல் போகும் …. என தொகையறா மிகச்சோகமாக ஒலிக்க

காலம் மாறும் நேரம் மாறும்

காதல் மாறுவது இல்லை

நமக்கு பிரிவு இனி இல்லை

என கண்ணீர் உதிர்க்கும் வரிகளை இருவரும் மிகச்சிறப்பாக இருவரும் பாடியிருப்பார்கள். இதன் பின் வேகம் எடுக்கும் வரிகள்,

உள்ளம் உன்னைச் தேடும்

புது வெள்ளம் நெஞ்சில் மோதும்

பொன்மானே எந்தன் சொந்தம் நீ தானே.. என  தொடரும் இப்பாடல் சங்கர் கணேஷ் இரட்டையர்களின் அற்புதமான இசைக்கோர்வை.

1985ம் ஆண்டு எஸ்.சிதம்பரம் இயக்கத்தில் வெளியான படம் “மலர்கள் நனைகின்றன”. இசைஞானி இசையில் தீபன் சக்கரவர்த்தியுடன் இணைந்து ரமேஷ்  பாடிய இந்த குத்துப் பாடல்

ஆசை மனசு ஒன்ணு கூடட்டும் கூடட்டும்

ஆனந்தம் அள்ளிக்கிட்டு போகட்டும் போகட்டும்…

இந்த பாடலைப் படத்தில் பாடி  நடித்தவர்கள் யார் என நினைக்கிறீர்கள்? சங்கிலி முருகன், செந்தில், குள்ளமணி, கருப்பு சுப்பையா . தமிழ் சினிமாவில் மைடியர் குட்டிச்சாத்தான், அன்னைபூமி உள்ளிட்ட சில படங்கள் தான் 3 டியில் வந்தன. அப்படி 1985ம் ஆண்டு வெளியான 3டி படம் “தங்கமாமா”. அர்ஜீன் ( இவர் வேறு அர்ஜீன்) , சசிகலா நடித்த இந்த படத்தை இயக்கியது கே.சைமன்.

இசைஞானி இசையில் எஸ்.ஜானகி, ரமேஷ் இணைந்து பாடிய இந்த பாடல் துள்ளல் வகை இசை.

இதோ மழைத்துளி இதோ மலர்க்கொடி

வான் மேகம் வான்மேகம் நான் தானே

பருவதாகமே தணியலாம்

விரகதாபம் கொஞ்சம் குறையலாம்…

இசைஞானியின் இசைமழை என இந்த பாடல் யூடியூப்பில் பதிவேற்றப்பட்டுள்ளது. வயலின்களில் இருந்து வழியும் இசைராகம்  கேட்க, கேட்க அப்படியே இசைநதியில் மூழ்கி விடலாம்.

எனக்கு ரமேஷ் பாடிய பாடலில் மிகவும் பிடித்த பாடல் இது தான்.  1985ம் ஆண்டு கே.ரங்கராஜ் இயக்கத்தில் விஜயகாந்த், நளினி நடித்த “அமுதகானம்” படத்தில் வாணி ஜெயராமுடன் ரமேஷ் பாடிய சூப்பர்ஹிட் டூயட்டிற்கு இசைஞானி இசை.

வெள்ளி நிலா பதுமை

காதல் பள்ளியிலே இளமை

இது பூமேடையோ இசை நான் பாடவோ…

இந்த பாடல் அடிக்கடி  வானொலியில் கேட்டு ரசித்திருக்கிறேன்.  இதே ஆண்டில் ஜிஎன்.ரங்கராஜன் இயக்கத்தில் வெளியான படம் “அடுத்தாத்து ஆல்பர்ட்”. பிரபு, ஊர்வசி நடித்த இந்த படத்தில் இசைஞானி இசையில் எஸ்.ஜானகி, மலேசியா வாசுதேவனுடன் ரமேஷ் பாடிய இந்த பாடல்,

வா வா மைசூரு மல்லியே இன்பவல்லியே

ஆஹா… அன்புக்குயில் நீதானே  ….

என ரமேஷ் பாடும் போது  சிலு சிலுத்துப் போய் விடுகிறது மனது. அவரைத் தொடர்ந்து தனது வழக்கமான தெனாவெட்டு குரலில், “வா வா நூறு மில்லியே” என மலேசியா வாசுதேவன்  தூள் பறக்க விட்டிருப்பார் பாடலை.

தெலுங்கில் பல படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களை ரமேஷ் பாடியுள்ளார். “உயிருள்ளவரை உஷா” தெலுங்கில் “பிரேமசகாரம்”  என வெளியானது. “என்னாடி பந்தாடும் பாப்பாக்களா” பாடலை, “அரே பந்தே பங்காரு” என  தெலுங்கில் பட்டையைக் கிளப்பியிருப்பார் ரமேஷ்.  அத்துடன் டிஎம்.சௌந்தரராஜன் பாடிய  “இதயமதை கோவில் என்பேனே” பாடலை தெலுங்கில்  மிக அற்புதமாக ரமேஷ் பாடியிருப்பார். கமல் நடித்த “குணா” தெலுங்கில் “புச்சி பிரேமா” என மாறிய போது அதில் இசைஞானி பாடிய “அப்பனென்றும் அம்மையென்றும்” பாடலையும், “அலைகள் ஓய்வதில்லை” தெலுங்கு  பதிப்பில் “வாடி என் கப்பக்கிழங்கே” பாடலையும் ரமேஷ் தான் பாடியிருந்தார்.

1988ம் ஆண்டு கன்னடத்தில் சூப்பர்ஹிட் அடித்த வி.ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான “ரணதீரா”வில் அம்சலேகாவின் இசையில் பி.சுசீலாவுடன் இணைந்து ரமேஷ் பாடிய பாடல் தெலுங்கு ரசிகர்கள் இன்றளவும் கொண்டாடப்படுகிறது.

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் பாடிய ரமேஷ், தொடர்ந்து பாடியிருந்தால், தவிர்க்க முடியாத பாடகராய் மிளிர்ந்திருப்பார்.  ஆனால், காலன் மிகக்குறைந்த வயதில் அவரை நம்மிடமிருந்து அழைத்துக் கொண்டான். அவரின் குரலை இன்னும் மறக்கவிடாமல், பாடகர் மனோ வைத்திருக்கிறார் என்பது மட்டுமே நிதர்சமான உண்மை.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. மனதின் ஆசையை தூண்டிய குரல் - ப.கவிதா குமார்
  2. சிவாஜி, ரஜினியை இயக்கியும் தோல்வியடைந்த இயக்குநர்-- ப.கவிதா குமார்
  3.  ஏழு சுவரங்களில் எத்தனைப் பாடல்:வாணி ஜெயராம் - ப.கவிதா குமார்
  4. கோழிக்கறி கேட்டதற்காக சென்சார் செய்யப்பட்ட பாடல்- ப.கவிதா குமார்
  5. வித்தியாசமான பாடல்களின்முகவரி  வி.சீத்தாராமன்- - ப.கவிதா குமார்
  6. கண்மணி சுப்பு: கவியரசு வீட்டுக்கட்டுத்தறி- ப.கவிதா குமார்
  7. வித்வான் வே.லட்சுமணன்  ஜோசியக்காரர் மட்டும்தானா? - ப.கவிதா குமார்
  8. ஏடி பூங்கொடி ஏனிந்த பார்வை: வங்கத்துக் குயில் எம்ஆர்.விஜயா - ப.கவிதா குமார்
  9. தென்னாட்டு தமிழ்க்குரல்  விஎன்.சுந்தரம்-ப.கவிதா குமார்
  10. ’புதுப் பெண்ணின் மனசைத் தொட்டு போறவரே’ :கவி சீமான் கேபி. காமாட்சி- ப.கவிதா குமார்
  11. ''தங்கம் உனதங்கம் அதில் எங்கும் இசை பொங்கும்'':யார் இந்த நேதாஜி? - ப.கவிதா குமார்
  12. ஜாவர் சீத்தாராமன் சரி... அது யார் ராஜ் சீத்தாராமன்?- ப.கவிதா குமார்