தேர்ந்த கதாப்பாத்திரங்கள் மூலம் எப்போதும் உலக மக்களின் மனதில் நீங்காத இடம்பிடித்திருந்த இர்பான் கான் மரணமடைந்தார் என்ற செய்தி பலரை சோகக் கடலில் மூழ்கியிருக்க செய்திருக்கிறது. தன்னுடைய அசாத்திய நடிப்பின் மூலம் உலகம் முழுவதும் கவனம் பெற்று பல ஹாலிவுட் படங்களில் நடித்த இர்பான் கான் இன்று காலை(29.04.2020) மரணமடைந்தார்.

1967ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பிறந்த இர்பான் கான் இளம் பிராயத்திலே தன் தந்தையை இழந்தார். கிரிக்கெட், நாடகத்துறை என்று பல துறைகளில் ஆர்வம் கொண்டிருந்த இர்பான் கடைசியாக தஞ்சமடைந்தது சினிமாத்துறையில். தான் ஏற்றுகொண்ட கதாபாத்திரத்திற்கு மிகையாக ஒரு துளி நடிப்பைக்கூட இர்பானிடமிருந்து எதிர்பார்த்திடமுடியாது. துல்லியமான நடிப்பு, முறையான கதாபத்திர தேர்வு, சக நடிகர்களை நேசிக்கும் நல்ல மனிதர் என்று அவருடைய வளர்ச்சி வெகு சில நாட்களிலே பாலிவுட் சினிமாக்களில் உச்சத்தை தொட்டது.

தொடக்க காலகட்டத்தில் பல நேர்மறை கதாப்பாத்திரங்களில்  நடித்துவந்த இர்பான் நாளடைவில் மெல்ல மெல்ல எதிர்மறை கதாபாத்திரங்களுக்கு பேர்போனவராக உருமாறினார். தன்னுடைய மிரட்டும் கண்கள் மூலம் கதைக்குத் தேவையான நடிப்பை எந்தவித அலட்டல்களும் இல்லாமல் மிகச் சிறப்பாக வெளிப்படுத்த தெரிந்த இர்பானுக்கு பல உலக சினிமாக்களில் இருந்து வாய்ப்புகள் வந்தவண்ண இருந்தன. சலாம் பாம்பே, ஹாசில், மக்பூல், பான் சிங் தோமர், லன்ச் பாக்ஸ், ஹைதர், பிக்கூ என இந்திய சினிமாவின் பல முக்கிய திரைப்படங்களில் தன்னுடைய நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பார். அதுமட்டுமில்லாமல் ஸ்லம்டாக் மில்லினியர், தி அமேஸிங் ஸ்பைடர் மேன், லைஃப் ஆஃப் பை, ஜூராஸிக் வேல்டு, இன்ஃபெர்னோ போன்ற ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில்தான் இர்பான் கானுக்கு கடந்த 2018ஆம் ஆண்டு  எண்டோகிரைன் புற்றுநோய் பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டது.  இந்த வினோதமான புற்றுநோய் ரத்தத்தில் உள்ள ஹார்மோன்களை பாதித்து கொஞ்ச கொஞ்சமாக ரத்த செல்களைப் அழிக்கும். 53 வயதான இர்பான் கான் கடந்த இரண்டு வருடங்களாக இந்த புற்றுநோய் காரணமாக அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் நேற்று திடீரென்று மும்பை கோகிலா பென் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரின் மறைவையொட்டி பல திரைப் பிரபலங்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இர்பான் கானின் மறைவு இந்திய சினிமாவில் ஒரு சிறந்த நடிகருக்கான வெற்றிடத்தை உருவாகியுள்ளதை யாராலும் மறுக்க முடியாது.