மனதின் தீர்க்கமான ஒத்திகை முயற்சிகளை எப்போதும் பொருட்படுத்தாமல் தனக்கே உண்டான இயல்புநிலையில் விஸ்தரிக்கும் திறன் காதலுக்கு மட்டுமே உண்டு. என்னதான் காதலியிடம் அல்லது காதலனிடம் இப்படி, இவ்வாறு இருக்க வேண்டுமென்று நிறைய ஒத்திகைகளை வைத்திருந்தாலும் அந்த சூழலில் எதுவுமே நடக்காமல் கடந்துவிடுவதும், அல்லது எவ்வளவு பெரிய அச்சப்படும் சுழல் வந்தாலும் அதை இயல்பாக கடப்பதும் காதலில் மட்டுமே நிகழும். ஆம் காதலில் மட்டுமே அனைத்தும் கடந்து போகும்.

2016ஆம் ஆண்டு மார்ச் 11 காதலும் கடந்து போகும் திரைப்படம் நலன் குமாரசாமி இயக்கத்தில் வெளிவருகிறது. எந்தவொரு பெரிய அலட்டல்களும் இல்லாமல் திரையரங்களில் படம் ஓடுகிறது. பின்பு ஒரு கட்டத்தில் திரையரங்கை விட்டும் ஓடிவிடுகிறது. பத்தோடு பதினொன்றாக அந்தவார நாட்களில் கடந்துபோன ஒரு படமாக காதலும் கடந்து போகும் இருக்கிறது.

நல்ல படங்களை திரையரங்கில் ஓடவிட்டுப் பார்ப்பதைவிட நல்ல ரசிகர்கள் எப்போதும் தங்கள் மனதிலே ஓடவிட்டுக்கொண்டிருக்கின்றன. பெரிதாக கதை இல்லை, திரைக்கதை இல்லை, சம்பவங்கள் இல்லை இத்தனைக்கும் ஒரு கொரிய படத்தின் தழுவல்தான், ஆனாலும் படம் திரை ரசிகர்களை கவர்ந்திருக்க காரணம் காதல் மட்டும்தான்.

ஐந்து வருட ஜெயில் வாழ்க்கையை முடித்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பு கதிருக்கும், ஐடி கம்பெனியில் ஒன்றில் நல்ல பொறுப்பில் இருக்க ஆசைப்படும் நடுத்தர வர்க்க பெண்ணான யாழினிக்கு இடையேயான காதல். அதை காதல் என்று பொருள்படுத்துவதைவிட வேறு வார்த்தை இல்லை என்பதே படம் சொல்லும் கதை.

இயல்பு, எதார்த்தம், சாகசம், தர்க்கம், உண்மை போன்ற கோட்பாடுகளை ஒரு திரைக்கதை எந்த அளவிற்கு பயன்படுத்த வேண்டும் என்பதைப் பொருத்தே அந்த திரைப்படத்தின் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது. ரசிகர்களும் அதைத்தான் எதிர்ப்பார்க்கிறார்கள்.

கதையின் நாயகனுக்கு மிகப்பெரிய பொறுப்பல்லாமல் கொடுக்காமல் தனக்கு நடந்துபோல இன்னொருவனும் ஆகக்கூடாது என்ற இயல்பான நோக்கம், கதையின் நாயகிக்கும் மிகச் சிறிய நோக்கம்தான். இரண்டு நிறைவேறியதா? இறுதியில் இருவரும் இணைந்தார்களா என்பது கதை, ஆனால் இவை நடந்தால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைவார்கள். பொதுவாக ரசிகர்களின் எண்ணங்களை சுக்குநூறாக்கு திரைக்கதைகளைவிட அவனது எண்ண ஓட்டங்களை ஈடு செய்யும் படங்கள் வெற்றியடைந்தது மிகச் சொற்பமே. அந்த வகையில் ஒரு ஹேப்பி எண்டிங் கிளைமேக்ஸ் அந்த காலகட்டத்தில் தமிழ் ரசிகர்களுக்குத் தேவையாக இருந்தது. அதைத்தான் காதலும் கடந்து போகும் செய்தது.

இயக்குனர் நலனுக்கு கருப்பு நகைச்சுவைவகை கதைக்களங்கள் உகந்ததாக இருந்தாலும் காதலும் கடந்து போகும் ஒரு மென்காதல் கதையுடன் நகைச்சுவை கலந்து  மெல்ல மெல்ல இனிமையான முடிவை நோக்கிப் பயணிக்கு ஒரு அழகான திரைப்படமாக அமைந்தது.

விஜய் சேதுபதி ஒரு ரவுடி என்றாலும் பாரில் அவரைப்போட்டு புரட்டி எடுப்பார்கள், தனக்கான ஒரு ஆசையை வைத்துக்கொண்டு ஊரைவிட்டு ஓடிவரும் மடோனா, ஆங்காங்கே மிகை நடிப்பில்லாத தென்படும் கதாபாத்திரங்கள் என அனைவரும் கதைக்கு ஏற்றவாறு நடித்து முடித்தனர்.

வாழ்வில் இவனை எங்காவது சந்திப்போமா என ஏங்கும் கண்களுக்கு முன் நிற்கும் நாயகனை கண்டு அத்திப்பூத்ததுப்போல் மலரும் நாயகியின் புன்னைகைதான் படத்தின் இறுதி காட்சி (என்ன ஒரு அற்புதமாக கவிதை!) என்றால் யார்தான் படத்தை கொண்டாடாமல் இருப்பார்கள்

எப்போதும் எதாவது ஒரு பிரச்சினையை மையப்படுத்தி பார்வையார்களை தொந்தரவு செய்யும் இயக்குனர்களிடம் இருந்தும் சில படங்களிலிருந்தும் தமிழ் ரசிகர்களை சிறிது தூரம் அல்லது தனக்கு தேவைப்படும்போதெல்லாம் ஒரு அசுவாசத்திற்கு இட்டுச்செல்லும் படமாக காதலும் கடந்து போகும் எந்நாளும் இருக்கும். அதுதான் படத்தின் மிகப்பெரிய பலம்.