குடும்பம் மிக வசதியான அமைப்புதான், மறுக்கவில்லை. வேளாவேளைக்கு நல்ல உணவு, பேச்சுத்துணை, பாலுறவு, நாம் கடுமையாக உழைக்கும் போது இயல்பாகவே தோன்றும் அந்நியமாதலில் இருந்து தப்பிப்பதற்கு குழந்தைகள் மீது எழும் பாசம், குழந்தைகளை முன்வைத்து எல்லா பிரச்சனைகளையும் கடந்து விடும் சாத்தியம் என வசதிகளும், கற்பிதங்களும், தப்பித்தலுக்கான வழிகளைக் கொண்ட ஒரு நுட்பமான, பல வாயில்கள் கொண்ட எலிவளை.  அது எவ்வளவு சீரழிவானது, போலியானது என்பதை அறிய அந்த எலிவளையில் விரிசல்கள் விழுந்து மெல்ல மெல்ல உடையத் தொடங்கினால் போதும். உங்கள் குடும்பம் உங்கள் முப்பதுகளில் உடைவுற்றால், நம் நாட்டுச் சட்டம் உங்கள் குழந்தையை பறித்து தாயிடம் கொடுத்து விடும். அடுத்த பத்தாண்டுகளில் உங்களை பழிவாங்கும் நோக்கிலேயே அந்த குழந்தையை உங்களுக்கு எதிராக அவர் வளர்ப்பார். மெல்ல மெல்ல உருவேற்றி உங்களைப் பார்த்தால் அக்குழந்தை காறித் துப்பும் அளவுக்கு கொண்டு வந்து விடுவார். சில நேரம் இரு தரப்புமே ஆளுக்கொரு குழந்தையை பொதுவெளியில், பேஸ்புக்கில் அவிழ்த்து விட்டு தாய் தந்தையரை தாக்கத் தூண்டுவதைக்  காண்கிறோம். சில அரிதான சந்தர்பங்களில் அப்பா மீது மகனுக்கு உள்ள வெறுப்பு அப்பாவே அவனைக் கொன்று புதைக்கிற நிலைக்குத் தள்ளுவதையும் பார்த்திருக்கிறோம்.

ஒருவேளை நீங்கள் பெரும்பணக்காரராக இருந்தால், நிறைய செல்வாக்கு இருந்தால் குழந்தையை பறித்து வந்து அதன் தாயை பழிவாங்குவீர்கள். அவர் எப்படி குழந்தையை திரும்ப பெறுவது என பல முயற்சிகளை எடுக்கத் தொடங்குவார். அல்லது நீங்கள் (கமல், அமீர் கான் போல) ஒரு பெரும் தொகையை ஜீனவாம்சமாகக் கொடுத்து செட்டில் செய்து விடுவீர்கள். இப்போது எல்லா குற்றங்களும் மன்னிக்கப்பட்டு விடும். விவாகரத்துக்கு / பிரிவுக்குப் பின்னர் கணவனும் மனைவிய்ம் அவ்வளவு பாசத்துடன், இணக்கத்துடன், நட்புடன் இருப்பார்கள். புரிந்துணர்வுடன் பிள்ளைகளை வளர்ப்பார்கள். என்னதான் அப்பா மீது கோபம் இருந்தாலும் பிள்ளைகள் அதைக் காட்டிக் கொள்ளாமல் அப்பாவிடம் அதீத பாசம் காட்டி வெளியேயும் புகழ்வார்கள். எல்லாத்துக்கும் காரணம் பணம் செய்யும் வேலை. இந்த பணமும் கொஞ்சம் அதிர்ஷ்டமும் இல்லாவிட்டால் சில வருடங்களுக்கு முன்பு நீங்கள் தூக்கி வளர்த்த, பாசத்துடன் கொஞ்சி சீராட்டிய குழந்தை உங்களுடையது அல்லாமல் ஆகி விடும்; அல்லது அதுவே உங்களுக்கு எதிராகப் பேசும். அல்லது குழந்தைக்கு 16-18 வயது கடந்து விட்டால் நம் கண் முன்னாலே அது ஒரு அந்நிய உயிரியாக மாறுவதை, நம்மிடம் இருந்து முழுக்க விலகிச் செல்வதைக் காண்போம். நாம் முயன்றாலும் குழந்தையின் உலகில் ஒரு செட் பிராப்பர்ட்டியாகவே பின்னர் இருக்க முடியும். ஒருவேளை நீங்கள் 70 வயதைத் தாண்டி வாழ்ந்தால், உங்களுடைய சொத்துக்காக உங்கள் குடும்பம் உங்கள் சாவை எதிர்நோக்குவதைக் கண்டு கசப்படைவீர்கள். அல்லது அவர்களை நீங்கள் ஒரு எல்லைக்குள் வைத்திருக்க ஒரு வயதான புலியைப் போல போராட வேண்டும். நான் என் ஊரிலும் உறவுகள் மத்தியிலும் சொந்த தாய் தந்தையரை சிகிச்சையளிக்காமலும், குளிர்ந்த நீரில் எண்ணெய் குளியல் கொடுத்தும், உளவியல் ரீதியாக மிரட்டி நெருக்கடி அளித்தும் பிள்ளைகள் கொள்வதைக் கண்டிருக்கிறேன். இருபது வருடங்கள் கூடுதலாக வாழ வேண்டியவர்கள் பெரும் அச்சத்துடன் மரணத்தை தழுவுவார்கள். அல்லது நிர்தாட்சண்ணியமாக தனிமையில் வாழ விட்டுவிட்டு போய் விடுவார்கள்.

 இந்த பாசம் பாசம் என்கிறார்களே அது எந்தளவுக்கு பல சமூக, பொருளாதார நிலைகளை சார்ந்து தோற்றுவிக்கப்படும் மாயவலை என அப்போதும் மூளைக்குப் புரியும், ஆனால் நெஞ்சுக்குப் புரியாது.

இதிலிருந்து சில படிப்பினைகளை நாம் பெற்றுக் கொள்ள வேண்டும்:

            1) பாசம் வாழ்வின் எல்லா கட்டங்களிலும் பணத்துடன் தொடர்புடையது – “நீ எனக்கு சொந்த காசு செலவழித்து ஒரு பொம்மை வாங்கித் தந்தாயா? ஆடைகள் வாங்கித் தந்தாயா? கேட்ட படிப்பில் சேர்த்து விட்டாயா? அப்பனா நீ?” என ஒரு குழந்தை பத்து வருடங்கள் கழித்து கேட்கும் போது வியப்பாக இருக்கும். ஆனால் அவர்களால் வேறெப்படியும் பாசத்தை பார்க்க முடியாது. யோசித்துப் பாருங்கள், அம்மாவை நோக்கி இக்கேள்விகள் ஒரு போதும் எழுப்பப்படாது. இயற்கையாகவே / கலாச்சார ரீதியாகவே இதுவே உலகம் முழுக்க நிலை – விந்தைக் கொடுப்பதற்கு அப்பால் அப்பாக்களுக்கு எந்த மதிப்பையும் யாரும் அளிப்பதில்லை. அதன் பிறகு அந்த மதிப்பை அவர்கள் பணம், உழைப்பைக் கொண்டு மட்டுமே, பாசத்தினால் அல்ல, கட்டியெழுப்ப வேண்டும். அப்படி செய்ய முடியாதவர்கள் காறி உமிழப்படுவார்கள், பிள்ளைகளாலே கூட. இன்னொரு பக்கம், சட்டம் ஒரு போதும் அப்பாக்களை primary caretakerஆக அங்கீகரிப்பதில்லை. இத்தனைக்கும் இன்றைய அப்பாக்கள் சமைக்கிறார்கள், டயப்பர் மாற்றுகிறார்கள், குளிப்பாட்டி விட்டு, பள்ளிக்கு அழைத்து சென்று விடுகிறார்கள். சிலர் தாயை விட பாசத்தைக் கொட்டுகிறார்கள். ஏனென்றால் சமூகம் தன் பாசத்தை அங்கீகரிப்பதில்லை எனும் உண்மையை அவர்கள் அப்போது அறிவதில்லை. ஏனென்றால் நமது சினிமாக்கள் தந்தைப்பாச செண்டிமென்டுகளால் அவர்களை ஏமாற்றி விடுகிறது. ஏனென்றால் அவர்களுடைய உடலில் சுரக்கும் ஹார்மோன்கள் மிதமிஞ்சிய ஒட்டுதலை குழந்தை மீது ஏற்படுத்தி விடுகிறது. பாசம் இன்மையானது எனும் புரிதலுடன் நாம் பாசத்தைக் கண்ட வேண்டும். பிள்ளையை பெறுவது அம்மா என்பதால் என்னதான் முயன்றாலும் ஒரு அப்பாவால் “பெத்தவன்” ஆக முடியாது. அது ஒரு கற்பிதம் மட்டுமே.

            2) இதை நமது தாத்தா தலைமுறை ஆண்கள் தெரிந்து வைத்திருந்தார்கள். பாசத்தைப் பொறுத்த மட்டில் அவர்களுக்கு நம்மை விட குறைவான ஏமாற்றங்களும் இதய வலிகளும் இருந்தன என நினைக்கிறேன். சொல்லப் போனால் என் தலைமுறையை விட எனக்கு இரு தலைமுறைகளுக்கு முன்பான ஆண்களே குடும்ப உறவுநிலைகளை சரியாக ‘கையாண்டார்கள்’ என நினைக்கிறேன். ஆம் அன்று இந்தளவுக்கு ‘கவனச்சிதறல்கள்’, தொடர்ச்சியான பொருளாதார, அந்தஸ்து சீர்குலைவுகள், உருமாற்றங்கள் குடும்பத்துக்குள் சாத்தியப்படவில்லை. அன்று மாற்றங்கள் மிக மெதுவாக நிகழ்ந்தன. அன்று மிதமிஞ்சிய அளவுக்கு ஆண்களுக்கு சாதகமாக இந்த அமைப்பு இருந்தது. ஆனால் அன்று நீடித்த, சிக்கலற்ற உறவுகள் சாத்தியப்பட்டதற்கு முக்கியமான காரணம் அதுவல்ல: அன்றைய ஆண்களுக்கு ‘காதல்’, ‘பாசம்’ போன்ற நவீன வியாதிகள் இருக்கவில்லை. என்னது இதெல்லாம் வியாதியா எனக் கேட்கிறீர்களா? ஆமாம். ஏனென்று சொல்கிறேன்.

  3) மனிதர்களுக்கு உயிரியல் ரீதியாக புரியாத ஒரு விழுமியம் ‘சமத்துவம்’ – நம்மால் இயல்பாகவே யாரையும் சமமாக நடத்த முடியாது. அதை சமூகம் பொருளாதாரம், சட்டம், கலாச்சாரம், அதிகார கட்டமைப்புகள் வழியாக நம் மீது திணித்திட்டாலே ஏற்போம். நாம் (நாய்கள், குரங்குகளைப் போன்று) குழுவில் ஒரு படிநிலையுடன் இயங்கும் மிருகங்கள். அதனாலே ஒருவர் நமக்கு கீழேயோ மேலேயோ இருந்தால் மட்டுமே நம்மால் கேள்வியின்றி அவருடன் நல்லுறவில் இருக்க முடியும். நீங்கள் அடுத்த முறை எந்த நீடித்த நட்புறவிலும், குடும்ப உறவிலும் இதை கவனியுங்கள். வெளியே சமத்துவம் காட்டுவது போல நடித்தாலும் உள்ளுக்குள் படிநிலையின் அதிகாரம் தெளிவாக இயங்கும். இந்த படிநிலை கலையும் போது மனிதர்கள் அவஸ்தைக்குள்ளாகிறார்கள். படிநிலையற்ற உறவானது அவர்களை நெருக்கடிக்குள் தள்ளுகிறது. ஒன்று நான் அடிமைப்படுத்தப்பட வேண்டும் அல்லது நான் அவனை / அவளை அடிமையாக்க வேண்டும் என நமது ஆழ்மனம் கட்டளையிடுகிறது. இவ்வளவு முரட்டுத்தனமாக இந்த நுட்பமான மனமாற்றம் வெளிப்படாது தான், ஆனால் அப்படித்தான் நாம் செயல்படுவோம். இன்றைய ஆண்-பெண் உறவில், தந்தை-மகன்/மகள் உறவில் நீங்கள் இதை கவனிக்கலாம். நட்பில் கூட பார்க்கலாம். எப்போதெல்லாம் ‘சமத்துவம்’ தோன்றுகிறதோ அப்போதெல்லாம் அந்த உறவு அலுப்பூட்டுவதாக, அர்த்தமற்றதாகத் தோன்றி, அது உடைகிறது. ஏனென்றால் காதல், பாசம் ஆகியவையில் நாம் அனுபவிப்பவை ‘அதிகாரத்தின்’ ருசியும் தான். நீங்கள் விரும்பாவிட்டாலும் இதுவே உண்மை. நிறைய பணமும் அதிகாரமும் செல்வாக்கும் படைத்தவர்களின், அதை வாழ்நாளெல்லாம் தக்க வைப்பவர்களின் குடும்ப உறவுகளில், நட்பு வலைகளில் எப்போதும் ஒரு நீடித்த தன்மை உள்ளது இதனாலே. இவை இல்லாதவர்களோ நேசித்தவர்களால் குப்பையாக நடத்தப்படுவதும் இதனாலே. இதில் சம்மந்தப்பட்டவர்களின் தவறு அல்ல இது, மனித இயல்பே இது தான். கடந்த அரை நூற்றாண்டில் நாம் இந்த உண்மையை மறந்து விட்டோம்.

நான் இப்போது என்னுடைய நாயை 18 மணிநேரம் முற்றிலும் கவனிக்காமல் விட்டுவிட்டாலும் 19வது மணிநேரத்தில் அதன் மீது பார்வையை செலுத்தினால் போதும் அது உற்சாகமாகி வாலைக் குழைத்துக் கொண்டு என்னைச் சுற்றி வரும். இதையே ஒரு மனிதனுக்கு செய்து பாருங்கள். 19வது மணிநேரத்தில் அவர் காணாமல் போய் விடுவார். எப்போதும் இடைவெளியின்றி நீங்கள் மனிதர்களை பாசம் காட்டி, கனவுகளை ஊட்டி, ஈகோவை வருடி விட்டு பாதுகாத்துக் கொண்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் உங்களை மறந்து விடுவார்கள். நான் மூன்று வருடங்கள் என் நாயை முழுக்க – வேறுவழியின்றி – பிரிந்திருந்தேன். நான் நான்காவது வருடம் அதை சென்று சந்தித்த போது அது என்னை ஏதோ முந்தின நாள் பார்த்து பிரிந்ததைப் போல எகிறி குதித்து நக்கி எதிர்கொண்டது. பாசம் கூடியதே ஒழிய குறையவில்லை. இதை உங்கள் பணத்தை, அதிகாரத்தை சார்ந்து வாழாத நீங்கள் ஒரு மனிதனிடம் முயன்று பாருங்கள். அட சொந்த மகன், மகளிடம் முயன்று பாருங்கள். மனைவியிடம் முயன்று பாருங்கள். என்ன நடக்கும் என நான் சொல்ல வேண்டியதில்லை.

ஏனென்றால் மனிதனை ஒரு எஜமானனாகப் பார்க்கும் இயல்பு நாயின் மரபணுவில் உறைந்திருக்கிறது. ஒரு நாயாலும் நம்மைப் போல சக நாய்களை ‘சமமாக’ நடத்த முடியாது தான் என்பதை நீங்கள் நாய்களின் உலகை உற்று கவனித்தால் தெரிந்து கொள்ள முடியும். நாய்களுக்கும் மனிதனுக்குமான உறவில் அதிகாரப் படிநிலை, சார்புநிலை ஆகியவை அன்புடன் ஒருவித சமநிலையுடன் இருக்கும் போது அது ஒரு லட்சிய ‘பாச உறவு’ அங்கு தோன்றுகிறது. ஆனால் மனிதர்கள் இடையே இது சாத்தியமில்லை. மனிதர்கள் தொடர்ந்து இதை போராடி தக்க வைத்துக் கொண்டே இருக்க வேண்டும். அல்லது பிறக்கும் போதே கையில் வெள்ளிக்கரண்டி இருக்க வேண்டும். (பணக்காரர்களின் பாசம் பொய்யானது எனும் கதையை நம்பாதீர்கள். எல்லாருடைய பாசமும் போலியானது தான்.)

 கடந்த அரை நூற்றாண்டில் நவதாராளவாத பொருளாதாரமும், மாறி வரும் சமூக உறவுகளும் நம்மை பெருங்குழப்பத்தில் ஆழ்த்தின. நாம் நாய்களைக் கூட குழந்தைகளைப் போல நடத்துகிறோம். நம் குழந்தைகளை கடவுளைப் போல நடத்துகிறோம். நம்முடைய அன்பானது ஒருவித குற்றவுணர்வின் மீது எழுந்து நிற்கிறது. எவ்வளவு அன்பு காட்டினாலும் போதவில்லை என அதைக் காட்டுகிறவர்களுக்கும், அது தரப்படுகிறர்களுக்கும் தோன்றுகிறது. விளைவாக நாம் பலவீனமாக உணர்கிறோம். கூடுதலாக ஒரு பாச உறவை நாடுகிறோம். குடும்பங்கள் ஒரு சில வருடங்களுக்கு ஒருமுறை உடைந்தபடியே இருக்கின்றன. நம் நண்பர்கள் நம் எண்களை ஒரு போனை மாற்றும் போது மறந்து விடுகிறார்கள். நம் காதலிகள் ‘ஹாய் புரோ’ என கூலாக நம்மை முன்னாள் காதலர்களாக்கி விடுகிறார்கள். துரோகங்களுக்கு மேல் துரோகங்கள் எல்லா நெருக்கமான உறவுகளிலும் நிகழ்ந்தபடி இருக்கின்றன.

 இன்றைய நாய்கள் நம்மைப் பார்த்ததும் கடிக்கின்றன; சமூகப் பொருளாதார, அதிகார சமநிலை குலைந்தால் இன்றைய நம் குழந்தைகள் நம்மைக் ‘கடிக்கின்றன’; காறித் துப்புகின்றன. விரும்பினாலும் விருமம்பாவிடினும் முந்தைய காலகட்ட நாய்கள் நம்மிடம் மரியாதையுடன் வாலாட்டி பணிந்தன. பாசம் காட்டின. நேசித்தாலும் இல்லாவிடினும் முந்தைய தலைமுறை பிள்ளைகள் தகப்பனை மதித்தார்கள், பாசத்தை ஒரு கடமையாக உணர்ந்தார்கள். ஏனென்றால் இரு தலைமுறைகளுக்கு முன்பு அன்புக்கும், பாசத்துக்கும் இவ்வளவு மிதமிஞ்சிய இடத்தை நாம் அளிக்கவில்லை. அன்றும் பாசம் இருந்தது, அன்பு காட்டினார்கள், ஆனால் அதை இருத்தலின் ஒரு பகுதியாக எடுத்துக் கொண்டார்கள். இன்று அதை வாழ்க்கை சந்தையில் விற்கப்படும் ஒரு உணர்வுப் பண்டமாக மாற்றி விட்டோம். ஒரு அப்பா இன்று எப்படி “என் பாசத்தை நான் காட்டுவேன்?” என பரிதவித்தபடியே இருக்கிறார். அன்றைய அப்பாக்கள் தான் தன் மகனுடன் இருப்பதே பாசம் தான், அதைக் காட்டும் அவசியம் இல்லை, வாழ்க்கை ஒன்றும் நாடகமல்ல, உணர்ச்சியை நிகழ்த்தத் தேவையில்லை என நினைத்தார்கள்.

இன்றைய உளவியலாளர்கள் கோட்பாடாகவும், இன்றைய கலைஞர்கள் சினிமாப் படைப்புகளாகவும் என்ன சொல்லுகிறார்கள் பாருங்கள் – “பாசத்தை அப்படியே அடக்கி வைக்காதீங்க, காட்டுங்க, இல்லாவிட்டால் என்ன மதிப்பு?” என்கிறார்கள். உண்மை என்னவென்றால் நிகழ்த்தப்படும் எதுவும் ஒரு உள்ளீடு இன்மையை மறைக்கவே அவ்வாறு செய்யப்படுகிறது. வெளியே மழை பெய்கிறது. அது ‘இருப்பதே’ தன் நிகழ்த்தலில் தான். அது தனியாக தன்னை, தன் ‘மழைத்தன்மையை’ நிகழ்த்துகிறதா? என் நாய் என்னிடம் வரும் போது அது வாலாட்டாவிட்டாலும் அதன் பாசத்தை நான் உணர்கிறேன். சும்மா என்னருகே வந்து அது கிடப்பதே ஒரு மொழி வெளிப்பாடு தான். ஆனால் நீங்கள் ஒரு மனிதன் அருகே போய் சும்மா உட்கார்ந்தால் என்னவாகும்? ஐந்து நிமிடம் பொறுத்து விட்டு, ‘உனக்கு அன்பைக் காட்டத் தெரியாதா? நீ முட்டாளா? எழுந்து போ’ என்பார்கள். அன்பை மட்டுமல்ல, மகிழ்ச்சியைக் கூட நம்மால் இன்று ‘நிகழ்த்தாமல்’ உணர முடியாது. திறமையும் அப்படித்தான். அது செயலில் அல்ல, நிகழ்த்தலில் தான் இன்று உயிர் வாழ முடியும். ஆம், நமக்கு இன்று வேறு வழியில்லை, ஆனால் அதனாலே இது ஒரு அபத்தம் என்பது இல்லாமல் ஆகாது.

தொடர்ந்து சீரியல் பாத்திரங்களின் நடிப்பைப் போல நிகழ்த்தப்படும் இந்த பின்நவீன பாசம் ஒரு கட்டத்தில் நம்மை நீர்த்துப் போக, நிலைகுலைய செய்கிறது.

   4) அடுத்து, அன்றைய அப்பாக்கள் தமக்கு தம் பிள்ளைகள் மீதிருந்த அதிகாரத்தை இயல்பாக, சிக்கலின்றி எடுத்துக் கொண்டார்கள். நாமோ பிறந்து விழுந்ததும் நமக்குக் கிடைக்காத ஒன்றை நம் குழந்தைகளுக்கு அளித்து விட தவிக்கிறோம் – ‘சமத்துவம்’. ஆனால் சமத்துவத்தின் பெயரில் நம் பிள்ளைகளின் அடிமைகளாக மெல்ல மெல்ல மாறுகிறோம். பெங்களூரில் குடிப்பதற்கும், கஞ்சா அடிப்பதற்கும் பெற்றோரிடம் இருந்து பணத்தை மிரட்டி வாங்கிப் போகும் பிள்ளைகளைப் பார்க்கிறேன். பணக்கார குடும்பங்களில் அல்ல, இன்று மத்திய வர்க்க குடும்பங்களிலும் அனேகமாக இதுவே நிலை. என்னதான் கொடுத்தாலும் பெற்றோர்களுக்கு தாம் தம் பிள்ளைகளிடம் நியாயமாக இல்லை எனும் உணர்வு மீந்தபடியே இருக்கிறது. இதை எப்படி சரியாக சுரண்டி பெற்றோரை தம் கட்டுப்பாட்டில் வைப்பது என இன்றைய குழந்தைகள் அறிந்து வைத்திருக்கிறார்கள். (நான் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல பெற்றோர்களுக்கு இடையே பிரிவு வரும் போது அவர்களுடைய முன்னணி படைவீரர்களாக பிள்ளைகள் செயல்பட்டு வாளை தந்தையின் மாரில் சொருகுவதும் இதற்காகவே.) கடந்த அரை நூற்றாண்டில் வந்துள்ள ‘பாசவுணர்வு’ திரைப்படங்களில் இந்த குற்றவுணர்வு செயல்படுவதைக் கணலாம் – “பாசமலர்” அண்ணன் தங்கை இடையிலான ஒரு குற்றவுணர்வை நாடகீயப்படுத்துகிறது. அப்பா-மகள், அப்பா-மகன், அம்மா-மகன் படங்கள் அனைத்துமே ஒன்று பெற்றோரோ அல்லது பிள்ளைகளோ போதுமான பாசத்தை, கவனிப்பை பரஸ்பரம் அளிக்க முடியவில்லை எனும் உணர்வை மையமாகக் கொண்டவை தாம். “தவமாய் தவமிருந்து” இதை பிள்ளைகளின் குற்றவுணர்வாக மாற்றினால், “தங்க மீன்கள்” ஒரு தகப்பனின் குற்றவுணர்வை சமூகச்சிக்கலாக வடிவமைக்கிறது. “தளபதி” ஒரு தாயின் குற்றவுணர்வை எடுத்துக் கொண்டது. தாயின் பாசக் குற்றத்தை மகன் மன்னிப்பதை கிளைமேக்ஸ் ஆக்கியது. “விஸ்வாசம்” போன்ற படங்கள் மசாலா மொழியில் இந்த பாசப்போதாமையை தன்னிரக்கமாக்கி நம்மை நெக்குருக வைக்க முயல்கின்றன. இப்படியான படங்களின் பட்டியலை வருடத்திற்கு ஒருமுறை உலகம் முழுக்க எடுத்தால் அது நூற்றுக்கணக்கில் நீண்டபடியே செல்லும். அட, நாய்களைப் பற்றின படங்களை எடுத்துப் பார்த்தால் அவையும் இப்படியான குற்றவுணர்வை சுரண்டியே பாசப் போராட்டத்தை காட்டுகின்றன. கடந்த அரைநூற்றாண்டில் மனித குலம் எதிர்கொள்ளும் மிகமுக்கியமான உறவு நெருக்கடியே இது தான் எனத் தோன்றுகிறது.

அந்த காலத்து தகப்பன்களும், கணவன்களும் எப்படி இருந்தார்கள் எனக் காண நாம் பஷீர், தல்ஸ்தாய் ஆகியோரின் புனைவுகளுக்கு சென்றாலே போதும். பஷீர் தனது “பூவன் பழம்” எனும் பிரசித்தமான சிறுகதையில் சமத்துவம், குற்றவுணர்வு, பாசத்தை எனும் புடலங்காய்களைப் பற்றி கவலைப்படாத ஒரு இளம் ஜோடியின் காதலை சித்தரிப்பதை கவனியுங்கள். ஆணும் பெண்ணும் பரஸ்பரம் சீண்டியும் தண்டித்தும் விளையாடியும் தம் காதலை வளர்த்தெடுப்பதை எந்த குற்றவுணர்வும் அரசியல் அரசியல் சரிநிலையும் இன்றி காட்டுகிறார் பஷீர். தல்ஸ்தாய் தன் “அன்னா கரெனினா”, “போரும் அமையும்” நாவல்களில் காதலை ஒரு நவீன நோயாக மாறிப் போன சூழலை சித்தரிக்கிறார். “அன்னா கரெனினாவில்” கிற்றி லெவினை முதலில் சந்திக்கும் போது அவன் “பாச நோயால்” ஆட்பட்டிருக்கிறான். “இப்படி ஒரு பெண்ணை நான் நேசிப்பது சாத்தியமே இல்லை, இவள் மகத்தானவள், இவன் ஒரு தேவதை” என்றெல்லாம் நினைக்கிறான். கிற்றி அவனை நிராகரிக்கிறாள். ஆனால் அவளை ஒரு பொருட்டாக மதிக்காத, காதலை ஒரு பொழுதுபோக்காக காண்கிற விரான்ஸ்கியை ஏற்கிறாள். பின்னர் விரான்ஸ்கி தன்னிலும் வயதில் மூத்தவளான அன்னாவிடம் காதல் வயப்பட்டு கிற்றியை நிராகரிக்கிறான். மனம் உடைந்து நோயில் விழும் கிற்றி தேறி வந்த பின் மனதளவில் முதிர்ச்சியடைந்த லெவினை சந்திக்கிறாள். இப்போது லெவின் தன் பாச நோயில் இருந்து மீண்டு வந்திருக்கிறான். கிற்றியை அவன் தன் மனைவியாக்கிக் கொள்கிறான். அவள் என்னதான் ஒரு சிறந்த மனைவியானாலும், அவள் ஒரு பெண் தான், எந்த மகத்துவமும் இல்லாத சாதாரணமானவள் என அவனுக்குப் புரிவதே அந்த உறவு உண்மையில் மலரும் தருணம் ஆகிறது. இதுவே “போரும் அமைதியும்” நாவலில் நட்டாஷா-பியர் காதல் உறவிலும் நிகழ்கிறது. அவர்களுடைய காதலும் இப்படியே தான் தோன்றி, பல சிக்கல்களுக்குப் பின், செண்டிமெண்டுகள் இல்லாத, சமத்துவ கற்பிதங்கள் இல்லாத, இயல்பான தாம்பத்யமாகிறது. தல்ஸ்தாய் தன் நாவல்களில் காதலை மிகுந்த அவநம்பிக்கையுடன் சித்தரித்ததே காதல் மீதான கசப்பினால் அல்ல; நவீன காதல் போலித்தனமான ஒரு செண்டிமெண்ட், அதன் பின்னிருப்பது மனிதனின் தன்னிரக்கமே என அவர் அறிந்திருந்ததாலே. அதை அறிந்து கொண்டதற்கு காரணம் அவர் தன் காலத்தில் காதல் எப்படி மாறி வந்தது எனத் தெரிந்திருந்தார் என்பதாலே.

  5) காதலிலும் சரி, குடும்ப உறவுகளிலும், பிள்ளைகளைக் கொஞ்சும் போதும் கண்டிக்கும் போதும் சரி, உழைப்பையும் பணத்தையும் அவர்களுக்காக செலவிடும் போதும் சரி, நமது அன்பு ஒரு அதிகாரத்தின் மீது வீற்றிருக்கிறது என்பது குறித்த பிரக்ஞை இருக்க வேண்டும். அது எப்போதும் வேண்டுமெனிலும் உருக்குலைந்து தலைகீழாகிடக் கூடும், அதைத் தடுப்பதற்கு நாம் அதிகாரத்தை பாசமாகவும் பாசத்தை அதிகாரமாகவும் காட்டத் தெரிய வேண்டும். குற்றவுணர்வு, தன்னிரக்கம், பலவீனமின்றி அன்புடன் ‘இருக்கத்’ தெரிய வேண்டும். எந்த இடத்தில் அது சாத்தியமில்லையோ, எங்கு நாம் பிறரை நம்பி, சார்ந்திருக்கும் நிலை உள்ளதோ அங்கிருந்து விலகிட வேண்டும். ஏனென்றால் அத்தகைய குடும்ப உறவுகள் விரைவில் கசந்து துயரத்தில் தள்ளி விடும். நம் முன்னோர்களைப் போன்றே ‘அன்பை’ சோற்றை எடுத்து உண்பதைப் போல, ஆடையை எடுத்தணிவதைப் போல, மழையில் சுதந்திரமாக நனைவதைப் போல, வெயிலில் விறுவிறுவென நடப்பதைப் போல எந்த தயக்கமும் குழப்பமும், சமத்துவக் கவலைகளும் இன்றி, அற மதிப்பீடுகள் இன்றி வெறும் இருப்பாக காண முடிய வேண்டும். அதாவது அன்பானது ஒரு நிகழ்த்துகலை அல்ல, அது ஒரு இருப்பின் பகுதி என நம்மால் காண முடிய வேண்டும். சில நூறாண்டுகளுக்கு முன்பு நாம் இழந்து விட்ட ஒரு உளவியல் நுணுக்கத்தை, ‘உலகில் தடையின்றி இருக்கும் திறனை’ நாம் மீளப் பெற வேண்டும்.

இதுவரை பாசம் ஒரு குற்றவுணர்வானதன் சிக்கலை உளவியல் ரீதியாக அலசிய நான் அது இந்த விவாதத்துக்கு ஒரு நிறைவை அளிக்கும் என்பதால் இப்போது தத்துவத்துக்கு வருகிறேன்.

 மேலே நான் குறிப்பிட்ட குற்றவுணர்வைப் பற்றி “இருத்தலும் காலமும்” நூலில் ஹைடெக்கர் முற்றிலும் மாறுபட்ட ஒரு சித்திரத்தை அளிக்கிறார். ஹைடெக்கர் குற்றவுணர்வு என்பதை தன் தத்துவத்தில் உணர்வடிப்படையிலான, அதிகாரத்தின், அறத்தின் அடிப்படையிலான வழக்கமான குற்றவுணர்வில் இருந்து முழுக்க மாறுபட்டு மறுவரையறை செய்தார். முதலில் ‘மனசாட்சி’ பற்றி பேசும் அவர் அது ஒருவனை அவன் யாராக இருக்கிறான் என்பதற்கும், என்ன செய்கிறான் என்பதற்கும் பொறூப்பாக்குவதில்லை, குற்றவுணர்வு கொள்ள வைப்பதில்லை என்கிறார். அதென்ன ‘பொறுப்பற்ற மனசாட்சி’?

ஹைடெக்கர் இருத்தல் பற்றி பேசும் போது அதன் முக்கிய பகுதியாக ‘மனசாட்சியை’ குறிப்பிடுகிறார். அவருடைய பார்வையில், அரிஸ்டாட்டில் போன்ற கிரேக்க தத்துவஞானிகளுக்குப் பிறகே இருத்தலை உணர்வுரீதியாக, பிரக்ஞைபூர்வமானதாக தவறாக புரிந்து கொள்ள ஆரம்பித்தோம். அது பின்னர் கிறித்துவம் வழியாக கருணை, அன்பு எனும் குற்றவுணர்வின் அடிப்படையின் மறுவரையறை செய்யப்பட்டு உலகம் முழுக்க தாக்கம் செலுத்தியது என நீட்சே கூறுகிறார். நீட்சேயின் தாக்கம் பெற்றிருந்த ஹைடெக்கர் இதைக் குறித்து விரிவாக ஆய்வு செய்து பிளேட்டோவுக்கு முந்தைய கிரேக்க தத்துவஞானிகளின் இருத்தல் குறித்த புரிதலை மறுகண்டுபிடிப்பு செய்ய முயன்றார்.

நாம் ஒரு குழந்தையைப் பார்த்தலும் அது நம் உலகின் இருத்தலுக்குள் வந்து விடுகிறது. அந்த குழந்தையை நம்மால் மற்றொரு உயிராக எடுத்துக் கொண்டு இயல்பாக பழகும் போது நம் இருத்தலும் நமக்குச் “சொந்தமானதாக” (authentic) உருவாகிறது என அவர் சொல்லுகிறார். ஆனால் இதுவே அக்குழந்தையின் தலையை வருடி “செல்லக்குட்டி” என கொஞ்சும் போது போலித்தனம் ஆகிறது. இல்லாத ஒரு உணர்வை அதன் மீது சுமத்துவதாகிறது. ஒருவேளை அந்த “பாசம்” நமக்குள் இயல்பாக எழுந்தாலும் அக்குழந்தை நம்மிடம் ‘வருவதே’ பாசம் நமக்குள் தோன்றும் முன் தோன்றுகிறது. அதனாலே நாம் இரண்டாவதாக வரும் பாசத்தை முயற்சியெடுத்து அக்குழந்தையிடம் ‘காட்டுகிறோம்’. எப்போதாவது ஒரு குழந்தை இன்னொரு குழந்தையை பார்க்கும் போது “ஏன் செல்லக்குட்டி” என தலையை வருடிக் கொடுப்பதை பார்த்திருக்கிறீர்களா? இல்லை. ஏனென்றால் குழந்தை மற்றொரு குழந்தையை தன்னைப் போன்ற ஒரு மனித உயிராக, விளையாட்டுத் தோழனாக பார்க்கிறது. ‘விளையாட்டுத் தோழன்’ என்று கூட நினைப்பதில்லை, அதன் முன்பே இருவரும் சேர்ந்து விளையாட ஆரம்பிக்கிறார்கள். ‘விளையாடும் இருத்தல்’ அவர்கள் இருவரும் சந்தித்ததுடன் தோன்றி விடுகிறது. அதற்கு அவர்கள் தம் விளையாட்டுத்தனத்தை நிகழ்த்தத் தேவையிருப்பதில்லை. பரஸ்பரம் நியாயமாக இருப்பதாக பாவிக்கக் தேவையில்லை. குழந்தைகளைப் போல நம்மால் இயல்பாக இருத்தலை எதிர்கொள்ள முடியாததாலே நாம் குழந்தைகளிடம் பாசத்தை நிகழ்த்த முயல்கிறோம்.

 இதை ஒரு குழந்தை அறியும் என்பதாலே அது உடனே இந்த போலித்தனத்தை கண்டுகொண்டு, இந்த பாசத்தை பயன்படுத்தி தன் காரியத்தை சாதிக்க முயல்கிறது; அல்லது விலகிப் போய் விடுகிறது. இந்த போலித்தனம் இல்லாமல் ஒரு குழந்தையை நம் இருத்தலின் பகுதியாக பாவிப்பதன் பின்னால் ஒரு உணர்வற்ற ‘உணர்வு’ இருக்கிறது. இதைத் தான் ஹைடெக்கர் ‘குற்றவுணர்வு’ என்கிறார். நமது இன்றைய குற்றவுணர்வின் மூதாதையான, அசலான ‘குற்றவுணர்வு’, நம் ‘இருத்தலின் குற்றவுணர்வு’ அது. ஒரு காலத்தில் நம் தந்தையருக்கு இந்த ‘குற்றவுணர்வை’ செயல்படுத்தத் தெரிந்திருந்தது. அன்று நமக்கு ஒரு குழந்தையை நம் உலகில் உள்ள பொருட்களில், உயிர்களில் ஒன்றாக சாதாரணமாக எடுத்துக் கொள்ளத் தெரிந்திருந்தது. (இன்று ‘குழந்தையில் இருந்து தெய்வம் வரை’ யாரையுமே நம்மால் அப்படி எடுத்துக் கொள்ளத் தெரியவில்லை.)

“இருத்தலும் காலமும்” நூலில் ஹைடெக்கர் “அசலான குற்றவுணர்வை ஒழுக்கத்தைக் கொண்டு மதிப்பிட முடியாது, ஏனென்றால் ஒழுக்கமானது குற்றவுணர்வை அதன் இடத்தில் நின்று தானாகவே முன் அனுமானம் செய்கிறது” என்று கூறுகிறார் (பக். 286). இது ஒரு சுவாரஸ்யமான பார்வை. குற்றவுணர்வை தன் இருத்தலின் கடமையை ஒருவர் செயலால் (மனத்தால் அல்ல) அறிந்திருப்பது என வரையறுக்கிறார் எனும் போது இது இருத்தலில் செயல்பட ‘ஒழுக்க மனநிலை’ முக்கிய தடையாகிறது என்கிறார். குறிப்பாக, ஒழுக்க மனநிலை குற்றவுணர்வின் முதுகில் ஏறி ‘நானே குற்றவுணர்வு’ என வேடம் அணிந்து அதை ‘காலனியாதிக்கம்’ செய்கிறது, அதாவது நாம் போகப் போக ‘குற்றவுணர்வை’ ஒழுக்க மனநிலையாக தவறாக அடையாளம் காணத் தொடங்குகிறோம் என்கிறார். சரி இதற்கு ஏன் ஹைடெக்கர் ‘குற்றவுணர்வு’ என் பெயர் அளிக்கிறார்? இதன் பின்னால் ஒரு தெளிவான அரசியல் இருந்தது:

 எப்படி அந்த காலத்தில் பட்டியலின மக்களை ‘கபாலி’ எனும் சொல்லால் ரௌடிகளாகவும், முரடர்களாகவும் அடையாளப்படுத்தியதை மறுவரையறை செய்து புதிய பொருள் தருவதற்காக தன் முதல் ரஜினி படத்திற்கு ரஞ்சித் அப்பெயரை ஹீரோயிசத்துடன் பயன்படுத்தினாரோ அதையே ஹைடெக்கர் தத்துவத் தளத்தில் அன்று செய்தார் எனலாம். ஹைடெக்கரின் நோக்கம் கிறித்துவ இறையியலால் கறைபடிந்து, தேவாலயத்தின் கையில் பாவிகளைத் ‘திருத்தும்’ ஆயுதமாக திகழும் குற்றவுணர்வை மீட்டெடுப்பது. தனிமனிதர்களின் செயல்களை அவர்களைக் கொண்டே சுய-கண்காணிப்பில் ஈடுபடுத்தி, அவர்களை இருவராக பிளவுபடுத்தி தம் இருத்தலை தாமே தொடர்ந்து கண்டித்து, அவமானப்படுத்தி, தன்னிரக்கம் கொண்டு மதிப்பிடும் சுயவிசாரணைக் கருவியான குற்றவுணர்வை இறையியலின் அரசியலில் இருந்து விடுவிப்பதே ஆகும். இந்நோக்கில் அவர் குற்றவுணர்வை அதன் ஆதிப்பொருளுக்கு மீட்க முயன்றார். (குற்றவுணர்வை மட்டுமல்ல மனசாட்சி, சொர்க்கத்தில் இருந்து மானுட வெளியேற்றத்துக்கான சொல்லான வீழ்ச்சி ஆகியவற்றையும் அவர் மீளுருவாக்கம் செய்தார்; ஒருவிதத்தில் கிறித்துவ இருத்தலை ‘மதநீக்கம்’ செய்தார்.)

ஹைடெக்கரை அறிமுகப்படுத்தும் தன் நூலில் மைக்கேல் இன்வுட் வழக்கமான குற்றவுணர்வு கடன்பட்டிருப்பது, பொறுப்பாளியாவது, தனது குற்றத்துக்கு ஒருவரை தண்டனைக்குரியவராக்குவது என அர்த்தங்களைக் கொண்டிருப்பதைக் குறிப்பிட்டுவிட்டு, இவற்றில் ‘கடன்பட்டிருக்கிறது’ எனும் பொருளை மட்டுமே ஹைடெக்கர் ஏற்பதாகச் சொல்கிறார். எதற்கு யாருக்கு கடன்படுவது? நாம் இந்த உலகில் இந்த காலத்திற்குள் வந்து பிறந்து விழுகிறோம். அப்போது உலகின் இருத்தல் ஏற்கனவே அங்கு இருக்கிறது; அங்கு நாம் சென்று பொருந்திக் கொண்டு நம் இருத்தலை உருவாக்குகிறோம். அந்த உலகை நாம் வந்தடையும் வரை இங்கு ஒரு போதாமை இருந்தபடியே இருக்கிறது. நம் இருத்தல் அதை நிவர்த்தி செய்கிறது. எப்படி கடன்பட்டார் நெஞ்சம் தான் கொடுக்க வேண்டிய தொகையை குறித்த தவிப்புடன், கலக்கத்துடன் இருக்கிறதோ அப்படியே நம் இருத்தலும் உலகுடன் போய் பொருந்தி கொள்ளும் ‘தவிப்புடன்’ இருக்கிறோம். ஆனால் கடன் என்பது சுலபத்தில் தீர்ந்து விடுவது அல்ல தானே? ஹைடெக்கரைப் பொறுத்தமட்டில் நாம் உலகுடனான கடனுடன் தான் பிறக்கிறோம். ஆக இருத்தலின் கடனும் அப்படியே நாம் அதை நோக்கி செல்லச் செல்ல வளர்ந்து கொண்டே போகிறது. இந்த கடனுணர்வே அவருடைய தத்துவத்தில் ‘குற்றவுணர்வாகிறது’.

இங்கு ஹைடெக்கரின் மற்றொரு மேற்கோள் மிகவும் முக்கியமாகிறது. அதன் மூலத்தையும் என் மொழியாக்கத்தையும் கீழே தருகிறேன். அதன் வாக்கிய அமைப்பு, கிட்டத்தட்ட மௌனியின் வாக்கியங்களைப் போல, மிகவும் சிக்கலாக, குழப்புவதாக இருக்கும். ஆனால் ஹைடெக்கர் திட்டமிட்ட வகையில் கவிதையின் உத்தியை பயன்படுத்தி உருவகரீதியாக இருத்தலின் கடன்பட்ட நிலையைப் பற்றி இவ்வாறு எழுதுகிறார் என்பதை நாம் கவனிக்க வேண்டும்:

“Being the ground of a lack in the Dasein of an other, in such a way that this very being a ground determines itself as “lacking” on the basis of that for which it is the ground”

“ஒரு மற்றமையின் அங்கே-இருத்தலின் (தசெயினின்) போதமைக் களமாக இருக்கிற அது தான் இப்படி எதுவொன்றிற்கு களமாக இருக்கிறோமோ, அவ்வாறு களமாக இருப்பதே தன்னை போதாமையானதாக உறுதிப்படுத்துவதாகும்.”

இதை நான் விளக்க முயல்கிறேன்:

“மற்றமை” என்பது இங்கே இந்த உலகம், அதிலுள்ள பொருட்கள், இயற்கை, உயிரினங்கள், மனிதர்கள், சூழல். இரண்டு சமச்சீரான விசயங்கள் ஒன்றோடொன்று முரண்பட்டு மோதிக் கொண்டு, அதன் விளைவாக மூன்றாவதாக மற்றொன்று தோன்றுவது ஒரு ஹெகலிய இணைமுரணியல். ஆனால் ஹைடெக்கர் நமக்கும் உலகுக்குமான உறவை நமக்கும் மற்றமைக்குமான உறவு என வகுத்த போது, அதை இணைமுரணியக்கமாகக் காணவில்லை. ஏனென்றால் அந்த ஹெகலிய இணைமுரணியக்கத்தில் முரண்படும் இரு தரப்புகளும் தனித்தனியாகவே இருக்கின்றன. ஹைடெக்கரோ ஒன்று மற்றொன்றின் உலகை மற்றமையாகக் காணும் போது (அதாவது உலகம் நம்மையும், நாம் உலகையும்) அதில் இருந்து விலகி தனித்திருப்பதில்லை என்கிறார். “அங்கே-இருத்தல்” என்பது உலகுடனான ஒரு மனிதனின் இருத்தல்.

 போதாமைக் களம் என ஏன் சொல்கிறோம் என்றால் நாம் உலகிடம் செல்லும் வரையிலும் உலகம் நம்மிடம் வரும் வரையிலும் இரு தரப்பிலும் ஒரு போதாமை இருக்கிறது. அது மட்டுமல்ல, இருத்தலுக்கான களமாக இருத்தலே போதாமையின் களமாக இருப்பதும் தான் என ஹைடெக்கர் சொல்லி முடிப்பதை கவனிக்க வேண்டும் – இருத்தலைப் பொறுத்தமட்டில்  நிறைவாக, அறுதியாக அது சாத்தியமாவதில்லை என்கிறார் ஹைடெக்கர். ஒரு போட்டியின் முடிவில் பரிசோ தோல்வியோ கிடைப்பது போல, கூடலின் முடிவில் இச்சை காலியாவதைப் போல, உணவருந்தியதும் வயிறு நிறைவதைப் போல, அல்லது பிரார்த்தனையால், நன்னடத்தையால், விசுவாசத்தால்  பரலோக / தேவ ராஜ்ஜியம் கிடைப்பதைப் போல ஒரு தீர்வு, முழுமையடைதல் இருத்தலில் கிடையாது. இருத்தலின் பசி, கடன் சுமை, தேடல் தொடர்ந்தபடியே இருக்கும் ஒன்று. அதனாலே அதன் ‘போதாமை’ தீராமல் இருக்கிறது, அது உலகிடமும் நம்மிடமும் இருந்து கொண்டே தான் இருக்கும் என்கிறார் அவர். நான் உலகிடம் செல்லும் போது அது எனக்கு ஒரு போதாமையின் களமாகவும், நான் அதற்கு ஒரு போதாமையின் களமாகவும் இருக்கிறோம். கிட்டத்தட்ட கூடலின் போது இணைக்காக தவிக்கும் இரு உடல்களைப் போல. ஆனால் இரு வித்தியாசங்கள்: அ) இச்சையை நிவர்த்தி செய்ய முடியும். இருத்தலை நிவர்த்திக்க முடியாது. ஆ) இச்சையின் போது தான் ஆணும் பெண்ணும் பரஸ்பரம் நாடுகிறார்கள், அதுவரை பிரிந்தே இருக்கிறார்கள்; ஆனால் இருத்தலில் மனிதனுக்கும் அவன் இருக்கும் உலகுக்கும் பிரிதலே கூடலோ சாத்தியமில்லை. சதா உலகம் நம்மிடமும், நாம் உலகிடமும் இருந்து கொண்டே இருக்கிறோம். (நம் மரணத்துடன் இது முடிவுக்கு வருகிறது, ஆனால் அதுவும் ஒரு சரியான முடிவு அல்ல. நாம் காலத்தில் நம்மைக் கடந்து ஒரு முடிவிலியில் போய் அகப்பட்டு கொள்கிறோம். அதுவே மரணம்.)

நமக்கும் உலகுக்குமான நிறைவுற சாத்தியமில்லாத ‘காம வேட்கையே’ ஹைடெக்கரின் தத்துவத்தில் இருத்தலின் குற்றவுணர்வு. இன்னொரு விசயம், வழக்கமான பொருளில், நாம் உலகிடம் இருந்து ஒரு போதும் வெளியேறுவதோ, உலகம் நம்மிடம் வந்து செல்வதோ இல்லை. உலகில் இருந்து வெளியேறாமலே நாம் பற்பல உலகங்களுக்குள் ‘சென்றபடியே’ இருக்கிறோம், ஆனால் இதை நாம் திட்டமிட்டு முயற்சியெடுத்து செய்வதில்லை. நான் என் அறையில் உள்ள பேனாவை எடுத்துக் கொண்டு இரண்டு அடிகள் நடக்கும் போது என் உலகம் மாறுகிறது, நானும் மாறுகிறேன், இதை நான் ‘அறியும்’ முன்னரே இது நடந்து முடிகிறது.

 இப்போது மீண்டும் பாசத்துக்கு வருவோம் – வழக்கமான பாசத்தில் நாம் ஒரு உணர்வு குறித்த கவனத்துடன், பாசம் குறித்த பிரக்ஞையுடன் தான் இருக்கிறோம். ஒரு குழந்தை அழுது கொண்டிருப்பதை கவனிக்கிறோம். அதை நாம் பார்த்த நொடியிலே அதன் உலகில், அதன் இருப்பில் நாம் கலந்து விடுகிறோம். அதை நோக்கி முன்னேகும் போது, அதை நோக்கி நடைபோடும் போது, அதை கையில் எடுத்து ஆறுதல் சொல்லும் போது நம் பாச உணர்வை விட வேகமாய் நம் இருத்தல் வேலை செய்கிறது, நம் உடலும் உலகமும் வேலை செய்கிறது. அதற்கு அடுத்தே நாம் உணர்வுவயப்படுகிறோம். (அடுத்த முறை ஒரு அழும் குழந்தையை பார்க்கும் போது இதை கவனியுங்கள்.) ஏனென்றால் நம் ‘குற்றவுணர்வு’ நம்மை அந்த இருத்தலுக்குள் கொண்டு சேர்த்து விடுகிறது. அதன் பிறகே நம் செயல்களை “நான் பாசத்தால் உந்தப்பட்டேன், மனம் நெகிழ்ந்து போனேன், கண்ணீர் வடித்துக் கொண்டு நெஞ்சு பதைபதைக்கப் போனேன்” என்றெல்லாம் நிறமூட்டி அடையாளப்படுத்துகிறோம். இதனாலே ஹைடெக்கர் தெளிவாக உணர்வுகளையும் ‘குற்றவுணர்வையும்’ பிரித்துப் பார்க்கிறார். இதை நாமும் நம் மனதளவிலும், செயலளவிலும் பயிலும் போது பாசத்தின் போலி வலையில் மாட்டாமல், இயல்பாக நடந்து கொள்ள, அழும் குழந்தையிடம் உங்களை ஒரு பாதுகாவலனாக, மீட்பராக முன்வைக்காமல் ஒரு அழும் உயிரை நோக்கித் தள்ளப்படும் மற்றொரு உயிராக, அழுகிற ஒரு உயிரின் இருத்தலின் போதாமையை உணர்ந்து குற்றவுணர்வு கொண்ட மற்றொரு உயிராக அங்கு நீங்கள் செல்ல முடியும். அப்போதே பாசம் எனும், குற்றவுணர்வு எனும் விஷத்தினால் நாம் நீலம் பாரித்து சாகாமல் தப்பிக்க முடியும்.

இருத்தலை போலித்தனம் இல்லாமல், தத்துவார்த்தமாய் அணுகுவதால் மட்டுமே இப்பிரச்சனையை சரி செய்ய முடியாது என அறிவேன். ஆனாலும் சமூகக் கலாச்சார சூழல்கள் மாறாத வரையில் நம் வசமிருக்கிற இருப்பை மட்டுமே நம்மால் சரி செய்திட முடியும் என்பதால், நம் குடும்பத்துக்குள் இருந்து நாம் நமது ‘இருத்தலின் சீர்திருத்தத்தை’ துவங்கிடலாமே!