காலை குழந்தைகளைப் பள்ளிகளுக்கு அனுப்பி மாலை வீட்டிற்கு அழைத்துவருவதோடு மட்டும் பெற்றோர்களின் வேலை முடிந்துவிடுவதில்லை. குழந்தைகள் பள்ளிகளில் என்ன செய்கிறார்காள், யாருடன் பழகுகிறார்கள், என்னமாதிரியான கல்வி கற்கிறார்கள், யாரெல்லாம் அவர்களின் நண்பர்கள், அவர்களுக்கு என்னமாதிரியான மாற்றங்கள் ஒவ்வொரு நாளும் பள்ளியின்மூலம் நடந்திருக்கிறது உள்ளிட்ட பல விஷயங்களில் பெற்றோர்கள் கவனம் செலுத்துவது நல்லது. அதேபோல ஆசிரியர்களுக்கு சில கட்டுப்பாடுகள், கவனங்கள் குழந்தைகள் மீது இருக்க வேண்டும்.

இரண்டு நாட்களுக்குமுன்பு ஒரு குழந்தையின் அழுகுரல் சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. ஆம் அந்தக் குழந்தை மற்ற குழந்தைகளைவிட சற்றே வித்தியாசமானவன்தான். அதற்கு என்ன என்று கேள்வி கேட்பவர்கள் கீழே உள்ள விடியோவைப் பாருங்கள்.

இந்தச் சமூகத்தில் ஒரு மனிதனின் தோற்றம், உடல்வாகுதான் மற்றவர்களின் கண்களுக்கு விருந்து. அவன், அவள் எந்தமாதிரி இருக்கிறான், அவன், அவள் மற்ற மனிதர்களைவிட எந்தவிதத்தில் குறைந்திருக்கிறார், ஏன் மற்றவர்களைப்போல் அவன், அவள் இல்லை என்ற பல கேள்விகளுக்கு குழந்தையாகிய அவர்கள் சந்திக்கும் இன்னல்களுக்கு அளவே இல்லை. விடலைத்தனமாக மற்ற குழந்தைகளின் பேச்சுகளுக்கு தன் உருவத்திற்குத்தான் சற்றும் பொறுப்பில்லாத ஒரு குழந்தையின் அழுகை எப்படி இருக்கும். அந்த குழந்தை இந்த சமூகத்திடம் என்ன கேட்கும்.

குவாடென் என்ற குழந்தை அப்படித்தான் அம்மாவிடம் கேட்கிறது “எனக்குக் கயிறு தாருங்கள், நானே என்னை கொன்றுவிடுகிறேன்” என்று கூறி அழுகிறது.

இந்த சம்பவம் அஸ்திரேலியாவில் உள்ள பள்ளியில் நடந்துள்ளது. குவாடேன் அங்குள்ள பள்ளியில் படித்துவருகிறான். (dwarfism) குள்ளத்தன்மை என்ற வித்தியாச நோயினால் மற்ற மாணவர்களின் இருந்து தனித்து தெரிவான். இதனால் அவனை மற்ற மாணவர்கள் தினமும் வம்பிழுத்து துன்புறுத்தியுள்ளனர். இதை அவன் அம்மாவிடம் சொல்ல அவர், இந்தச் சமூகமும் இந்த மாணவர்களும் எப்படி இருக்கிறார்கள் பாருங்கள், இந்த ஆசிரியர்கள் இந்தக் குழந்தைகளுக்கு எதை சொல்லிகொடுத்திருக்கிறார்கள் பாருங்கள் என்று சமூக வலைதளங்களில் தன் குழந்தை அழும் விடியோவை பகிர்ந்துள்ளார்.

மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வீடியோ, இனி எந்தக் குழந்தைக்கு இதுமாதிரியான சம்பவங்கள் நடக்கக்கூடாதென பலர் அந்த வீடியோவை பார்த்து பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர்.