உலகமெங்கும் தீவிரமாகப் பரவத்தொடங்கியுள்ளது கொரோனா வைரஸ். நாளுக்கு நாள் பலியானோர் எண்ணிக்கை கணிசமாக உயிர்ந்து வருகிறது. உலகில் கிட்டத்தட்ட 80 நாடுகளில் covid-19 வைரஸ் தொற்று இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

சீனாவில் தொடங்கி ஆசிய நாடுகள் முழுக்கப் பரவியுள்ள கொரோனாவால் பல லட்சக்கணக்கான பள்ளி குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கணக்கிப்படி 29 கோடி குழந்தைகளின் கல்வி இந்தக் கொடிய கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. ஆசிய நாடுகளில் பலவற்றில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் குழந்தைகளின் கல்வி முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் முதல் இந்த ஆண்டு மார்ச் என்ற தோராய கணக்கை எடுத்துக்கொண்டாலே இத்தனை கோடி மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது வேதனைக்குரிய விஷயமாகும்.

எங்கோ பரவிக்கொண்டிருக்கிறது என்ற எந்தவித முன் எச்சரிக்கை நடவடிக்கைகளில் எடுக்காத நாடுகள் கூட தற்போது கொரோனாவிற்காக சிறப்பு மருத்துவ மையங்கள் அமைத்து மக்களைப் பாதுகாத்துவருகிறது. இந்தியாவில் மத்திய சுகாதாரத்துறை அறிவித்தப்படி 29 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பதாக உறுதிபடுத்தியுள்ளது.

இந்நிலையில் யுனெஸ்கோ அமைப்பின் தலைவர் ஆட்ரி அசோலே கூறும்போது, “உலகளவில் கட்டுக்கடங்காமல் பரவிவரும் கொரோனாவை கண்கானித்து வருகிறோம். இருந்தும் இது அனைத்துத்துறைகளையும் அச்சுறுத்திவருகிறது. குறிப்பாக கல்வித்துறை பாதிக்கப்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.”

இத்தாலி நாட்டில் மட்டும் 108பேர் இறந்துள்ளனர். இந்த covid-19 வைரஸ் தொற்று வயதானவர்கள் மற்றும் குழந்தைகளை எளிதில் பாதிப்பதாகவுள்ளதால் வரும் மார்ச் 15ஆம் தேதிவரை பள்ளி கல்லூரிகள் மூட அறிவுறுத்தியுள்ளது.

சவுக் கொரிய நாட்டில் கிட்டத்தட்ட 6000திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மார்ச் 23வரை அங்கு பள்ளிகள் மூடப்பட்டுள்ளது.

ஜப்பான் நாட்டிலும் மார்ச் – எப்ரல் மாதங்கள் முழுக்க பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

உலகமெங்கும் நிலவி வரும் பொருளாதார மந்தநிலை, கொரோனாவால் மேலும் அதிகரித்துள்ளது. சீனாவின் பொருளாதார மந்தநிலை நாளுக்குநாள் உச்சத்தை எட்டிவருவதாக பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள். உலகமெங்குமே covid-19 வைரஸ் தொற்று காரணமாக பல அரசு நிகழ்ச்சிகள், பல மக்கள் நல ஏற்பாடுகள், பல விளையாட்டு நிகழ்ச்சிகள், பல படப்பிடிப்புகள் என மக்களின் செயல்பாடுகள் ஒட்டுமொத்தமாக ஸ்தமித்து போய் நிற்கின்றன.

நோய் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள பல மருத்துவர்கள் சுகாதார நடவடிக்கையை எடுக்க வலியுறுத்தி வருகின்றன. வரும் நாட்களில் இன்னும் என்ன என்ன நடக்கப்போகிறதோ என்ற அச்சத்தில் உலக மக்கள் மூழ்கியுள்ளனர். நோய்க்கான மருந்து விரைவில் கண்டுபிடிக்கப்படும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருப்பது குறிப்பிட்டத்தக்கது