நூற்றாண்டுகளின் உலக வரலாற்றில் மாபெரும் கரும்புள்ளியாக அமைந்த இரண்டாம் உலகப்போர் நிறைவுற்று 75 வருடங்கள் கடந்திருக்கின்றன. 1938 முதல் 1945 வரை சுமார் ஏழு ஆண்டுகள் நடந்த இந்த போர் மனித குல வரலாற்றில் பேரழிவையும், பெரும் இழப்பையும் ஏற்படுத்தி வரலாற்றில் கறைபடிந்த அத்தியாயத்தை உருவாக்கியது. அதற்கான முக்கிய காரணம் ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லர். உலகில் இதுவரை எந்த சர்வாதிகாரியும் செய்யாத  இனச்சுத்திகரிப்பை, மனித வதத்தை அவர் செய்தார். அதன் தொடர்ச்சியில் அவரே மூலக்காரணமாக இருந்த இரண்டாம் உலகப்போர் உலகை அப்படியே புரட்டிப்போட்டு விட்டது. மேலும் கடந்த 75 ஆண்டுகளில் உலகம் சமூக, பொருளாதார, அறிவியல் தொழில்நுட்ப ரீதியாக பல புரட்சிகர மாற்றங்களை காண ஒரு வகையில் இது உதவி புரிந்திருக்கிறது எனலாம்.

ஜெர்மனியின் நாசிக்கட்சியின் ஸ்தாபகரான ஹிட்லரின் அரசியல் செயல்பாட்டிற்கான சிந்தனை அடிப்படை நீட்சேயிடமிருந்து தொடக்கம் பெற்றது. நீட்சேயின் எஜமான்  – அடிமை, இரட்சகர் கோட்பாடுகள் ஹிட்லரை பெரிதும் ஈர்த்தன. இந்த உலகம் என்பது எஜமானனின் கீழ் ஆளப்பட வேண்டும். மக்கள் எல்லாம் அவனின் அடிமைகளாக இருக்க வேண்டும்.  அதன் தொடர்ச்சியில் தான் ஹிட்லர் முதலில் அகண்ட ஐரோப்பா பற்றி கனவு கண்டார்.  இது ஐரோப்பாவில் அந்நியர்களாக கருதப்படும் யூதர்களை அகற்றுவதன் மூலம் தான் சாத்தியப்படும் என்று ஹிட்லர் நம்பினார். அதற்காக அவர் கண்டறிந்தது தான் இனத்தூய்மை கோட்பாடு. இந்த  கோட்பாட்டின் அடிப்படை என்பது பாசிச அரசுகள் அல்லது இனங்களால் குறிவைக்கப்படும் சிறுபான்மை அல்லது பெரும்பான்மை இனங்களின் உடல், கலாச்சாரம், இருப்பிடம், வரலாறு, மொழி, நினைவுச்சின்னங்கள் மற்றும் வழிபாட்டுத்தலங்களை அழித்தொழிப்பது அதன் மூலம் ஒற்றைத்தன்மை கொண்ட இனமாக குறிப்பிட்ட ஆளுகை பரப்பில் தன்னை நிலைநிறுத்திக்கொள்வது. முதலாம் உலகப்போர் காலகட்டத்தில் துருக்கிய அரசால் அர்மேனியர்கள் இவ்வாறு கொலை செய்யப்பட்டனர். ஆனால் அது இனச்சுத்திகரிப்பு என்பதன் சரியான இலக்கணத்தை அடையவில்லை. அதே நேரத்தில் உலகை உலுக்கிய மாபெரும் படுகொலையாக  இருந்தது. இதன் தொடர்ச்சியில் ஹிட்லர்  ஐரோப்பாவில் தன் அரசியல் கோட்பாட்டை நிறுவும் பொருட்டு இனச்சுத்திகரிப்பை செயல்படுத்த திட்டமிட்டார். அதற்காக தேசியம் என்ற கோட்பாட்டை துணைக்கு அழைத்துக்கொண்டார். அவ்வகையில் ஹிட்லரின் தேசியம் என்பது ஒற்றை தேசிய இனமாக இருந்தது. ஜெர்மனியின் வரலாற்றின் மீதும், பாரம்பரியங்களின் மீதும், கலாச்சாரத்தின் மீதும் அதிக நம்பிக்கையையும், பற்றுறுதியையும் அந்த தேசியம் கொண்டிருந்தது. இதன் மூலம் அதற்கு முரண்பாடாக தெரிந்த இனங்கள் அல்லது மக்கட்தொகுதியினர் இரண்டாம் வகையினராக ஆக்கப்பட்டு வெளியேற்றப்படவோ அல்லது கொல்லப்படவோ செய்யப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. மேலும் தன் செயல்பாட்டிற்கு பைபிளையும் ஹிட்லர் துணைக்கு அழைத்துக்கொண்டார். அதன் போர் குறித்த வசனங்களை தன் செயல்பாட்டிற்கான நியாய விதியாக எடுத்துக்கொண்டார். அதன் பகுதியாக தான் ஆளும் ஜெர்மனியில் உள்ள யூதர்களை வெளியேற்றவும், அவர்களை வதை முகாம்களுக்கு அனுப்பி கொல்லவும் தீர்மானித்தார். அதற்காக அவரால் இருவிதமான காவல்துறை உருவாக்கப்பட்டது. ஒன்று  தன் நேரடி கட்டுப்பாட்டில் ஹிம்லர் என்பவர் தலைமையில் பாதுகாப்பு போலீஸ். மற்றொன்று அதன் துணை அமைப்பாக ஜெஸ்டபோ என்ற ரகசிய போலீஸ். இது தவிர இராணுவம். இந்த மூன்றின் துணையோடு ஹிட்லர் யூதர்களுக்கு எதிரான இனச்சுத்திகரிப்பை ஆரம்பித்தார். அதற்காக ஜெர்மனியில் வதைமுகாம்கள் உருவாக்கப்பட்டன. அதற்காக தூய இன அடையாளங்கள் வரையறுக்கப்பட்டு யூதர்கள் ‘பிறராக’ வகைப்படுத்தப்பட்டனர். அவர்கள் அனைவரும் வதைமுகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். பின்னர் படிப்படியாக கொல்லப்பட்டனர். இந்த படுகொலை குறித்த செய்திகள் எல்லாமே மறைக்கப்பட்டன. இவ்வாறாக ஹிட்லர் அன்றைய ஜெர்மனியில்  லட்சக்கணக்கான  யூதர்களை கொன்றொழித்தார். இதில் ஜெஸ்டாபோ என்ற ரகசிய போலீஸின் பங்கு முக்கியமானது. அவர்கள் உளவுப்படை போன்று செயல்பட்டு ஜெர்மனியில் அரசிற்கு எதிரானவர்களை குறிப்பாக கம்யூனிஸ்டுகள், ஜிப்சிகள், மற்றும் யூதர்களை கண்டறிந்து காவல்துறைக்கு தகவல் சொல்லி அவர்களை கைது செய்ய வைத்தார்கள். இவ்வகையில் இனசுத்திகரிப்பு செயல்பாட்டின் பிரதான பங்குதாரர்கள் இவர்கள் தான்.

ஹிட்லரின் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகள் ஒரு பக்கம் நிகழ்ந்து கொண்டிருக்க மறுபக்கம் ஹிட்லர் தன் கனவான அகண்ட ஐரோப்பாவை அடைவதற்கான நடவடிக்கைகளில் இறங்கினார். இதன் அடிப்படை என்பது அமெரிக்கா உலக ஏகாதிபத்தியமாக மாறி தங்களை ஆக்கிரமித்து விடக்கூடும் என்று ஹிட்லர் அஞ்சியது தான் என்கிறார்கள் ஐரோப்பிய அரசியல் ஆய்வாளர்கள். மேலும் முதல் உலகப்போருக்கு பின்னர் ஜெர்மனி எதிரிகளிடத்தில் போர் குறித்த அதிக நடவடிக்கைகளுக்கு உள்ளானதும் முக்கிய காரணங்களில் ஒன்றாகும். ஹிட்லரின் இந்த மனோபாவம்  ஐரோப்பிய அரசுகளிடையே பெரும் பதட்டத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது.  ஹிட்லர் தன் நோக்கத்தை அடைவதற்காக இத்தாலி, ஐப்பான் ஆகியவற்றை தன் கூட்டணியில் இணைத்துக்கொண்டார். இது அச்சு நாடுகள் என்றழைக்கப்படுகிறது. அதே நேரத்தில் இதற்கு எதிராக பிரிட்டன், பிரான்ஸ் ஆகியவை கூட்டணி அமைத்தன. இவை வரலாற்றில் நேச நாடுகள் என்றழைக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியில் ஒரு முக்கிய விஷயத்தை பற்றி குறிப்பிட்டாக வேண்டும். அதாவது அன்றைக்கு ஹிட்லருக்கு எதிரணியில் இருந்த பிரிட்டனின் பிரதமராக இருந்த வின்சன்ட் சர்ச்சில் தான் பிரதமராவதற்கு சற்று முன்னர் அதாவது 1927 ஜனவரியில் ரோமிற்கு சென்று முசோலினியை சந்தித்தார். பின்னர் அதனைப்பற்றி இவ்வாறு குறிப்பிட்டார்.

திரு முசோலினியின் கனிவான மற்றும் வியப்பான கவனிப்பால் சுமைகள் மற்றும் அபாயங்களுக்கு இடையிலும் பற்றற்ற சமநிலையோடு, அவரது அமைதியானதன்மையால் நான் வசீகரிக்கப்படாமல் இருக்க முடியவில்லை. ரஷ்ய நுண்கிருமிகளுக்கு அவசியமான மாற்றுமருந்தை இத்தாலிய பாசிசம் வழங்கும்.   இதன் தொடர்ச்சியில் இத்தாலிய பாசிசவாதிகளுக்கு தெரிவித்தார்: “நான் ஒரு இத்தாலியராக இருந்திருந்தால், லெனினிசத்தின் மிருகத்தனமான விருப்புகளுக்கும் மற்றும் உணர்வுகளுக்கு எதிராக உங்களது வெற்றிகரமான போராட்டத்தில் தொடக்கத்திலிருந்து முடிவு வரையில்   நிச்சயமாக நான் முற்றிலுமாக உங்களுடன் தான் இருந்திருப்பேன். இவ்வாறான நிலையில் பிரிட்டன் பிரதமரான சர்ச்சில் இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் ஜெர்மனி மற்றும் இத்தாலிக்கு எதிராக திரும்பியது ஹிட்லரை முன்வைத்து தான். இதற்காகவே தான் எதிரியாக நினைத்த சோவியத் கம்யூனிச அரசோடு போர் கூட்டணி வைக்க ஒப்புக்கொண்டார். இந்நிலையில் 1939 செப்டம்பர் 1 இல் ஹிட்லர் எல்லை விரிவாக்கம் செய்ய போலந்து மீது படையெடுத்தார். இதற்கு பதிலடியாக நேச நாட்டு படைகள் ஜெர்மனி மீது போர் பிரகடனம் செய்து தாக்குதல் நடத்தின. ஆனால் அது வலுவாக இல்லை. இதன் தொடர்ச்சியில் ஜெர்மனி இரண்டே ஆண்டுகளில் ஐரோப்பாவில் பெரும்பான்மை பகுதிகளை பிடித்தது. இது ஐரோப்பிய பிராந்தியத்தில் மேலும் பதட்டத்தை அதிகரித்தது. மேலும் சோவியத் ரஷ்யா மீதும் படையெடுத்தது. ரஷ்யாவின் அப்போதைய அதிபர் ஸ்டாலின் இதனை எதிர்கொள்ள பிரிட்டன் தலைமையிலான நேசநாடுகளுடன் இணைந்தார். இதற்கு ரஷ்யாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. காரணம் பிரிட்டன் என்பது அப்போதைய நிலையில் அப்பட்டமான கம்யூனிச எதிரி. இதன் தொடர்ச்சியில் ஸ்டாலின் எதிர்ப்பாளர்களை சமாளிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இதற்காக  உடனடி எதிரி, ஒத்திவைக்கப்பட வேண்டிய எதிரி ஆகிய கருத்தாக்கங்கள் உருவாக்கப்பட்டன. சோவியத் ரஷ்யாவின் உடனடி எதிரி பிரிட்டன் அல்ல. ஜெர்மனி தான் என்று தீர்மானிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியில்  இரஷ்யா தன் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க ஆரம்பித்தது. இருந்தும் ஜெர்மனி முன்னேறி சென்று இரஷ்யாவின் சில பகுதிகளை கைப்பற்றியது. இந்நிலையில் 1941 ல் ஜப்பான் இருபெருங்கடல்களை கொண்டு அந்நிய தாக்குதல்களிலிருந்து தன்னை பாதுகாத்து கொண்டிருக்கும்  அமெரிக்காவின் பெர்ல் துறைமுகத்தை தாக்கியது. இதனால் அதிர்ச்சியுற்ற அமெரிக்கா நேசநாட்டு அணியில் சேர்ந்து இரண்டாம் உலகப்போரில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டது. இதன் தொடர்ச்சியில் ஜெர்மனி போரில் வென்று விடும் என்று உலகமே எதிர்பார்த்தது. இதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டில்  மக்கள் ஜெர்மன் மொழியை படிக்க தொடங்கிய வேடிக்கையும் நிகழ்ந்தது. இரண்டாம் உலகப்போர் உச்சகட்ட நிலையில் இருக்க ஹிட்லர் ஜெர்மனியில் யூதர்கள் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தினார். யூதர்கள் மீதான இனச்சுத்திகரிப்பு பல வடிவங்களில் நடந்தது. வதைமுகாம்களில் கொல்லுதல், காவல்நிலையங்களில் கொல்லுதல், சிறைச்சாலைகளில் கொல்லப்படுதல், விஷவாயுவை செலுத்தி கொல்லுதல் போன்றவை அரங்கேறின. இந்நிலையில் ஜப்பானும் நேசநாடுகளின் பல பகுதிகளை பிடித்தது. மேலும் அது கிழக்காசிய, தெற்காசியா நோக்கி முன்னேறியது. இதனால் பிரிட்டன் தன் காலனிய நாடுகளுக்கு ஆபத்து வந்து விடுமோ என்று அஞ்சியது. இதன் தொடர்ச்சியில் 1945 ஆகஸ்ட 6 முதல் 9 வரை அமெரிக்கா ஜப்பானிய நகரங்களான ஹிரோஷிமா மற்றும் நாகசாகி ஆகியவற்றின் மீது மனிதகுல பெரும் அபாயமான அணுகுண்டு தாக்குதலை நிகழ்த்தியது. இதில் லட்சக்கணக்கான ஜப்பானிய மக்கள் கொல்லப்பட்டார்கள். பல பிரதேசங்கள் அழிந்தன. இதன் விளைவாக ஜப்பான் சரண் அடைந்தது.  அதே தருணத்தில் இரஷ்ய படைகள் ஜெர்மனி படைகளை நோக்கி பெருந்தாக்குதல் நடத்தி முன்னேறின. இறுதியில் ஹிட்லர் பிடிபடக்கூடிய நேரத்தில் அவர் தன் இரகசிய பாதாள அறையில் தற்கொலை செய்து கொண்டார். இவ்வாறாக போர் முடிவுற்றது. போரின் முடிவில் ஐரோப்பிய பிராந்தியம் முழுவதும் பல மில்லியன் மக்கள் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். பலர் நிரந்த ஊனமடைந்தனர். ஏராளமான கோவில்கள், வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்கள் தகர்க்கப்பட்டன. இது முதல் உலகப்போர் காலகட்டத்தை விட அதிகமாக இருந்தது. முதல் உலகப்போர் நடந்து முடிந்து வெறும் 21 ஆண்டுகள் இடைவெளியில் நடந்த இந்த  போர் உலக அளவில் பெரும் மாறுதல்களை ஏற்படுத்தியது. குறிப்பாக காலனிய நாடுகள் படிப்படியாக விடுதலை பெற ஆரம்பித்தன. பிரிட்டனும், பிரான்சும் ஆசியாவில் தாங்கள் அடிமைப்படுத்திய நாடுகளை படிப்படியாக விடுவிக்கத் தொடங்கின. மேலும் முதலாளித்துவ சமூக அமைப்பிலும், உலக நாடுகளின் உறவு முறைகளிலும் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன. உலக அமைதிக்காகவும், ஒருமைப்பாட்டிற்காகவும், ஒருங்கிணைந்த நடவடிக்கைகளுக்காகவும் ஐக்கிய நாடுகள் சபை ஏற்படுத்தப்பட்டது.

இரண்டாம் உலகப்போரின் முடிவிற்கு பின்னர் நேசநாடுகளின் அதிபர்களான அமெரிக்காவின் ரூஸ்வெல்ட், ரஷ்யாவின் ஸ்டாலின் மற்றும் பிரிட்டனின் சர்ச்சில் ஆகியோர் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் கூடி அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினர். இதன் விளைவாக ஜெர்மனியில் நடந்த யூத இனச்சுத்திகரிப்பு மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. முடிவில் இது பற்றி விசாரித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை அளிக்க  ஜெர்மனியின் நியூரம்பர்க் நகரில் சர்வதேச  விசாரணை மன்றம் உருவாக்க முடிவு செய்யப்பட்டது. 1945  நவம்பர் 20 ல் இது ஆரம்பிக்கப்பட்டது. இவ்வாறான குற்றங்களுக்காக வரலாற்றில் சர்வதேச அளவில் அமைக்கப்பட்ட முதல் விசாரணை நீதிமன்றம் இதுவே. பிரிட்டனின் நீதிபதியாக இருந்த ஜாப்ரி லாரன்ஸ் இந்த விசாரணை நீதிமன்றத்தின் நீதிபதிகளில் ஒருவராக நியமிக்கப்பட்டார். விசாரணை தொடங்கப்பட்ட தருணத்தில் அவர் இவ்வாறு கூறினார். “ இந்த விசாரணையின் தொடக்கம் என்பது உலக நீதி வரலாற்றில் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்” போரில் தோற்கடிக்கப்பட்டவர்கள் போர்க்குற்றவாளிகளாக சர்வதேச நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுவது இதுவே முதல் முறை. போர்க்குற்றம்( War Crime)  என்ற சொல்லாடல் அப்போது தான் முதன் முறையாக பயன்படுத்தப்பட்டது. இதில்  சோவியத் ரஷ்யா, பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகியவை கலந்து கொண்டன. மேற்கண்ட நாடுகளிலிருந்து நீதிபதிகள் கலந்து கொண்டார்கள். இதில் அமெரிக்க நீதிபதியாக அமர்வில் இருந்த ராபர்ட் ஜாக்சன் வழக்கு குறித்து பின்வருமாறு குறிப்பிட்டார். “  இவர்களின் தவறுகள் கண்டிக்கத்தகுந்த, அபாயகரமான, பேரழிவை ஏற்படுத்தக்கூடிய ஒன்று. இதனை நாகரீக உலகம் புறந்தள்ள முடியாது. காரணம் இது தக்கவைக்கப்பட்டால் மீண்டும் இது போன்று  உருவாக வாய்ப்பிருக்கிறது. மேலும்  போரில் வெற்றிவாகை சூடிய நான்கு பெரும் அரசுகள் தங்களால் போர்க்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களை விசாரணைக்காக எங்களிடம் ஒப்படைத்தது அதிகாரம் பகுத்தறிவோடு செய்த  பெரும் மதிப்புறு விஷயமாகும்.

நியூரம்பர்க் விசாரணையில் மொத்தம் 24 பேர் குற்றஞ்சாட்டப்பட்டனர். இதில் 3 பேர் விசாரிக்கப்படவில்லை. அதில் ஒருவர் மாயமாகி விட்டார். இன்னொருவர் மனநோயாளியாக மாறினார். மற்றொருவர் தற்கொலை செய்து கொண்டார். ஆக 21 பேர் மட்டுமே இதில் விசாரிக்கப்பட்டனர். இதில் ஹிட்லரின் வெளியுறவு துறை அமைச்சரான ஜோசிம் வோன் ரிபன்டிரோப் மிக முக்கியமானவர். இவர் தான் இரண்டாம் உலகப்போரின் முக்கிய போர்க்குற்றவாளி. அவர்  விசாரணையின் போது பின்வருமாறு குறிப்பிட்டார். “ நாங்கள் இனச்சுத்திகரிப்பின் பேரில் எல்லா யூதர்களையும் வெறுக்கவில்லை. அதன் படி எல்லா யூதர்களையும் கொல்லவில்லை. ஜெர்மனியின் நலன்களுக்கும், அதன் பாரம்பரியத்திற்கும் எதிராக இருந்த யூதர்களை மட்டுமே கொன்றோம் என்றார். அதே நேரத்தில் ஜெர்மனியில் நடந்த யூத இனப்படுகொலைகள் குறித்து ஆய்வு செய்தவர்களில் மார்க்சிய அறிஞரான லென்னி பிரன்னர் முக்கியமானவர். அவர் அன்றைய ஜெர்மனியில் சியோனிஸ்டுகளான யூத மதவாதிகள் குறித்து ஆய்வு செய்தார். அதில் யூதர்களில் சிலர் நாசிகளுடன் ரகசிய கூட்டணி அமைத்து கொண்டு ஆட்காட்டி வேலையை செய்தனர். அதன்  மூலம் சாமான்ய நிலையில் இருந்த யூதர்கள் பலர் கொல்லப்பட்டனர் என்றார். தன் ஆய்வு முடிவுகளை தொகுத்து 51 Documents: Zionist Collaboration with Nazis  என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டார். இது அன்றைய நிலையில் ஐரோப்பாவில் பெரும் பரபரப்பையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. இஸ்ரேலிய யூத மதவாதிகள் இதனை கடுமையாக எதிர்த்தார்கள். இதன் தொடர்ச்சியில் விசாரணை என்பது 12 முறை நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். மேலும் 16 ஜெர்மானிய நீதிபதிகள், மருத்துவர்களும் விசாரிக்கப்பட்டனர். மேலும் இது 1949 வரை நீடித்தது. இந்நிலையில் 1946 ல் ஜப்பானிலும் இது போன்று நீதிமன்றம் அமைக்கப்பட்டு போரில் ஈடுபட்டவர்கள் விசாரிக்கப்பட்டார்கள். நியூரம்பர்க் விசாரணையின் முடிவுகளும், அதன் மூலம் ஏற்படுத்தப்பட்ட விதிகளும் அதற்கு பின்னால் உருவான சர்வதேச நீதிமன்றத்தின் விதிமுறைகளாக மாறின. மேலும் பிந்தைய கால விசாரணை முறைகளின் முன்மாதிரியாகவும் மாறியது.

இனப்படுகொலையாளர்கள் விசாரணை வரிசையின் தொடர்ச்சியாக விசாரிக்கப்பட்டவர்களில்  முக்கியமானவர் ஐக்மென். இவர் இனப்படுகொலை செயல்பாட்டின் முக்கிய சூத்ரதாரி. ஹிட்லரின் படுகொலை படையான எஸ்.எஸ் என்ற காவல்துறைக்கு தலைமை வகித்தவர். இவர் தான் ஏராளமான யூதர்களை கைது செய்து தடுப்பு முகாம்களுக்கு அனுப்பியவர். மேலும் லட்சக்கணக்கில் யூதர்கள் கொல்லப்படவும் காரணமாக இருந்தவர். இவர் போரில் ஜெர்மனி தோல்வியுற்ற உடன் தலைமறைவானார். எவராலும் கண்டுபிடிக்கப்பட முடியாத நபராக மாறினார். அவரை இஸ்ரேலிய உளவுத்துறை தீவிரமாக தேடி வந்தது. இந்நிலையில் 1960 ல் அர்ஜென்டினாவில் இஸ்ரேலிய அரசால் கைது செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியில் அவர் மீதான விசாரணையை நேரில் பார்ப்பதற்காக பிரபல ஜெர்மனிய தத்துவவாதியும், அரசியல் கோட்பாட்டாளருமான  அனா அரந்த் இஸ்ரேலுக்கு நேரில் சென்றார்.  இவ்வளவு படுகொலைகளை செய்தவர் மிகப்பெரும் கொடூர தோற்றமுள்ளவராக, அசாத்திய பலம் பொருந்தியவராக இருப்பார் என்று முதலில் அனா அரந்த் கருதினார். ஆனால் நேரில் பார்த்த பிறகு தான் தெரிந்தது. ஐக்மென் மிக சாதாரண, எளிய தோற்றம் கொண்டவராக இருந்தார். இதன் பிறகு அனா அரந்த் பாசிசம் குறித்து பின்வருமாறு குறிப்பிட்டார். “ பாசிசம் வளர்ச்சி பெறுவது  பாசிசவாதிகளால் மட்டும் அல்ல. அதனை மௌனமாக வேடிக்கை பார்க்கும் அறிவு ஜீவிகள், அரசியலாளர்களால் தான். பின்னர் தொடர் விசாரணைகளுக்கு பிறகு ஐக்மென் 1962 ல் தூக்கிலிடப்பட்டார்.

இரண்டாம் உலகப்போர் முடிந்து 75 ஆண்டுகள் கடந்திருக்கும் நிலையில் அதன் அரசியல் தத்துவம் உலக அளவில் பாசிசத்தை உள்ளடக்கிய மதவாத அரசுகளை மீள்கட்டமைப்பு செய்திருப்பது பெரும் துயரம். குறிப்பாக இந்தியாவிலும், பிற நாடுகளிலும் அது ஏகாதிபத்திய, மதவாத அரசுகளை மீட்டுருவாக்கம் செய்கிறது. இந்நிலையில் அறிவு ஜீவிகள், எழுத்தாளர்கள், ஜனநாயக வாதிகள் அனைவரும் இதனை கோட்பாட்டளவிலும், செயலாக்க ரீதியிலும் கடுமையாக எதிர்க்க வேண்டும். அது தான் அனா அரந்த் குறிப்பிட்டது மாதிரி நம்மை பாசிச காட்சிகளை வெறுமனே  வேடிக்கை  பார்க்கும் மனிதர்களாக மாறுவதிலிருந்து  தடுக்கும்.

peerzeena@gmail.com