தீராத பாதைகள்-15

மனிதனைவிட ஒரு மகத்தான உயிரியை எனக்குக் காட்டுங்கள் என்ற வரியை எங்கோ கேட்ட அல்லது படித்த ஞாபகம். ஆனால் சமீபமாக நடக்கும் அவலங்களை வைத்துப் பார்க்கும்போது மனிதனைவிடக் கீழான ஒரு உயிரி இல்லை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. ‘தெய்வத்தின் குரல்’ புத்தகத்தில் மகா பெரியவர் ஒரு முக்கியமான விஷயத்தை எளிமையாகச் சொல்லிச் செல்கிறார். இந்து ஞான மரபில் ‘நான் கடவுள்’ (அஹம் பிரம்மாஸ்மி) என்றொரு தத்துவம் இருக்கிறதல்லவா? அது சாதரணமாகப் பார்க்கும்போது தலைகனத்தின் வெளிப்பாடாகத் தோன்றும். இரணியகசிபு முதலியோர் இதைத்தானே சொன்னார்கள்? தன்னைக் கடவுளுக்கு நிகராக உயர்த்திய இவர்களை, கடவுள் தண்டித்தார் என்று படிக்கிறோம். இன்னொருபுறம் ‘நான் கடவுள்’ என்ற தத்துவத்தை ஞானமாக முன்மொழிகிறார்கள். இந்த ஒரே செய்தி எப்படி இருவேறு நிலையை அடைய முடிகிறது? கடவுளைத் தவிர வேறெதுவும் இல்லை என்பதால் நாமும் கடவுள்தான் என்கிற புரிதல் வேறு, தன்னைத் தவிர வேறு கடவுள் இல்லை – நானே கடவுள் என்பது வேறு. முதலில் சொன்னது அத்வைதம் இரண்டாவது சொன்னது செருக்கின் வெளிப்பாடு. இரணியகசிபு சொன்னது இரண்டாவது. அதனால்தான் அழிவு ஏற்படுகிறது. இப்படித் தத்துவங்களை வாரி வழங்கிய இந்திய ஞான மரபினர்கள் மகத்தான உயிரியாகத்தானே இருந்திருக்க வேண்டும்? இது மட்டுமா? திருவாசகத்தில் மாணிக்க வாசகர் தன்னை நாய் என்றும் நாயினும் கடையன் என்று சொல்லிக் கொள்கிறார். அவ்வளவு தாழ்ச்சி. இவ்வளவு உன்னதமாக வாழ்ந்த நாம் எதையோ எங்கோ தவறவிட்டுவிட்டோம் என்று தோன்றுகிறது.

அமெரிக்காவில் நடந்த ஜார்ஜ் ஃப்ளாய்டின் படுகொலை குறித்து உலகமே கொந்தளித்தது. அமெரிக்காவில் அப்படி நடந்ததில் எனக்கு ஆச்சரியமே இல்லை. அமெரிக்கர்களின் புகழ்பெற்ற வாசகமான ‘God Bless America’ வை எப்போதுமே நான் பகடியாகத்தான் பார்ப்பேன். என் அமெரிக்க நண்பர்களிடமும் விளையாட்டாகக் கேட்பதுண்டு: எந்தக் கடவுளை நீங்கள் உங்களை ஆசீர்வதிக்க அழைக்கிறீர்கள்? கடவுளை துணைக்கு அழைத்துக்கொண்டு முழங்காலால் இன்னொருவனின் கழுத்தை முறித்துக் கொலைச் செய்வதை அறியாமையில் இருக்கும் ஒரு காட்டுமிராண்டி செய்கிறான் என்றால் உயிர் நேயம் மிக்க மாபெரும் பாரம்பரியத்தில் வந்த நம்மவர்கள் செய்யலாமா? யானைப் படுகொலையைச் சொல்கிறேன். அதிலும் அந்த யானை கர்பமாக இருந்திருக்கிறது. இந்தச் செயலை நான் உயிர்வதை, ஜீவகாருண்யம் வன உயிர் பேணல் போன்ற பார்வையிலிருந்து மாறுபட்டு வேறொரு கோணத்திலிருந்து அணுக நினைக்கிறேன். அதிகாரம். மனிதனை மையப்படுத்திய அதிகாரம். தான் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற அதிகாரம். நீங்கள் நம்புவீர்களோ நம்ப மாட்டீர்களோ அதிகாரத்தைக் கட்டமைப்பதில் அமெரிக்காவைவிட இந்தியா மோசம் என்று நினைக்கிறேன்.

ஜார்ஜ் ஃப்ளாய்டின் படுகொலையையோ, யானைக் கொலை செய்யப்பட்டதையோ நாம் கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு சிந்திக்க வேண்டும். ஜார்ஜின் படுகொலையை நியாயப்படுத்த முடியாது. ஆனால் ஒட்டு மொத்தமாக மேற்குலகை பார்க்கும்போது அதிகார மையங்கள் தகர்ந்து ஒரு சமநிலை இருப்பதாக உணர முடிகிறது. நான் சொல்வது உங்களுக்குப் புரியவில்லை என்றால் நம்மூரில் இருக்கும் எதாவது ஒரு அரசு அலுவலகத்திற்குச் சென்றுவிட்டு வந்தால் புரியும். ஒரு அலுவலகத்தில் நுழைந்தால் அங்கிருக்கும் காவலாளித் தொடங்கி உயர்மட்டத்தில் இருக்கும் அதிகாரி வரை அனைவரது முகத்திலும் அதிகாரத்தின் வெறி தெரியும். எப்போதுமே இரண்டு விஷயங்களை ஒப்பிட்டால்தான் எது சிறந்தது என்று புரியவரும். ஆனால் அப்படிச் செய்யும்போது நான் ஏதோ மேற்குலகை மட்டும் தூக்கிப்பிடிப்பதாக நினைத்துக் கொள்கிறார்கள். நான் ஒப்பிடவில்லை மாறாக இன்னொரு பக்கத்தைக் காண்பிக்கிறேன். நீங்கள் அதிலிருந்து ஞானத்தை எடுத்துக்கொள்ளலாம் அல்லது நிராகரித்துவிட்டுச் செல்லலாம்.

ஏன் இதைச் சொல்ல வந்தேன் என்றால் இன்னொரு பக்கம் உங்களுக்குத் தெரியாமல் நீங்கள் பார்த்ததையே உண்மை என்று நம்பி அதற்குப் பழகியிருக்கலாம். உதாரணத்திற்கு நம் வங்கிகளை எடுத்துக் கொள்ளுங்கள். ஏதோ ஒரு சிறிய பிழை செய்துவிட்டால் நம்மைப் பெரும் குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்கிவிடுவார்கள். இதனாலே தமிழ் நாட்டில் வங்கிகளுக்கும் அஞ்சல் அலுவலகங்களுக்கும் செல்வதில்லை என்று உறுதியுடன் இருக்கிறேன். ஆனால் இங்கு அப்படி இல்லை. ஏதோ தவறு நிகழ்ந்துவிட்டால் விளக்கம் கொடுக்கிறார்கள். அவர்களே அதை நிவர்த்திச் செய்து உதவுகிறார்கள். முகத்தில் புன்னகையுடன் பணிபுரிகிறார்கள். அதிகாரத்தின் வெளிப்பாடாக நான் முதலில் கருதுவது இறுகிய முகங்கள். இதெல்லாம் சொன்னால் கடைமட்டத்திலிருந்து உயர்மட்டம் வரைக்கும் சொல்வது ஒரு பதில்தான்: நாங்கள் என்ன செய்வது? எங்கள் வேலை அப்படி. அடுத்தவனுக்கு நாம் வேலை செய்கிறோம் என்ற நிலையிலிருந்து நம் பணியை அந்தஸ்தாகக் கருதுவதால் இப்படி நடந்துகொள்ள வேண்டியதாகிறது. இதற்கெல்லாம் என்ன தீர்வு அதிகாரத்தைப் பரவலாக்குவது (Power Distribution). அதிகாரம் ஒரே இடத்தில் குவிந்துவிடாமல் பார்த்துக்கொள்வது. நம்முடைய தத்துவங்கள் அதைத்தான் நமக்குச் சொல்லிக்கொடுத்தது. கடவுள்தான் எல்லாம் என்றால் நீயும் நானும் கடவுள் – நீயும் நானும் சமம் – நமக்குள் பேதமில்லை. பேதமில்லாதபோது அதிகாரம் என்ன செய்ய முடியும்? மாணிக்க வாசகர் தன்னை நாயினும் கடையன் என்கிறார். அதனால் அவர் நாயாகிவிட்டாரா? இல்லை. இன்றைக்கும் அவரைக் கொண்டாடிக்கொண்டுதானே இருக்கிறோம்? அதிகாரத்தை விட்டொழித்தால் உயர்வுதான் வருகிறது. இதைத்தான் விவிலியத்திலும் படிக்கிறோம்: “தம்மைத்தாமே தாழ்த்துவோர் யாவரும் உயர்த்தப்படுவர்”

இன்னொரு சம்பவத்தையும் உங்களிடம் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன். ஆஸ்திரிய ஹங்கேரிய மரபில் வந்த ஓட்டோ அரச பரம்பரையில் ஒரு வித்தியாசமான பழக்கமிருக்கிறது. அந்த அரச மரபில் யாராவது இறந்து போனால் அவர்களை அங்கிருக்கும் கப்புச்சின் சபை மடத்தில் உள்ள ஆலயத்தில் புதைப்பார்கள். ஓட்டோ அரசன் இறந்து அவன் உடல் அந்த மடாலயத்தை அடைந்த போது மடாலயத்தின் கதவு மூடப்பட்டிருக்கிறது. அரச ஊழியன் அந்தக் கதவை தட்டுகிறான். உள்ளே இருக்கும் துறவி யார் வேண்டும் என்று கேட்கிறார். அரசன் அல்லவா இறந்திருபது? எனவே ஊழியன் அரசனின் பெருமைகளை வரிசையாகச் சொல்லி அப்படிப்பட்ட ஓட்டோ மன்னன் வந்திருப்பதாகச் சொல்கிறான். அந்தப் பெரிய துதிபாடலுக்குப் பிறகு துறவியோ எனக்குத் தெரியாது என்று சொல்லி கதவை திறக்க மறுக்கிறார். இன்னொருமுறை அந்த ஊழியன் இன்னும் அதிகமான பெருமைகளைச் சொல்லி கதவைத் திறக்கச் சொல்கிறான். இப்போதும் அந்தத் துறவி தனக்குத் தெரியாது என்று மறுத்துவிடுகிறார். மீண்டும் மீண்டுமாக இப்படியே நடக்க அந்த ஊழியன் ‘பெரும் பாவியான ஓட்டோ மன்னன் வந்திருக்கிறார்’ என்றதும், இப்போது நீங்கள் உள்ளே வரலாம் என்று துறவி கதவைத் திறக்கிறார். இறந்த ஓட்டோ மன்னனின் உடல் அந்த ஆலயத்தில் வழிபாடுகளுக்குப் பிறகு புதைக்கப்படுகிறது. அன்றிலிருந்து அந்த அரச குடும்பத்தில் யார் இறந்தாலும் இதுதான் வழக்கம். இன்றும் இது நடைமுறயில் இருக்கிறது. 2011ல் இந்தக் குடும்பத்தில் ஒருவரான ஹாப்ஸ்பெர்க் இறந்த போதும் அப்படியே நிகழ்ந்தது. இங்கே அவரது இறப்பின்போது நடந்த அந்தச் சம்பிரதாயத்தை வீடியோவாக இணைத்துள்ளேன்:

இங்கே பெரும் பாவி என்று ஒரு மன்னரை அடையாளப்படுத்துவதை மேற்குலகில் நடக்கும் அதிகாரப் பரவலின் குறியீடாகப் பார்க்கிறேன். அதுதானே நிதர்சனம்? இறந்த பிறகு அரசனும் ஒரு எளிய மனிதனும் சமம்தானே? இதனால்தான் இங்கே யாவரிடமும் எளிதாகப் பழக முடிகிறது. ஒரு நான்கு வயது சிறுமி என்னை இங்கே பெயர் சொல்லி அழைப்பாள். அதேபோல அவளுக்கான உரிய மரியாதையையும் நான் வழங்குகிறேன். இது எதுவுமே வலிந்து திணித்து நிகழ்வதல்ல இயல்பாக நடக்கிறது. எழுபது வயதைக் கடந்த ஒரு பெரும் துறவியிடம் உட்கார்ந்து உணவருந்திக் கொண்டிருந்தேன். கற்றறிந்த பெரும் அறிவாளி அவர். சாப்பிட்டு முடித்ததும் அவர் நான் உண்ட தட்டை வாங்கிச் சென்று கழுவி வைத்தார். மீண்டும் சொல்கிறேன் இவையெல்லாம் வெகு இயல்பாக நடந்தன. இந்தியாவில் இதெல்லாம் சாத்தியமே இல்லை என்றுதான் தோன்றுகிறது.

நாம் இந்தப் பூமியை வாழத் தகுதியற்ற இடமாக மாற்றிக் கொண்டிருக்கிறோம். நாம் நம்மை மற்ற உயிரிகளைப் போல் பார்க்காமல் உயர்ந்தவர்களாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். தமிழ் நாட்டில் எனக்கு மிகவும் விருப்பமான ஊர் குன்னூர். பத்து வருடங்களுக்கு முன் நான் பார்த்த குன்னூர் இப்போது இல்லை. அவ்வளவு குப்பைகள். குன்னூரில் என் விருப்பத்திற்குரிய இடம் டைகர் ஹில். ஷமிதாப் படம் பார்த்தவர்களுக்குத் தெரியும், அதில் டைகர் ஹில்லில் உள்ள கல்லறையை அடிக்கடிக் காட்டுவார்கள். அந்த இடத்தை எப்படி வருணிப்பதென்றே தெரியவில்லை! அவ்வளவு அழகான இடம்! சமீபத்தில் ஒருமுறை அங்குச் சென்றபோது அத்தனை அழகும் வற்றிப்போய் இருந்தது. வழியெங்கும் பீர் பாட்டில்கள். வேதனையாக இருந்தது. சரி குன்னூரில்தான் மக்கள்தொகை பெருகுகிறது என்று வைத்துக்கொள்வோம், இமயமலைச் சரிவில் உள்ள அருணாச்சலப்பிரேதேசம் மக்கள்தொகையெல்லாம் அவ்வளவாக இல்லை. சொர்கத்திலிருந்து ஒருத்துண்டு நிலம் பூமியில் விழுந்தது போன்றிருக்கும். ஆனால் அங்கேயும் குப்பை. பிளாஸ்டிக் கழிவுகள் அந்த மலை முழுவதும் கொட்டிக் கிடக்கிறது. இந்தத் திமிரும் ஆணவமும் மனிதர்களைத் தவிர வேறெந்த மிருகத்திற்கு இருக்க முடியும்?

அறிவியல் வளர்ச்சி அது இது என்று நாம் பிதற்றிக்கொண்டிருப்பதாகதான் எனக்குத் தோன்றுகிறது. நான் முன்பே ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்ததுபோல அறிவியல் மனிதர்களின் மையப்பொருள் ஆனப்பிறகுதான் இரண்டு உலகப்போர்களை இந்த உலகம் சந்தித்தது. ஆனால் அதன்பிறகு மேற்கு நாடுகள் தக்க பாடம் கற்றுக்கொண்டார்கள் என்று தோன்றுகிறது. நான் மறுபடியும் அமெரிக்க உதாரணத்தை எடுத்துக்கொள்கிறேன். நீங்கள் அமெரிக்காவில் ஒரு நகரிலிருந்து இன்னொரு நகருக்குச் செல்லும்போதோ, ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலம் செல்லும்போதோ வழியெங்கும் அவ்வளவு மரங்களைப் பார்க்க முடியும். கிட்டத்தட்ட ஒரு வனத்தைக் கடந்துபோவதுபோல இருக்கும். இன்னும் நியூஜெர்சி போன்ற மாநிலங்களில் மான்கள் சாலையில் நடமாடிக்கொண்டிருக்கும். பாஸ்டனில் இரவில் வெளியே நடந்தால் பத்து முயலையாவது நீங்கள் பார்க்க முடியும். இன்னொரு விஷயம் என்னை மிகவும் ஆச்சரியமூட்டியது. மின்சாரக் கம்பிகள் தெருவில் செல்லும்போது இடையில் மரமிருந்தால் அது மின்சாரக் கம்பிகளைப் பாதிக்காதவாறு மரத்தை V வடிவில் கழித்துவிடுகிறார்கள். ஆனால் நாம் மரத்தை தெய்வமாகக் கும்பிடுகிறோம். அதேசமயம் மரத்தை வெட்ட தயங்குவதே இல்லை. கடந்த கோடையில் சாலை விரிவாக்கத்திற்காகப் பெரிய பெரிய புளிய மரங்களை வேறோடு பிடுங்கியெறியப்படுவதை நேரில் பார்த்தேன். இங்கேயும் மரங்களை வெட்டுகிறார்கள். ஆனால் அதற்கு நிறையக் கட்டுப்பாடுகள் இருக்கிறது. நமக்கும் இருக்கிறது ஆனால் அதைக் கண்டுகொண்டதாகக்கூடத் தெரியவில்லை. இன்னொரு சுவாரசியமான செய்தி. சமீபத்தில் இங்கே கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றிருந்தேன். தூண்டில் இட்டு நடுக்கடலில் மீன்பிடிக்க வேண்டும். அப்படிப் பிடிக்கும்போது பிடிபடும் மீன்கள் பதினாறு இன்ச்சுக்குக் கீழிருந்தால் மீண்டும் கடலில் தூக்கியெறிந்துவிட வேண்டும். மீன்பிடித்த ஒவ்வொருவரும் கருத்தாக மீனை அளந்துப் பார்த்து பதினாறு இன்ச்சுக்கு கீழாக இருந்தால் தூக்கி கடலில் போட்டுக்கொண்டிருந்தார்கள். நன்றாகக் கவனிக்க வேண்டும். அவர்கள் யாவரும் யாருடைய மேற்பார்வையிலும் இதைச் செய்யவில்லை. இதைத்தான் அதிகாரமின்மை அல்லது அதிகார பரவலாக்கம் என்று சொல்கிறேன்.

சமீபத்தில் நடந்த யானைப்படுகொலையை இப்போது எடுத்துக்கொள்ளலாம். இதைப் பல்வேறு கோணங்களில் ஆராய்கிறார்கள். இதை மையப்படுத்தி நடக்கும் அரசியல் எல்லாவற்றையும் பார்க்கும்போது மீண்டும் மனிதனின் அதிகார வெறிதான் முன் நிற்கிறது. விவசாய நிலங்களைப் பன்றிகளிடமிருந்து காப்பாற்ற வெடி வைத்ததாகச் சொல்கிறார்கள். நான் பார்த்த ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன். குன்னூரில் அவ்வப்போது தேயிலை தோட்டங்களுக்குள் காட்டெருமைகள் புகுந்துவிடும். ஒருமுறை ஒரு பெரிய காட்டெருமை புகுந்து அங்கிருந்த தொட்டியில் இருந்த நீரை அருந்தியது. குடித்த கொஞ்ச நேரத்தில் அது அங்கேயே சுருண்டுவிழுந்து இறந்துப்போனது. தேயிலைக்குத் தெளிக்கப் பூச்சிக்கொல்லியை அந்த நீரில் கலந்து வைத்திருந்திருக்கிறார்கள். எதிர்பாராதவிதமாகக் குடித்த காட்டெருமை இறந்துபோய்விட்டது. இப்படிப் பயிர்களைக் காக்க ஆபத்தான முறைகள்தான் மனிதர்களாகிய நம்மிடம் இருக்கிறதா? மரத்தை பிடிங்கி எறிந்துவிட்டுச் சாலைகள் அமைப்பதற்குக் குறைந்தபட்ச அறிவு போதுமே? பன்றிகளையும் யானைகளையும் வெடிவைத்து விரட்ட குறைந்தபட்ச அறிவு போதுமே? அறிவியலை முழுமையாக நான் விட்டொழிக்கக் கூறவில்லை. அதன் துணைக்கொண்டு யாருக்கும் எந்த பாதிப்பும் வராத வகையில் தீர்வுக்காண வேண்டும். வளர்ச்சியின் பெயரால் நாம் அடைய முனைவது எதை என்று இன்னும் நாம் கண்டுகொள்ளவில்லை. யானையின் மரணம் என்னை வெகுவாகப் பாதித்தது. கடந்த முறை தமிழகம் வந்தபோது என் விருப்பத்திற்குரியவர்களிடம்கூட நேரம் செலவிடாமல் முதுமலையில் சுற்றியலைந்தேன். பல்வேறு காட்டுயானைகளைப் படம் எடுத்துக்கொண்டேன். ஜெயமோகனின் ‘யானை டாக்டர்’ கதையை அனைவரும் இப்போது அதிகம் வாசிக்கிறார்கள். நல்ல கதைதான். ஆனால் யானைகளைப் பற்றி இன்னும் அதிகமாக வாசிக்க விரும்புபவர்கள் J. H. Williams எழுதிய Elephant Bill என்ற புத்தகத்தை வாசித்துப்பாருங்கள். இது தமிழில் ‘யானைக்கூட்டம்’ என்ற பெயரில் வந்துள்ளது. மொழிப்பெயர்த்தவர் வை. சண்முகசுந்தரம். எந்த பதிப்பகம் வெளியிட்டது என்பது நினைவில் இல்லை. அதில் வில்லியம்ஸ் யானைகளைப் பற்றிப் பல்வேறு தரவுகளைத் தருகிறார். ஒரு யானை எப்படி இயற்கையில் மரணமடைகிறது என்பதை விவரிக்கும்போது படிக்கும் நமக்குக் கண்ணீர் பெருகும்.

ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலைத் தொடர்பாகப் பல்வேறு நாடுகளில் போராட்டங்கள் நடந்துவருகின்றன. வெள்ளைத் திமிர் இங்கே யாவருக்குள்ளும் இருக்கத்தான் செய்கிறது. ஆப்ரிக்க அமெரிக்கர்களின் இந்தப் போராட்டங்கள் நியாயமானதுதான். இவ்வளவு நடந்த பிறகும் இந்தியாவுடன் ஒப்பிடும்போது அமெரிக்கா மேலிருப்பதாகத் தோன்றுகிறது. காரணம் கொலையில் சம்மந்தப்பட்டவர்களை உடனடியாகச் சிறையில் அடைத்துவிட்டார்கள். நம் நாட்டில் நடக்குமா? பதிமூன்று நபர்களைச் சுட்டுக் கொன்றவர்கள்தானே இன்னும் ஆட்சியதிகாரத்தில் இருக்கிறார்கள். எங்கள் நகரில் இரவு ஒன்பது மணிக்கு மேல் ஊரடங்கு அறிவித்திருக்கிறார்கள். இது தெரியாமல் ஒருநாள் வெளியில் சென்றுவிட்டேன். தெருவெங்கும் ஆப்ரிக்க அமெரிக்கர்களும் ஒரு சில அமெரிக்கர்களும் வெடி வெடித்துக்கொண்டிருந்தார்கள். தீபாவளி போன்றிருந்தது. என்னைக் கடந்து செல்ல அனுமதித்துவிட்டு மீண்டும் வெடி வெடிக்க ஆரம்பித்தார்கள். அதற்குச் சற்று முன்னர்தான் அருகில் இருந்த செவன் லெவன் பர்கர் கடையைச் சூறையாடிருந்திருக்கிறார்கள். பொதுவாக வெடி வெடிக்க இங்கே அனுமதியில்லை என்பதால் அருகில் இருந்த ஒரு ஆப்ரிக்க அமெரிக்கரிடம் இதைப் பற்றிக் கேட்டபோது, வெடி எங்கள் உணர்வுகளின் குறியீடு என்றார். நிறவாத தாக்குதல்கள் அவ்வப்போது எங்காவது நடக்கும். அது எல்லாவற்றின் உணர்வு வெடிப்புதான் இப்போது நடக்கும் போராட்டம் என்று விளக்கமளித்தார். இப்படிப்பட்ட போராட்டங்கள் உணர்வெழுச்சி என்ற நிலையில் மட்டும் தேங்கிவிட்டால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை. அவர்களின் ஊடாகக் கடந்து வீட்டை அடைந்தபோது அம்பேத்கரின் ஞாபகம் வந்தது. தனிமனிதனாகப் போராடி, கல்வியின் உதவி ஒன்றை மட்டும் நம்பி கரை சேர்ந்த அவரைப் போல் இன்னொரு தலைவர் இந்த உலகத்தில் இனியும் வருவாரா என்பது சந்தேகமே.

அதிகாரத்தின் இரும்புக்கரம் கொண்டு ஒருபுறம் நாம் இயற்கையையும் இன்னொருபுறம் சகமனிதனையும் அழித்துவருகிறோம். இதற்கிடையில் சந்தடியே இன்றி ஒரு சின்ன வைரஸ் நம் இருப்பையே கேள்விக்குள்ளாக்குகிறது. நிதர்சனத்தில் நாம் எதை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம்?

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. சூன்யக்காரிகளின் வேட்டை நிலம் - வளன்
  2. இசைப்பேரழகிகளும் உன்மத்த இசைஞர்களும் – வளன்
  3. கலங்க வைத்த ஹாலிவுட் பேய்ப்படங்கள் -வளன்
  4. ட்ரம்பிற்கு கோயில் கட்டியவர்-வளன்
  5. பாம்புக்கடி பியரும் ஹேலோவீன் திருவிழாவும்-வளன்
  6. "கொஞ்சம் சாப்பாட்டுப் புராணம்" - வளன்
  7. வெறுப்பிற்கு எதிராக ஆனந்த் பட்வர்த்தனின் மூன்று படங்கள் - வளன்
  8. Chick-fil-A : அமெரிக்காவை ஆக்ரமித்திருக்கும் பர்கர் உணவகம்- வளன்
  9. இசை நாடகங்களும் படங்களும் – வளன்
  10. கிசுசிசு எழுதுவது எப்படி?- வளன்
  11. கொரோனா போதையும் பாரதி பாட்டும்- வளன்
  12. சிக்கன் பக்கோடா கேட்ட மனுஷ்- வளன்
  13. பெண்களுடனான உரையாடல்- வளன்
  14. புதிர்வட்டப்பாதையில் சுழலும் பாதாள உலகின் இளவரசி- வளன் ( அமெரிக்கா)
  15. ஹிட்லரின் விஷவாயுக்கூடத்திலிருந்து எழுதிய கடிதம் - வளன்
  16. மூன்று திரைப்படங்கள்: பாசிச இருளினூடே மானுட வெளிச்சம் – வளன்
  17. Twilight Zone: கற்பனைகளின் விளையாட்டு-வளன்
  18. Black Mirror: அதிரவைக்கும் அறிவியல் புனைவுகள்- வளன்
  19. தடை செய்யப்பட்ட சிரிப்பு - வளன்
  20. இயேசு சிரித்தார்: சில அற்புதமான திரைப்படங்கள்- வளன்
  21. வேட்டையாடமுடியாத திமிங்கலம் – வளன் (அமெரிக்காவிலிருந்து)
  22. ஓம்னியா : மனித குல மீட்பிற்கு ஒரு இசைப்போர்- வளன்
  23. மூன்று இசை தேவதைகள் - வளன்
  24. 'ஓ க்ரேஸ் இந்த இரவில் என்னை இறுக்கி அணைத்துக்கொள்' - வளன்