வேலைக்கு  வீட்டைவிட்டு வெளியில் சென்று வருகிற பெண்களின் பாதுகாப்பைவிட வீட்டினுள்ளே இருக்கும் பெண்களின் பாதுகாப்பை இந்த நோய் தொற்று காலத்தில் அதிகரிக்க வேண்டுமென யுனிடெட் நேஷஸ் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்தியா போன்ற நாடுகளில் ஏற்கனவே பெண்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறையின் அளவு இந்த கொரோனா தொற்றால் மேலும் அதிகரித்துள்ளது.

இந்த கொரோனா நோய் தொற்றால் இந்தியாவில் மட்டுமில்லாமல் சீனா, பங்களாதேஷ், பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட பல நாடுகளிலும் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் அத்துமீறல்கள் அதிகரித்துள்ளன. உலகம் முழுவதும் பரவிக்கொண்டிருக்கும் இந்த கோவிட்-19 தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கங்கள் பல வழிகளை மேற்கொண்டாலும் பெண்களின் மீது நிகழ்த்தப்படும் இந்த நிழல் தொற்றை கட்டுப்படுத்த எந்தவித வழியும் இல்லாமல்தான் இருக்கிறது. இதனால் பல பெண்கள் வெளியில் சொல்லமுடியாமல் சித்தரவதை அனுபவித்துவருகின்றனர். என்னதான் எலக்ட்ரானிக் மீடியா, சோஷியல் மீடியா என்று பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுகள் நடவடிக்கைகள் மேற்கொண்டுவந்தாலும் இன்னும் பல கிராம மற்றும் நகர பெண்களுக்கு ஸ்மார்ட் ஃபோன் ஒரு எட்டாக்கனியாகவே உள்ளது.

வழக்கமாக கோவிட்-19 தொற்றுக்குத் தீர்வாக தனித்திருத்தல், வீட்டிலே இருத்தல்  ஆகிய செயல்கள் பாதுக்காப்பானதாக கருதப்படுகின்றன. ஆனால் பாலியல் வன்முறைக்கு இரையாகும் பெண்களுக்கு வீடு பாதுகாப்பாற்ற இடமாகவே உள்ளது. வீட்டிலிருக்கும் ஆண்கள் குறிப்பாக பெண்களின் துணைவர்களின் உடல்ரீதியாக ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளை வெளியில் சொல்லமுடியாத ஒரு இக்கட்டான நிலைக்கு இந்த கொரோனா சூழல் தள்ளியுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பாலியல் அத்துமீறல்கள் செய்பவர்களின் மனரீதியான இயலாமைதான் இந்த வன்முறைகளுக்கு அடிப்படையாகப் பார்க்கப்படுகிறது. இவர்களின் பொருளாதார ரீதியான இயலாமை மற்றும் வீட்டிலே தனித்திருக்கும்போது ஏற்படும் மன அழுத்தங்கள், போன்ற காரணிகள் இந்த அத்துமீறல் செயல்களுக்குத் தீணிப்போடுவதாக உள்ளது.

இந்த ஊரடங்கு காலத்தில் பாதிப்புக்குள்ளாகும் பெண்கள் தங்கள் இன்னல்களை வெளியில் சொல்லமுடியாத அளவுக்குத் துன்பப்படுகின்றனர். மேலும் அத்துமீறல் செய்பவர்களும் அவர்கள்கூடவே வீட்டிலேயே இருக்கும்போது பாதிப்புக்குள்ளாவர்களின் நிலையைப்பற்றிச் சொல்லத்தேவையில்லை.

பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற நாடுகளில் பெண்களின் இந்தநிலை குறித்து மேற்கொண்ட ஆய்வில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவருகின்றன. குறிப்பாக பாதிக்கப்பட்ட பெண்கள், தங்கள் நிலையை வெளியில் சொல்லமுடியாதபோது மருந்துகடைகளுக்குச் சென்று மாஸ்க் -19 கொடுங்கள் என்று கேட்பார்களாம். அதாவது மாஸ்க் -19 என்பது சூசகமாக பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி தேவை என்பதை குறிக்கும் சொல் என்று கூறப்படுகிறது. இதனை அறிந்து போலீஸார் சம்பந்தப்பட்ட நபர்மீது வழக்குத் தொடர்ந்து விசாரிப்பார்களாம்.

மேலும் இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டிலே அடைந்து கிடக்கும் குழந்தைகளுக்கு பெற்றோர்களின் இந்த உடல்ரீதியாக மனரீதியாக துன்புறத்தல்களைக் காணும்போது எதிர்காலத்தில் அக்குழந்தைகளுக்கு மோசமான விளைவுகள் மனரீதியாக ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் இந்த ஆய்வின் முடிவுகள் கூறப்படுகின்றன.

உலகமே கோவிட்-19 தொற்றைக் கண்டு பயந்து நடுங்கிக்கொண்டிருக்கும் வேளையில் வீட்டிலிருக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு வேறொரு பிரச்சனை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. அரசாங்கம்,  இந்த நோய் தொற்று காலத்தில் முறையான பாதுகாப்பு நடவடிகையை எடுத்து வீட்டிலிருக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என பல தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்துவருகின்றன.