வெப்ப சலனம் மற்றும் தென்மேற்கு பருவமழை தொடக்கம் உள்ளிட்ட பல காரணங்களால் கடுமையான கோடை வெயிலில் வறண்டிருந்த தமிழகம் தற்போது குளிர்ந்துள்ளது. இதனால் பல பகுதிகள் ஏரிகள், குளங்கள் நிரம்ப தொடங்கியிருக்கின்றன. அதுமட்டுமில்லாமல் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. இதன்மூலம் காவிரி ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

தொடர்ந்து பெய்துவரும் கனமழைக் காரணமாக கர்நாடக மாநிலத்தின் கிருஷ்ணராஜ சாகர், கபினி உள்ளிட்ட அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து விநாடிக்கு 355 கன அடியும், கபினி அணையில் இருந்து 500 கன அடியும் திறக்கப்பட்டது.

அணையின் கொள்ளளவை கட்டுபடுத்த மீண்டும் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு, இரு அணைகளில் இருந்தும், விநாடிக்கு 8,300 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த நீர், நேற்று அதிகாலை தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல் வந்து சேர்ந்தது.

ஒகேனக்கலிலிருந்து காவிரி நீர் மேட்டூர் அணைக்கு  வந்தடைந்தது. மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 4,000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அதேசமயம் நீர்வரத்து 213 கன அடியில் இருந்து 1,500 கன அடியாக அதிகரித்துள்ளது. தற்போது மேட்டூர் அணை நீர்மட்டம் 39.13 அடியாகவும், நீர் இருப்பு 11.64 டி.எம்.சியாகவும் உள்ளது. இதனால் விவசாயிகள் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து 1,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.