டிக்டாக் செயலி இந்தியா முழுவதும் இமாலய வளர்ச்சி பெற்று, மக்களிடையே ட்ரெண்டாகிவருகிறது. தங்களுடைய அன்றாட செயலில் ஆரம்பித்து நடனம், பாடல், நடிப்பு என நீண்டுகொண்டே செல்லும் திறமைகளை டிக்டாக் வீடியோக்கள் மூலம் பலர் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த செயலி மக்களிடையே ஏற்படுத்திய செல்வாக்கை பயன்படுத்தி புனேவில் இதற்கான திருவிழா ஒன்றை ஆரம்பித்திருக்கிறார் பிரகாஷ் யாதவ்.

இதைப் பற்றி பிரகாஷ் யாதவ் குறிப்பிடுகையில், “டிக்டாக் மிகவும் பிரபலமான ஒரு செயலி. அனைவரும் டிக்டாக் விடியோக்களில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துகின்றன. நான் நிறைய கல்லூரி மாணவர்களை பார்க்கிறேன் அவர்கள் கல்லூரி வாசலில் நின்றுகொண்டு டிக்டாக் விடியோக்களை பதிவுசெய்கிறார்கள். இந்த பதிவுசெய்த வீடியோக்களை நாங்கள் ஏதாவது செய்ய திட்டமிட்டோம்.

அதனால் நாங்கள் 12 பிரிவுகளின் கீழ் இந்த திருவிழாக்களை வடிவமைத்துள்ளோம். அதன்படி சிறந்த நகைச்சுவை, சிறந்த நடிப்பு, சிறந்த ஜோடி, இப்படியாக வகைப்படுத்தியுள்ளோம். அதுமட்டுமில்லாது சமூக விழிப்புணர்வு மற்றும் சுற்றுசூழல் பாதுகாப்பு பிரிவுகளையும் இணைத்துள்ளோம். எங்களது நோக்கம் டிக்டாக் விடியோக்கள் மூலம்  இளைஞர்கள் வழிதவறி செல்கிறார்கள் என்ற முறையை மாற்றி கட்டமைப்பதுதான், வெறும் நேரங்கொல்லியாக டிக்டாக்கை பயன்படுத்துவோர் அதன் மதிப்பறிந்து பல உபயோகமான தகவல்களை மக்களுக்கு வழங்கவே நாங்கள் வழிவகை செய்வோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தப் போட்டியில் முதல் பரிசு பெறுவோருக்கு ரூபாய் 33,333 யும் இரண்டாம் பரிசு பெறுவோருக்கு ரூபாய் 22,222யும் அளிக்கப்படும் என்றும் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

எந்தவித வயது வித்தியாசமின்றி இப்போட்டியில் அனைவரும் தங்கள் வீடியோக்களை அனுப்பலாம் என்பது குறிப்பிடத்தக்கது. ஜூலை 24, 2019 முதல் ஆகஸ்ட் 20, 2019வரை இந்த திருவிழாவுக்கான வீடியோக்கள் வரவேற்க்கப்படுகின்றன.