சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ என்ற கௌரவத்தை வழங்கியுள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு முதல் ஐசிசி ‘ஹால் ஆஃப் ஃபேம்’ என்ற அந்தஸ்த்தை குறிப்பிட்ட சில கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கி வருகிறது.

இந்தியா சார்பில் 6ஆவது வீரராக சச்சின் டெண்டுல்கர் இந்தப் பட்டியலில் தற்போது இடம்பெற்றுள்ளார். இவருக்கு முன்பு இந்தியா சார்பில் பிஷன் சிங் பேடி(2009), சுனில் காவஸ்கர்(2009), கபில் தேவ்(2009), அனில் கும்ப்ளே(2015), ராகுல் திராவிட்(2018) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

‘ஹால் ஆஃப் ஃபேம்’ என்ற அந்தஸ்த்தை பெற பேட்ஸ்மேனாக இருந்தால் ஒருநாள் அல்லது டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 8000 ரன்கள் மற்றும் 20 சதங்கள் அடித்திருக்கவேண்டும். அதேபோல பந்துவீச்சாளராக இருந்தால் அவர் ஒருநாள் அல்லது டெஸ்ட் போட்டியில் குறைந்தது 200 விக்கெட்டுகள் எடுத்திருக்கவேண்டும். இந்த விக்கெட்டுகளை ஒருநாள் போட்டியாக இருந்தால் 30 ஸ்டைரிக் ரேட்டுனும் டெஸ்ட் போட்டியாக இருந்தால் 50 ஸ்டிரைக் ரேட்டுனும் இருக்க வேண்டும். முக்கியமாக இந்தப் பட்டியலுக்கு இடம்பெற வீரர்கள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்று 5 ஆண்டுகள் முடிந்திருக்கவேண்டும்.

இந்த விதிமுறைகளின்படிதான் தற்போது சச்சின் டெண்டுல்கர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். சச்சின் டெண்டுல்கர் கடந்த 2013ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தமாக இந்தப் பட்டியலில் உலகளவில் 87 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் இங்கிலாந்திலிருந்து 28 பேரும், ஆஸ்திரேலியாவிலிருந்து 26 பேரும், வெஸ்ட் இண்டீஸ் அணியிலிருந்து 18 பேரும், பாகிஸ்தானிலிருந்து 5 பேரும் இடம் பெற்றுள்ளனர். அத்துடன் நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்காவிலிருந்து 3 பேரும், இலங்கையிலிருந்து ஒருவரும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்