நாம் வாழும் காலம் – 12 

தோழி ஒருவர் தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் மலர்ந்த அந்தி மல்லிப் பூக்களின் படத்தை இணையத்தில் பதிவிட்ட நாளில் கடந்தகால நினைவுகள் மனதில் வெள்ளமாகப் பெருக்கெடுத்தன. கிராமத்தில் இருந்த பாட்டியின் வீட்டில் உள்ளங்கை அளவே உள்ள தோட்டம் இருந்தது. ஒரு பக்கம் ஓர் ஆளின் உயரத்தைத் தாண்டியும் வளர்ந்துவிட்ட செம்பருத்திப் பூத்துக் குலுங்கும். கொய்யாவும் எலுமிச்சையும் இன்னொரு பக்கம். குழந்தையான என்னால் அவற்றில் இருக்கும் பூக்களையும் பழங்களையும் எட்டிப் பறிக்க முடியாது. தோட்டத்துக்குக் கரை கட்டியதுபோல அந்தி மல்லிச் செடி புதராக வளர்ந்திருக்கும். மாலை நேரத்தில் அதில் மலரும்  பூக்களை எளிதாகப் பறித்துவிடுவேன். வெள்ளையடிக்கப்பட்ட தோட்டச் சுவரின் பின்னணியில் கண்ணைப்பறிக்கும் அடர்சிவப்பு நிறத்திலும் பளீரென்ற மஞ்சள் நிறத்திலும் இருக்கும் பூக்களைப் பார்க்கும்போது குதூகலமாக இருக்கும்.

அடர்சிவப்பு நிறப் பூக்களைப் பறித்து சுவற்றில் தேய்ப்பதோடு நகத்துக்குச் சாயம் பூசிக்கொள்வதும் முக்கியமான பொழுதுபோக்கு. கூடவே மிளகுபோன்ற விதைகளைப் பறித்துச் சொப்பு விளையாடுவேன்.  பூக்கள் உண்ணக்கூடியவை என்பது அப்போது தெரியாது. தெரிந்திருந்தால் தின்றும் பார்த்திருப்பேனோ என்னவோ. அந்தி மல்லிப் பூக்களின் நீளமான தண்டுகளை ஒன்றோடொன்று பின்னி நூலே இல்லாமல் சிறிய பூங்கொத்துக்களைச் செய்வார் பாட்டி. ஆனால் ஏனோ யாரும் தலையில் சூடிப் பார்த்ததில்லை. வண்ணமயமான டிசம்பர் பூக்களையும் கனகாம்பரத்தையும் டாலியாக்களையும் தலையில் சூடிக்கொள்ளும்போது அந்தி மல்லியை ஏன் சூடவில்லை என்ற கேள்வி இப்போது தோன்றுகிறது. பாட்டி பின்னிய பூங்கொத்துக்களை முற்றத்துச் சுவரில் தொங்கும் எண்ணற்ற நாள்காட்டிகளில் இருக்கும் கடவுளரின் படங்களுக்குச் சூட்டுவேன். குழந்தையாக இருந்ததால் எட்டாது, சித்தப்பா தேநீர் இடைவேளைக்காக வீட்டுக்கு வரும் வரை காத்திருப்பேன். அவர் தூக்கிப் பிடித்துக்கொள்ள ஒவ்வொரு படமாகப் பூங்கொத்துகளை வைப்பேன். 

வெறும் பூச்செடிகளைக் கொண்ட எளிமையான அந்தப் புகைப்படம் எனக்குள் குழந்தைப்பருவ நினைவுகளைக் கிளர்த்தியது போலவே தோழிக்கும் அதனோடு நெருங்கிய தொடர்பு இருந்ததாகப் பின்னொரு நாளில் சொன்னார். அவருடைய தந்தை இறந்த சமயத்தில் அந்தத் துயரத்தைக் கடப்பதற்காகத் தோட்ட வேலையில் ஈடுபட்டதாகவும் அப்போது அந்தி மல்லியின் எல்லா வண்ணங்களையும் தேடிப் பிடித்து வளர்த்தது மனநிம்மதியைத் தந்ததாம்.

அந்தி மல்லியா ஐந்து மணி பூவா 

அந்தி மல்லிக்கு அந்தி மந்தாரை என்ற பெயர் இருப்பது தெரியும். மலரும் நேரத்தைக்கொண்டு ‘நான்கு மணி பூ’, ‘ஐந்து மணி பூ’ என்றும் அழைப்பார்கள் என்பதை வெகுநாட்களுக்குப் பின்னரே தெரிந்துகொண்டேன். உலகமுழுவதும் அந்தந்த மொழியில் மலரும் நேரத்தைக் குறிப்பிடும் பெயரில் அழைக்கப்படுகிறது.  பத்திராட்சைப் பூ என்ற பெயரும் இதற்கு உண்டு. அடர்சிவப்பு, மஞ்சள், வெள்ளை, ஆரஞ்சு, மஞ்சளில் சிவப்பு தீற்றலாகக் கலந்த நிறம் எனப் பல வண்ணங்களில் பூக்கும். அதிசயம் என்னவென்றால் ஒரே செடியில் பல வண்ண மலர்களும் பூக்கும். அதே போலச் செடி வளர வளர மஞ்சள் நிறப் பூக்கள் அடர் சிவப்பு நிறமாக மாறுவதும் வெண்ணிறப் பூக்கள் இளம் ஊதாவாக மாறுவதும் உண்டு.

பெரு நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்ட இந்த மலருக்கு ‘பெருவின் அற்புதம்’ என்ற பெயரும் உண்டு. இதன் தாவரவியல் பெயர் மிராபிலிஸ் ஜலாபா, மிராபிலிஸ் என்றால் ‘அற்புதமான’ என்று பொருள், ‘ஜலாபா’ என்பது மெக்ஸிகோ நாட்டின் முக்கியமான நகரங்களில் ஒன்று. பெரு, மெக்ஸிகோ, க்வதாமாலா, சீலே போன்ற தென்னமெரிக்காவிலும் அதைச் சுற்றியுள்ள நிலங்களிலும் இந்தச் செடி வளர்கிறது. அதிகப் பராமரிப்பு தேவையில்லாத காரணத்தால் மலர்களின் வண்ணத்துக்காகவும் அழகுக்காகவும் ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்கா, ஆசியா எனப் பல நாடுகளில் வளர்க்கப்படுகிறது. வெப்பமண்டல பிரதேசத்தைப் பிறப்பிடமாக கொண்ட இந்தச் செடி உறைபனி தோன்றினால் இறந்துபோகும், ஆனால் இளவேனில் காலத்தில் மீண்டும் துளிர்க்கும்.

இரவு முழுவதும் இனிமையான மணம் வீசும் இந்தப் பூக்களை அழகுக்காகவும் அலங்காரமாகவும் மட்டுமே வளர்க்கிறார்கள் என்றே இத்தனை நாள் நினைத்திருந்தேன். பண்டைய காலம் முதல் இந்தக் செடியின் மலர், இலை, வேர், விதை என எல்லாமே மருந்தாகவும் பயன்படுகிறது. பிரேசில் நாட்டு காயபோ இந்திய இனத்தவர்கள் காய்ந்த மலர்களின் பொடியை தலைவலியில் இருந்து  நிவாரணம் பெற பயன்படுத்தினார்கள். பெரு, மெக்ஸிகோ நாடுகளில் வேரின் கஷாயத்தை தொழுநோய், மற்ற தோல் வியாதிகள், புண்கள், வயிற்றுப்போக்கு, ஈரல் சம்பந்தப்பட்ட நோய், விஷக் கடி சிகிச்சைகளில் பயன்படுத்தப்பட்டது. பூக்களின் சாறு காது வலி மற்றும் தோல் வியாதிக்கான மருந்தாகவும் இருக்கிறது. அழகான அடர்சிவப்பு நிறம்கொண்ட பூக்கள் உணவுப் பண்டங்களில் நிறமூட்டப் பயன்படுகின்றன.

பெரு நாட்டின் பாரம்பரியத் தொங்கு பாலம் 

பெரு நாட்டைப் பற்றிய சுவாரசியமான செய்தியொன்றைச் சில மாதங்களுக்கு முன்னால் படித்திருந்தேன். உலகின் பழைமையான தொங்கு பாலம் இங்கே இருக்கிறது. அபூரிமாக் ஆற்றைக் கடக்க உதவும் கெஸ்வச்சகா என்றழைக்கப்படும் இந்தப் பாலம் 500 ஆண்டுகள் பழைமையானது. கெச்சுவா மொழியில் ‘கெஸ்வ’ என்றால் ‘முறுக்கப்பட்ட புல்’ என்றும் ‘சக்க’ என்றால் ‘பாலம்’ என்றும் பொருள். இது தங்களின் உயிர்த்துடிப்பை பிரதிபலிக்கிறது என்றும் கலாசாரத்தை மெய்மைப்படுத்துகிறது என்றும் நம்புகிறார்கள் இன்கா இன மக்கள். அபூரிமாக் ஆற்றின் இரு கரைகளிலும் வசிக்கும் பல இன மக்களும் ஒன்றாகக் கலந்துறவாட இணைப்பாக இருந்த பாலம் 2020-ஆம் ஆண்டு கோவிட் தொற்றினால் அமல்படுத்தப்பட்ட வீடடங்கில் பராமரிப்பின்றி இற்றுப்போனது.

33 மீட்டர் நீளமும் 1.2 மீட்டர் அகலமும் கொண்ட இந்தப் பாலத்தைப் பயன்படுத்த முடியாமல் மக்கள் தவித்தனர். அப்போது கனஸ் மாகாணத்தில் வசிக்கும் ஹூயிஞ்சிரி இன மக்கள் பாலத்தைப் புனரமைக்க முடிவுசெய்தனர். இதிலென்ன புதுமை இருக்கமுடியும் என்று கேட்கிறீர்களா? பெருந்தொற்றுக் காலத்தில் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தாமல் பாரம்பரியமான முறையில் கையால் நெய்ய முடிவுசெய்தனர் என்பதுதான் புதுமை.

காலங்காலமாக கெஸ்வச்சகா பாலத்தைப் புனரமைக்கத் தேவையான அறிவையும் திறனையும் அத்துடன் தொடர்புடைய சடங்கு முறைகளையும் மனிதகுலத்தின் கலாசார அருவச் சொத்தாக 2013-ஆம் ஆண்டில் அறிவித்தது யுனெஸ்கோ நிறுவனம். இதைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள முதலில் பெருவின் வரலாற்றைத் தெரிந்துகொள்வது அவசியம்.

மலைகளை இணைத்த இன்கா நெடுஞ்சாலை 

கலாசார பாரம்பரிய வளங்களையும் செல்வங்களையும் கொண்ட நாடு பெரு. பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த பல்வேறு இன மக்களின் தொன்மங்களைக் கொண்ட மாபெரும் நிலப்பரப்பை உள்ளடக்கியது. 16-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஸ்பானியக் கடலோடிகள் அதன் கரையை வந்தடைந்தபோது இன்கா பேரரசு அங்கே கொடிகட்டிப் பறந்தது. அந்தக் காலகட்டத்தில் 25000 மைல் நீளமுள்ள இன்கா நெடுஞ்சாலை கட்டப்பட்டபோது பல நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொள்ளவேண்டி இருந்தது. ஆண்டீஸ் மலைத்தொடரின் வழியே சென்ற அந்தச் சாலை அகண்ட பள்ளத்தாக்குகளையும் கணவாய்களையும் மலை இடுக்குகளையும் எப்படி இணைக்கும் என்ற கேள்வி எழுந்தது. அதற்குக் கண்டுபிடிக்கப்பட்ட தீர்வுதான் தொங்கு பாலங்கள்.

இன்கா பேரரசின் அலுவலர்கள், தூதுவர்கள், படைவீரர்கள் எனப் பலரும் சாம்ராஜ்யத்தை நிர்வகிப்பதற்கும் விரிவுபடுத்துவதற்காகவும் இந்தத் தொங்குபாலங்கள் வழியே பயணித்தார்கள். அதுவரையிலும் ஒவ்வொரு மலைப்பகுதியிலும் இயற்கையால் தனிமைப் படுத்தப்பட்ட வெவ்வேறு இன மக்களும் ஒருவரோடொருவர் கலந்து பழகும் வாய்ப்பும் உருவானது. இப்படியாக இந்த நிலப்பரப்பின் சமூகப் பொருளாதார நிலைமையில் மாற்றங்களைக் கொண்டுவரும் காரணியாக இந்தத் தொங்குபாலங்கள் இருந்தன.

பாலத்தைப் பராமரிக்கும் கெச்சுவா இன மக்கள்

இன்கா பேரரசு அழிந்து 500 வருடங்களான பின்பும் தொன்மத்தின் அடையாளமாக இன்றுவரையில் இருக்கும்  ஒரே தொங்குபாலம் கெஸ்வச்சகா மட்டுமே. இத்தனை வருடங்களாக பாலத்தைப் பராமரிக்கும் பணியை செய்துவருகிறார்கள் நான்கு கெச்சுவா இனத்தைச் சேர்ந்த மக்கள். ஒவ்வொரு வருடமும் தவறாமல் இதைச் செய்து வருகிறார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

முதலில் அந்நிலத்தில் விளையும் புல்வகை ஒன்றை நூல்போலத் திரித்து தடிமனான வடத்தைச் செய்கிறார்கள். பழைய பாலத்தின்மீது நடந்து சென்று புதிய வடத்தினை ஒரு கரையிலிருந்து மற்றொரு கரை வரையிலும் இழுத்துக் கட்டுகிறார்கள். பிறகு பழைய பாலத்தை வெட்டி ஆற்றினுள் போட்டுவிடுவார்கள். புதிய பாலத்தின் முதன்மை வடங்களும் நடக்கும் பகுதியும் கைப்பிடியும் நன்கு இறுகிய பிறகு கைப்பிடிக்கிராதியை நெய்கிறார்கள். பாலத்தின் நடக்கும் பகுதி சுருண்டுகொள்ளாமல் இருக்க குறுக்கே கழிகளைப் பொருத்துகிறார்கள். பிறகு பாலத்தின் தரையில் விரிக்கப்படும் பாய்களை முடைகிறார்கள். இறுதியாக, பாலத்தின் இரு புறத்திலும் இரண்டு குழுக்கள் இணைந்து கைப்பிடிக் கிராதிகளை முடையும் பணியைச் செய்து முடிக்கிறார்கள்.

பாலத்தை உருவாக்கும் பணியில் ஈடுபடுபவர்கள் மிகுந்த திறமைசாலிகள், ஒருவரோடுவர் இணைந்து சுணக்கமின்றி பணியாற்றுவதில் வல்லவர்கள் என்பதால் இத்தனை நீளமான பாலத்தை மூன்றே நாளில் கட்டி முடிக்கிறார்கள். இப்படியாக, மக்களை உணர்வளவிலும் இணைக்கிறது பாலம். இந்தப் பாரம்பரியப் பணியை பல நூறு வருடங்களாகப் பேருவகையோடு செய்து வருகிறார்கள் இந்த மக்கள் . கெஸ்வச்சகா பாலம் இன்கா பேரரசின் தொழில்நுட்பத் திறனுக்கும் புதுமையான கண்டுபிடிப்புகளுக்கு செயல்வடிவம் கொடுக்கும் விழைவிற்கும் சாட்சியாக இருப்பதோடு கடந்தகாலத்துக்கும் எதிர்காலத்துக்கும் இணைப்பாக இருக்கிறது என்றால் மிகையில்லை.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. மணலில் இருந்து கண்ணாடியா, கண்ணாடியில் இருந்து மணலா - கார்குழலி
 2. குவாதமாலாவின் வண்ணமலர்க் கோலங்கள் - கார்குழலி
 3. ஜௌமௌ சூப்–விடுதலைச் சின்னமான எளியவர்களின் உணவு - கார்குழலி
 4. நாம் வாழும் காலம் – 18 : பாலைவனக் கப்பலின் பிறப்பிடம் அமெரிக்கா - கார்குழலி
 5. நாம் வாழும் காலம் - 17 : ஹோண்டுராஸின் புதையுண்ட நகரம் - கார்குழலி
 6. நாம் வாழும் காலம்–16 : ஹாலோவீன்: மூதாதையர் வழிபாட்டில் துவங்கிய கொண்டாட்டம் - கார்குழலி 
 7. நாம் வாழும் காலம் - 15 :  வானில் பறக்கும் வெற்றி வீராங்கனைகள் - கார்குழலி
 8. கீஸா: தோண்டி எடுக்கப்பட்ட சூரியக் கப்பல் - கார்குழலி 
 9. வானவில் : வானில் ஒரு தீபாவளி…. - கார்குழலி
 10. மரங்கள் பேசும் மவுன மொழி : கார்குழலி
 11. நிலவுப் பயணத்தில் அமெரிக்கர்களை முந்திய ஆமைகள் : கார்குழலி
 12. மூளைக்கு வேலைதரும் குறுக்கெழுத்துப் புதிர்கள் : கார்குழலி 
 13. மனித ஆற்றலின் சான்றாகும் மாரத்தான் ஓட்டம் : கார்குழலி 
 14. உங்களுக்குச் சீழ்க்கையடிக்கத் தெரியுமா? : கார்குழலி 
 15. வெற்றிச் சின்னமாகும் எவரெஸ்ட் சிகரம் : கார்குழலி
 16. வெறும் விளையாட்டல்ல, வாழ்க்கையின் எதிரொளிப்பு : கார்குழலி
 17. மண்ணில் விளையும் நவமணிகள் : கார்குழலி 
 18. பழங்களின் அரசனின் பயணக் கதைகள் :  கார்குழலி             
 19. வீட்டில் வளரும் செல்லப்பிராணிகளும் வளரவேண்டிய உரிமையாளர்களும் : கார்குழலி 
 20. நாம் வாழும் காலம் : கார்குழலி