ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தாராம். அவருக்கு ஒன்று பெரிய எண்ணா இரண்டு பெரிய எண்ணா  என்று சந்தேகம் வந்ததாம். அவரது அமைச்சரவையில் இருந்த முக்கிய மந்திரியொருவரை அழைத்து சந்தேகத்தைக் கேட்டுள்ளார். மந்திரி ராஜாவைப் பார்த்து நீங்க எதைப் பெரிதுன்னு நினைக்கறீங்க என்று கேட்டுள்ளார். அதற்கு ராஜா ஒன்றுதான் என்று பதில் சொன்னார். உடனே மந்திரி கொஞ்சமும் யோசிக்காமல் அப்படின்னா ஒன்றுதான் பெரிய எண் என்று பதில் சொன்னாராம். அதிகாரத்தில் உள்ளவர்கள் சொன்னால் ஒன்று என்ன, பூஜ்யம் கூட பெரிய எண்தான். சமகாலத்துக்கு வருவோம். 714 பெரிய எண்ணா? 1611 பெரிய எண்ணா?  என்று கேள்வி கேட்டால் என்ன பதில் வரும்? அது அவர் பிஜேபி ஆதரவாளரா? இல்லையா என்பதைப் பொறுத்து பதில் வரும்.

கத்தோலிக்கர்கள் மற்றும் மரபு வழி திருச்சபையினரால் ஏற்கப்பட்ட விவிலியத்தில் ரபேல் (Raphael) என்ற  இறைத்தூதர் பற்றி சில குறிப்புகள் உள்ளன. ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 29 அன்று கத்தோலிக்க திருச்சபையில் ரபேலைக் கொண்டாடுகிறார்கள். வேறொரு யுகத்திலிருந்த இந்தக் கடவுளின் தூதுவர்தான் பல்லாயிரமாண்டுகள் பயணித்து வந்து இப்போது இந்திய அரசையே சர்ச்சைக்குள்ளாக்கியுள்ளார்.

ரபேல் ஊழல் என்றால் என்ன?

2012 ஆம் ஆண்டில் மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது பிரெஞ்சு நிறுவனமான தஸ்ஸால்ட் ஏவியேசன் நிறுவனத்திடமிருந்து 126 மத்தியரக பல்நோக்குப் போர் விமானங்கள் (MMRCA – Medium Multi-Role Combat Aircraft) வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் அப்போதைய மதிப்பு இந்திய மதிப்பில் 90,000 கோடி ரூபாய். ஒரு விமானத்தின் மதிப்பு இந்திய மதிப்பில் சுமார் 714 கோடி.

மோடி ஆட்சிக்கு வந்தபிறகு 2015இல் மன்மோகன்சிங் செய்திருந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டுப் புது ஒப்பந்தமொன்றைச் செய்கிறார். புதிய ஒப்பந்தப்படி வெறும் 36 விமானங்களை மட்டும் 58 ஆயிரம் கோடிக்கு வாங்குவதாகப் பேசிமுடிக்கிறார். இதன்படி புது விலை ஒரு விமானத்துக்கு 1611 கோடி ரூபாய்.  இப்போது புரிந்திருக்கும். 714 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு விமானத்தைக் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு விலைக்கும் அதிகமாக வாங்குகிறார்கள். இதுதான் ரபேல் விமான ஊழல்.

 

 

எதற்குப் போர் விமானங்களை வெளிநாட்டிலிருந்து வாங்க வேண்டும்?

நீண்டநாட்களாகவே  இந்திய ராணுவத்தில் போர் விமானங்களின் பற்றாக்குறை இருந்தது.  இந்தியா ரஷ்யாவிடமிருந்து 1996இல் சுகோய் விமானம் வாங்கிய பிறகு எந்தப் போர் விமானங்களும் வாங்கப்படவில்லை. உள்நாட்டிலேயே போர் விமானம் தயாரிப்பதென்று முடிவெடுக்கப்பட்டு 2001ஆம் ஆண்டு  தேஜஸ் எனப்படும் இலகு ரகப் போர் விமானங்கள் தயாரிக்கப்பட்டு வெற்றிகரமாகப் பரிசோதிக்கவும் பட்டது. ஆனால் சில காரணங்களால் விமான உற்பத்தியில் தாமதமாகி 2016இல்தான் தேஜஸ் விமானங்கள் இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டன. பிறகு உள்நாட்டில் தயாரிப்பதில் உள்ள தொழில்நுட்ப சவால்களை மனதில்கொண்டே பிரான்ஸிலிருந்து விமானங்கள் வாங்க முடிவெடுக்கப்பட்டது. ஆக, வெளிநாட்டிலிருந்து தொழில்நுட்பத்தைப் பெற்றாக வேண்டிய தேவையில்தான் ரபேல் ஒப்பந்தமே போடப்பட்டது.

பிரான்சு என்ற ஒரு நாட்டைத் தவிர, வேறெந்த நாட்டு விமானப்படைகளும் ரபேல் விமானங்களை சீந்தியதில்லை. காரணம், ரபேல் விமானங்கள் மீதுள்ள நம்பகத்தன்மை.  இந்த ஒப்பந்தம் உருவான மன்மோகன்சிங் காலத்திலேயே பாதுகாப்புத்துறை வல்லுநர்கள் பலர் இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக விமர்சனக் குரல்களை எழுப்பினார்கள்.  நியாயமாக மோடி ஆட்சிக்கு வந்தபிறகு இந்த ஒப்பந்தந்தை ரத்துசெய்துவிட்டு வேறு நல்ல விமானங்களை அல்லது உள்நாட்டிலேயே நல்ல விமானங்களைத் தயாரிக்கும் திட்டத்தில் இறங்கியிருக்கலாம். பிஜேபியினருக்குத்தான் மேக் இன் இந்தியா என்பது  உயிர் முழக்கமாயிற்றே. எதற்கு ஒரு பொருளை இரண்டுமடங்கு விலையில் அந்நிய நாட்டிடமிருந்து வாங்க வேண்டும்?

 

 

மன்மோகன்சிங் காலத்தில் கையெழுத்தான ரபேல் ஒப்பந்தத்தில் உள்ள விதிகளைப் பார்க்கலாம். அந்த ஒப்பந்தத்தின் மூன்று முக்கியமான விதிகள்:

  1. மொத்தம் 126 விமானங்கள். அதில் 18 விமானங்கள் பறப்பதற்குத் தயார் நிலையில் தரப்பட வேண்டும். மிச்சம் 108 விமானங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும். இதற்கான தொழில்நுட்பத்தையும் தேவையான எல்லா உதவிகளையும் பிரான்சின் தஸ்ஸோ நிறுவனம் வழங்கவேண்டும். தஸ்ஸோ உதவியுடன் இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஹெச்ஏஎல் (ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட்) விமானங்களை உற்பத்தி செய்யும்.
  2. இந்தியாவின் பொதுத்துறை ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்களுக்கு விமானத் தொழில்நுட்பங்களை மாற்றித் தருவது.
  3. தஸ்ஸால்ட் ஏவியேசன் நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தம் மூலம் கிடைக்கும் மொத்த லாபத்தில் ஐம்பது சதவீதத்தை இந்தியாவில் முதலீடு செய்வது.

புதிய ஒப்பந்தப்படி

இந்திய நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் தயாரிக்கும் விமானங்களில் ஏதேனும் கோளாறுகளோ, விபத்துகளோ ஏற்பட்டால் அதற்குத் தஸ்ஸால்ட் நிறுவனம் பொறுப்பேற்றுக்கொள்ளாது. அதாவது எல்லா ரபேல் விமானங்களையும் நாங்களேதான் தயாரித்து தருவோம். இந்தியாவில் தயாரிக்கமுடியாது என்று தஸ்ஸால்ட் சொல்கிறது

வெறும் முப்பத்தாறு விமானங்களை மட்டுமே தயாரிப்போம் (காசு அதிகம் கொடுத்தால் அதிக விமானங்கள் கிடைக்கும்).

லாபத்தை எல்லாம் இந்தியாவில் முதலீடு செய்யமாட்டோம்.

ரபேல் விவகாரத்தைப் பொறுத்தவரை ஊழலே நடக்கவில்லை என்று ஒரு பிரிவினர் அடித்துச்சொல்கிறார்கள். இவர்களை விட்டுவிடலாம். எவ்வளவு புள்ளிவிபரங்கள் தந்தாலும் ஒருவேளை நாளை இந்த ஊழல் நிரூபிக்கப்பட்டு தண்டனை கிடைத்தாலும் கூட இவர்கள் ஊழலே நடக்கவில்லை என்றுதான் சொல்வார்கள். இதெல்லாம் ஒரு ஊழலா என்றோ, இந்தக் குற்றச்சாட்டில் அவ்வளவாக ஆதாரங்கள் இல்லையே என்று சொல்பவர்களைப் பார்த்துதான் ரபேல் விவகாரம் பற்றி விரிவாகப் பேசவேண்டியுள்ளது.   விலைபோகாத மாட்டை இரண்டுமடங்கு விலைக்கு அதுவும் பிரான்ஸ் அரசு சொல்வதற்கு எல்லாம் தலையாட்டிக்கொண்டு வாங்கிவந்ததில் இருந்து தெரியவில்லை? யாருக்கு இதில் அதிக லாபமென்று. சரி, பிஜேபி கட்சியைச் சார்ந்தவர்கள்தான் இதில் லஞ்சம் வாங்கினார்கள் என்பதற்கு ஆதாரம் உள்ளதா? முதலில் இந்த ஊழலில் ஆதாயமடைந்தவர்கள்  யாரென்று பார்க்கலாம்.

மன்மோகன்சிங் ஆட்சியில்  போடப்பட்ட ஒப்பந்தப்படி இந்தியப் பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோனாடிக்சுடன் பிரான்ஸ் நிறுவனமான தஸ்ஸால்ட் நிறுவனமும் இணைந்து விமானங்கள் தயாரிப்பதாக முடிவானது.  ஆனால்  மோடி போட்ட ஒப்பந்தப்படி ரிலையன்ஸ் நிறுவனமும், தஸ்ஸால்ட் நிறுவனமும் இணைந்து விமானங்கள் தயாரிப்பதாக முடிவானது.

ரிலையன்சுக்கும் போர்விமானங்களுக்கும் என்ன தொடர்பு?  ஊரில் சோப்பு சீப்பு விற்கும் நிறுவனங்கள் எல்லாம் நானும் விமானத்தை தயாரித்து தருகிறேன் என்று வந்தால் இந்த அதிர்ஷ்டம் கிடைக்குமா என்று கேட்கலாம். அந்த பாக்கியம் ரிலையன்சுக்கு மட்டும்தான் கிடைக்கும். அதுவும் நிறுவனம் ஆரம்பித்த வெறும் பத்தே நாட்களில். ஆமாம், ரபேல் ஒப்பந்தம் (மோடியின் புது ஒப்பந்தம்) கையெழுத்தாவதற்கு வெறும் பத்தே நாட்களுக்கு முன்புதான் ரிலையன்ஸ் டிபென்ஸ் என்ற நிறுவனம் அவசர அவசரமாக உருவாக்கப்பட்டது.  நிறுவனம் தொடங்கிப் பத்து நாட்கள் கழித்து நரேந்திர மோடி அம்பானியைக் கையோடு அழைத்துக்கொண்டு பிரான்ஸ் நாட்டிற்குப் பயணம் செய்கிறார். அதாவது ஊரில் அதுவரை சோப்பு, சீப்பு விற்றுக்கொண்டிருந்த ஒரு நிறுவனம் வெறும் பத்து நாட்கள் தொழில் அனுபவத்தில் நாங்களும் விமானம் தயாரித்து தருகிறோம் என்று இறங்குகிறது.

சரி. ரிலையன்ஸ்  நிறுவனம் இதில் என்ன முறைகேடு செய்தார்கள்? ஆதாரம் இருக்கா என்று கேட்கலாம். இதற்கு சில  நிகழ்வுகளை மட்டும் தேதிவாரியாகத் தருகிறேன்.

2015 பிப்ரவரி 19 அன்று தஸ்ஸால்ட் தலைமை நிர்வாகி எரிக் ட்ராப்பியர் பத்திரிகைகளுக்குத் தந்த பேட்டியில் ‘ரபேல் போர் விமானுங்களுக்கான விலை நிர்ணயம் குறித்து நாங்கள் மிகத் தெளிவாக இருக்கிறோம். முதல் ஒப்பந்தத்தில் (மன்மோகன்சிங் ஒப்பந்தம் ) என்ன விலை குறிப்பிடப்பட்டதோ அதுவேதான் இப்போதும் தொடர்கிறது’ என்று சொன்னார்.

2015 மார்ச் 23ஆம் தேதி எரிக் ட்ராப்பியர் “நாங்கள் இந்தியாவின் ஹெச்ஏஎல் நிறுவனத்துடன் பேசிவருகிறோம். பணிகள் வேகமாக நடக்கும்’’ என்று சொன்னார்.

2015 மார்ச் 28ஆம் தேதி ரிலையன்ஸ் டிபென்ஸ் என்ற நிறுவனம்  தொடங்கப்படுகிறது.

2015 ஏப்ரல் 10 ஆம் தேதி மோடி பிரான்ஸ் அதிபர் பிரான்கோய்ஸ் ஹோலன்டேவைச் சந்திக்கிறார்.

2016 ஜனவரி 24ஆம் தேதி ரிலையன்ஸ் எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் பிரான்ஸ் அதிபர் பிரான்கோய்ஸ் ஹோலன்டேவின் காதலி நடிகை ஜூலி கயத்தின் ரோக் இன்டெர்நேசனல் நிறுவனத்துடன் இணைந்து பிரெஞ்ச் படம் ஒன்றைத் தயாரிக்கப் போவதாக அறிவிப்பு வெளியிடுகிறது. திரைப்படத்தின் பெயர் Tout La-Haut.

2016 ஜனவரி 26 இந்தியாவும் ஃப்ரான்சும் 36 போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறது.

2017 அக்டோபர் 27 ஆம் தேதி ரபேல் போர் விமானங்கள் தயாரிக்கும் தஸ்ஸால்ட் ஏவியேசன் நிறுவனத்துடன் ரிலையன்ஸ் டிபன்ஸ் இணைந்து DRAL (Dassault Reliance Aerospace Ltd)  என்ற கூட்டணி கையெழுத்தாகிறது.

எட்டு வாரங்கள் கழித்து 2017 டிசம்பர் 20 ஆம் தேதி Tout La-Haut  என்ற திரைப்படம் (பின்னூட்டத்தில் சுட்டித் தருகிறேன்) வெளியாகிறது.

ரபேல் ஊழல் வெடித்த பின்னர் செப்டம்பர் 2018இல் பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பிரான்கோய்ஸ் ஹோலன்டே பகிரங்கமாகச் சொன்னது இது. ‘‘எங்களுக்கு ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்தினைத் தேர்வு செய்வதைத் தவிர வேறெந்த வாய்ப்புகளையும் இந்திய அரசு தரவில்லை.”

அதாவது  ரிலையன்ஸ் தவிர வேறெந்த நிறுவனமும் டெண்டர் எடுக்கவில்லை. டெண்டர் விட்டிருந்தால்தானே? பொதுவாக, அரசு ஏதேனும் ஒப்பந்தம் செய்தால் ஒப்பந்தத்தில் உள்ள சில முக்கியமான விஷயங்களை மாற்றக்கூடாது என்பது விதி. தயாரிக்கப்படும் பொருட்களின் விலை, பொருட்களின் எண்ணிக்கை, வேறு சில  முக்கியமான விஷயங்கள் மாறும்பட்சத்தில் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு வேறொரு புதிய ஒப்பந்தமொன்றை உருவாக்க வேண்டுமென்பது விதி. இந்த விதியைத்தான் முதலில் மீறினார்கள். புதிதாக எந்த  டெண்டரும் விடவில்லை. பழைய ஒப்பந்தத்தை மீறி எல்லா நாடுகளும் கைவிட்ட அடிமாட்டை இரண்டுமடங்கு விலை கொடுத்து வாங்க அனில் அம்பானியைக் கையோடு பிரான்சுக்கு அழைத்துச்செல்கிறார் என்றால் இதை என்னவென்று சொல்வது?

ரபேல் ஊழலில் பணம் கைமாறியுள்ளது என்பதற்கு இதுவரை எந்த ஆதாரமும் நிரூபிக்கப்படவில்லை என்ற வாதத்தை சிலர் முன்வைக்கிறார்கள். மோடி அவர்கள் அவரது நண்பர் அனில் அம்பானியைக் கையோடு அழைத்துச்சென்று  ரபேல் ஒப்பந்தத்தை வாங்கிக் கொடுத்துள்ளார் என்பது உண்மை என்றால் பதிலுக்கு அம்பானியிடம் ஏதாவது எதிர்பார்த்துதானே இருக்கமுடியும்? இப்போதெல்லாம் பணமாகத்தான் எந்த உதவிகளையும் செய்ய வேண்டுமென்றில்லை? பதிலுக்கு அம்பானி பிஜேபிக்கான தேர்தல் பிரச்சார வேலைகளைக் கூட செய்யக்கூடும். இல்லாவிட்டால் நாளை பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் எதிர் கூட்டணியிலிருந்து சிலரைப் பணம் கொடுத்து பிஜேபிக்கு ஆதரவாக இழுத்து வரும் வேலைகளை கூட செய்யலாம் இல்லையா?

ரபேல் ஊழலில்  வழக்கம்போல பிரதமர் மோடி வாய்திறந்து எங்கும் எந்தப் பதிலும் சொல்லாத நிலையில் பாதுகாப்புத்துறை அமைச்சர்  நிர்மலா சீதாராமன்தான் பதிலளித்தார். தொடக்கம் முதலே அவர் இந்த விஷயத்தில் பூசிமழுப்பும் வேலைகளைத்தான் செய்தார். தொடக்கத்தில் அவரது பதில்கள் அலட்சியமாகவும் பிறகு அச்சுறுத்துவதாகவும் பிறகு முன்னுக்குப் பின் முரணாகவும் இருந்தன. ரபேல் ஊழல் பற்றிப் பேசவே கூடாது. அது தேச நலன், பாதுகாப்பு விஷயத்தோடு தொடர்புடையது என்று கடுமையான அறிக்கைகளை விட்டு எதிர்கேள்வி எழுப்பியவர்களைத் திகைக்க வைத்தார். ரபேல் ஒப்பந்தத்தைக் கேள்விக்குள்ளாக்குவது தேசத்தின்  பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாக்குவதற்கு ஒப்பானது என்று சொல்லி கேள்வி கேட்பவர்களை தேச விரோதியாக சித்தரிக்க முயற்சி செய்தார்கள்.  இப்படியொரு திகைப்பூட்டும் வாதத்தை சுதந்திர இந்தியாவில்  இதுவரை எந்த அரசும் முன்வைத்ததில்லை. போபர்ஸ் ஊழலும் பாதுகாப்பு தொடர்புடையதுதான். அதை விட்டுவிட்டார்களா என்ன?  ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் 2ஜி அலைக்கற்றை சேவையை சந்தை விலையை விடக் குறைந்த விலைக்குத் தனக்கு வேண்டப்பட்ட நிறுவனத்துக்கு ஆ.ராசா கொடுத்தார் என்ற குற்றச்சாட்டு வெளிவந்ததும் இதை விசாரிக்க வேண்டியது சிபிஐதான் என்று மன்மோகன்சிங் மவுனமாக இருந்தார். ஆனால் சந்தை விலையை விடக் கூடுதலாக செலவழித்து ரபேல் விமானங்களை பிஜேபி வாங்கியது என்ற குற்றச்சாட்டு வெளிவந்ததும் சிபிஐ இயக்குநரையே மாற்றுவது வரை சற்று மூர்க்கமாகவே நடந்துக்கொண்டார்கள்.

புது ஒப்பந்தத்திலிருந்து  ஹெச்ஏஎல் நிறுவனம் வெளியேறியதற்கு முந்தைய மன்மோகன்சிங் அரசுதான் காரணம் என்று நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டினார். ஆனால் 2015  மார்ச் அன்று  நடந்த  பத்திரிகையாளர் சந்திப்பின்போது தஸ்ஸால்ட் ஏவியேசன் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி எரிக் ட்ராப்பியர், “நாங்கள் இந்தியாவின் ஹெச்ஏஎல் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம். இனி இந்த ஒப்பந்தம் தொடர்பான பணிகள் வேகமாக நடக்கும் என்று நம்புகிறேன்’’ என்று சொன்னார்.  ஆனால் அந்த அறிவிப்புக்குப் பிறகுதான் அம்பானி புது நிறுவனம் தொடங்க அவருக்கு சாதகமாக ரபேல் ஒப்பந்தந்தை மாற்றுகிறார்கள். இதுபற்றிக் கேள்வி எழுப்ப, நிர்மலா சீதாராமன் வழக்கம்போல கேள்வி கேட்டவர்களைப் பார்த்து தேசத்துரோகிகள் என்று சொன்னார்.

எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய பிறகு இது மெல்ல மெல்ல மக்கள் மத்தியில் கவனிப்பை பெறுகிறது என்று தெரிந்ததும் பிஜேபியினர் தங்கள் மூர்க்கத்தனத்தைக் கைவிட்டு மறுப்பறிக்கை, குழப்பமூட்டும் தகவல்கள் என்று பூசிமெழுகும் வேலையில் இறங்க ஆரம்பித்தார்கள்.

ஆனால் இதில் பாரிக்கரின் பதில்தான் விநோதமாக இருந்தது. இந்த ரபேல் ஊழல்  நடந்த போது பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தவர் பிஜேபியைச் சேர்ந்த மனோகர் பாரிக்கர். அவரிடம் விசாரித்தபோது ரபேல் ஒப்பந்தம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. பிரதமர் என்னிடம் எதுவும் கலந்தாலோசிக்கவில்லை என்று அதிரடியாக  ஒரு குண்டைத் தூக்கிப்போட்டார். 13.04.2015 அன்று என்.டி.டி.வி.க்கு பாரிக்கர் அளித்த பேட்டியில்கூட “இது பிரதமர் மோடியின் தனிப்பட்ட முடிவு.  எனக்கும் அதற்கும் எந்த தொடர்புமில்லை. இது மோடியும் பிரான்ஸ் அதிபரும் சேர்ந்து எடுத்த முடிவு. எனவே நான் இதில் கருத்து சொல்ல எதுவுமில்லை’’ என்று சொல்லி ஒதுங்கிக்கொண்டார்.

மன்மோகன்சிங் ஆட்சியில் போடப்பட்ட பழைய ஒப்பந்தப்படி தயாரிக்கப்படவிருந்த விமானங்கள் அடிப்படை வசதிகள்  மட்டுமே கொண்டவை என்றும் ஆனால் தற்போது மோடியால் போடப்பட்ட ஒப்பந்தப்படி தயாரிக்கப்படும் விமானங்கள் நவீனரகங்கள்  என்றும் அவற்றில் கூடுதல் ஆயுதங்கள் பொருத்தும் வசதியிருப்பதால் விலையும் அதிகம் என்ற வாதத்தை முன்வைக்கிறார்கள். புதுரக  விமானத்தில் இருக்கும் மெட்டியார் (Meteor) ஏவுகணையின் சந்தை விலையே பதினான்கு கோடி (2.1 மில்லியன் அமெரிக்க டாலர் ரூபாய்.) அதே போல் HDMS (Helmet Mounted Display System) எனப்படும் ஹெல்மெட்டில் பொருத்தப்படும் கருவியின் (இஸ்ரேல் தயாரிப்பு) விலை சுமார் இரண்டே முக்கால் கோடி (0.4 மில்லியன் அமெரிக்க டாலர் ரூபாய். இப்படி ஒவ்வொரு கருவிகளின் விலையைக் கூட்டினால் கூட ஒரு விமானத்துக்கு எழுபது கோடி (பத்து மில்லியன் அமெரிக்க டாலர்) வரைதான் விலை அதிகரிக்கும். ஆனால் ஒரு விமானத்துக்கு 900 கோடி வரை விலையை உயர்த்திக்காட்டி ஒப்பந்தம் போட்டுள்ளார்கள். இதைக் கேள்வி கேட்டால் மீண்டும் சில விஷயங்களை  வெளியில் சொல்லமுடியாது. அதெல்லாம் தேசப்பாதுகாப்பு என்று சொல்லி வாயை அடைத்துவிடுகிறார்கள்.

சில போட்டோஷாப் விஞ்ஞானிகள், இதெல்லாம் மன்மோகன்சிங் காலத்தில் டாலர் விலைக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு குறைவாக இருந்தது. இப்போது டாலர் விலைக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு அதிகமாக இருக்கிறது. அதனால் விலை ஏறும் என்று வாதிடுகிறார்கள். போட்டோஷாப்  விஞ்ஞானிகள்  என்று சொல்வதற்குக் காரணம் இதுதான். இந்த ஒப்பந்தம் போடப்பட்டதே டாலர் மதிப்பில்தான். இந்திய ரூபாய் ஏறினாலும், இறங்கினாலும் அதனால் ஒப்பந்த மதிப்பு மாறப்போவதில்லை.

கடந்தாண்டு 2018இல் நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு இந்த முறைகேட்டை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு  பிஜேபி அரசிடம் விளக்கம் கோரியது. வழக்கை அவசர அவசரமாக விசாரித்துவிட்டு ரிலையன்ஸ் டிஃபன்ஸ் நிறுவனத்தை தேர்வுசெய்ததில் ஊழல்  நடந்ததற்கான ஆதாரங்கள் ஏதுமில்லை. ரபேல் விமான ஒப்பந்த நடவடிக்கை, விலை நிர்ணயம் ஆகிய விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடுவதற்கு உறுதியான காரணம் எதுவும் இல்லை என்று வழக்கைத் தள்ளுபடி செய்தது. வெறும் மூன்றே மாதத்தில் இந்த வழக்கின் தீர்ப்பு வெளியானது.

ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் அப்போதைய எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தை தொடர்ந்து 23 நாட்கள் இயங்கவிடாமல் முடக்கினார்கள். அந்தப் பொய்யான குற்றச்சாட்டை மீண்டும் மீண்டும் பிரச்சாரம் செய்து உலகெங்கும் கொண்டு சென்று வைரலாக்கினார்கள். 2017 டிசம்பர் 21 அன்று ஸ்பெக்ட்ரம் வழக்கு பொய்யான குற்றச்சாட்டு என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதாவது ஆறு வருடங்கள்  இந்த வழக்கை இழுத்துதான்  தீர்ப்பு சொன்னார்கள். இந்த ஆறுவருடங்களில் ஊடகங்கள் பிஜேபியின் ஊதுகுழலாக ஸ்பெக்ட்ரம் குற்றச்சாட்டின்  ஊதிப்பெருக்கப்பட்ட பொய்யான தகவல்களை  மக்கள் மனதில் பதிய வைக்கும் வேலைகளைத் தொடர்ந்து செய்துகொண்டே இருந்தனர்.  ஒருபக்கம் காங்கிரசைப் பலவீனமாக்கி, இன்னொரு பக்கம் பிஜேபியைப் பலப்படுத்தும் வேலைகளைச் செய்தார்கள்.

அண்மையில் இந்துவில் என்.ராம் ரபேல் ஊழல் பற்றிய ஒரு  கட்டுரை எழுதியுள்ளார். கட்டுரையின் இறுதியில்   போஃபர்ஸ் விவகாரத்தில் பத்திரிகைப் புலனாய்வுகள் கமிஷன் என்ற பெயரில் ஸ்விஸ் நாட்டு வங்கிகளில் பணம் செலுத்தப்பட்ட ஊழலை வெளிக்கொண்டு வந்ததுபோல், ரபேல் விவகாரத்தில் பணம் விளையாடியிருப்பதற்கான ஆதாரம் எதுவும் இதுவரை வெளிவரவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.  அதாவது போஃபர்ஸ் விவகாரத்தில் பத்திரிகைகள் புலனாய்வுகள் செய்தன. இப்போதுள்ள  பத்திரிகைகள் தங்கள் புலனாய்வுத் திறமையை இழந்துவிட்டன என்று சொல்கிறார்போலும்.

சில பொய்களை  மீண்டும் மீண்டும் பிரச்சாரம் செய்யும்போது அது உண்மை என்று நிரூபிக்கப்படும். ஆனால் பொய்களைக் காலம் இரக்கமில்லாமல் வரலாற்றின் பக்கங்களிலிருந்து களையெடுக்கும். கடந்த தேர்தலில் மோடி சிறுவயதில் டீக்கடை வைத்திருந்தார் என்று பொய்சொல்லி அனுதாபம் தேடினார்கள். அந்தப் பொய் இன்று சந்திக்கு வந்து சிரிக்கிறது. அதுபோல சைனா பேருந்து நிலையத்தை குஜராத் பேருந்துநிலையமென்று சொன்னார்கள். இன்று குஜராத்தே மோடியைப் பார்த்து சிரிக்கிறது. 175000 கோடி என்ற கவர்ச்சிகரமான பொய்க்கு இல்லாத வலிமை ரபேல் ஊழலுக்குக்  கிடைக்காத வகையில் ஊடகங்கள் கவனமாகத் தங்கள் பணிகளைச் செய்கின்றன.  ஆனால்  ஒரு பொருளை இரண்டு மடங்கு விலை கொடுத்து வாங்க வேண்டிய தேவை (அது ஒன்றும் அத்தியாவசியப் பொருள் இல்லையே) எழும்போதே அங்கே முறைகேடு நடந்துள்ளது என்பதை சாதாரண மக்கள்கூட புரிந்துகொள்வார்கள். அப்படி இரண்டு மடங்கு கொடுத்து வாங்கும் பொருளைத் தயாரிப்பவர்  பிரதமரின்  நண்பர் வேறு. ஆனால் 2ஜிக்கோ மற்ற ஊழல்களுக்கோ ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவத்தை ரபேல் ஊழலுக்குக் கொடுக்காமல் அல்லது ஏதாவது மழுப்பி சமாளித்து மென்று விழுங்குவதிலிருந்து தெரிந்துகொள்ளலாம், இவர்கள் எதை நிரூபிக்க விரும்புகிறார்கள் என்று. 1611ஐ விட 711 பெரிய எண் என்று எப்படியாவது நிரூபித்துவிடத் துடிக்கிறார்கள். மன்னராட்சியில் மன்னருக்கு ஆதரவாக மந்திரிகள் பொய் சொல்லலாம். ஊடகங்கள் பொய்சொல்லலாம்.  ஆனால் மக்கள் ஆட்டுமந்தைகள் இல்லையே.   ஆனால் ரபேல் விவகாரம் நாளுக்கு நாள் விஸ்வரூபமெடுத்து மோடி மீதிருந்த கறைபடியாத உத்தமர் என்ற புனிதபிம்ப முகமூடி உடைந்து தெருவில் கிடக்கிறது.  தெருவில் நடந்து போகிறவர்கள் அந்தக் காட்சியைப் பார்த்து நகைத்தபடி செல்கிறார்கள்.