இந்தியப் பாராளுமன்ற வரலாற்றில், மிக அசாதாரமாண அரசியல் சாசன சட்டத்திருத்தம் ஒன்று ஆறு நாட்களில் சட்ட வடிவம் பெற்றுவிட்டது. இந்திய அரசியல் சாசனத்தின்மீது தன்னை இருத்திக் கொண்டிருக்கும் சமூகநீதிக் கொள்கைகளின் அடிப்படைகளையே சிதைக்கும் நடவடிக்கையை மிக எளிமையாகச் செய்து முடித்திருக்கிறது சங்பரிவார் அரசு. எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி தொடுக்கப்பட்ட “சர்ஜிக்கல் தாக்குதலில்” நிலைகுலைந்து கிடக்கிறது இட ஒதுக்கீட்டுக் கொள்கையின் எதிர்காலம். ஜனவரி 6 ஆம் தேதி மோடி அரசின் அமைச்சரவை ஒப்புதலோடு துவங்கி, 7 ஆம் தேதி மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு, அடுத்த நாள், அதாவது பாராளுமன்றத்தின் கடைசி வேலை நாளான 8 ஆம் தேதி அதன் அறுதிப் பெரும்பான்மை ஆதரவோடு ஏற்றுக் கொள்ளப்பட்டது., அதற்கடுத்த நாளான 9 ஆம் தேதி மேலவை ஒரு நாள் நீட்டிக்கப்பட்டு அங்கும் அதேவிதமாக ஏகோபித்த ஆதரவோடு அங்கீகரிக்கப்பட்டது. அத்தோடு நிற்கவில்லை வேகம். ஜனவரி 12 இல் இந்திய ஜனாதிபதியின் முத்திரையும் பதிக்கப்பட்டு அது சட்டமாகியது. அதாவது 6 ஆம் தேதி துவங்கி 12 ஆம் தேதி சட்டமாகி சாதனை படைத்தது, மாதம் 66 ஆயிரம் ரூபாய் வரை வருமானமுடைய உயர்சாதி ஏழைகளுக்கான 10% இட ஒதுக்கீடு சட்டம். இவ்வளவு விரைவாக சட்டத் திருத்தமொன்று சட்டமானது இதுவே முதல் முறை.
அவசரசட்டம் போடும் கதியில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது மட்டுமன்று, பிப்ரவரி முதல் நாளிலிருந்து அரசு வேலை வாய்ப்பு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளிலும் இந்தப் பத்து சதவீத ஒதுக்கீடு அமலாக்கப்பட இருக்கிறது. வரும் கல்வியாண்டிலிருந்து அனைத்துக் கல்வி நிறுவனங்களின் மாணவர் அனுமதியிலும் இந்த ஒதுக்கீடு நடைமுறைக்கு வருகிறது. இந்த இரண்டு நடவடிக்கைக்கான ஆணைகள் வழங்கப்பட்டு விட்டன. 2019 பாராளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து, சங்பரிவார் அரசின், இந்த நடவடிக்கை என்பது சரிதான். ஆனால் திராவிடக் கட்சிகளான திமுக, அஇஅதிமுக தவிர ஒருவரும் முணுமுணுப்பாகக்கூட எதிர்க்கவில்லை என்பதை எப்படிப் புரிந்து கொள்வது. வட மாநிலங்களின் இருபது முதல் முப்பது விழுக்காடு உயர்சாதி என்பவரது வாக்குகள் அனைத்து தரப்பிற்கும் முக்கியம் என்பது மட்டுமே காரணமென்றால், இதனால் பாதிப்படையப் போகும், எஸ்சி / எஸ்டி மற்றும் இதர பிறபடுத்தப்பட்டோர் தொகுதியான 75% வாக்கு வங்கி இல்லையா? அவர்கள் இதனை சமூகநீதிக்கெதிரான, தங்களுக்கெதிரான நடவடிக்கையாகக் கருத மாட்டார்களா? ஆம், வடமாநிலங்களின் இதர பிற்படுத்தப்பட்டோர் அரசியல் நடத்தும் கட்சிகளும், தலித் கட்சிகளும் இந்த நடவடிக்கையை வரவேற்று வாழ்த்தியிருப்பதொன்றே அவர்கள் அப்படிக் கருதவில்லை என்பதை நிரூபிக்கிறது. அதாவது இந்தப் பத்துசத ஒதுக்கீடு பிற ஒதுக்கீடுகளைப் பாதிக்காது என்ற வாதத்தை அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். ஏன் இப்படி? அப்படியானால் நாம் ஏன் இதற்கெதிராகப் பேசுகிறோம். அதிலும் திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற ஆண்ட, ஆளப்போகிற கட்சி ஏன் இதற்கெதிராக வழக்கொன்றைத் தொடுக்க வேண்டும். அதனால்தான் இந்தியாவிற்கு சமூகநீதி என்னவென்றே தெரியாது என்கிறேன். சமூகநீதியின் தத்துவ அடிப்படைகள் அவர்களுக்கு ஒருபோதும் புரிவதில்லை. ராம் லல்லாவையும், அயோத்தி மந்திரையும் வைத்துக் குரங்காட்டம் காட்டும் இந்துத்துவ அரசியலை தேசியக்கட்சிகள் எதிர்கொள்ள முடியாமல் மயங்கிச் சாய்வது இந்தப் புள்ளியில்தான். ஆரிய, வேத பார்ப்பனீய அடிமைச் சங்கிலியை அறுத்தெறியும் கருத்தியல்களை அவர்களில் பாதிக்கப்பட்டோருக்கு எடுத்துரைக்க யாரும் இல்லை. உருவான ஒன்றிரண்டு ஆர்ய சமாஜம் போன்றவையும், சனாதன அடிப்படையின் மீது நின்றே மத, சாதியச் சிடுக்குகளை எதிர்கொண்டன என்பதே விபரீதம். விளைவு, மீண்டும் சனாதன அடிப்படைவாதிகளாவதைத் தவிர்க்க முடியவில்லை.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் சமூகமாற்றத்திற்கான இயக்கங்கள் வேரூன்றி வளர்ந்தது மராட்டியத்திலும், தமிழ்நாட்டிலும் மட்டுமே. மராட்டியத்தில் ஜோதிராவ் பூலே அவர்களும், கோரக்பூர் அரசர், பரோடா அரசர் போன்றவர்களது இயக்கங்களைத் தொடர்ந்த அண்ணல் அம்பேத்கர் அவர்கள் வரை அந்த இயக்கம் எழுச்சியாகவே வளர்ந்தது. ஆனால் அதனை வெகுமக்கள் தளத்தில் இயங்கிய அரசியல் இயக்கமாக மாற்றிட இயலாமல் போனதால், மராட்டிய இயக்கம் மதவாத சிவசேனையாக மாறிய ஆபத்து நிகழ்ந்தது. அம்பேத்கர் இயக்கமும் தேர்தல்கள அரசியலில் தன்னை இருத்திக் கொள்ள இயலவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் பெரியார் சிந்தனைகளை, பேரறிஞர் அண்ணா அவர்கள் வெற்றிகரமான தேர்தல் அரசியல் கட்சியின் அடிப்படையாக்கியதன் விளைவாகவே, இன்றைய சமூகநீதிக்கெதிரான அநீதியை எதிர்த்துப் பாராளுமன்றம் முதல் நீதிமன்றம் வரை களம் காணும் ஒரே இயக்கமாகி விட்டிருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம்.
பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்களுக்கு அல்லது இந்த நாட்டின் வறியவர்களுக்கு பத்து சதவீத இட ஒதுக்கீடு எப்படி அநீதியாகும். அதிலும் இந்த ஒதுக்கீடு என்பது ஏற்கனவே இருக்கும் இட ஒதுக்கீடுகளை எந்த வகையிலும் பாதிக்கப் போவதில்லை எனும்போது எப்படி அது சமூக அநீதியாகும். கேள்வி சரியானதுதான். இந்த ஒதுக்கீடு தொடர்பான கோரிகைகள் ஏற்கனவே இடைவிடாமல் எழுப்பப்பட்டதுதான். மண்டல் கமிஷன் தொடர்பில் வழக்கு நிலுவையில் இருக்கும்போதே, அந்தச் சூழலிலிருந்து தப்ப, வி.பி.சிங் அரசைத் தொடர்ந்த நரசிம்ம ராவ் அரசு இதே 10% ஒதுக்கீடை ஒரு அரசு ஆணை மூலம் உருவாக்கியது. அதனையும் மண்டல் தொடர்பான இந்திரா சஹானி வழக்கின் பகுதியாக்கி விசாரித்த உச்சநீதிமன்றம் அந்த ஒதுக்கீடு சட்டத்திற்குப் புறம்பானது. எனத் தீர்ப்பு வழங்கியது. அந்த மண்டல் வழக்கின் நுட்பமான வாதமொன்றிற்கு வழிவகை செய்தது இந்த ஒதுக்கீடு. அரசியல் சாசன விதி எண் 46 இன்படி மக்களிடையே பாகுபாட்டை உருவாக்கும் எந்த நடவடிக்கையும் அரசு செய்யக்கூடாது என்று வாதிடப்பட்டது. அரசியல் சாசன விதிகள் 15 மற்றும் 16இல் உருவாக்கப்பட்டிருக்கும் எஸ்.சி. / எஸ்.டி., இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கான ஒதுக்கீடு இந்த ‘ பாகுபடுத்தல்’ (Discrimination) என்ற பொருளில் வராது. ஏனெனில் இந்த ஒதுக்கீடே வரலாற்றுரீதியான பாகுபடுத்தலினால் ஒடுக்கப்பட்டோருக்கும், பிற்படுத்தப்பட்டவர்க்கும், அந்த பாகுபடுத்தலிலிருந்து மீள்வதற்காக வழங்கப்பட்ட முன்னுரிமைதான் என தீர்ப்பளித்தது.
ஒரு நிமிடம் மண்டல் அறிக்கை சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அரசால் 1989 ஆம் ஆண்டு ஏற்றுக் கொள்ளப்பட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டபோது நடந்ததை நினைத்துப் பாருங்கள். இந்தியாவின் வடமாநிலங்கள் பற்றி எரிந்தன. மூன்று மாதங்கள் தொடர்ந்தன கலவரங்கள். உச்சநீதிமன்ற பார் கவுன்சில் ஒரு நிமிடம் தாமதியாமல் அந்த ஆணையை எதிர்த்து வழக்கொன்றைத் தொடுத்தது. பார் கவுன்சில் என்ன இந்துமகா சபாவின் சட்டக்குழுவா, அது அரசு அங்கீகாரம் பெற்ற வழக்கறிஞர்கள் சங்கம். அதன் உறுப்பினர்களில் அனைத்துத் தரப்பினரும் உண்டு. ஆனால் உயர்சாதிக்காரர்களால் நிறைந்திருந்ததால் அது இந்த வழக்கைத் தன் சார்பாகத் தொடுத்தது. அதன் பின்னர் இந்திரா சஹானி என்பவரும் வழக்குத் தொடுத்தார். அதனால் அது இந்திரா சஹானி எதிர் இந்திய ஒன்றியம் என்றானது. இந்திய நீதி எப்போதும் பார்ப்பன/ பனியா நீதிதான். சட்டத்தை உருவாக்குவதும், நிர்வகிப்பதும், நீதி வழங்குவதும் மனுநீதி காலம் தொட்டு அவர்களது நியமம். இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27% மண்டல் கமிஷன் பரிந்துரை ஒதுக்கீட்டை உச்சநீதிமன்ற ஐவர் அமர்வு வழக்கை ஏற்று அதனை செயல்முறைப்படுத்த தடை ஒன்றை விதித்து விட்டு, ஒன்பது நீதிபதிகளின் அரசியல் சாசன அமர்வுக்கு அனுப்பியது. நீண்ட வழக்காடலுக்குப் பிறகு 27% ஒதுக்கீடை அனுமதித்து 6-3 என்ற விகித்தாசாரத்தில் தீர்ப்பை வழங்கியது. அதாவது மண்டல் பரிந்துரையை அரசு ஏற்று இரண்டரை ஆண்டுகள் கழிந்த பின்னரே அந்த ஒதுக்கீடு சட்ட அங்கீகாரம் பெற்றது.
மாறாக, இந்தப் பத்து சதவித ஒதுக்கீடு தொடர்பான வழக்குகள் இன்னும் உச்சநீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு விசாரணை தேதி கூட அறிவிக்கப்படவில்லை,ஆனால் ‘தடை’ விதிக்க மறுத்து விட்டதன் மூலம், பத்து சத ஒதுக்கீடு நடைமுறைக்கு வருவதற்கு வழிவகை செய்து விட்டிருக்கிறது. இனி என்ன ஆகும். அந்த ‘‘நீதிக்கே” வெளிச்சம்… பத்து சதவீத ஒதுக்கீடு சட்டரீதியான ஆய்வுக்குட்படுத்தப்பட்டால் அது தூக்கி வீசப்படும் என்பதே நிலவரம். அதனால்தான் இவ்வளவு துரிதம். சட்டம் செயல்வடிவம் பெற்று விட்டால், அந்த சட்ட வரையறைமீதான, விசாரணையின் வடிவம் மாறிவிடும். அதற்குள்ளாக லட்சக்கணக்கானவர்கள் பள்ளி, கல்லூரிகளில் ஒதுக்கீட்டில் சேர்ந்திருப்பார்கள். வேலைகளில் சில ஆயிரம் பேர் சேர்ந்து விட்டிருப்பார்கள். விசாரணையின் பகுதியாக இவையும் சேர்ந்து விடும். தீர்ப்பின் முடிவு இவர்களுக்கு என்ன நீதி வழங்கப் போகிறது என்ற தர்மாவேசம் நீதிமன்றத்தின் முன் நிற்கும்..விசாரணைக்கே எடுத்துக் கொள்ளப்படாத வழக்கில் தடையை எப்படி எதிர்பார்க்க முடியும். அதனால்தான் திராவிட முன்னேற்றக் கழகம், அந்தப்பணியை முடுக்கி விட மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தொடர்ந்துள்ளது. உயர்நீதிமன்றமும் வழக்கை ஏற்றுக் கொண்டு ஒன்றிய அரசிற்குப் பதிலளிக்க தாக்கீது அனுப்பியுள்ளது. ஆனாலும் இது பெரும் நம்பிக்கைக்குரிய நகர்வு இல்லை. இந்துத்துவ பாசிச மோடி அரசால் முற்றிலுமாக வீழ்த்தப்பட்ட அரசின் தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்புகளில் உச்சநீதிமன்றமும் இணைந்து பலகாலம் ஆகிவிட்டது. அநேகமாக, இந்த ஒதுக்கீடு தொடர்பான அனைத்து வழக்குகளைத் தானே விசாரிப்பதாக மெட்ராஸ் உயர்நீதிமன்ற வழக்கையும் தன்னிடம் தருவித்துக் கொண்டு, தடையும் வழங்காமல் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு அனுப்பும் சாத்தியமே மிக அதிகம். அதாவது இந்தப் பத்து சதவீத ஒதுக்கீடே இந்துத்துவ வர்ணபேத மனுநீதியை ஆத்மார்த்தமாக ஏற்றுக் கொள்ளும், நம்பும், அந்த தர்மநீதியின் அடிப்படையில் இந்துத்துவ அரசொன்றை உருவாக்க முனைந்து நிற்கும் சங்பரிவார் அரசின் சதிச்செயலே.
இந்தியாவின் தலைசிறந்த சமூக சிந்தனையாளர்களில் முதன்மையானவரான பேரா.பார்த்தா சாட்டர்ஜி இந்தப் பத்து சதவீத ஒதுக்கீட்டு சட்டத்தை “10% இடஒதுக்கீடு அரசியல் சாசனத்தின் மீதான இழிவான/ தரக்குறைவான மோசடி’’ என்கிறார் (The 10% Reservation Is a Cynical Fraud on the Constitution). ஒரு மாபெரும் சிந்தனையாளர் இவ்வளவு கடுமையாக சாடும் வகையிலானதுதான் இந்த சட்டம். நெருக்கடி நிலை பிரகடனத்திற்கு பிறகு கொண்டு வரப்பட்டுள்ள மிக மோசமான, அயோக்கியத்தனமான சட்ட வரையறை. அவரது வாதங்களின் சாரம்சமான விடயங்களை இங்கே பார்ப்போம்.
இந்த சட்டம் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்களுக்கான ஒதுக்கீடு எனப்படுகிறது. ஏற்கனவே பொருளாதார ரீதியான பின்தங்கியநிலை இடஒதுக்கீட்டிற்கான ஒற்றை அளவுகோலாக இருக்க முடியாது என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. எஸ்சி / எஸ்டி / பிற்படுத்தப்பட்டோரைத் தீர்மானிக்க அவர்களது சமூகநிலை, கல்வியறிவு சதவீதம், பொருளாதார நிலை ஆகியவற்றைக் கணக்கில் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது. எனவே அப்படியே பத்து சதவீத ஒதுக்கீடு பொருளாதார அடிப்படையில் வழங்குவதானாலும், அதற்கு சாதியக் குழுமங்களை அடையாளம் குறிப்பிட்டு வழங்க முன் வரலாம். அதையும் அந்தந்தக் குறிபிட்ட சாதிகளின் பொருளாதார நிலை குறித்த அறிக்கைகளைக் கொண்டே தீர்மானிக்க வேண்டும். அந்த சாதியக் குழுமத்துள் பாரதூரமான பொருளாதார வேறுபாடுகள் இருந்தால், கூடுதலாக சமூகரீதியான தாழ்வுகள் ஏதும் இல்லை எனில் அந்த ஒட்டுமொத்த குழுமத்திற்கும் ஒதுக்கீடு எப்படி வழங்க முடியும்?
இங்கே இன்னொரு குழப்பம்.. அரசியல் சாசன விதி எண் 15 மற்றும் 16இல் உள்ள ஒதுக்கீடுகள் ‘குழுமங்களுக்கானது’ மட்டுமே. அதில் எஸ்சி / எஸ்டி மற்றும் இதர பிற்படுததப்பட்டோர் அல்லாதோர் அனைவரிலும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியோருக்கு என ஒதுக்கீடு வழங்குவது வாய்ப்பில்லை. ஒட்டுமொத்த தொகுதியினரில் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியோருக்கு மட்டுமென வழங்குவது சமூகநீதிக் கொள்கையின் அடிப்படையையே அழிப்பதாகும். வரலாற்று ரீதியான காரணங்களால் சமூக உரிமை, கல்வி போன்றவை மறுக்கப்பட்ட சாதியக் குழுமங்களுக்கான ஒதுக்கீடை, பொதுவில் வறியவர்களான தனிநபர்களுக்கும் என்றாக்குவது அயோக்கியத்தனம்.
இப்படிப் பொதுத் தொகுதியினரில் வறியவர்களுக்கான வருமான வரையறையை, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான அளவிலேயே வைப்பது எப்படி சரி. அதாவது உயர்சாதிகள் என்போருக்கும், பிற்படுத்தப்பட்டோருக்குமான பொருளாதார வளத்தை நிர்ணயிக்கும் அளவுகோல் ஆண்டு வருமானம் எட்டு லட்ச ரூபாய் என்பது எப்படியான நீதி. மண்டல் ஒதுக்கீடும், பொதுத் தொகுதி ஒதுக்கீடும் சமநிலையில் ஆக்கப்பட்டு விட்டது.
தேர்தல் காலத்தைக் குறி வைத்துக் கொண்டு வரப்பட்ட, எதிர்பாராத நிலையில் இந்தியா மீது திணிக்கப்பட்டுள்ள ஒதுக்கீட்டு சட்டம், பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் எந்தவிதமான விவாதங்களுமின்றி ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. சமூகநீதிக் கொள்கையை ஏற்க பாராளுமன்றத்தில் நிகழ்ந்த விவாதங்கள் இன்றும் நமக்குப் பல முன்மாதிரிகளை வழங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால் இந்தச் சட்டத்தைப் பொறுத்தவரை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவை வாய் மூடி மௌனியாய் ஒரு கேவலமான சட்டத்தை ஏற்றுக் கொண்டு, அதனைப் பரிசீலித்து ஏற்பதற்கான முழுப் பொறுப்பையும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத உச்சநீதிமன்ற நீதிபதிகளிடம் விட்டுவிட்டது மக்களாட்சியின் மிக மோசமான தோல்வியின் அடையாளம்.
பேரா. பார்த்தா சாட்டர்ஜி போன்றவர்களால் இவ்வளவு கடுமையாக எதிர்க்கப்படும் வகையிலான சட்ட வரையறை இன்னும் சில அம்சங்களைப் பார்த்தால், அவர் இந்த சட்டத்தினை ‘‘இழி மோசடி’’ என்றதன் அசலான பொருள் விளங்கும்..கீழே உள்ளவை அவரது கருத்துகள் அல்ல.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ‘‘அடிப்படைகளை’’ (Basic Structure)
பாராளுமன்ற சட்டத் திருத்தங்களால் மாற்றியமைக்க முடியாது. அந்த வகையில் இட ஒதுக்கீட்டிற்கான அடிப்படை ‘‘பிற்படுத்தப்பட்ட நிலை’’ (Backwardness). இந்த வரையறை எஸ்சி / எஸ்டி மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு அவற்றின் வரலாற்று ரீதியான சமூக, கல்விசார் பிற்பட்ட தன்மை அதற்கான காரணமாகிறது. ஆனால் ‘‘பொருளாதார ரீதியான பிற்பட்ட நிலை’’ இதற்கான காரணமாக முடியாது. இந்தப் பிற்படுத்தப்பட்ட தன்மை என்ற தளத்தில் பொருளாதாரப் பின்னடைவைக் கொணர்ந்துள்ளது மகா அயோக்கியத்தனம்.
அடுத்த சதிச்செயல் எஸ்சி/ எஸ்டி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் வேலைவாய்ப்பு தொடர்பான ஒதுக்கீட்டில், அவர்கள் மேற்படி பதவிகளில் ‘‘தேவையான அளவிற்கு இடம்பெறவில்லை’’ என்பதைக் கருத வேண்டிய ஒரு தகுதிப்பாடாக விதி எண் 16 நிர்ணயிக்கிறது. ஆனால் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியோர் ஒதுக்கீட்டில் இந்த தகுதிப்பாடு குறித்த விதியே இல்லை. இதுதான் சதி. இந்தப் பொருளாதார ரீதியான பின்தங்கியோர் சமூகத் தொகுப்பு அந்தப் பதவிகளில் அளவுக்கு மிஞ்சிய எண்ணிக்கையில் இருப்பார்கள் என்பது எல்லோரும் அறிந்த செய்தி. இந்த விதியை வைத்தால், இந்த ஒதுக்கீடு முற்றிலுமாகச் செயல்படுத்த இயலாமல் போய் விடுமென்பது தெரிந்து நடத்தப்பட்ட சதி.
இந்த விதிதான் ஆக மோசமான நடவடிக்கை. ஒன்றிய அரசு தொடர்பான ஒதுக்கீடுகளுக்கான உச்சபட்ச வருவாய் அளவை ஆண்டுக்கு எட்டு லட்சம் என பிற்படுத்தப்பட்டோர் வருட வருவாய் அளவிலேயே நிர்ணயித்துள்ளது மோடி அரசு. ஆனால் மாநில அரசுகளில் ஒதுக்கீடு பெற எந்த வருவாய் அளவையும் நிர்ணயிக்கவில்லை. அதனை மாநில அரசுகளின் அதிகாரத்திற்கே விட்டு விட்டது. இந்த இடத்திலுள்ள மகா பெரிய சிக்கல் என்னவெனில், தற்போது தமிழ்நாட்டில் உள்ளது போல், வருவாய் உச்சவரம்பு இன்றி ஒதுக்கீடு வழங்கப்பட்டால் , பொதுத் தொகுதியில் உள்ள அனைவரும் ஒதுக்கீடு பெறும் தகுதி பெற்று விடுகின்றனர். அதாவது இந்த முறை மாநிலங்களில் அமலானால், குறிப்பாக தமிழ்நாட்டில் அமலானால் இங்குள்ள பத்து சதவீதத்திற்கும் குறைவான உயர்சாதியினர் எனப்படுவோர் நூறு சதவீத ஒதுக்கீடு பெறுவார்கள். அதேவேளையில் சமூக அநீதிக்குள்ளாகப் போவது பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் தொகுப்பே. மக்கள் தொகையில் 70%மாக இருப்போருக்கு 50% ஒதுக்கீடு, 10% பார்ப்பனர்கள் உள்ளிட்ட உயர்சாதிகளுக்கு நூறு சதவீத ஒதுக்கீடு. இப்போதாவது இந்த நடவடிக்கை ஏன் கடுமையாக எதிர்க்கப்பட வேண்டியது என்பதைப் புரிந்து கொண்டால் நலம். புரிந்து கொள்ளத் தவறினால், மறுத்தால் இட ஒதுக்கீடு எனும் சமூகநீதி அரசியல் வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்ந்துபடும்.
நூறு ஆண்டுகளுக்கும் மேலான தொடர் போராட்டங்களால், பலரின் தியாகங்களால், பெரியார் போன்றவர்களின் வாழ்நாள் பணியால் உருவான சமூகநீதிக் கொள்கை அதன் கடைசி மூச்சை விடும் தருணத்தை வந்தடைந்திருக்கிறது. இந்த வாதம் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்ட நிலையிலான வாதமாக இருக்கலாம். ஆனால் பயம் அசலானது. எனக்குத் தேவையில்லை என்ற நிலைப்பாட்டில் நிற்கும் தன்னல சுயமோகம் சமூக விரோதச் செயல்பாடு. தனக்கு இரண்டு கண்ணும் போனாலும் மாற்றானுக்கு ஒரு கண்ணாவது அழிந்துபட வேண்டுமெனும் இழிஅறம் பேசும் பிற்படுத்தப்பட்ட சமூகமனிதர்கள் மனிதகுல விரோதிகளே. இவர்கள் சமூகநீதியின் அடிப்படைப் புரிதலின்றி, அது அழிந்துபட வேண்டுமென எண்ணும் பார்ப்பனர் உள்ளிட்ட உயர்சாதியினரை விடக் கேவலமான இழிபிறவிகள்.
சமூகநீதிக் கோட்பாடு கடந்துவந்த பாதையும், பயனும் அறியாதவர்கள் பலர், சாதியப் பெருமிதம் கருதி பிதற்றித் திரிவது கண்கூடு. இவர்களில் பலர், சமூகநீதியால் பாதிப்படைந்ததாகக் கருதப்படுவோர் தொகுதியை விடக் கடுமையான எதிர்ப்புநிலை எடுப்பதைக் காணும்போது அயர்ச்சியே ஏற்படுகிறது. அண்ணல் அம்பேத்கரும், தந்தை பெரியாரும் தங்கள் வாழ்நாள் பணியாகச் செய்ததன் பலன் தங்களையும் ஏற்றப்படுத்தியதன் விடயம் புரியாமையின் விளைவே இது. சமூகநீதி ஏதோ வேலைவாய்ப்பு தொடர்பிலானது என்பது போன்ற எளிமையான புரிதல் பிழைகள் இன்னும் இங்கு மலிந்து கிடக்கவே செய்கிறது. 1928 ஆம் ஆண்டின் கம்யூனல் ஜீஓ என அழைக்கப்படும் பிரித்தானிய இந்திய அரசின் ஒதுக்கீடு அரசாணையோடு துவங்கியது இந்த அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான நடவடிக்கை. ஆனால் இந்திய சுதந்திரம் என்பது அசலானதும் அதன்மீதான முதலடி இந்திய மண்ணிலேயே தமிழ் மண்ணில்தான் விழுந்தது. ஏனெனில் காலங்காலமாகப் பார்ப்பனீயத்தோடு இடைவிடாத சமர்புரியும் மண் இதுதான் என்பதால். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பார்ப்பனீயத்தை எதிர்த்த “பாட்டன்களுக்கும்’’ சமூகநீதிதான் குறிக்கோள். ஆம், சமநீதி எனும் சமூகநீதி. சாதி இழிவெனும் பிணியிலிருந்து மீள்வதற்கான சமூகநீதி.
சுதந்திர இந்தியாவில் முதல் தாக்குதலை நிகழ்த்தியது, இந்திய அரசியலமைப்பினை உருவாக்கியவர்களில் ஒருவரான அல்லாடி கிருஷ்ணசாமி அவர்கள். அவர் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி அனுமதியில் மெட்ராஸ் ஸ்டேட் கம்யூனல் ஆணையால் செண்பகம் துரைராஜன் என்ற பார்ப்பனப் பெண்ணொருவருக்கு அனுமதி கிடைக்கவில்லை எனத் தொடர்ந்த வழக்கு அந்த ஆணையை வீழ்த்தியது. இத்தனைக்கும் அந்த கம்யூனல் ஆணை பார்ப்பனர்களுக்கு 14 இடங்களில் 2 இடமென ஒதுக்கீடு செய்திருந்தது. அதாவது பார்ப்பனருக்கு மட்டும் 7% என இடம் ஒதுக்கியிருந்தது. இந்திய உச்சநீதிமன்றமும் அதை ஏற்றது. இதில் வேடிக்கை, அந்தப் பெண் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு மனு செய்யவே இல்லை என்பது. எவ்வளவு நேர்மையான, அருமையான அரசியல் சாசன வடிவமைப்பாளர்கள். ஆனாலும் நீதி தன் கடமையைச் செய்து முடித்தது. விளைவு, பெரியாரும், அண்ணாவும் களமிறங்கிப் போராடினார்கள். காமராஜரின் ஆதரவும் இருந்ததால், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் சட்டத் திருத்தத்திற்கு வழிவகுத்தது. இட ஒதுக்கீட்டிற்கான சட்டம் 1952 ஆம் ஆண்டில் உருவானது.
“இந்தியாவின் வரலாற்றில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கான முன்னுரிமை திட்டம், அதன் நோக்கிலும், செயல்கள விரிவிலும் முன்மாதிரிகள் அற்றது’’ என்கிறார் மார்க் கேலண்டர் எனும் அமெரிக்க சமூகவியல் பேராசிரியர். “Competing Equalities’’ (University of California Press,Berkley Los Angeles London , 1984) எனும் நூல் இதுவரையான சமூகநீதி/ இட ஒதுக்கீட்டுக் கொள்கை குறித்த ஆய்வுரைகளில் மிகச் சிறந்ததான ஒன்று. அவரது விரிவான ஆய்வில் இந்திய இட ஒதுக்கீடு வரலாற்றை நீதிமன்றங்களின் நடவடிக்கை குறிப்புகள், அது தொடர்பான வழக்குகளின் வாதக்குறிப்புகள், நீதிமன்றங்களின் தீர்ப்புகளை வைத்து ஒரு தெளிவான பார்வையை முன்வைத்துள்ளார். அமெரிக்க மற்றும் இந்திய அரசுகளின் வரலாற்றுக் காரணிகளால் ஒடுக்கப்பட்ட கருப்பர் மற்றும் தாழ்த்தப்பட்ட,பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கான முன்னுரிமை திட்டங்களை விவாதிக்கிறார். அவற்றில் அமெரிக்கச் சூழலில் அந்த நடவடிக்கைகள் ‘நேர்மறை நடவடிக்கைகள்,’ (Affirmative action) அல்லது ‘தலைகீழ் பாகுபாடு’ (Reverse Discrimination) என அழைக்கப்படுவதையும், இந்திய அரசு இட ஒதுக்கீட்டுக் கொள்கை தொடர்பான நடவடிக்கைகளை, ‘முன்னுரிமைத் திட்டம்’ (Preferencial treatment), ‘சிறப்பு ஒதுக்கீடு’, (Special allocation) ‘சலுகைகள்’ (Concessions) போன்றவற்றை ஒப்பிட்டு ஆய்வு செய்து விட்டு அவர் சமீபகாலமாகப் பயன்பாட்டில் இருக்கும், ‘இழப்பீட்டு பாகுபாடு’ (Compensatory Discrimination) என்ற சொல்லைப் பொறுத்தமானது எனக் கூறுகிறார்.
அரசியல் சாசன விதி எண் 46 இல் கண்டுள்ள “பாகுபாடு இன்மை’’ (No Discrimination) என்ற விதியின் சட்ட வரையறையை எதிர் கொள்வதற்கான அடிப்படைகளைக் கொண்டுள்ளது இந்த ‘இழப்பீட்டு பாகுபாடு’. ஆம், இந்த அரசு நடவடிக்கைகளை குடிநபர்களில் பாகுபாடு என்ற வாதத்தை ஏற்கனவே பலகாலங்களாக நிகழ்ந்த பாகுபாட்டால், இன்றளவும் சமநிலை மறுக்கப்பட்டோர் சார்பான இழப்பீட்டு பாகுபாடு. சமநிலைக்கான நடவடிக்கையாக மட்டுமே கருதப்பட வேண்டும். இந்தப் பாகுபாடு நிலவும் ‘ பாகுபாட்டை’ நிரவுவதே அன்றி, அசலான பாகுபாடு அல்ல. இந்த ‘ இழப்பீட்டு பாகுபாட்டின்’ அடிப்படைகளை அழித்தொழிப்பதே இப்போதைய ‘பொருளாதாரப் பின்தங்கிய நிலை’ என்ற கோட்பாட்டு ரீதியான ஒதுக்கீடு. வரலாற்றுப் பிழைக்கான இழப்பீடு என்பதன் தார்மீகத்தை சிதைக்கும் செயல்பாடு. இந்த “இழப்பீட்டுற்கு எதிர் பாகுபாடு’’ அரசியல் சாசன விதி எண் 46இல் முற்றிலும் மீறுவதாகவும் ஆகும். எப்படியானாலும் 50% ஒதுக்கீடு என்பதை 60% ஆக்கி விட்ட பின் அதை 70% க்கும் 80 க்கும் நகர்த்துவது சாத்தியமே. அப்படியானால் ஒதுக்கீட்டுக் கொள்கையின் அனைத்து விதமான முன்னுரிமைகளும் வலுவிழந்து போகும். சமூகநீதிக்கெதிரான இந்துத்துவ தேசியவாதக் கட்சிகள் முன் இரண்டு வழிகளே திறந்திருந்திருக்கும். ஒன்று, நூறு சதவீத ஒதுக்கீடு. அதாவது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, ஒவ்வொரு சாதிக்குமான ஒதுக்கீட்டை அந்தந்த சாதியின் எண்ணிக்கையின் விகிதாச்சாரத்தில் அமைப்பது. இதைப் போன்றதொரு சிக்கல் மானுடம் ஒருபோதும் கண்டிருக்கக் கூடாததாய் மாறி விடும். பல்லாயிரம் சாதிகளை, அதன் உட்பிரிவுகளைக் கணக்கெடுத்துப் பட்டியலிட்டு, ஒதுக்கீடு என்பது ஒருபோதும் சாத்தியமாகப் போவதில்லை. அதைவிட இந்துத்துவ அரசு சாதி இருப்பும்,சனாதனமும் தொடர அனுமதிக்குமே தவிர, அவற்றை முற்றிலுமாக சாதிகளாக இயங்க அனுமதிக்காது. அவர்களை இந்து எனும் அடையாளத் தொகுப்பில் அடைப்பதே அதன் நோக்கமும், லட்சியமும். எனவே அரசின் முன் மிஞ்சப் போவது முற்றிலுமான ஒதுக்கீட்டுத் திட்ட ஒழிப்பு என்பதே. இந்து பார்ப்பனீய / பனியா அரசு இதைச் செய்வதையே உடனடி நடவடிக்கை ஆக்கும். கொஞ்சம் உணர்ச்சிப்பூர்வமாக பேசுவதாகத் தோன்றும். ஆனால் சமூகநீதி என்பதன் அடிப்படையை அறியாத இந்துத்துவ சனாதன இந்தியா அதை நோக்கி மட்டுமே நகரும். மோடி தலைமையிலான சங்பரிவார் ஆட்சி 2019இல் விபத்தாகத் தொடர்ந்தால் 2024 ஆம் ஆண்டிற்குள்ளாகவே சமூகநீதிக் கொள்கை ஒழிப்பு நடந்தே தீரும். ஆனால் ஒன்று, இந்திய ஒன்றியத்தில் மக்களாட்சியே இருக்காது எனும்போது இந்த அக்கறையெல்லாம் அப்புறம்தான்.