சீப்பில் முகம் பார்த்துக்கொண்டே

கண்ணாடியால் தலைவாரிக் கொண்டேன்

வேலைக்கு நேரமாகிவிட்டது.

*

 

சாவுச் செய்தி வந்த காலையிலும்

கிளைகளில் நிதானமாக

சோம்பல் முறிக்கின்றன வண்ணத்துப் பூச்சிகள்

*

 

புத்தம் புதிய மூக்கணாங்கயிருடன்

கம்பீரமாய் நடைபோடுகின்றன

மாட்டுப் பொங்கல் மாடுகள்

*

 

புத்தாண்டுக் காலையில் குழந்தை

காய்ச்சலில் தூங்குகிறாள். இம்முறை

புத்தாண்டு ஒருநாள் தாமதமாகப் பிறக்கும்

*

 

என்னைப்பற்றித்

தெரிந்துகொள்ளத்தான் வேண்டுமா?

தெரிந்துகொள்ளுங்கள்

மரத்திலிருந்து உதிர்ந்த

இன்னும் தரைக்கு வராத இலை

*

 

நடந்துகொண்டே இருந்தால்

சேரவேண்டிய ஊர் வருமா

தெரியவில்லை

ஆனால் நிச்சயம் நிலவு வந்துவிடும்

*

 

தொலைந்த மாட்டை அந்தியின்

மலையடிவாரமெங்கும் தேடுகிறேன் எங்கோ

புல்வெளியில் மேய்கிறது அதன் மணியோசை

*

 

பிரிவுக்குப் பிந்தைய சந்திப்பின்

இந்தக் கண்ணீரைக் காணத்தான் வந்தேன்

இனி கண்ணீரில்லாமல் பிரிந்து செல்வேன்

*

 

எதிர்பாராத விருந்தாளிக்கு

என்னிடம்தர எதுவும் இல்லை

ஒரு கோப்பை குளிரைத்தவிர

*

 

ஒரு எரியும் அடுப்பு

அல்லது ஒரு கதகதப்பான உடல்

இரண்டும் ஒன்றுதான் இக்கடும் பனியில்

*

 

எனக்குக் கிட்டாதன யாவும்

என் நண்பர்களுக்குக் கிடைத்தன.

நல்லது

வழிப்போக்கனுக்குத் தேவை சிறு நிழல்கள்

*

 

பெண்மைக்குத்தான் எத்தனை நடனங்கள்

நீராடிச்சென்று நெடுநேரமாகியும்

குளியலறையில் நடனமாடுகிறது

உன் சோப்பின் வாசனை

*

 

நான் யார் என்பது

எனக்கு மட்டுமே தெரியும்

வனத்தில் உதிரும் மலர்போல அத்தனை ரகசியம்

*

 

ஒரு அழகிய இளைஞனைக் கண்டேன்

நீ முதல் சந்திப்பிலேயே அவனைக் காதலிக்கக்கூடும்

நான் நீயாக இருப்பதற்கு ஒரு எல்லையில்லையா?

*

 

குடிகாரனை வெறுங்கள்

அவனைக் கைவிடுங்கள்

துணையாக வீடுவரை வருகிறது கடும் பனி

*

 

பசியை மாற்ற முடியாது

பசிக்கான யுத்தத்தை மாற்ற முடியாது

நூற்றாண்டு “மெனு” வையேனும் மாற்று.

*

 

திருவிழாவின் கடைசி மணிநேரங்கள்

கண்ணுக்குத் தெரிகிற யாவும் மறைந்துவிடும்

காலி மைதானத்தில் பனி தனியே பெய்யும்

*

 

லண்டனில் இப்போது கடும் பனி என்றாள்

சென்னையில் இப்போது கடும் குளிர் என்றேன்

நாம் என்பது இப்போது வெறும் பனி

*

 

அன்பின் கதவுகளைத்

திரும்பத் திரும்ப தட்டாதே

கல்லறை ஆவிகளுக்குத் தூக்கம் கெடுகிறது

*

 

பனியையும் நிலவையும் தவிர

தெருவில் யாருமில்லை;

இந்தக் காட்சியைக் காணும் நான் கூட அங்கு இல்லை

*

 

ஒரு குழந்தை வாழ்த்து வேண்டி

என் காலில் பணிந்து வணங்குகிறாள்:

பதிலாக

குழந்தையின் காலில்விழுந்து வாழ்த்தினேன்

*

 

மீசைக்குக் கருவண்ணம் தீட்டிக்கொள் என்றாள்

நான் முதுமையடைவதை அவள் விரும்பவில்லை

என் இளமையின் அந்தியில் கருப்பு வானவில்

*

 

இந்தக் காதலுக்கு எந்தப் பிடிமானமும் இல்லை

இந்த உறவிற்கு எந்த எதிர்காலமும் இல்லை

இருந்தும் தளும்புகிறோம் எந்நேரமும்

*

 

இன்னும் தூங்காமல் என்ன செய்கிறாய் என்றாள்

பனியில் நனைந்த நிலவை

வெறும் கையால் துடைத்துக் கொண்டிருக்கிறேன்

*

 

இந்த உலகின் ஒரே நேர்மையான உணர்ச்சி

பசி மட்டுமே; வேறெதுவும் பேசுவதற்கில்லை

பசி தீர்ந்ததும் எதிரிகளை மறந்துவிடுகிறேன்

*

 

விவாகரத்திற்குப் பிறகு

தன்பெயரோடு

கணவனின் பெயருக்குப் பதில்

தந்தையின் பெயரை மாற்றிக்கொண்டாள்

இல்லாத

தந்தைகளிடம் திரும்பும் மகள்கள்

ஒரு கணம் அத்தனை தனிமையாக

மனம் உடைந்து அழுகிறார்கள்

*

 

ஒரு நாள் உன்னை எப்படிப் பிரிந்திருப்பது என கண்ணீர் சிந்தினேன்;

பிறகு 10 வருடங்கள்

எப்படிப்போனதென்றே தெரியவில்லை

*

 

நான் செல்லும் வேகத்திற்கு

நடக்க முடியாமல் ஏன் உனக்கு

மூச்சு வாங்குகிறது?

இத்தனைக்கும்

இந்த சக்கர நாற்காலியில்தான் அமர்ந்திருக்கிறேன்

*

 

பயணம் என்பது எங்கும் போய்சேர அல்ல

இருப்பிலிருந்து நீங்குதல்

பயணத்தில் எல்லாம் வேகமாக நகர்வதுபோல

வாழ்வில் ஒருபோதும் நகர்வதில்லை

*

 

நல்ல ருசியுள்ள உணவு எப்போது அமையும்?

நல்ல காமத்தின் இன்பம் எப்போது வாய்க்கும்?

நல்ல பசியின்போது

*

 

நேற்று வரை நீ எனக்கு யாருமில்லை

இன்று உன்னைத்தவிர எனக்கு யாருமில்லை

எத்தனை எளிதாக நிகழ்கிறது எல்லாமும்.

*