இறந்தவருடன் மன்றாடுதல்

இறந்தவரே
ஏன் குற்ற உணர்வின்
இவ்வளவு பெரிய பாரத்தை
எனக்கு விட்டுச்செல்கிறீர்கள்?

நான் உங்களுக்கு விடைகொடுக்கும்போது
ஏன் முகத்தை திருப்பிக்கொள்கிறீர்கள்
நான் உங்களிடம் நியாயமாக
நடந்துகொண்டேனா என
குழப்பத்தில் ஆழ்த்துகிறீர்கள்

நமக்கிடையே வருத்தங்கள் இருந்தன
சின்னச் சின்ன முறிவுகள் இருந்தன
கசந்து சற்றே விலகிய தருணங்கள் இருந்தன
நீங்கள் சற்று நேரம் அருகில் இல்லாமல் இருந்தால்
நன்றாக இருக்கும் என்று நினைத்த
நேரங்களும் இருந்தன
தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்
அது சற்று நேரம்தான்
அப்புறம் நான் உங்களிடமோ
நீங்கள் என்னிடமோ வந்துவிடட்டும்
என்றுதான் விரும்பியிருக்கிறேன்
நீங்கள் எதற்காக
இப்படியொரு கறாரான முடிவை
எடுக்க வேண்டும்?

எனக்கும் நிறைய கஷ்டங்கள் இருந்தன
முதுகில் குத்தப்பட்ட வலிகளால் நிரம்பியிருந்தேன்
என்னை நானே பார்த்துக்கொள்ள வேண்டிய
நிர்பந்தத்தில் என்னை
நானே முழுமையாகக் கைவிட்டேன்
இருந்தும் உங்களை
இன்னும் கொஞ்சம் கூடுதலாகப்
பார்த்துக்கொண்டிருக்கலாம் என
நான் நினைக்காத நாள் இல்லை
எல்லாம் கொஞ்சம்
தாமதமாகிக்கொண்டே வந்தன
ஆனால் சீக்கிரம்
உங்கள்பிறந்த நாளுக்கு
நல்ல உடைகளை வாங்கிக்கொண்டு
வந்துவிடுவேன் என்றுதான் நினைத்தேன்
அதற்குள் நடுக் கூடத்தில்
கண்ணாடிப்பெட்டிக்குள்
எந்தப் பொறுப்பும் இல்லாமல்
வந்து படுத்திருக்கிறீர்கள்

எனக்கும் கொஞ்சம் மறதிகள் உண்டு
எனக்கும் சிறிய சுயநலங்கள் உண்டு
நானும் கொஞ்சம் பகல் கனவுகள் காண்பேன்
வேறு சிலருக்கும் கொஞ்சம்
பொறுப்பாக இருந்திருக்கிறேன்
அதற்காக இப்போது இறுக மூடிய
இருவிழிகளால் என்னைக் குற்றம் சாட்டவேண்டுமா?
நான் உங்களுக்குத் தந்தவையோ
நீங்கள் எனக்குத் தந்தவையோ
எந்தக்கணக்குப் புத்தகத்திலும்
இடம்பெற முடியாதவை
இருந்தும்
இப்படி இரு கைகளையும்
வெறுங் கைகளாக விரித்துக்காட்டியபடி
விடைபெற்றுக்கொள்வது என்ன நியாயம்?

ஒரு காலத்தில் இருந்ததுபோல
இன்னொரு காலத்தில் நாம் இருக்கவில்லை
ஒரு பருவத்தில் மேலிட்டதுபோன்ற பிரியம்
இன்னொரு பருவத்தில் நிரம்புவதில்லை
ஆனால்
அதற்காக நாம் ஒருவருக்கொருவர்
இல்லாமல் போகவும் இல்லை
ஆனால் ஒரு இறுதி முடிவின் மூலம்
நீங்கள் எல்லாவற்றையும் மறுதலிக்கிறீர்கள்
நான்தான் உங்களை
இந்த மரணத்தின் தனிமைக்குள்
செலுத்தினேன் என
என்னை நம்பவைக்கிறீர்கள்
உண்மையில் உங்கள் சாவில்
எனக்கும் பங்கிருக்கிறது என்றால்
நீங்கள் மரணித்த வீட்டில்
நீங்கள் அருந்த வருவீர்கள் என
இரவில் வைக்கப்படும் ஒரு சொம்புத் தண்ணீரில்
என் கைகளைக் கழுவிக்கொள்கிறேன்

இறந்தவர்களிடம் வாதாடுவதுபோன்ற துயரம்
வேறு எதுவும் இல்லை
இறந்வர்கள் நாம் பிரியத்தோடு தரும்
எந்த ஒன்றையும் ஏற்பதில்லை
நீங்கள் இல்லாமல்போன வீட்டில்
விளக்கேற்றிவைத்துவிட்டு
என் தலையை என் மடியில் புதைத்து
மனம் உடைந்து அழுதுகொண்டிருக்கிறேன்
என் இயலாமைகளை
நீங்கள் இவ்வளவுதூரம்
சோதிக்கத்தான் வேண்டுமா?
ஒரு மனிதன் இவ்வளவு தூரம்
தன்னை விலக்கிக்கொள்ளுதலில்
ஒரு இதயமற்ற செயல் இருக்கிறது

இறந்தவரே
நான் எந்தக் குற்றமும் செய்யாதபோதும்
என்னிடம் ஏன் இவ்வளவு பெரிய
பாவமன்னிப்பைக் கட்டாயப்படுத்துகிறீர்கள்?
*
நீங்கும் கணம்

நான் எப்போதும் இருக்கும்
இடத்தைவிட்டு
ஒருநாள்தான் பிரிந்துசெல்கிறேன்

கிளம்பும் முன் படுக்கை விரிப்புகளை
சுருக்கமின்றி விரிக்கிறேன்
தண்ணீர் குழாய்களை
இறுக மூடுகிறேன்
கலைந்த புத்தகங்களை
சீராக அடுக்கிவைக்கிறேன்
முடிந்த நாளின்
செய்தித்தாள்களை
எடுத்துவைக்கிறேன்
ஜன்னல் திரைகளை
இழுத்து மூடுகிறேன்
சுவரோவியத்தைக்கண்டு
பெருமுச்செறிகிறேன்
மனத்தாங்கலுடன்
அந்த இடத்தைப் பூட்டிவிட்டு
தெருவில் இறங்குகிறேன்

அந்த இடத்தில்
ஒரே ஒரு நாள்தான் இருக்கமாட்டேன்
நாளை மறுநாள் வந்துவிடுவேன்
ஆயினும் சஞ்சலத்துடன் தயங்கி நிற்கிறேன்

அந்த இடத்தில்
உயிருள்ளது என எதுவுமில்லை
ஆயினும் யாரையோ
அங்கு விட்டுச் செல்கிறேன்

உயிரற்ற ஒன்றை
சற்றே நீங்கியிருக்கவே இவ்வளவு
துயரும்
நான் உயிருள்ள உன்னை
எந்த சமாதானத்துடன்ஷ்
எங்கனம் விட்டுச் செல்வது?
*

எப்போதும் புரிந்துகொள்பவர்கள்

என் சாவுக்கு நீ
வரமுடியாமல் போனால்
நான் வருத்தப்பட மாட்டேன்

வர முடிந்திருந்தால்
நிச்சயம் வந்திருப்பாய்

அன்று
உனக்கு வேலையின் நிர்பந்தங்கள் இருந்திருக்கலாம்

உன் வீட்டிற்கு
விருந்தினர்கள் வந்திருக்கலாம்

அன்று உனக்கு
உடல் நலமற்றுப் போயிருக்கலாம்

அந்தக் கோலத்தில் என்னைக்காண
உனக்கு அச்சமாக இருந்திருக்கலாம்

என்னிடம் சொல்லமுடியாத
ஏதேனும் அந்தரங்க காரியம் இருந்திருக்கலாம்

அன்று மலர்வளையங்களின் கடை
மூடியிருந்திருக்கலாம்

என்னைக்காணும்போது
நீ உடைந்துவிடக்கூடுமெனில்
அப்போது பிறர்
நமக்கிடையேயான ரகசிய உறவைக்
கண்டுவிடலாம் என்பதால்
நீ அந்த சந்திப்பை தவிர்க்க விரும்பியிருக்கலாம்
ஒரு தேநீர் விடுதிக்கு
என்னோடு வரும்போது
யாரும் கவனிக்கிறார்களா எனக் கூச்சமடைபவள் நீ

மேலும் ஒரு தேநீர் அருந்தச் செல்வதுபோன்ற
அத்தனை எளியதுதான்
உன்னை நேசித்த ஒரு மனிதனின்
சாவுக்குச் செல்வதும்

குற்ற உணர்வுகொள்ளாதே
அது ஒரு வீணான சுய சமாதானத்திற்கே
இட்டுச் செல்லும்

நீ வருவாய் என எதிர்பார்ப்பேன்
உன்னால் வரமுடியாமல் போனால்
அதை நான் புரிந்துகொள்வேன்
அன்று முழுக்க
நீ என்னைத்தான் நினைத்துக்கொண்டிருந்திருப்பாய் என
என்னை நானே தேற்றிக்கொள்வேன்

எப்போதும் அப்படித்தானே
புரிந்து கொண்டிருக்கிறேன்
தேற்றிக்கொண்டிருந்திருக்கிறேன்
இப்போது மட்டும் புரிந்துகொள்ளமாட்டேனா?
*

இது மாவுக்கட்டின் காலம்

அரசாங்க வேலை வாய்ப்பு:
நேர்த்தியாக
மாவுக்கட்டு போடுபவர்கள் தேவை

பாத் ரூம்களில்
வழுக்கி விழுபவர்கள்
அதிகமாகிக்கொண்டே இருக்கிறார்கள்

முறிந்த கைகளில் மாவுக்கட்டுடன்
சுவரோரங்களில்
அமர்ந்திருப்பவர்கள் எண்ணிக்கை
அதிகரித்துக்கொண்டே செல்கிறது
தினமும் அவை செய்தித்தாள்களில்
இடம் பெறுகின்றன

நீதியரசர்கள்
மாவுக்கட்டுகளைக் கண்டதும்
தங்கள் கண்களைத் தாழ்த்திக்கொள்கிறார்கள்

இந்த தண்டனைமுறை
எந்த சட்டப்புத்தகத்திலும் இல்லை
இதை யாரேனும் ஒரு உயர் அதிகாரி
தனது சொந்தக் கண்டுபிடிப்பாக
அமலுக்குக் கொண்டு வந்திருக்கக் கூடும்

உடம்பில் எந்தக் கீறலும் விழாமல்
ஒரு கையை மட்டும் முறிப்பது
ஒரு அற்புதமான கலை
அது ஒரு நவீன அறுவை சிகிச்சைபோன்றது
ஆனால்
அது நிகழும்போது
அவ்வளவு நவீனமாக இருப்பதில்லை

மாவுக்கட்டுக்கு முன்
கைகள் முறிக்கப்படும்போது
அவர்கள் ஓலமிடுவது
உண்மையில் ஒரு சங்கீதம்போல இருக்கக்கூடும்

கைகள் முறிக்கப்பட்டவுடன்
இல்லை அவர்கள் வழுக்கி விழுந்தபின்
மாவுக்கட்டு போடுகிறவர்
ஒரு சமையலின் மீதி வேலையை
முடிப்பதுபோல கையில்
வெண்ணிறத் துணியுடன் வருகிறார்

மாவுக்கட்டுகள் என்பது
இப்போது அச்சத்தின் குறியீடு
அதன் மூலம் ஒரு செய்தி
அழுத்தமாக சொல்லப்படுகிறது
சிறிய குற்றங்கள் செய்பவர்களின்
கைகளில் மாவுக்கட்டு போடப்படும்
கொஞ்சம் பெரிய குற்றங்களுக்கு
என்கவுண்டருக்குப் பின்
போலீஸ்காரர்கள் மாவுக்கட்டுடன் காட்சியளிப்பார்கள்

இது சட்டவிரோதம்
இது மனிதத் தன்மையற்றது என
யாரோ சொல்கிறார்கள்
அது யார் காதுக்கும் கேட்பதில்லை
மாறாக
ஒரு கை போதாது
ஒரு காலும் உடைக்கப்படவேண்டும் என
கூக்குரல்கள் எழுகின்றன

இந்தத் தண்டனைகளில்
குறைந்த பட்ச நீதி மட்டுமல்ல
குறைந்த பட்ச கற்பனை வளம்கூட இல்லை
அதை பிறர் நம்பவேண்டும்
என்றுகூட அவர்கள் முனைவதில்லை
இது ஒட்டுமொத்த சமூகத்தையும்
அவமானப்படுத்துவதாக உள்ளது

தினமும் சிலர் விசாரணைகளில்
வழுக்கி விழுகிறார்கள்
தினமும் சிலருக்கு
மாவுக்கட்டு போடப்படுகிறது

நம் காலத்தில் நீதியைப்போல
வழுவழுப்பானது வேறு எதுவும் இல்லை
நாம் எந்த நேரம்
அதில் வழுக்கி விழுந்து விடுவோம் என
அவ்வளவு பயத்துடன்
ஒவ்வொரு அடியையும் எடுத்துவைக்கிறோம்

வழுக்குகிறது
அவ்வளவு பயங்கரமாக
*

ஷேவிங் பிளேடால் கொல்லப்பட்ட வேங்கை

இறந்துகிடக்கும் புலியின்
புகைப்படத்தைக் கண்டேன்
உயிரோடு இருக்கும் புலியைவிட
இறந்துகிடக்கும் புலி
எந்த விதத்திலும் கம்பீரம் குறைந்ததல்ல
அது வேட்டையாடப்பட்டுக்கிடப்பது போல இல்லை
வேட்டையாடி ஓய்வெடுப்பதுபோல
ஒரு ஓடைக்கரையில் கிடக்கிறது

புலியை விஷம் வைத்துக்கொன்றுவிட்டார்கள்
என்று சொல்லப்பட்டது
வெல்ல முடியாத அரசர்களுக்கு
வீழ்த்தமுடியாத வீரர்களுக்கு
நேர்கொள்ள முடியாத தலைவர்களுக்கு
விஷம் வைப்பது மனித வழக்கம்
ஒரு புலியை அப்படி வஞ்சகமாகக் கொல்வது
நிகழக்கூடிய ஒன்றுதான்

ஆனால் புலி இறந்ததற்கு
வேறொரு காரணமும் சொல்லப்பட்டது
அது என்னை மனம் கலங்கச்செய்கிறது
இறந்த புலியின் அருகே
அது கடைசியாக வேட்டையாடிய
கடமானின் இறைச்சித்துண்டுகள்
சிதறியிருக்கின்றன
அவற்றை விழுங்கமுடியாமல்
புலி சாவதற்கு முன் கக்கியிருந்தது
அந்த இறைச்சி தொண்டையில் சிக்கியே
அது இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது
ஒரு கடமான் ஒரு புலியைக்கொன்ற
வரலாற்றுச் சம்பவமாக அது இருக்கலாம்

ஆனால் அது அப்படி நிகழவில்லை
புலி கக்கிய கடமானின் இறைச்சியினூடே
கூரான பிளேடுகளை அவர்கள் கண்டெடுத்தார்கள்
இதை எப்படிப் புரிந்துகொள்வதென்று
அவர்களுக்குத் தெரியவில்லை
நீண்ட யோசனைக்குப்பின்
மருத்துவர் சொன்னார்:
“இரை கிடைக்காத கடமான்
சுற்றுலாப்பயணிகள் விட்டுச் சென்ற
குப்பைகளைத் தின்றிருக்கலாம்
அந்தக் குப்பைகளோடு உடைந்த பிளேடுகள்
மானின் குடலுக்குள் சென்றிருக்கலாம்
அந்த மானை வேட்டையாடிய புலியின் தொண்டையை
அந்த பிளேடுகள் அறுத்திருக்கக் கூடும்
தொண்டை அறுந்த வேங்கை
தாகத்தோடும் எரிச்சலோடும்
நீர் நிலையைத் தேடி வந்து
பிளேடைத் துப்பமுடியாமல் இறந்திருக்கலாம்”

யாரோ ஒருவன் வீசி எறிந்த
ஷேவிங் பிளேடால் ஒரு புலியைக் கொல்ல முடியுமா?
ஒரு வேட்டைக்காரனுக்கு புலியைக் கொல்வது
ஒரு மாபெரும் சாகசம்
ஒரு வேட்டைக்காரனை ஒரு புலிகொல்வது
இன்னொரு சாகசம்
எல்லா சாகசங்களின் காலமும் முடிந்துவிட்டது
வனங்களில் மேயும் ஒரு கடமான்
குப்பைகளைத் தின்கிறது
அந்த மானைத்தின்னும் புலி
குப்பையிலிருந்த திருப்பிடித்த பிளேடால்
கொல்லப்படுகிறது
இந்தக் காலத்தில் யுத்தங்கள்
இப்படித்தான் நிகழ்கின்றன

என் தொண்டையிலும் உண்டு
துருப்பிடித்த பிளேடுகள்
*