மனிதர்கள் மிகவும் சுய நலமிக்கவர்களாக மாறிக்கொண்டிருக்கும் காலத்தில் நாம் வாழ்கிறோமா என்ற சந்தேகம் எனக்கு இப்போதெல்லாம் அடிக்கடி வருகிறது. நாள் முழுவதும் நான் கடந்து போகும் ஏராளமான மனிதர்களுக்குப் பின்னால் ஏராளமான துயர் மிகுந்த கதைகள் நிறைய இருக்கின்றன அதைப் பற்றியெல்லாம் எனக்கு எந்த சலனமும் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் என்னைச் சுற்றியிருக்கும், எனக்கு மிக நெருங்கிய மனிதர்களின் துயரங்கள் பற்றி நான் அப்படி அக்கறை கொள்ளாமல் இருக்க முடியாது. நான் சொல்லாமல் விட்ட ஏதோ ஒரு வார்த்தை அந்த நாளில் அவர்களின் துயரம் முழுதையும் தீர்க்க வல்லதாக இருந்திருக்கலாம் அல்லது நான் சொல்லிய ஏதோ ஒரு வார்த்தை அவர்களின் அத்தனை துயரங்களுக்கும் காரணமாக இருக்கலாம். ஒருவரின் துயரங்களின் மீது நமக்குப் பொறுப்பு இருக்கிறது என்பதை உணர்ந்தால் மட்டுமே அதன் நிமித்தம் ஒரு உணர்வு பூர்வமான ஆறுதலை நாம் அவருக்குக் கொடுக்க முடியும். ஆனால் அதற்கு நாம் தயாராக இருக்கிறோமா என்பதை நாம் நம்மை நோக்கி கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது.
எனது குறுகிய வெளிச்சம் குறைந்த ஆலோசனை அறைகளில் நான் பல துயரக்கதைகளைக் கடந்து வந்திருக்கிறேன். புறக்கணிப்புகளும், அலட்சியங்களும், அசட்டு சிரிப்புகளும் எத்தனை கொடுமையானது என்பது அந்த அறையின் நான்கு சுவர்களுக்கும் நிச்சயம் தெரியும். அந்தக் கதைகள் அத்தனையும் நான் மட்டுமே அறிந்த கதை. எனது வாழ்க்கையின் இயல்பான துயரங்களைக்கூடப் பிரித்துப் பார்க்க முடியாத அளவிற்கு என் மனம் முழுவதும் அந்தக் கதைகளால் நிரம்பியிருக்கிறது. திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஒரே ஒரு மகன் ஒரு அந்தி வேலையில் விபத்தில் இறந்து சடலமாய் வீடு சேர்ந்ததை எதிர்கொள்ளும் அந்த வயதான பெற்றோரை நீங்கள் வாழ்க்கையில் ஒரு முறையேனும் சந்தித்ததுண்டா? அந்த துயரத்தின் அடர்த்தியை உங்களால் முழுமையாக உணர முடியுமா? நாற்பதாண்டு திருமண வாழ்க்கைக்குப் பிறகு அதுவரை எதிர்கொள்ளாத ஒரு கடினமான கேள்வியை கணவனிடம் இருந்து எதிர்கொண்டதால் தன்னையே மாய்த்துக்கொள்ள துணிந்த ஒரு பெண்ணின் மனதை உங்களால் புரிந்துகொள்ள முடியுமா?, விடுதியில் தங்கிப் படிக்க முடியாது என்று தனது மகன் கெஞ்சிக் கேட்டும் அவனைக் கட்டாயப்படுத்தி அனுப்பிய இரண்டாம் நாள் அவன் தற்கொலை செய்து கொண்டான் என்பதை எதிர்கொண்ட ஒரு தந்தையின் குற்றவுணர்ச்சியை எப்போதாவது அருகில் இருந்து பார்த்ததுண்டா? இன்னும் நிறைய நிறைய… நாமெல்லாம் வாழ்க்கையில் ஒரே ஒரு முறை கூட எதிர்கொண்டிராத அல்லது கற்பனை கூட செய்து பார்த்திராதகதைகளை எல்லாம் நான் கேட்டிருக்கிறேன். அத்தனை கதைகளுக்கும் ஒரே ஒரு ஒற்றுமை அதன் துயரம். அதீத துயரத்தில் தவிக்கும் இந்த மனிதர்கள் எல்லாம் ஏதோ ஒரு நம்பிக்கையில் என்னைத் தேடி வருவதாய் நான் எப்போதும் நினைக்கவில்லை, அவர்களின் உலகத்தில் வேறு யாராலும் சொல்ல முடியாத ஒரு மிக உன்னதமான தீர்வை அவர்களின் பிரச்சினைகளுக்கு நான் கொடுத்து விடுவதாக நிச்சயம் நான் நம்பவில்லை. பிறகு ஏன் அத்தனை மனிதர்களும் அவர்களின் அன்றாட வாழ்க்கையின் துயரங்களை சுமக்க முடியாமல் சுமந்து கொண்டு என்னை தேடி வருகின்றனர்? அவர்களைச் சுற்றியுள்ள உலகத்தின் எந்த விதமான போதாமை என்னை நோக்கி அவர்களை அழைத்து வந்திருக்கும்? அவர்களுக்கு உண்மையில் என்ன தேவையாக இருக்கிறது? எனது அனுபவத்தில் அத்தனைக்கும் ஒரே பதில்தான்; அவர்களின் துயரங்களைக் கேட்பது மட்டுமே அவர்களுக்கு தேவையானதாக இருக்கிறது. ஆம். உண்மையில் அவர்களின் துயரங்களைக் கேட்பதற்கு யாருமில்லை என்பதுதான் அவர்களுக்கு அந்தத் துயரங்களை விட கொடுமையானதாக இருக்கிறது. அன்றாட வாழ்வில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வை அவர்கள் யாரிடமும் எதிர்பார்க்கவில்லை, அதற்கான உதவியையோ, நம்பிக்கையையோ, ஆறுதலையோ, அறிவுரையையோ அவர்கள் கேட்பதில்லை, எந்தவித முன்முடிவுகளமற்று, நிபந்தனையற்று, ஒரு திறந்த மனதுடன் அவர்கள் சொல்வதை கேட்பதை மட்டுமே அவர்கள் நிறைய நேரங்களில் எதிர்பார்க்கிறார்கள். நிபந்தனைகளற்ற அன்பு என்பதை அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வதன் வாயிலாகத்தானே நாம் வெளிப்படுத்த முடியும். ஆனால் அதற்கு யாருமே தயாராக இல்லை என்பது நிகழ்காலத்தின் முக்கியமான பிரச்சினைகளில் இன்று.
கல்லூரி விடுதியில் படிக்கும் ஒரு பெண் ஏதோ ஒரு காரணத்திற்காக மிகுந்த கவலையில் இருந்திருக்கிறாள். அதை அவளது தோழிகளிடம் சொன்னபோது அவர்கள் ஆறுதலாக சொன்னது “இதற்குப் போய் கவலைப்படலாமா?” எவ்வளவு அபத்தமான ஆறுதல்! யாராவது ஏதாவது பிரச்சினை என்று வந்தால் பெரும்பாலான நேரங்களில் நாமும் இதே கேள்வியைத்தானே கேட்கிறோம்? “இதற்குப் போய் கவலைப்படலாமா?” அந்தப் பெண் தனது வீட்டில் உள்ளவர்களிடமும் இதை சொல்லும்போது அவர்களும் இதே போல தான் கேட்டிருக்கிறார்கள் “இதற்குப் போய் கவலைப்படலாமா?” இரண்டு நாட்களில் அந்த பெண் தனது கல்லூரியிலே தற்கொலை செய்து கொண்டிருக்கிறாள். இதை நம்மால் தடுத்திருக்க முடியும்தானே? அவளின் துயரத்தை, அந்த உணர்வுகளை எந்தக் கேள்வியும் கேட்காமல் நாம் புரிந்து கொண்டிருந்தால் அவளுக்கு ஒரு பாதுகாப்புணர்வு வந்திருக்கும்தானே? ஒருவரின் மன சஞ்சலங்களை, அது தொடர்பாக அவர்கள் கொண்டிருக்கும் மெல்லுணர்வுகளை நாம் கொண்டிருக்கும் நமக்கான சில தனிப்பட்ட வரையறைகளின்படியே புரிந்துகொள்ள எத்தனிக்கிறோம், உண்மையில் அதை அப்படியே, ஒரு கண்ணாடியில் இருந்து விழும் பிம்பம் போல ஏற்றுக்கொள்வதில் நமக்கு அத்தனை தயக்கம்? “இதற்குப் போய் கவலைப்படலாமா?” என்ற கேள்வி நமது சுயத்தின் அகங்காரம் என்றே நினைக்கிறேன். “நான் உன்னைப்போல அத்தனை பலவீனமான ஆள் அல்ல” என்று நிரூபிப்பதை தவிர அந்தக் கேள்விக்கு வேறென்ன நோக்கம் இருக்கிறது? அந்த கேள்வியின் வழியாக அவளின் துயரத்திற்கு அவளையே குற்றவாளியாக்கும் போக்குதானே இருந்திருக்கிறது அது தானே அவளை கடுமையாக காயப்படுத்தியிருக்கும்? ஒரு மிகப்பெரிய குற்றவுணர்ச்சியை இது போன்ற அலட்சியங்களின் வழியாக நாம் நம்மை சுற்றியுள்ளவர்களின் மனதில் விதைத்துக் கொண்டிருக்கிறோம். கவலைகளும், துயரங்களும் மனித வாழ்க்கையில் புதிதானதோ அல்லது அரிதானதோ இல்லை, அதை எதிர்கொள்ளும் நம்பிக்கையை இன்னொரு மனிதன் வழங்குவான் என்ற நம்பிக்கையில்தான் நாம் அத்தனையும் தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறோம். அந்த நம்பிக்கையையும், பாதுகாப்பையும் இன்னொரு மனிதருக்கு வழங்கும் இடத்தில் நாம் எப்போதும் இருக்கிறோம் என்பதை நாம் நிச்சயம் உணரத்தான் வேண்டும்.
மனிதர்களின் வாழ்க்கை துயரங்களால் சூழப்பட்டிருக்கிறது. துயரங்களிலிருந்து ஒரு இயல்பான மீட்சியைத்தான் அவர்களின் மனம் நாடுகிறது. எத்தகைய சரிவிலிருந்து மீண்டு வரும் மனப்பக்குவத்தை மனிதன் தன்னகத்தே கொண்டிருக்கின்றான். ஆனால் அதற்கான காலம் என்று ஒன்று இருக்கிறது. ஒரு நிலப்பரப்பை கரிய மேகங்கள் மூடுவது போல சூழ்நிலைகளின் துயரங்கள் மனிதனைப் போர்த்திஇருக்கின்றன. நம்மைப் போர்த்தியுள்ள துன்பங்களும் ஒரு மேகத்தைப் போல கலைந்துவிடும். அதிலிருந்து ஒரு புது நம்பிக்கைகள் புதிய வாய்ப்புகள் புதிய வெளிச்சங்கள் நிச்சயம் வரும். அதுவரையில் அந்த மனிதனைப் பாதுகாப்பது அவனைச் சுற்றியுள்ள மற்றவர்களின் அன்பும் பிரியமும். துயரம் தோய்ந்த வேளைகளில் ஒரு மனிதனின் அதிகபட்ச எதிர்பார்ப்பு என்பது இப்படியாக சுருங்கிவிடுகிறது: “எனது பலவீனங்களைப் பொறுத்துக்கொள்ள, எனது இயலாமைகளை சகித்துக் கொள்ள, எனது வேதனைகளைப் பகிர்ந்து கொள்ள, பெருகிவரும் கண்ணீரைத் துடைத்து விட, எனது தோளைச் சுற்றி இறுக்கமாய் அணைத்துக் கொள்ள, நடுங்கும் எனது கரங்களைக் கெட்டியாக பிடித்துக்கொள்ள யாரேனும் ஒரு ஒற்றை மனிதன் அருகில் இருந்தால் போதும்” என்பதைத்தான் அவன் மனம் யாசிக்கிறது.‘உனக்கு யாரும் இல்லை’ என்ற சொல்லை விட ‘உன்னைப் புரிந்து கொள்ள யாரும் இல்லை’ என்பதுதான் ஏற்றுக் கொள்ள முடியாததாக இருக்கிறது.
உங்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு, உங்களின் கோட்பாடுகளுக்கு ஏற்றவாறு, உங்களின் சிந்தனைகளுக்கு ஏற்றவாறு, உங்களின் உணர்வுகளுக்கு ஏற்றவாறு இல்லாத ஒருவனை அதையே காரணமாகச் சொல்லி நிராகரிப்பது ஒரு வஞ்சக மனப்பான்மை தானே! நீங்கள் நீங்களாக இருப்பதற்கு எத்தனை உரிமை உண்டோ அதே போல அவர் அவராக இருப்பதற்கும் அத்தனை உரிமை அவருக்கு உண்டு. இன்று அவனுக்கு வந்த துயரம் நாளை உங்களுக்கு வரலாம். அப்போது நீங்கள் உங்களுடைய பலம் என்று நினைத்து இருந்ததெல்லாம் பலவீனமாக, பார்க்கப்படும், உங்களது சுய அகங்காரம் அப்போது கேள்வி கேட்கப்படும், எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் அதன் விளைவாக வரும் நெருக்கடிகளையும் வைத்துக்கொண்டு ஒரு மனிதனை எடை போடுவது அவனுக்குச் செய்யும் மிகப் பெரிய துரோகம்.
தகவல் தொழில்நுட்பங்கள் வளர்ந்து விட்ட காலகட்டத்தில் நமது வாழ்க்கையும் கூட ஒரு எந்திரமயமாகிவிட்டது போலதான் இருக்கிறது. தனிமை மீது மனிதருக்கு இருந்த அச்சங்களும், வருத்தங்களும் மாறிப்போய் தனிமை மீது அத்தனை விருப்பத்துடனும், எதிர்பார்ப்புடனும் இருக்கும் மனிதர்களைக் கொண்ட காலகட்டம் இது. செல்லுமிடமெல்லாம் மனிதர்கள் தனித்தனியாகவே அமர்ந்திருக்கிறார்கள், தனித்தனியாகப் பாட்டு கேட்கிறார்கள், தனித்தனியாகவே பேசிக்கொண்டிருக்கிறார்கள், தனித்தனியாகவே சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு ஆழமான உறவே இங்கு யாருக்கும் யாருடனும் இல்லையோ என்று தோன்றுகிறது. ஒரு பரஸ்பர அன்பு என்றால் அது சமூக வலைத்தளங்களில் கிடைக்கும் பரஸ்பர அங்கீகாரங்கள் என்ற அளவில்தான் இன்றைய தலைமுறை புரிந்து கொண்டிருக்கிறது. ஒருவர் மீது எல்லயற்ற அன்பு என்பதே ஒரு அதீத உணர்வாக, நாடகத்தனமாக நினைத்துக்கொள்ளும் தலைமுறையோடு நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒரு உறவின் மீது இயல்பாகவே வரக்கூடிய ஒரு பொறுப்புணர்வோ, அர்ப்பணிப்போ, புரிதலோ யாருக்குமே இல்லை. ஒரு மேலோட்டமான, அந்தச் சூழலில் உணர்வுகளை மட்டுமே பிரதிபலிக்கக்கூடிய அதைத் தாண்டி எந்த ஒரு உள்ளார்ந்த அர்த்தங்களும், கவலைகளும் அற்ற உறவுகளாகவே இப்போது இருக்கும் பெரும்பாலான உறவுகள் இருக்கின்றன. ஒருவருடன் சேர்வதும் அவர்களுக்கு அத்தனை உணர்வுபூர்வமானதாக இல்லை. அதேபோல அவரிடம் இருந்து பிரிவதும் கூட அத்தனை உணர்வு பூர்வமானதாக இல்லை. மிக சாதாரணமாகவும், மிக செயற்கையாகவும் அவர்களின் கூடலும், பிரிதலும் இங்கு நிகழ்கின்றன. மிக கச்சிதமானதாகவும், நேர்த்தியானதாகவும், சுவாரசியமானதாகவும் இருந்த ஆண் பெண் உறவுகள் கூட அதன் தன்மைகளை இப்போது இழந்து விட்டதாகத் தோன்றுகிறது. தன்னை தவிர, தனது விருப்பங்களைத் தவிர வேறு எதுவும் பெரிதில்லை என்று நினைப்பதின் விளைவுகள்தான் இந்த முதிர்ச்சியற்ற உறவுகளும் அதன் நிமித்தம் வரும் சிக்கல்களும்.
இந்த வாழ்க்கை என்பது அப்படி சுயநலமாக வாழமுடிவதல்ல. நம்மீது ப்ரியத்துடனும் உள்ளார்ந்த அன்புடனும் இருக்கும் மனிதர்களைத் தவிர நாம் வேறு எதையும் பெரிதாக சம்பாதிப்பதற்கு இங்கு வரவில்லை. நம்மை நெருங்கியிருக்கும் ஒரு மனிதர் கொடுக்கும் நம்பிக்கையினால் மட்டுமே இந்த வாழ்க்கை நிமித்தம் பெறக்கூடிய பல்வேறு நெருக்கடிகளில் இருந்து நாம் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். எந்த அளவிற்கு அன்பையும், புரிதலையும் நாம் இன்னொருவரிடம் இருந்து எதிர்பார்க்கிறோமோ அப்படியே முழுமையாக நாமும் இருக்க வேண்டியது அவசியம். நான் எப்போதும் உன்னுடன் இருக்கிறேன் என்பதை வார்த்தைகளால் அல்ல, உங்களது உடல் மொழியால் துயரத்தில் இருக்கும் உங்களுக்கு நெருக்கமானவருக்கு நினைவூட்டுவது அவசியம். வெற்று அறிவுரைகளையும் விட,சுய அகங்காரங்களை விட உங்கள் உடல்மொழி அத்தனை முக்கியமானது. மீளாத்துயரில் இருக்கும் ஒருவரை நோக்கி நீளும் உங்கள் கரங்களை விட இந்த உலகத்தில் புனிதமானது வேறொன்றுமில்லை.