காஷ்மீர்: பாதி விதவைகள் மற்றும் பாதி நிலத்தின் கதை

 

ஒரு காலத்தில்

அவர்களுக்கு ஒரு அரசு இருந்தது

ஒரு அரசன் இருந்தான்

அவர்கள் தங்கள் ஆடுகளை

மலையடிவாரத்தில் மேய்த்துக்கொண்டிருந்தபோது

ஓநாய்கள் அவற்றை வேட்டையாட

மலைகளிலிருந்து இறங்கி வந்தன

அரசன் அருகிலிருந்த வனத்தின் அரசனான

சிங்கத்திடம் முறையிட்டான்

தன் ஆடுகளை ஓநாய்களிடமிருந்து

பாதுகாத்து தரும்படி வேண்டினான்

சிங்கம் கை குலுக்கியது

மந்தைக்கு நான் பொறுப்பேற்றுக்கொள்கிறேன்  என்றது

நீ எப்போதும் போல அரசனாகவே இருக்கலாம் என்றது

தர்மச் சக்கரத்தில் உள்ள சிங்கம் அல்லவா

எப்படி நம்பாமல் இருப்பது?

அரசன் நிம்மதியாக தூங்கச் சென்றான்

 

அரசனுக்கும் தெரியவில்லை

ஆடுகளுக்கும் தெரியவில்லை

சிங்கத்திற்கு ஆட்டின் மாமிசம்

மிகவும் பிடித்தமான உணவு என்று

மேலும்

ஓநாய்களைவிடவும்

அரசனைவிடவும்

சிங்கம் வலிமையானது என்று

 

பிறகு ஆடுகள் ஒவ்வொன்றாகக் காணாமல் போயின

முதலில் தனித்தனியாக

பிறகு மந்தை மந்தையாக

 

பள்ளத்தாக்குகளெங்கும்

அவற்றின் ஓலங்கள்

கேட்டவண்ணம் இருந்தன

 

பிறகு அரசனும் ஒரு நாள்

காணாமல் போனான்

மக்களின் தலைவன் ஒருவன் வந்தான்

அவன் வேறொரு குளிர் சிகரங்களூடே

சிறைவைக்கப்பட்டான்

சிங்கத்தின் குரல் மட்டும்

இடையறாது கேட்டவண்ணம் இருந்தது

வேட்டையின் இடையாறாத தீனக்குரல்கள்

 

இவ்வளவுதான்

பாதி நிலத்தின் கதை

பாதி விதவைகளின் கதை

 

2

காஷ்மீரிகள் இப்போது

இரண்டு நிமிடம் தங்கள் உறவினர்களிடம் பேச

அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்

தொலைபேசியில் பேசுவதற்காக

இரண்டு மணி நேரம்

அரசாங்கத்தின் பொதுத் தொலைபேசிமுன்

வரிசையில் நிற்கிறார்கள்

 

தொலை தூரத்தில் படிக்கும்

தங்கள் குழந்தைகளிடம் பேச

நோயுற்ற தங்கள் பெற்றோரின்

உடல் நிலையை அறிய

இறந்துவிட்ட தங்கள் உறவினருக்கு

ஒரு வார்த்தை ஆறுதல் சொல்ல

முக்கியமாக

ஏனைய உலகத்திற்கு இங்கே

என்ன நடக்கிறது எனத்

தெரியுமாவென்று அறிந்துகொள்ள

 

ஆயிரம் வேதனைகள்

ஆயிரம் பரிதவிப்புகள்

தொலைபேசிகள் முடக்கப்பட்டுவிட்டன

சிறைச்சாலைகளில்

கைதிகள் சில நிமிடங்கள்

உறவினர்களுக்குப் பேச அனுமதி உண்டு.

அந்த நாளுக்காகக் கைதிகள்

தினம் தினம் காத்திருப்பார்கள்

 

இப்போது ஒரு பெரும் நிலப்பரப்பு

சிறைக்கூடமாக்கப்பட்டிருக்கிறது

முள்வேலிகளால் மக்கள் பிரிக்கப்பட்டிருக்கிறார்கள்

அது தெளிவான ஒரு முற்றுகை

அது தெளிவான ஒரு சிறைப்பிடித்தல்

அதை ஒரு துல்லிய தாக்குதல் என

ஆர்கஸத்துடன் அழைப்பவர்கள் இருக்கிறார்கள்

அங்கே ஒரு பொது தொலைபேசி நிறுவப்பட்டிருக்கிறது

மக்கள் மிக நீண்ட வரிசையில்

இரண்டு நிமிடங்கள் பேச

இரண்டு மணி நேரம் காத்திருக்கிறார்கள்

துப்பாகி ஏந்திய ராணுவ வீரர்கள்

அந்த வரிசையை ஒழுங்குபடுத்திக்கொண்டிருக்கிறார்கள்

பேசுகிற அனைத்தும் ஒட்டுக்கேட்கப்படுகிறது

 

யாரோ ஒருத்தி தொலைவிலிருக்கும்

தன் காதலனை அழைக்கிறாள்

அந்த இரண்டு நிமிடங்கள் மகத்தானவை

பாலைவனத்தில் ஒரு மிடறு தன்ணீரைப்போன்றது அது

அவளால் எதுவுமே பேச முடியவில்லை

அவள் குரல்வளையிலிருந்து

விசும்பலைத் தவிர வேறு எதுவுமே கேட்கவில்லை

அவளது நேரம் முடிந்துவிட்டது

எல்லோருடைய நேரமும்

எல்லா இடங்களிலும்

அவசரமாக முடிந்துகொண்டிருந்தது

 

3

ரோஜா எளிய மலர்

ஆனால் அதன் ஒவ்வொரு இதழும்

எப்படி பிய்க்கப்பட்டது என்பது

அத்தனை எளிய கதை அல்ல

 

மக்களின் தலைக்கு மேலாக

பயங்கர வாதிகளும்

ராணுவ வீரர்களும் இடையறாது

சுட்டுக்கொண்டார்கள்

‘ஆஸாதி’ என்ற சொல்லின் மேல் கடும் பனி பொழிகிறது

பிறகு பெரும் ரத்தம் சொரிகிறது

அந்தச் சொல் சாக மறுக்கும்

வேட்டையாடப்பட்ட மிருகம் போல

இடையறாது ஒலித்துக்கொண்டிருக்கிறது

ஒவ்வொரு காஷ்மீரியும் தன் பெயரை

‘ஆஸாதி’ என்றே மாற்றிக்கொண்டார்கள்

எதிலிருந்து விடுதலை?

யாரிடமிருந்து விடுதலை?

அநீதியிலிருந்து விடுதலை

துரோகத்திலிருந்து விடுதலை

 

கல்லெறிபவர்கள்மேல்

பெல்லட் குண்டுகள் பாய்ச்சப்படுகின்றன

அவை நேர்த்தியாக சருமத்தில் நுழைந்து

தசையைக் கொத்தாக அரிந்து

வெளியே தள்ளுகின்றன

பெரும்பாலும் அவை கண்களை நோக்கிப் பாய்ச்சப்படுகின்றன

காஷ்மீர் இப்போது பார்வையற்ற

இளைஞர்களால் நிரம்பியிருக்கிறது

அவர்கள் நாளெல்லாம் ஆஸாதியின்

முடிவற்ற இருளைப் பார்த்தவண்ணம் இருக்கிறார்கள்

அவர்களது அன்னையரும் சகோதரிகளும்

அவர்களைக் கைத்தாங்கலாக

ஒரு அறையிலிருந்து

இன்னொரு அறைக்கு அழைத்துச் செல்கிறார்கள்

அந்த இருள் பள்ளத்தாக்கு முழுக்க

நீண்டு செல்கிறது

 

சிறுவர்களும் முதியவர்களும்

அலை அலையாக பதாகைகளுடன்

தெருவுக்கு வந்த வண்ணம் இருக்கிறார்கள்

அவர்கள் சுடப்படுகிறார்கள்

கைது செய்யப்படுகிறார்கள்

இளைஞர்கள் காணாமல் போகிறார்கள்

அவர்கள் ஒரு போதும் வீடு திரும்புவதில்லை

அவர்களது இளம் மனைவிகள் முடிவற்றுக் காத்திருக்கிறார்கள்

அவர்களால் எந்த முடிவும் எடுக்க இயலாது

அவர்கள் ‘பாதி விதவைகள்’ என்ற

விசேஷமான பெயரால் சுட்டப்படுகிறார்கள்

 

காணாமல்போன பாதிமகன்களைத் தேடும் அன்னையர்கள்

அவர்களின் புகைப்படங்களைத் தாங்கி

சதுக்கங்களில் கூடி நிற்கிறார்கள்

வீட்டுக்கொரு ராணுவ வீரன்

விருந்தாளியாக இருக்கிறான்

சில சமயம் அது இருவராகக்கூட இருக்கலாம்

அவர்கள் வெள்ளம்போல அந்த நிலம் முழுக்க

பரவிக்கொண்டே இருக்கிறார்கள்

 

நிராயுதபாணியான மக்கள்

ஆத்திரத்தில் கல்லெறிகிறார்கள்

பெல்லட் குண்டுகள் விழிகளை

இடையறாது துளைக்கின்றன

அப்படியும் கல்லெறிபவர்களைத் தடுக்க முயவில்லை

சிறுவர்கள் ராணுவ ஜீப்பின் முகப்பில் வைத்து

மனிதக் கேடயமாக கட்டப்படுகிறார்கள்

அந்த ஜீப் நகரமெங்கும் சுற்றி வருகிறது

ஜீப்பின் முன்புறம்கட்டப்பட்ட அந்தச் சிறுவன்

தன் வீட்டையும் பள்ளித்தோழர்களையும்

பார்த்துக்கொண்டே கடந்து செல்கிறான்

 

பெண்கள் மனச்சிதைவுக்கு ஆளாவதும்

தற்கொலை செய்துகொள்வதும்

மிகவும் அதிகரித்திருப்பதாகப் புள்ளி விபரங்கள் கூறுகின்றன

அவர்கள் உடல்கள் வெற்றிகொள்ளப்பட வேண்டிய நிலத்தின்

அடையாளமாக இருக்கின்றன

அவர்கள் இழுத்து செல்லப்படுகிறார்கள்

கசக்கப்படுகிறார்கள்

அது ஒரு புராதனச் சடங்கு

எல்லா யுத்த நிலங்களிலும்

தவறாமல் இடம் பெறும் சடங்கு

இப்போது அதிகாரப்பூர்வமாகவே சொல்லப்படுகிறது.

’இனி காஷ்மீர் பெண்களைக் கைப்பற்றிக்கொள்ளலாம்

எல்லாத் தடைகளும் நீங்கிவிட்டன’ என்று

 

கடந்த காலத்தில் இன்னும் ஏதேதோ

நிகழ்ந்திருப்பதாக கூறப்படுகிறது

குண்டு துளைத்த நூற்றுக்கணக்கான

உடல்கள் தோண்டப்படும்

கூட்டுக் கல்லறைகள்

தூக்கிலிடப்பட்ட கவிஞன்

சித்ரவதைகளுக்குப் பின்

நடைப்பிணமாகத் திரும்பியவர்கள்

போலி என்கவுண்டர்களுக்குப் பின்

நிஜப்பிணமாகவே திரும்பியவர்கள்

 

காஷ்மீர் யாருக்கு சொந்தம் என்பதில்

கழுகுகள் தலைக்கு மேல் பறக்கின்றன

தொலைவிலிருக்கும் நாடுகளின் பிணந்தின்னிகள்

காய்களை நகர்த்துகின்றன

மத பயங்கரவாதம் ஒரு கரத்திலும்

அரச பயங்கர வாதம் இன்னொரு கரத்திலும்

ஒரு நிலத்தின் ஆன்மாவைக் கொல்கின்றன

விடுதலையின் குரல்வளை அழுத்தப்படுகிறது

 

காஷ்மீர் தேனிலவு தம்பதிகளுக்கு

சிறந்த சுற்றுலாத்தலம் என்கிறார்கள்

காஷ்மீர் ரோஜாக்களை உண்ணும் கர்ப்பிணிகளுக்கு

சிவந்த குழந்தைகள் பிறக்கும் என்கிறார்கள்

காஷ்மீர் எப்போதும் வெடிச்சத்தங்களையும்

ரத்தம் சிந்துதலையும் கனவு காண்கிறது

 

கிருஷ்ணரும் அர்ஜுனனும்

முழுமையாக களத்தில் நிற்கிறார்கள்

அதை ஒரு இறுதி யுத்தம்போல நடத்துகிறார்கள்

முடிவில் தர்மம் வெல்லும் என்று நம்ப வைக்கிறார்கள்

தேசமெங்கும் ஒரு வெற்றியின் எக்களிப்பு கேட்கிறது

லடாக்கில் மக்கள் நடனமாடுவதை

தொலைக்காட்சிக்ள் காட்டுகின்றன

காஷ்மீரில் என்ன நடக்கிறது

என்ற படத்தை ஒரு ஆபாசப்படம்போல

காட்ட மறுக்கிறார்கள்

 

மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக

அரசின் அறிக்கைகள் கூறுகின்றன

அதுதான் இறுதி உண்மையாக இனி இருக்கும்

வேறு உண்மைகளுக்கு இனி இடமில்லை

இனி அங்கே படப்பிடிப்புகள் நடத்தலாம்

என அரசர் மகிழ்ச்சியுடன் கூறுகிறார்

அது அவரே எழுதி அவரே இயக்கும்

ஒரு சாகசப்படம்

அதன் தர்க்கப்பிழைகளைத்

தியேட்டரில் கேட்கும் தேசபக்த ஆரவாரங்கள்

மறைத்துவிடும்

 

காஷ்மீரில் இப்போது கடைகள் மூடிக்கிடக்கின்றன

அங்கு நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் நின்றுபோயின

பண்டிகை நாளில் யாரும் வெளியே வரவில்லை

 

பாரதத்தாயின் மணிக்கொடி

பட்டொளிவீசிப்பறக்கிறது

தலை வணங்குகிறோம்

தலை இருக்க வேண்டும் என்றால்

நிபந்தனையற்று தலை வணங்குதல் வேண்டும்

இந்த தேசத்தை வணங்குகிறோம்

இரண்டாக உடைக்கப்பட்ட

பாதி நிலத்தை வணங்குகிறோம்

பாதி விதவைகளை வணங்குகிறோம்

ஜெய் ஹிந்த்

ஜெய் ஸ்ரீ ராம்

*

 

 

யாருக்காக அழுதாள்?

 

அவளுக்கு

யாரென்று தெரியாத

யாரோ

யாருக்காகவோ

அழுதுகொண்டிருந்தார்கள்

இவளும் ஏனென்று தெரியாமலே

சேர்ந்து அழுதுகொண்டிருந்தாள்

இறந்தவனுக்காகத்தான் அழுகிறாள் என்று

அருகில் உள்ளவர்கள் கண் கலங்கினார்கள்

“யாருக்காக அழுதாய்?”

என்று கேட்டேன்.

 

“நீ இல்லாமல் போகும் நாளும்

இப்படித்தான் இருக்குமாவென

ஒரு கணம் நினைத்தேன்

அழுகை வந்துவிட்டது

உன்னைப்பற்றியும்

இப்படித்தான் பேசுவார்களா என்று நினைத்தேன்

என்னால் கண்ணீரைத்

கட்டுப்படுத்த இயலவில்லை

மேலும் உன் சிநேகிதிகளிடம் சொல்லி வை

உன்னைப்பற்றி அவர்களுக்குத்தான்

நன்கு தெரியும் என்பதுபோல

அப்போது உரிமை பாராட்ட வேண்டாமென”

என்றாள் விசும்பியபடி

 

அப்போது லேசாக மழை பெய்தது

எங்கிருந்தோ சாவின் குளிர் ஒன்று

அந்த நேரம் எங்களை ஆட்கொண்டது

*

 

வெளியேறமுடியாத கனவு

 

கனாக்கண்டேன் தோழி..!

அப்போதுதான் தூங்கப்போன

அதிகாலையில்

ஒரு நீள் திரைப்படமாய்

பின்னணி இசையின்றி விரிந்த

திரைப்படத்தின் காட்சிகளை

எங்கோ துயிலின் இருக்கையொன்றிலிருந்து

குழந்தையைப்போல விசும்பியபடி பார்த்தேன்

 

நான் எப்போதோ

இல்லாமல்போன என் பூர்வீக வீட்டின் தாழ்வாரத்தில்

நான் கறுப்பு வெள்ளை தொலைக்காட்சியில்

ரூப வாஹினியில் சிங்கள நாடகம் கொண்டிருந்த

ஒரு பழைய காலத்தில்

நீ பக்கவாட்டு அறையைத் திறந்துகொண்டு

உள்ளே வருகிறாய்

எப்படி நீ பிறந்தேயிராத இந்தக் காலத்தில்

நீ வரமுடியுமென திகைத்துப்போகிறேன்

 

எனினும்

ஏன் காலையிருந்து அழைக்கவேயில்லை என

வருத்தத்துடன் கேட்கிறேன்

“வீட்டில் நிறைய விருந்தினர்கள் இருந்தார்கள்

அதுதான் அழைக்க முடியவில்லை”

என்று சொன்ன நீ

“இன்று ஒரு முக்கியமான நாள்

சொன்னால் வருத்தப்பட மாட்டாயே”

என்றாய் சிரித்துக்கொண்டே

அப்போதுதான் கவனித்தேன்

நீ புத்தாடையில் பேரழகியாய் இருப்பதை

கைகளில் கண்ணாடி வளையல்கள் குலுங்குவதை

உன் உடலில் இருந்து பரவிய

விசேஷமான நறுமணத்தை

 

நான் பயத்துடன்

உன் முகத்தையே

உற்று நோக்கினேன்

“இன்றுதான் எனக்கு நிச்சயதார்த்தம்

உன்னை அழைக்கவே விரும்பினேன்

எனக்கு தைரியமில்லை

நியாயமாக இது உன்னுடன்தான்

நிகழ்ந்திருக்க வேண்டும்

யாருக்கு எது விதிக்கப்பட்டிருக்கிறதோ

அதுதானே நிகழும்” என்றாய் உணர்ச்சியற்று

 

ஏதோ ஒரு பெரிய ஓசையுடன்

கீழே விழுந்தது

அந்த சத்தம் காதைப் பிளப்பதாக இருந்தது

நான் எழுந்துகொள்ள விரும்பினேன்

அந்தக் கனவிலிருந்து வெளியேறப் போராடினேன்

அது என் வசத்தில் இல்லை

அது என் தேர்வில் இல்லை

 

நீ யாரையோ அழைத்தாய்

ஒரு ஒல்லியான இளைஞன்

நீல நிற ஜீன்ஸும் ஆரஞ்சுவண்ண சட்டையும்

அணிந்து முகத்தில் முடியுடன் இருந்தான்

“இவன்தான்…” என்றாய் நாணமுற்றவளாக

அவன் என்னிலும் மிக இளையவனாக இருந்தான்

அது என்னை ஆத்திரமடையச் செய்தது

 

என்னால் பேசமுடியவில்லை

“நான் மனமுடைந்து போவேன் என்று

உனக்குத் தெரியாதா?” எனக் கேட்டேன்

உடைந்த குரலில்

 

நீ வருத்தத்துடன்

வேறொருவன் பெயரைக்கூறி

“உண்மைதான்

உன்னைவிட அவன் என்னை

இன்னும் பைத்தியமாய் நேசித்தான்

அவன் இன்று எவ்வளவு துயரத்தில் இருப்பான்

எனக்காக நீதான் அவனுக்கு

ஆறுதல் சொல்ல வேண்டும்…” என்றாய்

 

தலைக்குள் சத்தம்

அதிகமாகிக்கொண்டேயிருந்தது

அப்போது எப்போதோ முறிந்துபோன

என் பழைய காதலி

வீட்டிற்குள் நுழைகிறாள்

அவள் நீ அணிந்திருக்கும்

அதே ஆடையை அணிந்திருக்கிறாள்

உன்னுடைய அதே வாசனை அவளுக்கும்

அவள் உன்னை நன்கறிந்தவளாக இருக்கிறாள்

அவளை நீ இறுக அணைத்துக்கொள்கிறாய்

அவள் கிசுகிசுத்த குரலில் சொல்கிறாள்

“எனக்கும் இன்றுதான் நிச்சயதார்த்தம்..

அந்தப்பையனை உனக்கும் தெரியும்”

 

நான் அங்கு இருப்பதைக்கூட கவனிக்காமால்

நீங்கள் இருவரும்

உங்கள் எதிர்காலத் திட்டங்களைப்

பேசிக்கொண்டிருக்கிறீர்கள்

எனக்குப் புரியவில்லை

இந்தக் கனவு

ஏன் இத்தனை நீண்டதாக இருக்கிறது என்று

யாரவது இந்தப் பாழும் கிணற்றிலிருந்து

என்னை வெளியேற்ற மாட்டார்களா

என தேம்பத் தொடங்கினேன்

 

அப்போது நான் யாருக்காக ஒரு முறை

நாற்பது தூக்க மாத்திரைகளை

ஒன்றாக விழுங்கினேனோ

அவள் உள்ளே வருகிறாள்

அவளுக்குப் பின்னே

நான் யாருக்காக

மன நல மருத்துவரின் முன்

உறைந்த கண்களுடன் அமர்ந்திருந்தேனோ

அவள் உள்ளே வருகிறாள்

அவளுக்குப்பின்னே

எனக்குப் முதல் ஸ்பரிசத்தைக்காட்டிய

என் அத்தை உள்ளே வருகிறாள்

அவளுக்குப்பின்னே

என்னை ஒரு ஆணாக முதலில் உணரச் செய்த

என் கல்லூரித்தோழி வருகிறாள்

அவளுக்குப்பின்னே

என் பள்ளித்தோழி..

 

எல்லோரும் நிச்சயதார்த்த உடையுடன்

இருக்கிறார்கள்

ஒருவருக்கொருவர்

வாழ்த்துக்களைக் கூறிக்கொள்கிறார்கள்

அந்த வினோதத்தை

என்னால் தாங்க முடியவில்லை

ஒரே நாளில் கடவுள்

எனது எல்லாப் பாவங்களுக்கும்

பில் அனுப்புகிறார்

என் கணக்கில் பணம் ஏதுமில்லை

 

நான் என் பழங்கால வீட்டில்

எதோ ஒரு அறைக்குள் ஓடுகிறேன்

அங்கு யாரோ ஒருத்தி

யாரோ ஒருவனை நிர்வாணமாகத்

தழுவிக்கொண்டிருக்கிறாள்

அவள்தான்

என் வாழ்வில் முதல் முதலாக

என்னிடம் காதலைச்சொன்னவள்

என்பது நினைவுக்கு வந்துவிட்டது

சுவரைப்பார்த்து

திரும்பி நின்றுகொண்டேன்

சுவரில் தொங்கிக்கொண்டிருந்தது

பாலகனாக இருந்த

எனது புகைப்படமொன்று

 

அந்தக் கனவிலிருந்து

எப்படி வெளியே வந்தேன் என்று தெரியவில்லை

பொழுது புலர்ந்து

பொழுது அடைந்துவிட்டது

நீர் ததும்பும் கண்களோடு

இந்த உலகை ஒருமுறை

சுற்றி வந்துவிட்டேன்

நூறு முறை மானசீகமாக

உன்னிடம் கேட்டுவிட்டேன்

“நான் மனமுடைந்துபோவேன் என்று

உனக்குத் தெரியாதா?”

 

எனக்கு கனவுகளின் பலன்கள் தெரியாது

கனவுகள் என்ன சொல்லவருகின்றன

என்று தெரியாது

ஆயினும்

இந்தக் கனவிலிருந்து

இனி நான் ஒருபோதும்

வெளியே வருவேன் என்று தோன்றவில்லை