ஏ.எஸ்.பன்னீர்செல்வனின், ‘உற்பத்தி செய்யப்படும் அறியாமைக்கெதிரான ஊடகவியல்‘ எனும் கட்டுரையை முன்வைத்து.
The disinformation industry is growing at an alarming speed and undermining democracy in an incremental manner. … The ignorance generating mechanism has a sense of coherence, it creates it’s own tortured data ,politically vacuous vocabulary, and eliminates the distinction between justice and revenge .It stands testimony to George Orwell’s observation: “ The nationalist not only does not disapprove of atrocities committed by his own side, but he has a remarkable capacity for not even hearing about them “ .- A. S . Panneerselvan,., Reader’s Editor , The Hindu (P 9/OPED/19August 2019)
மோடி தலைமையிலான சங்பரிவார அரசு, ஒன்றிய ஆட்சியைப் பிடிக்கும் பணியில் அயராது உழைத்தது இந்திய இந்து கார்ப்பரேட் செய்தி ஊடகங்கள் என்பது ஊரறிந்த செய்திதான். மோடி ஆட்சியைப் பிடிப்பதற்கு முதல்முறை மட்டுமல்ல; மீண்டும் அரியணை ஏறுவதையும் அவர்களே உத்தரவாதப்படுத்தினர் என்பதும் உண்மை. மோடியின் மாபெரும் ஆட்சிக் குழறுபடிகளையும் மீறி அவரது ஆட்சி மீண்டதன் பின்னணியில் இந்தக் கூட்டு தீவிரமாகப் பணிபுரிந்தது. இந்தப் பணியில், இந்திய தேசீய ஊடகங்கள் முன் கையெடுத்தன என்றபோதும், மாநில, மொழிவாரி ஊடகங்களும் தங்கள் பங்கை நிறைவாகவே செய்தன. விளைவு, இந்துத்துவ சங்பரிவார அரசு அறுதிப் பெரும்பான்மையையும் கடந்து ஏறத்தாழ, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்துள்ளது. இந்த அரசு பதவியேற்ற நூறு நாட்களுக்குள், ஏற்கனவே பழுதான இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைகளையே மாற்றியமைக்கும் வேலையை அதிரடியாக அரங்கேற்றிவருகிறது. இந்த அரசாங்கத்தின் ஒவ்வொரு அசைவையும் துதிபாடியபடி இருக்கின்றன இந்திய ஊடகங்கள். இவையனைத்தும் அதீத தேசியவாதக் கற்பிதத்தின் பெயரால்.
இந்தச் சூழலில், தி இந்து ஆங்கில நாளிதழ் வாசகர்களின் ஆசிரியர் ஏ.எஸ். பன்னீர்செல்வன் அவர்களின், ‘உற்பத்தி செய்யப்படும் அறியாமைக்கெதிரான ஊடகவியல்’ எனும் இந்திய ஊடகங்களின் அவலநிலையை வெட்டவெளிச்சமாக்கும் மிகச் சிறப்பான கட்டுரையை வாசிக்க வாய்த்தது. அதிகாரத்திற்கெதிராக உண்மை பேசுதல் என்பதே மகத்தான மக்களாட்சிக்கான கடமை என்ற துணைத் தலைப்பு கொண்ட, அந்த நுட்பமான கட்டுரையை, நானறிந்துகொண்ட அளவில் இங்கு தொகுத்துக்கொள்ள எண்ணுகிறேன். இந்திய ஊடகங்களில் பொய்யுரைக்கும் வேலை வெகு தீவிரமாகத் தொழிற்பட்டு, இந்திய மக்களாட்சியை சாய்க்கும் பணியைச் செய்கிறது எனத் துவங்குகிறது அந்தப் பத்தி. கருத்துருவாக்க அறிவுப்புலத்திற்கு (Epistomology) எதிராக பரிணமித்து வரும் அறியாமைப்புலம் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் (Agnotology: the Making and unmaking of Ignorance) குறித்த அறிமுகத்துடன் ஆரம்பிக்கிறது கட்டுரை. இந்தத் துறை, அறியாவியல் (Agnotology) என அழைக்கப்படுகிறது. அந்த அறிஞர்களின் ஆய்வுகள், எது அறியாமையை உயிர்ப்புடன் வைத்திருக்கவும், அதனை ஒரு அரசியல் கருவியாகவும் பயன்படுத்துவதைச் சாத்தியமாக்குகிறது என்பதே. இந்த அறிஞர்களின் ஆய்வுகள், எப்படி அறியாமை பல்தரப்பட்ட தளங்களில், பல நூதனமான வழிமுறைகளில், கவனமாக அல்லது அறிதலற்ற கவனக்குறைவுகளாலும், ரகசியங்கள், மறைத்தல், ஆவணங்களை இல்லாமலாக்குதல் மற்றும் கேள்விகளுக்கப்பாற்பட்ட மரபுகள், பலரகமான உள்ளார்ந்த அல்லது தவிர்க்கப்படக்கூடியதான கலாச்சார அரசியல் தேர்வுகளால் உற்பத்தி செய்யப்பட்டு, பாதுகாக்கப்படுகிறது என்பது பற்றியதே. அந்த நூல் தொகுப்பின் அறிமுகப்பகுதியிலேயே, திரு புராக்டர், அறியாமை பல ஆர்வமூட்டும் மாற்றுகளையும் (surrogates) பல்தள மடிப்புகளையும் (Overlaps) கொண்டுள்ளது. ஏனெனில் அறியாமையின் உருவாக்கம், ரகசியங்கள், முடத்தனம், அக்கறையின்மை, தணிக்கை, பொய்யுரை, நம்பிக்கைவாதம் மற்றும் மறதி ஆகிய அறிவியல்பூர்வமான அறிதல் சார்ந்தவையாக கருதப்படுவனவற்றால் நிகழ்கிறது. அறியாமை தத்துவவியலின் நிழலில் ஒளிந்துகொண்டுள்ளது, சமூகவியலால் வெறுத்தொதுக்கப்படுகிறது. ஆனாலும் வெகுமக்கள் சொல்லணியில் அலங்காரமாக மீண்டும் மீண்டும் புறப்பட்டபடி இருக்குமது, என்கிறார். அவர் தொழில்நுட்ப வளர்ச்சி அறியாமையின் செழிப்பிற்கும் வழிவகுக்கிறது, என்கிறார்.
ஏ.எஸ்.பன்னீர்செல்வன் அவர்களின் அடுத்த அவதானிப்பு மிக முக்கியமானது. தாமஸ் பிங்கான் அவர்களின், ‘அறியாமை, மனித மூளையின் ஒரு வெற்றிடமல்ல, அதற்குள்ளும் வரையறைகளும், ஒழுங்கமைவுகளும் உள்ளன. கூடுதலாக அதன் இயக்கமும் சில விதிகள் கொண்டதாகவே உள்ளது’ என்ற பார்வையை முன்வைத்து விட்டு, பிரைம் டைம் காட்டுக்கூச்சல்கள் கடத்தும் அறியாமையின் வரையறைகளை நாம் அறிந்துகொள்ள வேண்டும் என்கிறார். இந்த அறியாமை உருவாக்க இயல் அதனளவில் ஒரு ஒத்திசைவைக் கொண்டதாகவும், அதற்கான திருகலான தரவுகளை உருவாக்கும் திறன்கொண்டதாகவும், வெறுமையான அரசியல் சொல்லாடல்களை உருவாக்குவதாகவும், அதன்மூலமாக நீதிக்கும், பழிவாங்கலுக்குமான வேறுபாட்டை அழிப்பதாகவும் உள்ளது என்கிறார். இறுதியாக ஜார்ஜ் ஆர்வெல்லின், தேசியவாதிகள் அவர்களது தரப்பின் கொடுங்கோன்மைகளை ஆட்சேபிக்காதது மட்டுமல்ல; அவை குறித்த தகவல்களைக்கூட கேட்காமலிருக்கும் அதீத திறன்கொண்டவராக இருக்கிறார் என்ற பார்வையை முன்வைத்து நிறைவு செய்கிறார்.
மோடியின் காலத்து ஊடகவியல் வீழ்ச்சியை அன்றாடம் ஒரு கொதிப்பான மனநிலையில் எதிர்கொள்ள நிர்பந்திக்கப்பட்டிருப்போருக்கு ஏ.எஸ்.பன்னீர்செல்வனின் கட்டுரை ஒரு திறப்பு என்றே கருதுகிறேன். ‘உற்பத்தி செய்யப்படும் அறியாமை’ எனும் கருதுகோள் அறியாமையும், தேசியவாதமும் இணைந்து பயணிக்கும் வெளியை அறிந்துகொள்ள உதவும். தினசரி திகட்டலாக வந்து விழும் தேசியவாத ஊடக கூச்சல்கள் என்னவிதமான இயக்கவிதிகளின்கீழ் செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள இந்த அவதானிப்புகள் நிச்சயமாக உதவும்.
இப்போது மோடியின் அமெரிக்கப் பயணம் நிகழ்ந்த கால இந்தியச் சூழலைப் பார்ப்போம். ஆகஸ்ட் மாதத் துவக்கத்தில் அதிரடியாக ஜம்மு காஷ்மீர் மாநிலம், மாநில அரசின் சட்டசபை கலைக்கப்பட்ட நிலையில், அதன் அங்கீகாரமின்றியே, இரண்டு இந்திய யூனியன் பிரதேசங்களாக மாற்றப்படுகிறது. அதற்குமுன்னர், அந்த மாநிலத்தின் இறையாண்மையின் ஆதாரமாகக் கருதப்பட்ட விதி எண் 370 நீக்கப்படுகிறது. வெகுமக்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பும் சிறைப்படுத்தப்படுகின்றனர். இதுவரை எத்தனை பேர், எந்தெந்தச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்களென்ற தகவல் யாருக்கும் தெரியாது. காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் குவிக்கப்பட்டிருக்கும் ராணுவ வீரர்களின் எண்ணிக்கைகூட தெரியாது. இதைவிட பேரவலம், காஷ்மீர் தொடர்பான இந்த அதிரடி நடவடிக்கையை நிறைவேற்ற பத்து நாட்கள் நீட்டிக்கப்பட்ட இந்தியாவின் இறையாண்மை கொண்ட உச்சமான நாடாளுமன்றம், இந்த அதிரடியை அவசரகதியில் அரங்கேற்றிய அன்றிரவே, இன்னும் மிச்சமாயிருந்த ஐந்து நாட்களை காலாவதி செய்துவிட்டு, காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நாடாளுமன்ற அமர்வில் வரலாறு காணாத எண்ணிக்கையிலான சட்ட வரையறைகள், விவாதங்கள் ஏதுமின்றி நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக, இந்திய தேசிய புலனாய்வு அமைப்பின் (National Investigation Agency) அதிகாரத்தை எல்லையற்றதாக விரிக்கும் சட்டத் திருத்த மசோதாவும், சட்டவிரோத நடவடிக்கைக்கெதிரான தடைச் சட்டத் (ஹிகிறிகி) திருத்தமும், இந்த இந்துத்துவ பாசிச அரசின் அதிகார மீறலுக்கு உச்சபட்சமாக உதவுபவை. இதேபோல, கல்வி தொடர்பான ஒன்றிய / மாநில அரசுகளின் அதிகாரங்களை முற்றிலுமாக ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிற்கு மாற்றிய சட்டத் திருத்தங்கள். மருத்துவம், தொழிற்நுட்பம் மற்றும் உயர்கல்வி தொடர்பான தன்னாட்சி அமைப்புகளான இந்திய மருத்துவக் கழகம் (Medical council of india) இந்திய தொழிற்நுட்பக் கல்வி (AICTE) மற்றும் யுஜிசி போன்றவை கலைக்கப்பட்டு, ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிற்கு மாற்றப்பட்டுவிட்டன. அந்த சட்ட வரையறைகள் ஒவ்வொன்றும் மாநில உரிமைப் பறிப்பு மற்றும் அதிகாரத்தை ஒற்றையாக ஒன்றிய அரசிடம் குவிப்பதை நோக்கமாகக் கொண்டவை. அந்த சட்ட வடிவுகளின் விளைவு, இந்தியாவின் மாநிலங்களை உள்ளாட்சி அமைப்புகள் நிலைக்குத் தள்ளும் என்பதில் எந்த ஐயப்பாடுமில்லை. இது, இந்திய அரசியல் கள நிலவரம்.
இந்தியக் குடிமை தொடர்பில், இன்னுமொரு பேரவலம். அசாம் மாநிலத்தின் தேசிய குடிநபர் பதிவேட்டில் விடுபட்டிருப்போர் எண்ணிக்கை இருபது லட்சம் பேர். அவர்கள் இந்தியக் குடிமக்கள் இல்லையென்றால், ‘நாடற்றவர்கள்’ ஆவார்களா? இங்குதான் பெரும் சிக்கல். சமீபத்தில், ஆய்வறிஞர் ஒருவரின் உரையைக் கேட்க வாய்த்தபோதுதான், அதன் பரிமாணம் முழுமையாக விளங்கியது. ஒரு நாட்டின் குடிநபரென ஒருவர் தன்னை நிறுவிக்கொள்ள ஓட்டுரிமை (1951 மற்றும் 1971ஆம் ஆண்டின் பட்டியல்) அல்லது சொத்துரிமை அடிப்படையாகிறது. ஆண்டு 1951 எனும்போது ‘பரம்பரை’ (Legacy) என்ற தொடர்ச்சி பிரதான அம்சமாகிறது. விடுபட்டுள்ளோரில் ஒரு பெரும் தொகுதி அசாமின் பூர்வகுடிகள் (Indegenous People) என்கிறார். பூர்வகுடிகள் பெரும்பாலும் ஆவணப்படுத்தப்பட்ட பாரம்பரியமற்றவர்கள் என்பதுதான் அவலம். மண்ணின் மைந்தர்கள் ‘ஆவணமற்று’ நாடற்றுப் போகும் நிலை. இந்தச் சிக்கல், அசாமின் தனித்துவமான சிக்கல் மட்டுமல்ல. இந்த தேசிய குடிநபர் ஏடு, வடகிழக்கு மாநிலங்களில் மட்டுமல்ல; இந்தியா முழுமைக்குமான நடவடிக்கை. அசாம் பிரச்னையையே எப்படிக் கையாள்வது என்பதுகுறித்த எந்தத் தெளிவும் யாருக்கும் இல்லை என்கிறார். இதுபோன்ற அதிரடி நடவடிக்கையை ஆணையிட்ட உச்சநீதிமன்றம், இதுகுறித்த தீர்வை கவனத்தில் கொள்ளவில்லை என்பதுதான் பரிதாபம். வானளாவிய எல்லைமீறும் நீதி அதிகாரம் இந்திய ஆட்சிவடிவில், தன்னிச்சையாக உருவாக்கியுள்ள குழப்பங்கள் ஏராளம். ஆளும் அரசின் கவனவெளிக்கு வெளியே தனது ஆளுகைக் கொடியை ஏற்றுவதில் வல்லவர்கள், நம் உச்சநீதிமன்ற நீதிபதிகள். ஆளும் கட்சி விரலுயர்த்தும்போது எந்த அவசர நீதிமன்ற இடையீட்டையும் காலவரையின்றி தள்ளிப் போடுவதில் சமர்த்தர்கள் அவர்கள். ஆனால் அவர்களின் குறி எப்போதும் சிறுபான்மை மற்றும் அடித்தட்டு சமூகங்கள் மட்டுமே . இந்த தேசிய குடிநபர் ஏட்டின் சிக்கலைக் கடக்க மோடி தலைமையிலான இந்துத்துவ பாசிச அரசின் தீர்வு என்ன தெரியுமா? இந்தியக் குடிநபராக இல்லாதவரானாலும், எந்த நாட்டைச் சேர்ந்தவரானாலும் ‘இந்துக்கள் இந்தியப் பிரஜாவுரிமைக்கு’ தகுதி பெற்றவர்களென இந்திய குடிநபர் உரிமைச் சட்டத் திருத்தம் செய்தது மட்டுமே. இப்போது குறி யாரெனத் தெளிவாக விளங்கும். அதாவது, சுமார் நூறு ஆண்டுகளுக்குமுன்னர் இன்றைய இந்தியப் பிரதேசத்திலிருந்து பிழைப்புக்காக புலம்பெயர்ந்த ‘கஞ்சிக் கூலி’ ஒருவரது வம்சாவளி யாராவது கிறிஸ்தவராகவோ, இஸ்லாமியராகவோ இங்கு திரும்ப நேர்ந்தால் இந்த ‘பிரஜா உரிமை‘ சிறப்புச் சலுகை கிடையாது. அப்படியானால், இந்தியா ஒரு இந்து நாடு என அறிவித்துவிட்டாகிவிட்டது. இந்த நடவடிக்கை இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் விரிக்கப்படும்போது ஒரு மாபெரும் குழப்பம் உருவாகப் போவது உறுதி. அந்தக் குழப்ப நிலையை தனக்குச் சாதமாக்கி, இந்த சங்பரிவார அரசு எடுக்கப் போகும் நடவடிக்கைகள் என்னவிதமாக இருக்குமென்பதில் ஐயமில்லை.
இந்தியப் பொருளாதாரம், ஐந்து ஆண்டுகளின் மிக மோசமான வளர்ச்சி வீதமான ஐந்து புள்ளிகள் (ஜிடிபி 5%) என்ற நிலையை எட்டிவிட்டது.. ஏற்கனவே.தடுமாறிக் கொண்டிருந்த பொருளாதாரத்தை அதன் அதலபாதாளத்திற்குத் தள்ளிய சாதனையை மோடி தனது பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நிகழ்த்திக் காட்டினார். பொருளாதார விளைவுகள் குறித்த அக்கறையற்று ஊடகப் பரபரப்புக்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் எவ்வளவு மோசமான தீமைகளை உருவாக்குமென்பதற்குச் சான்று அந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை.. இதோடு முடியவில்லை மோடியின் மூர்க்க நடவடிக்கை. தொடர்ந்தது சரக்கு மற்றும் சேவைவரி (ஜிஎஸ்டி). மீண்டுமொரு அவசர நடவடிக்கை. நோக்கம் மாநிலத்தின் வரிவிதிப்பு சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவது. மாநிலங்களில் பொதுக்கருத்தை உருவாக்கி அதைச் செயல்படுத்த முடியாமல்போன காங்கிரஸ் தலைமையிலான யுபிஏ அரசின் இயலாமையை வெளிச்சமிட்டுக் காட்டி சாதனையாளராகும் வெறி / மூடவெறி. இந்திய வரிவிதிப்புச் சட்டத்தின் மிகப் பெரிய மாற்றத்தை முறையான ஆலோசனையின்றி நடைமுறைப்படுத்தியதன் விளைவு படுபயங்கரமானது. அந்த நடவடிக்கையின் முழுமையான விளைவை இன்னும் இந்தியா எதிர்கொள்ளவில்லை என்பதே உண்மை. உண்மை முகத்திலறையும் போது மோடி அரசு மீண்டும் ‘பொருளாதார வன்முறையையே’ நாடும்.
ஜிஎஸ்டி எனும் வரிவிதிப்பு, இந்தியா முழுமைக்கும் ஒரே அளவில் என்பது பெரும் சமத்துவமாகத் தோன்றலாம். ஆனால் இந்திய உற்பத்தி முறை இந்தியாவின் பத்து மாநிலங்களைக் கடந்து ஏதுமில்லை. வடகிழக்கு மாநிலங்கள், காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களின் வரிவருவாய் ஒரு தொகையே இல்லை. அதேபோல உத்தரகாண்ட், சத்திஸ்கர், ஒரிசா, அசாம், பிகார், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களின் நிலையும். இந்தியா முழுவதற்குமான ஒரே அளவிலான விற்பனை வரி கடுமையான பற்றாக்குறையாக மாறுவதே சாத்தியம். எனவேதான் அதிகப்பட்ச வரி 28% என நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அந்த வரி விதிப்பு உற்பத்தி மாநிலங்களையே தாக்கியது. மட்டுமல்ல பொருட்களின் விலைமீதும், அவற்றிற்கான தேவைமீதும் தாக்குதலை உருவாக்கியது. விளைவு பெரும்பாலான வரிவீதங்களை 18% ஆக்க வேண்டியதானது. அதன் பலன், வரிவருவாயில் 1.75 லட்சம் கோடி பற்றாக்குறை. இந்த ஆண்டு ரிசர்வ் வங்கி உபரியை பிடுங்கியாயிற்று. அடுத்த ஆண்டு என்னவாகும்? உற்பத்தியைப் பெருக்கும் நடவடிக்கையும், தேவையை உருவாக்கும் நடவடிக்கையும் ஒருசேர நிகழ வேண்டும். அதற்கு ஆலோசனை வேண்டும். கேள்திறனற்ற / சுய மோகி மோடியும் அவரது அணியான நிர்மலா போன்றவர்களும் அகந்தையால் மட்டுமே ஆள நினைக்கும் மூடர்கள். மாநில வருவாய் பங்கீடு பெரும் சவாலாவது ஏன்? உற்பத்தி மாநிலங்களுக்கான இழப்பீட்டை எப்படி சமாளிக்கப் போகிறது இந்த அரசு? மிரட்டலால் இதனைக் கடந்துவிட முடியுமா? இந்திய வரிவிதிப்பு குறைந்தபட்சம் 24% இருந்தால் மட்டுமே தப்பமுடியுமென்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள். அப்படியானால் விலைவாசி கூரையைப் பிய்த்துவிடும். என்ன நடக்கப்போகிறது இங்கே? ஏற்கனவெ, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியதுபோல், இந்திய விவசாயிகளின் விற்பனை விலையைக் கட்டுப்படுத்தி, இந்திய விலைவாசியைக் கட்டுப்படுத்தி வைத்திருப்பதே தொடருமா? இதையெல்லாம் ஆலோசித்து முடிவெடுக்கும் திறனோ, மனநிலையோ இல்லாத ஆட்சியாளர்கள் அதிகாரத்தில்.
ஆலோசனை ஏதுமின்றி மோடி அரசு தன்னிச்சையாகச் செயல்படுகிறதா? அதுவும் இல்லை. மோடி அரசின் அரசியல் கொள்கை மற்றும் சட்ட வரையறைகளை ஆர்.எஸ்.எஸ். ‘முளை’ தீர்மானிக்கிறது. காஷ்மீர் நடவடிக்கை, குடியுரிமைப் பிரச்னை, ஆரம்பக்கல்வி முதல் உயர்கல்வி வரையிலான கல்விக் கொள்கைகளை வகுத்தளிப்பது ஆர்.எஸ்.எஸ். பொருளாதாரக் கொள்கையை தீர்மானித்து வழிப்படுத்துவது குஜராத் பனியா முதலாளிகள். அதிலும் குறிப்பாக அம்பானிகளும், அதானிகளும். பொதுத்துறை நிறுவனங்கள் துவங்கி பொதுத்துறை வங்கிகள் பெரும் சரிவைச் சந்தித்து வரும் வேளையில், முகேஷ் அம்பானியின் முதலீடுகளும், அதானியின் முதலீடுகளும் பல்கிப் பெருகி வருகின்றன. அதிலும் அம்பானி அடுத்த ஆண்டு கடனில்லா நிறுவனம் ஆகிவிடுமென்கிறது அவர்களது அறிவிப்பு. இது எப்போது நிகழ்கிறது, இந்திய அரசும், அதன் பொதுத்துறை வங்கிகளும் திவாலாகும் நிலையை எட்டிக் கொண்டிருக்கும்போது. முன்னாள் ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜனின் கூற்று இங்கு கவனத்திற்குரியது. அவரொன்றும் இடசாரி பொருளாதார சிந்தனையாளர் இல்லை. அசலான முதலீட்டிய சிந்தனையாளர். பிறகென்ன, அவருக்கும் முதலீட்டியவாத மோடி அரசுக்கும் பிணக்கு. ரகுராம் ராஜனின் பிரச்னை, மோடி அரசு வரையறுக்கப்பட்ட முதலீட்டிய சிந்தனைகளின்வழி நடக்கவில்லை என்பதே. அவரது நிலைப்பாடு, ‘முதலீட்டுயத்தை இந்திய முதலாளிகளிடமிருந்து காக்க முடியாது’ என்பதே. அதன் பொருள், மோடி அரசு ஏற்று செயல்படுத்தும் இந்தியப் பெருமுதலாளிகளின் ஆலோசனைகள், வரையறுக்கப்பட்ட முதலீட்டிய விதிகளின்படியானது இல்லை என்பதே. இதன் விளைவுதான் இந்திய அரசும், அசலான கார்ப்பரேட்டுகளும் சிக்கலில் உழலும்போது, முதலாளிகளின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் அம்பானி, அதானி கார்ப்பரேட்டுகள் பெரும் திளைப்பில் இருக்க வாய்ப்பது. இது பனியா முதலீட்டியம். இதன் விதிகளும் இயங்குதளமும் முதலீட்டிய விதிகளின்படியோ, முதலீட்டியத் தளத்திலோ இயங்குவதில்லை.
கலாச்சார தளத்தில் இந்துத்துவ அராஜகவாதம் எல்லை மீறி இயக்கம் கொள்கிறது. நடுரோட்டில் அடித்துக் கொல்லப்படும் சிறுபான்மையினரின் எண்ணிக்கையல்ல, இந்த இந்துத்துவக் கொடூரத்தை வரையறுப்பது. அது நிகழ்த்தப்படும் விதம்தான். பகிரங்கமாக, ஊடக வெளிச்சத்தில் கோரமாகச் செய்யப்படும். நசுக்கிக் கொல்லப்படும் படுகொலைகள் (Lynching) மனிதத்தன்மை அற்றவை மட்டுமில்லை, எதிராளியாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்போருக்கான அச்சுறுத்தல் செயல்பாடும் கூட. இதன் அடுத்த பரிமாணம் ஒரு இந்துத்துவ பயங்கரவாதக் குற்றம் சாட்டப்பட்டவர், பிரக்யா தாகூர், நாடாளுமன்ற உறுப்பினராவதும். இந்த பயங்கரவாதிகள், தங்கள் செயல்களிற்கான தண்டனை பெறாதது மட்டுமில்லை, தங்கள் தீவிரவாத வாதங்களை தினசரியாக உரத்தகுரலில் பொதுவெளியில் பேசவும் அனுமதிக்கப்படுகின்றனர். இதன் உச்சப்பட்சமாக நாடாளுமன்ற அவையிலும் தினசரியாக ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷம் எழுப்பப்படுவது. ஏற்கனவே நசுக்கப்பட்ட எதிர்க்கட்சியினர் எதையாவது பேசத் துவங்கு முன்னரே, இந்த கோஷம் அவை நடவடிக்கையை முடக்கிவிடுகிறது. இதற்கெதிரான மெலிந்த குரலிலான கோஷம் என்ன தெரியுமா? தமிழ் வாழ்க, ஜெய் பங்கலா, ஜெய் ஆந்திரா போன்றவைதாம் இதில், ஜெய் மலையாள பூமி இல்லை ஏன்? அங்கும் காங்கிரஸ் தேசியவாதம் தடையாய் நிற்கிறது. இந்துத்துவ மதவாதத்தை எதிர்கொள்ள எதிர்தரப்பிற்கான ஆயுதம் மொழி அடையாளம். அதனையும் அழித்தொழிக்கவே இந்தி மற்றும் சமஸ்கிருதத் திணிப்பு முயற்சி.
அப்படியானால், மோடி அரசின் இத்தனை அராஜகங்களையும், அத்துமீறல்களையும் இந்திய மக்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டுவிட்டார்களா? எதிர்க்குரல் ஒன்று இல்லவே இல்லையா? ஏன் இல்லை. தினசரி வாழ்நாளில் சராசரியான குடிநபர் இதன் பாதிப்பை உணரவே செய்கிறான். ஆனால் அனைவரும் கொந்தளித்துவிடுவதில்லை. மனித உணர்வாக ஏற்படும் ஒரு அழுத்தத்தைக் கடப்பதற்கான காரணி, அவரது தேர்வாகவோ அல்லது தேர்வற்றோகூட வழங்கப்படுகிறது. ஆனால் இப்படி கடப்பவரில் ஒரு குறிப்பிட்ட தொகுதியினர் ஏற்கனவே இந்த நாளுக்காக ஏங்கிக் காத்திருந்தவர்கள். ஆம், இந்திய ஆரிய பார்ப்பன சமூகம். அவர்களோடு இணையும் பிறர் இந்துத்துவப் பார்ப்பனியம்வழியாக அவர்களைத் தொடர்பவர்கள். அவர்களது அறவாதம், இதெல்லாம் இதற்கு முன்னரான காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலும் நடக்கத்தானே செய்தது. ஒரு நிகழ்வை, குறிப்பாக அடித்துக் கொல்லப்படும் இஸ்லாமிய சிறுபான்மையினர் தொடர்பான கொலையை இவர்களால், இவ்வாறான விளக்கங்களால் எப்படிக் கடக்க முடிகிறது. வாய்ப்புக் கிடைத்தாலும், ஒருபோதும் இப்படியொரு கொலையை செய்யக் கூடாதவர்களே இவர்கள். பின், எப்படி இந்த சமாதானத்தை வந்தடைய முடிகிறது. எல்லாம் சில நம்பிக்கைகள் வழியான ஆசுவாசம்தான். நான் இந்து. இந்தியா, இந்துக்களின் தேசம் என்கிற கற்பிதம்தான்.
‘உற்பத்தி செய்யப்படும் அறியாமை’ இந்தியச் சூழலில் முழுமையாக இயக்கம் கொள்வது கண்கூடு. ஏ.எஸ்.பன்னீர்செல்வன் அவர்கள் கருதுவதுபோல் ‘ப்ரைம் டைம்’ செய்தி ஊடகங்கள் கடத்தும் சமிக்ஞைகள் என்ன, அவை என்னவிதமான முன்மொழிவுகளைக் கடத்துகின்றன என்பது குறித்த அறிதலே, ‘இந்த உற்பத்தி செய்யப்படும் அறியாமை’யின் உற்பத்தி முறைகளையும், அதன்வழி உருவாகும் அறியாமையின் உள்ளீடுகளையும் அறியும் வழி. இதற்கு மாதிரியாக, இரண்டு நிகழ்வுகள் செய்தியாக்கப்பட்ட விதம், அவை முன்மொழிந்த விடயங்கள் ஆகியவற்றைப் பார்ப்போம்.
மோடி அரசின் 2014–2019 ஆட்சிக்காலத்தின் இறுதிநாட்களில் (பிப்ரவரி 14, 2019) அன்று நிகழ்ந்த அசாதாரணமான துயர நிகழ்வு, காஷ்மீர் புல்வாமாவில் நாற்பது இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது ஒரு காஷ்மீர தீவிரவாதக் குழுவைச் சேர்ந்த தற்கொலைப் படை தீவிரவாதி நிகழ்த்திய தாக்குதல், அது நடந்தது பாதுகாப்புப் படைகள் பெரும் எண்ணிக்கையில் இடம்பெயர்ந்தபோது. அதுவும் ஜம்மு – காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில். இயல்பாக, இந்த பயங்கரம் குறித்த முதல் எதிர்வினை, துயரம், அனுதாபம், கண்டனம் ஆகியனவாகவே இருக்க வேண்டும். அநேகமாக, இந்திய அரசியல் தலைவர்களனைவரும் அதையே செய்தனர். அடுத்து நடந்ததுதான் கவனத்திற்குரியது. உடனடியாக பாகிஸ்தான், இஸ்லாமியத் தீவிரவாதம் குறித்த பகை முழக்கம் அரசு, ராணுவம் மற்றும் ஆளுங்கட்சி தரப்பில் எழுப்பப்பட்டது. மருந்தளவுகூட, எப்படி 350 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிபொருளுடன், ராணுவ வாகனங்கள் பெரும் எண்ணிக்கையில் கடந்துசெல்லும் பிரதான சாலையை ஒரு தனிநபர், ஒரு குறுக்கு ரோட்டில் இருந்து வந்து மோத முடிந்தது என்ற கேள்வி பிரதான ஊடகங்களின் பேசுபொருள் ஆகவில்லை. ராணுவ உளவுப் பிரிவு போதாமை அல்லது தோல்வி குறித்து தப்பித் தவறி வாய் திறந்தோர் ‘தேச விரோதிகள்’ ஆயினர்… தேசீயவாத ஊடகங்களின் ப்ரைம் டைம் பரபரப்பு, பாகிஸ்தானை தாக்கும் நாளிற்கான ‘கவுண்ட டவுன்’ துவங்கின. கோபம், ஆத்திரம், பகை, விரோதம், பழிவாங்கல் என்பதைக் கடந்து எதுவும் இங்கு பேசப்படவில்லை. போரின் விளைவு மற்றும் வியர்த்தம் கருதி அதற்கெதிரான ஆலோசனை சொல்ல முனைந்தவர்களும், கவனமாக பாகிஸ்தான் அரசின்மீதான சந்தேகத்திற்கிடமற்ற குற்றச்சாட்டை ஏற்று, வழிமொழிந்துவிட்டே, போருக்கெதிரான வாதங்களை முன்வைக்க வேண்டியதானது. ரஃபேல் ஊழல் விவகாரம் பூதாகரமாக கிளம்பி மோடி அரசுக்கெதிராக, தேர்தல்களத்தின் வாதமாக வலுவாக நின்றநிலையில் இந்த புல்வாமா தாக்குதல், அதனை முற்றிலுமாக மறக்கடிக்கும் வேலையைச் செய்து முடித்தது. அதனை ஒரு பெருநாடகீய நிகழ்வாக மாற்றியது ‘பாலகோட் ஏவுகணை தாக்குதல்’ நிகழ்வு. மோடி அவர்களின் நேரடி மேற்பார்வையில் நிகழ்த்தப்பட்டதாக வர்ணிக்கப்பட்ட அந்தத் தாக்குதல், மேலும் சில சுவாரஸ்யங்களுக்கானது. மணிக்கொரு முறை பரபரப்பு கிளப்பிய அமெரிக்க எஃப் 16 ரக விமானத்தை தாக்கிச் சாய்த்த இந்திய விமானப்படை விமானி, அபிநந்தன், பாகிஸ்தான் பகுதியில் விழுந்து போர்க்கைதி ஆனார். அடுத்த மூன்று நாட்களும் பாகிஸ்தானின் பிரதமர் இம்ரானும் இந்த நாடகீயத்தில் இணைந்து, சிறப்பான பங்களிப்பைச் செய்தார். இந்த மொத்த நாடகத்திற்கும் எதிரான வாதம் ‘பாலகோட்’ தீவிரவாத முகாமில் கொல்லப்பட்ட ஜெய்-ஈ-மொஹம்மது தீவிரவாதிகள் எண்ணிக்கை எத்தனை என்பதிலும், அந்த முகாம் அழிக்கப்பட்டுவிட்டதா இல்லையா என்பதை சுற்றிச் சுழன்றது. எப்படியோ, புல்வாமாவும் பாலகோடும் மோடி எனும் ராணுவத் தளபதியையும் விமானி அபிநந்தனையும் இந்திய தேசீயவாதத்தின் மைல்கல்கள் ஆக்கி முடிந்தன. இனி, இந்திய தேசியவாத நினைவுகளில் இந்த நிகழ்வு ‘கல்வெட்டு’போல பதிப்பிக்கப்பட்டு விட்டது. இப்போது இந்த நிகழ்வுகுறித்து எழுதும் நானும், எந்தவகையிலும் இந்த நிகழ்வில் இறந்த ராணுவ வீரர்களின் நினைவிற்கு அவமரியாதை செய்பவனாக கருதப்படக்கூடாது என்ற கவனத்துடனே எழுதுகிறேன். அந்தத் தீவிரவாதத் தாக்குதலை நடத்தியவர்கள், எப்படி அவ்வளவு எளிதாக, இவ்வளவு மோசமான தாக்குதலை நடத்த முடிந்தது என்பதுபற்றிய எந்தப் பேச்சோ, அந்த விவகாரம் தொடர்பான ராணுவ உளவுத் தகவல்களோ இல்லை. வழக்கமாக, இதுபோன்ற தாக்குதலை நடத்திய சிலராவது, காஷ்மீரின் எல்லைப்பகுதியில் என்கௌண்டர்களில் கொல்லப்படுவதுகூட இங்கு நடக்கவில்லை. மாறாக, பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நாம் எல்லை தாண்டி பாலகோட்டில் அழித்தொழித்து பழிவாங்கிவிட்டோம். இதோ, அபிநந்தனுக்கு பரம்வீர் சக்ராவும், மோடிக்கு இரண்டாவது முறையாக, முரட்டுப் பெரும்பான்மையுடன் வெல்லும் வாய்ப்பையும் விருதுகளாக வழங்கியாயிற்று.
பாலகோட் எப்போதும் உயிர்ப்பிக்கப்படும் வாய்ப்பு இந்திய நினைவிலியில் பதியப்பட்டுவிட்டது. ஆம், மீண்டும் பாலகோட் முகாமில் தீவிரவாதிகள் இருப்பு அடையாளம் காணப்பட்டுவிட்டதாக இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் இப்போது அறிவித்திருக்கிறார். இது தொடரும். இதோ புல்வாமா, பாலகோட் என உற்பத்தி செய்யப்பட்ட அறியாமை, இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது.
இழப்புகளில் மட்டுமல்ல; கொண்டாட்டங்கள் வழியாகவும் அறியாமை உற்பத்தி செய்ய இயலும் என்பதற்கான அடுத்த சாட்சி, மோடியின் சமீபத்திய ‘ஹௌடி மோடி’ (Howdy Modi) அமெரிக்க, டெக்சாஸ் மாநில தலைநகரான ஹுஸ்டன் கோலாகலம். உலகக் கோப்பை கிரிக்கெட் நிகழ்விற்கு இணையாக விளம்பரப்படுத்தப்பட்டு, படுவிமரிசையாக, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அவர்களின் சிறப்புப் பங்கேற்போடு நடந்த, மோடி அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம். ஹாலிவுட் நட்சத்திர நடிகர்களின் பிறந்தநாள்கூட இவ்வளவு கோலாகலமாக நிகழ்ந்ததாக தெரியவில்லை. இந்தக் கொண்டாட்டம், மோடி எனும் ஏழைத்தாயின் மகனுக்காக இல்லை. இந்தியா, உலகின் அசைக்கமுடியாத சூப்பர் பவராக ஆகிவிட்டதை பகிரங்கமாக அறிவிக்க என்பதாகவே, இந்திய தேசீயவாத ஹிங்லிஷ் ஊடகங்கள் முழங்கின. இந்த நிகழ்வை அநேகமாக, இந்தியாவின் அனைத்துச் செய்தி ஊடகங்களும் ஒரு வாரம் இடைவிடாமல் மணிக்கணக்கு கவுண்ட் டவுன் (இன்னும் 48 மணி நேரம், இன்னும் 23.5 மணி நேரமென்று) போட்டு அறிவித்தபடி இருந்தன. மோடியின் நுழைவிற்கு முந்தைய இந்திய – அமெரிக்கர்களின் இந்திய தேசியப் பாசம் நெஞ்சை விம்மச் செய்தது. ஏறத்தாழ இருநூறு இந்திய, அமெரிக்கர்களின் கார்ப்பரேட்கள் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்ததாகத் தெரிகிறது. இந்தியக் குடியுரிமையை துறந்தவர்களின் இந்திய தேசியவெறி ஒரு அற்புதமான நகைமுரண். அவர்களோடு இணைந்து கூட்டத்தில் கூத்தாடியவர்கள், இந்தியக் குடியுரிமையை இறுதியாக துறந்துவிடும் வாய்ப்பு, ட்ரம்ப் அறிவிப்பின்வழி ஏற்பட்டுவிடாதா என ஏங்கிக் கூடியிருந்தவர்கள். மொத்தத்தில், இந்திய பார்ப்பன / பனியா அமெரிக்க சமூகம், தங்களை, அமெரிக்கச் சமூகத்தின் மிக முக்கியமான அழுத்தம் கொண்ட குழுவாக முன்னிறுத்திக்கொள்ள தங்களது பிராண்ட் அம்பாஸடராக மோடியை வைத்து அரங்கேற்றிய நிகழ்வு. அதில் அவர்கள் வெற்றி கண்டனரா என்பது இனிவரும் நாட்களில் தெரிய வரலாம். ஆனால் இந்தியா பெற்றது என்ன? இதுதான் மில்லியன் டாலர் கேள்வி. மோடி, அமெரிக்க வணிக ஒப்பந்தங்களையும், முதலீடுகளையும் அள்ளிக் கொண்டுவந்துவிடுவாரென்ற பரப்புரை நடத்தப்பட்டது. சீன – அமெரிக்க பொருளாதாரப் போரை இந்தியாவுக்குச் சாதகமாக்கிச் சாதிக்கப் போகிறார். இந்தியப் பொருளாதாரத்தின் தளர்ச்சி முற்றிலுமாக நீங்கிவிடுமென சூளுரைக்கப்பட்டது. ஆனால் இறுதியில், வாடிக்கையாகப் போடும் பெயரளவிலான ஒப்பந்தங்கள்கூட போடப்படவில்லை. அரசியல் களத்தில் பாகிஸ்தானை ஓரங்கட்டிவிட்டது, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் இருண்ட முகத்துடன், வாஷிங்டன் டிசி-யின் மூலையில் சோர்ந்துபோய் உட்கார்ந்து விட்டாரென கூவினர் இந்திய ஊடகவியாதிகள். குறிப்பாக அர்னாப் கோஸ்வாமி, (ரிபப்ளிக் டிவி) ராகுல் ஷிவ்சங்கர், நவிகா குமார் (டைம்ஸ் நவ்) பூபெந்திர சௌபே (சி.என்.என். நியூஸ்18) ராகுல் கன்வால் (இந்தியா டுடே) போன்றோர். ஆனால் ட்ரம்ப், நானிருந்த மேடையில் பாகிஸ்தான் விமர்சனம் செய்ததை நான் எதிர்பார்க்கவில்லை / விரும்பவில்லை என்றதோடு நில்லாமல், இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்குமிடையே நடுவம் செய்ய நான் தயாரென மூன்றாவது முறையாக அறிவித்திருக்கிறார். அப்படியானால் மோடியின் அமெரிக்கப் பயணம் முற்றிலும் தோல்வி, ஆனால் அதற்கான எந்தவித செய்தியும் இங்கு பேசப்படுவதில்லை. போதாக்குறைக்கு சீனா, இந்தியப் பொருளாதார முடிவுகள் தன்னளவிலானதாக இருக்கவேண்டுமென எச்சரிக்கை விடுத்திருக்கிறது. அதாவது, அமெரிக்கக் கைக்கூலியானால், சீனாவின் பொருளாதாரத் தாக்குதலுக்கு ஆளாவீரகளென மிரட்டியுள்ளது. மோடி, இறுகப்பற்றிக் கொண்ட டொனால்டு ட்ரம்ப்க்கு அமெரிக்காவில் ஆட்சியில் தொடர்வதிலேயே சிக்கல். அவருக்கெதிரான பதவியிறக்க நடவடிக்கையை துவங்கிவிட்டது அமெரிக்க நாடாளுமன்றம். ஆக மொத்தம் மோடியின் அமெரிக்கப் பயணத்தில் பலன் எதிர்மறை மட்டுமே. ஆனால் இங்கே அந்த வெற்றி வீரரை வரவேற்று ஜெயகோஷமிட மேற்படி ஊடகவியாதிகள் தயார். ஆம், இந்த ஊடக நோயாளிகள் தங்களது ‘அறியாமை உற்பத்தி இயந்திரத்தினை தயார்நிலையில் வைத்திருக்கிறார்கள்’. இந்த ‘அறியாமை பரப்பல் சுழல்’ இந்திய ஊடகவியல் தளத்தின் பிரிக்கவியாலாத அங்கமாகிவிட்டது. இது, மோடி எனும் அதிமனித உற்பத்தியின் ஒப்பற்ற கொடை அல்லது துணை விளைவு..