சமீபமாக பாரதியார் பல்கலைக்கழக (யுவபுரஷ்கார் விருதாளர்களுக்கான) கருத்தரங்கின் போது பேசிய பாரதி கிருஷ்ணகுமார் தான் ஒரு நிகழ்ச்சியில் கால்மேல் கால் இட்டு அமர்ந்ததற்காகக் கண்டிக்கப்பட்ட சம்பவத்தை குறிப்பிட்டார். அப்போது அவர் பொதுவாக அடிமை மனநிலை கொண்டவர்கள் கால்மேல் கால்இடாமல், கால்களை ஏதோ கட்டைகளைப் போல வைத்திருப்பார்கள் எனச் சொன்னார். பிற்பாடு யோசித்தபோது இது ஒரு முக்கிய பார்வை எனப் பட்டது. கால்மேல் காலிடாமல் இருப்பதைப் பற்றி மட்டுமே அவர் சொல்லவில்லை (துணிச்சலான ஒருவர் கால்மேல் காலிடும் விருப்பமில்லாமலும் இருக்கலாம்). எளிய மனிதர்கள் தம் உடல்மொழியினூடாக எப்படி சமூக அதிகாரத்தை எதிர்கொள்கிறார்கள் என்பதைப் பற்றி அவர் பேசுகிறார்.
தன்னை அதிகார மையங்கள் கவனிக்கின்றன, கண்காணிக்கின்றன என உணர்ந்துகொள்ளும் ஒருவர் மூன்று விதமாக எதிர்வினையாற்றலாம்:
1) தனித்துவமற்ற, தனி குணமற்ற, தனி தோற்றமற்ற ஒருத்தராக மாற்றிவிட்டு தன்னைக் கும்பலோடு கரைத்துக் கொள்ளலாம். எந்த சந்தர்ப்பத்திலும் கேள்வி எழுப்பாதவராக, கருத்துக்களை வெளிப்படுத்தாதவராக, கருத்துசொல்லும் நெருக்கடி வந்தாலும் நழுவலாகச் சொல்லிவிட்டு செல்கிறவராக அவர் இருக்கலாம். இத்தகையோர் நிச்சயமாக முன்னிருக்கையில் கால்மேல் கால்இட மாட்டார்கள்.
2) அதிகாரத்தின் பார்வையைத் தன்மீது உணராமல் அல்லது உணர்ந்தும் அதை நினைவில் வைக்காமல் போகலாம்; வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என இருக்கலாம்.
3) நீயென்ன சொல்வது, நான் என்ன செய்வது என துணிந்து கால்மேல் கால் இடலாம். பெரிதாய் பக்கடா மீசை வளர்க்கலாம்; டாட்டூ குத்திக் கொள்ளலாம்; சத்தமாக சிரிக்கலாம்; துணிந்து விமர்சிக்கலாம்; தன் தோற்றத்தினாலும் செயல்களாலும் தொடர்ந்து அதிகாரத்தை எரிச்சலூட்டலாம்.
நம் சமூகத்தில் பெரும்பாலானோர் இந்த முதலிரண்டு வகைமைக்குள்தான் வருகிறார்கள்.
என் கிராமத்தில் முன்பு ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு விதமான தோற்றம் இருந்தது நினைவுக்கு வருகிறது. ஒருவர் சதா இரண்டு வார தாடியுடன், முதல் இரு சட்டை பட்டன்களைத் திறந்து விட்டபடி திரிவார்; மற்றொருவர் சட்டையணியாமல் பெரிய தொப்பையுடன் தோள் துண்டு மட்டுமே அணிந்திருப்பார்; சிலர் பெரிய முறுக்கு மீசையும் மற்றும் சிலர் நீண்ட தாடியும் வைத்திருப்பார்கள். சிலர் பல வருடங்களாக முடியே வெட்டாமல் பாகவதர் போல தோற்றமளிப்பார்கள். சிலரது மூக்கில் இருந்து புசுபுசுவென தோன்றும் மயிர்கள் குழந்தைகளை அச்சுறுத்தும். ஒவ்வொரு மனிதனையும் இந்த தனித்துவ தோற்றத்தினாலே மனதில் பதித்திருப்பேன். ஆனால் இவர்கள் இடையே எங்களூர் மத்தியவர்க்க குமாஸ்தாக்கள் மட்டும் எந்தத் தோற்ற தனித்துவமும் இல்லாமல் இருப்பார்கள். அவர்கள் தினமும் ஒரே வண்ணத்தில் கால்சட்டையும் ஒரே வெண்பழுப்பு சட்டையும் அணிவார்கள். இவர்களின் கன்ணாடிகூட ஒரே போலத்தான் இருக்கும். தினமும் சவரம் செய்வார்கள்; தவறாமல் இஸ்திரி பண்னி சட்டை போடுவார்கள். விடுமுறை தினமன்று கூட அப்படியே அலுவலகம் செல்வது போன்றே இருப்பார்கள். பேச்சிலும் ஒரு கவனம், நேர்த்தி, சின்னதாய் பதற்றம் இருக்கும். இவர்கள் அவர்களை மதிக்க மாட்டார்கள்; அவர்கள் இவர்களைப் பகடி பண்ணுவார்கள்.
இன்று பெரும்பாலானோர் விவசாயம், தனித்தொழில், வேலையற்றிருக்கும் வேலை ஆகியவற்றில் இருந்து அலுவலக வேலைகளுக்கு நகர்ந்து விட்டார்கள். அதோடு மக்களின், குறிப்பாக ஆண்களின் தோற்றமும் ஒற்றைத்தன்மை கொண்டதாக மாறி விட்டது; அவர்களின் உடலசைவுகளில் எந்திரத்தனம் வந்து விட்டது.
இன்றைய மத்திய வர்க்க ஆண்கள் முடியை ஒழுக்கமாக சீராக வெட்டிக் கொள்ளும் போக்கை கவனியுங்கள். அது ஒருவரது தோற்றத்தை அழகாக்குவதை விட அவரைத் தனி அடையாளமற்றவராக ஆக்குகிறது. பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவியரின் தோற்ற ஒழுங்கு வலியுறுத்தப்படுகிறது – நீண்ட முடியை வைத்திருப்பவர்கள், வண்ணமடிப்பவர்கள், டாட்டூ குத்திக் கொள்பவர்கள் கண்டிக்கப்படுகிறார்கள். ஏனென்றால் தோற்றம் மூலம் ஒருவர் செய்யும் கலகம் அதிகாரத்தை தொந்தரவு செய்வதைப் போல வேறெதுவும் செய்வதில்லை. நீங்கள் கருத்தளவில் கலகம் செய்தால் அந்தக் கருத்தை அங்கீகரிக்காமல் அதிகாரம் உங்களை மௌனமாக்கலாம். ஆனால் தோற்றமளவில் கலகம் செய்தாலோ அதிகாரத்தால் உங்களைப் புறக்கணிக்க முடியாது. அது உங்களை நேரடியாகத் தடுத்தே ஆக வேண்டும்.
மெல்ல மெல்ல நீங்கள் ஒன்றைப் புரிந்துகொள்கிறீர்கள். – தனியாகத் தெரிந்தால் நீங்கள் அதிகமான பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும்; வகுப்பில் ஆசிரியர்கள் நீங்கள் செய்வதை நுணுக்கமாகக் கவனித்துக் கேள்வி கேட்பார்கள்; வகுப்பில் பிறரின் ஒழுங்கீனத்துக்கு நீங்களே முகமாவீர்கள். அலுவலகத்திலும் அப்படியே நடக்கும். பேச்சு, செயல், தோற்றம் ஆகியவற்றில் தனித்து தெரிகிறவர்களின் சின்னச் சின்ன பிழைகளும் நிர்வாகத்தால் பெரிதுபடுத்தப்படும். சக பணியாளர்களின் உட்குழுவிலும் அவர்கள் (பெண்களாக இருக்கும் பட்சத்தில்) அதிகமாய் கிண்டல்களை, விமர்சனங்களை எதிர்கொள்வார்கள். எதற்கு வம்பு என முடிவெடுத்து பலரும் அடையாளமற்றவராய், ஜெராக்ஸ் பிரதிகளாகத் தம்மை மாற்றிக் கொள்கிறார்கள். ஆயிரம் முகங்களில் ஒரு முகமாய் ஒளிந்து கொள்கிறார்கள். இப்போது எந்தப் பிரச்சினையையும் தனதில்லை எனச் சொல்லி விலகிச் செல்லலாம்; தன்னை யாராவது விமர்சித்தால் கூட பக்கத்தில் இருப்பவரைத்தான் சொல்கிறார் என பாவனை பண்ணி தப்பிக்கலாம்.
ஆச்சரியமாக தோற்றமளவிலான கலகத்தைப் பொறுத்தமட்டில் ஆண்களே முதலில் காயடிக்கப்பட்ட முகமற்றவர்களாகிறார்கள். ஆனால் பெண்கள் தொடர்ந்து உடையிலும் செயல்களிலும் தம்மை வெளிப்படுத்த அனுமதிக்கப்படுகிறார்கள். அவ்வப்போது கால்மேல் கால்இடுவதற்காகத் தண்டனைகள், கண்டனங்களுக்கும் அவர்கள் ஆளானாலும் ஒருவித ஒழுங்குக்கு வராத தோற்றம் கொண்டவர்கள் அவர்களே. ஆண்களின் ஆடை வண்ணங்களைப் பாருங்கள். – ஒன்று இரண்டு நிறங்களுக்கு உள்ளாகவே சீருடை போல சட்டை, கால்சராய்களை அணிவார்கள். கடைகளிலும் அவர்களுக்கு என்று தனித்துவமான வண்ணக்கலவைகள், வடிவங்கள், ஸ்டைலான பாணிகளில் உடைகள் அதிகம் வருவதில்லை. ஆனாலும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஏராளமாக மாறுபட்ட ஆடைகள் கிடைக்கிறன. (இதனாலேயே ஆடைகளைத் தேர்வதில் பெண்கள் அதிக நேரம் எடுத்துக் கொள்கிறார்கள்). மேற்குடன் ஒப்பிடுகையில், வேலையிடங்களில் பெண் ஊழியர்களின் தோற்றத்தில் ஒரு அடையாளமின்மையை, ஒற்றைத்தன்மையை வலியுறுத்த இந்தியாவின் நிர்வாகங்களால் முடியவில்லை.
உதாரணமாக சேலையை எடுத்துக் கொள்ளுங்கள். சுடிதாருடன் ஒப்பிடுகையில் பெண்ணுடம்பை மறைப்பதைவிட வெளிப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டு அமைக்கப்பட்ட ஆடை சேலை. பெண்ணுடலில் பாலுணர்வைத் தூண்டும் இடங்களை கவனமாக இது பிரதானப்படுத்துகிறது; லேசாய் காற்றடித்தால், அணிகிறவள் கவனமின்றி இருந்தால் உடல் பாகங்களை வெளிச்சமிட வைக்கும் ஆடை இது. ஒரு பக்கம் தம்மைப் பேரழகியாக மாற்றினாலும் அது கோருகிற கவனம், அதை அணிய எடுத்துக் கொள்ளும் நேரம், அது ஒரு சூழலில் ஏற்படுத்தும் ஈர்ப்பு, அதன் வெக்கை, உறுத்தும் ஆண் கண்களின் எரிச்சலுணர்வு எனப் பெண்கள் அலுவலகங்களில் அணிய விரும்பாத ஆடையாகவும் சேலை உள்ளது. ஆனால் அதற்கு மாற்றும் இல்லை.
ஒரு அலுவலகத்திலோ அல்லது கல்லூரி வகுப்பிலோ பாருங்கள் – பெண்கள் தம்மிடம் ஏராளமான வண்ணங்களை, பரபரப்பை, பலவித அலங்காரங்களின் கவன ஈர்ப்பை / களைப்பை, நான் தனி, நான் தனி என கோரும் உடல்மொழியை, நான் தனியானவள் அல்ல, நான் தனியானவள் அல்ல எனக் கூடவே கோருகிற உடல் முனைப்பைக் கவனிக்கலாம்.
கிட்டத்தட்ட எல்லா கல்லூரிகளிலும் மாணவிகள்மீது கடும் ஆடைக்கட்டுப்பாடுகள் உண்டு. துப்பட்டாவை எப்படி அணிய வேண்டும், சுடிதார் டாப்பின் நீளம் எந்தளவுக்கு இருக்க வேண்டும், எத்தகைய செருப்பு அணியலாம், இந்த ஆடையுடன் அவர்கள் எப்படி அமர வேண்டும் (காலை அகட்டி அமரக் கூடாது, எகிறி குதித்து ஓடக் கூடாது, குனிந்து மார்புப் பிளவைக் காண்பிக்கக் கூடாது).
மாணவிகளில் ஒரு பகுதியினர் இந்த ஆடைக்கட்டுப்பாடுகளை விதவிதமாகக் கேலிக்கூத்தாக்குகிறார்கள். சிலர் துப்பட்டா அணிந்து வந்து வகுப்பை அடைந்ததும் அதைக் கழற்றி வைப்பார்கள். சிலர் சுடிதார் கால்சராய்க்குப் பதில் கவர்ச்சியான லெக்கின்ஸ் அணிவார்கள். இறுக்கமான டாப்ஸ் அணிவார்கள். சிலர் வெள்ளை டாப்ஸுக்குக் கறுப்பு பிரா அணிவார்கள். உயரமான குதிகால் கொண்ட செருப்பணிவார்கள். கூந்தலை வண்ணமடிப்பார்கள். சில பெண்கள் அடுத்த கட்டத்துக்குச் சென்று கழுத்தில் டாட்டூ அணிவார்கள். அடிப்பது போல உதட்டுச்சாயம் பூசிக் கொள்வார்கள். நிர்வாகங்கள் இப்பெண்களுடன் மல்லுக்கட்டியே களைத்துப் போகின்றன.
சில கல்லூரி மாணவிகள் ஆண் ஆசிரியர்களைக் கலவரமாக்க தாழ்வான கழுத்து கொண்ட இறுக்கமான டாப்ஸை அணிந்து வந்து முன்னிருக்கையில் அமர்ந்து சற்றே குனிந்த நிலையில் சந்தேகங்களைக் கேட்பார்கள். பார்வையைக் கீழே இறக்காத ஆண் ஆசிரியர்கள் இந்த தேர்வில் ஜெயித்து விட்டார்கள் எனப் பொருள். ஒருமுறை இறக்கி விட்டால் பிறகு அந்த ஆசிரியர்மீதான மரியாதையை இழந்து விடுவார்கள். அவர்களை கேலி செய்வதுடன் தொடர்ந்து அவர்களுக்குப் பரீட்சை வைத்துக் கொண்டே இருப்பார்கள். ஒரு கட்டத்தில் அந்த ஆசிரியர் ஒரு கேலிச்சித்திரம் ஆகி விடுவார். ஆனால் கழுத்துக்குக் கீழே பொருட்படுத்தாத ஆசிரியரிடம் இப்பெண்கள் நிமிர்ந்த நிலையில் இயல்பாகப் பேசுவார்கள். ஒழுக்கவாதத்தை போதிக்கும் ஆண் நிர்வாகிகளுக்கும் இந்த மாணவிகள் தேர்வு வைத்து தோற்கடிப்பதுண்டு. இவர்களைச் சமாளிப்பது எப்படி எனப் புரியாத நிலையில் நிர்வாகமும் அதிகார மையமும் இவர்களைக் கூடுதலாக கண்காணிக்கிறது, மேலும் கறாரான கட்டுப்பாடுகளை விதிக்கிறது.
ஏன் ஆண்களுக்கு இத்தகைய கட்டுப்பாடுகள்? இல்லையென்றால் ஆண்களுக்கு குறைந்தபட்சமான ஆடை சுதந்திரமே இல்லை. ஆடையைக் கொண்டு கலகம் பண்ணும் எந்த சாத்தியங்களும் இல்லை என்பதாலே. ஒரு ஆண் மூக்குத்தி அணிய முடியுமா, இல்லை கழுத்தில் விதவிதமான மாலைகள் அணிய முடியுமா?
ஒரு பெண் பொட்டு வைப்பது நெற்றியை அழகாக்க மட்டுமல்ல, கருவிழிகளை நோக்கிப் பார்வையைத் திருப்பவும்தான்; மூக்குத்தி என்பது மூக்கை அழகாக்க அல்ல .- அது ஒரு பெண்ணின் மூக்கை நேர்த்தியாக்கும். மூக்குத்தி ஆணின் பார்வையை அதற்குக் கீழே உள்ள அந்த அழகான உதட்டை நோக்கித் தள்ளி விடுகிறது; மாலைகள் கழுத்தை மின்னச் செய்வதுடன் கீழே உள்ள மார்புகளை நோக்கியும் ஆண் மனத்தை நழுவ விடுகிறது; ஒரு பெண்ணின் கைவளையலைக் காணும் நீங்கள் அது எங்கெல்லாம் செல்கிறதோ அங்கெல்லாம் உங்கள் மனமும் சென்று அலைக்கழிவதை உணர்கிறீர்கள். மனித தனித்துவத்தின் மிகப்பெரிய ஆயுதம் பாலியல்தான். – இந்தப் பாலியலை மிக ஆற்றலானதாக்கும் பல ஆயுதங்களை சமூகம் ஒரு பெண்ணுக்கு வழங்குகிறது.
இதையே அழகிய உதடு கொண்ட, மீசை வைத்த, விரிந்த மார்பும், வலுவான பைசப்ஸும், முறுக்கேறிய முழங்கையும், ஒடுங்கிய இடுப்பும் கொண்ட ஒரு ஆணுக்கு வழங்குவதில்லை. நமது சங்க இலக்கியத்தில் ஆண்கள், பெண்களுக்கு இணையாக, பலவித அணிகலன்கள் அணிபவராக இருந்தனர் எனும் சேதி வருகிறது; ஆனால் எந்திரமயமாக்கலுக்குப் பிறகு ஆண்கள் கூட்டங்கூட்டமாக வேலைக்குச் செல்லும் வரலாற்றுச் சூழலில் இந்தப் பழக்கம் அறவே ஆண்களை விட்டுப் போய் விட்டது. ஆண்கள் தம் பாலியல் அதிகாரத்தை பணம், சமூக அந்தஸ்து, சாதி பெருமிதம், இவற்றை வைத்து சதா வீறாப்பாகத் திரிவது என உடம்பில் இருந்து அரூபமான, நிலையற்ற சமூக இருப்பிடம் அடகு வைத்து விட்டான். அவன் தன் பாலியல் உடம்பை அதற்குத் தொடர்பில்லாத, இணையில்லாத பல அற்ப விசயங்களாக உருமாற்றி விட, உடம்பின்மீதான அக்கறை அவனுக்கு வெகுவாகக் குறைந்து போனது.
ஒரு பெண் தன்னை ஒரு தனித்த இருப்பாகப் பார்க்கும்போது ஆணோ தன்னை மொத்த ஆண் கூட்டத்தின் ஒரு பகுதியாக காண்கிறான். அதனாலே அவன் ‘சிங்கம்ல’ என இல்லாத மீசையை முறுக்கி, கூம்பின நெஞ்சை விடைத்து என பலவீனமாகக் கோருகிறான். சாதித்தலைவர்கள், சினிமா ஹீரோக்கள் என யார் பின்னாவது திரிந்து தன்னை பலமாகக் காட்ட தவிக்கிறான். கடந்த அரை நூற்றாண்டில் ஆண்கள் கைவிடப்பட்டது போல பெண்கள் கைவிடப்படவில்லை என உளவியலாளர் ஷாலினி ஒரு பேட்டியில் சொல்கிறார். பெண்ணின் பூப்படைதலை சமூகம் ஒரு விழாவாகக் கொண்டாடும்போது ஆணின் “பூப்படைதலை” அது பொருட்படுத்துவதே இல்லை (ஏனென்றால் ஆணின் பாலுடல் சமூக அதிகார விழைவின் பகுதியாக மாற்றப்பட்டு விட்டது; அவனுக்கென, அவன் உடலுக்கென ஒரு தனித்த மதிப்பு இல்லை). பாலுறவுக்குத் தயாரான பெண்ணுடன் அனுபவங்களைப் பகிர்தல், அவளுக்கு வழிகாட்டுதல், அவளை அரவணைத்தல் என மூத்த உறவுக்காரப் பெண்கள் திரளும்போது ஒரு பதின்வயது ஆண் திசையறியாமல் தனித்துவிடப்படுகிறான். அவனது ஆண்மை பிம்பம் முழுக்க கற்பனையாலும் வெற்றுப் பெருமைகளாலும் நிரம்புகிறது. அவனுக்கு தன் உடம்பை அழகாக, வலுவாக, கம்பீரமாக உருவாக்கவோ தன் மொழியைக் கூர்மையான திறன்படைத்ததாக மேம்படுத்தவோ தெரிவதில்லை. ஒரு பெண்ணுடன் உரையாடவோ அவளைக் கவரும் விதம் தன் உடம்பை முன்வைக்கவோ தன்மீது விழும் பார்வைகளைப் பொருட்படுத்தவோ தெரியாதவனாக அவன் வளர்கிறான்.
இதனாலே உடல்மொழியைப் பொறுத்தமட்டில் அதிகாரத்துடன் உடனடியாய் அடிபணியும் அடிமையாகவோ அல்லது தேவையற்று முரண்படும் வெடுக்கான இளவட்டமாகவோ அவன் மாறுகிறான் -அவன் பயன்படுத்தப்படுகிறான், அழிக்கப்படுகிறான், அலைக்கழிக்கப்படுகிறான். ஆனால் பெண்களோ, சமூக அதிகாரத்துக்கு உடன்பட்டவாறே தொடர்ந்து அதை நுட்பமாய் எதிர்க்கவோ முறியடிக்கவோ தெரிந்தவர்களாக இருக்கிறார்கள் (இதில் விதிவிலக்கான பெண்களும் இருக்கிறார்கள்தாம்).
பெண்கள் எந்தச் சூழலையும் பளிச்சென்று, துடிப்பானதாக மாற்றி விடுவார்கள். இதற்குக் காரணம் அவர்களின் ஆளுமை மட்டுமல்ல, அவர்களுக்கு இந்த சமூகம் அனுமதித்துள்ள கலக உடல்மொழியும்தான்.
பெண்களின் சமூக இயக்கம் என்பது தொடர்ந்து பல பிரச்சினைகள், விமர்சனங்கள், கண்டனங்கள், ஒடுக்குமுறைகள், தாக்குதல்களுக்கு நடுவில்தான் சாத்தியமாகிறது; இதற்குக் காரணமும் அவர்களுக்கு இதே சமூகம் அனுமதிக்கும் கலக உடல்மொழி தான்; கலகம் செய்யும் அவர்களின் உடம்புக்கு சமூகம் அளிக்கிற தனியான வெளியும்தான்.
இதைப் புரிந்துகொள்ள நாம் இப்பெண்களை கன்னியாஸ்த்ரீகளுடன் ஒப்பிட வேண்டும். ஆர்ப்பாட்டமான, கண்ணைப் பறிக்கும் தோற்றத்துடன் செல்லும் ஏராளமான பெண்களுக்கு நடுவே ஒதுக்கமான, சுய-ஒடுக்கமான உடல்மொழியுடன் செல்லும் கன்னியாஸ்த்ரீகளை நான் கவனிப்பதுண்டு. அவர்களில் அழகிகள் உண்டு, ஆனால் அந்த அழகு யாருக்கும் பாதகமற்ற மழுங்கடிக்கப்பட்ட கத்தி. அந்த கத்தியினால் அவர்களுக்கும் சாதகம் இல்லை, பிறருக்கும் பாதகமில்லை; அவர்களின் உடம்பென்னும் கத்தியினால் அவர்களுக்கும் பாதகமில்லை; சமூகத்துக்கும் சாதகமில்லை. சமூகப் பண்பாடு அளிக்கும் பல குறியீடுகளை ஒரு பெண் எடுத்துப் பயன்படுத்துவதே அவளை அதிகாரத்தை நொறுக்கும் உடல்மொழி கொண்டவளாக்குகிறது. தன்னளவில் ஒரு பெண்ணுக்கு எந்த ஆற்றலும் இல்லை. கலாச்சாரக் குறியீடுகளைக் கைவிடுகிறவளே ஒரு கன்னியாஸ்த்ரீ – அவள் வெறுமனே பாலியலையோ உடைமைகளின்மீதான உரிமையையோ துறப்பவள் மட்டும் அல்ல. தன் அடியாழத்தில் ஒரு கன்னியாஸ்த்ரீ. பிறந்து வளர்ந்த குழந்தையைப் போன்றவள். ‘வெறுமனே’ தன் உடம்பை வைத்து என்ன பண்ணுவது எனப் புரியாமல் அவள் திகைக்கிறாள்; பிறகு மதத்துக்குள், அதன் சடங்குகளுக்குள் (ஒரு ஆண் சமூக இருப்பிடம் தன் உடம்பை ஒப்படைப்பதைப் போல) போய் ஒடுங்கிக் கொள்கிறாள். இதனாலே அவர்களிடம் சுலபமாக ஆண்மொழி தோன்றி விடுகிறது. இந்த இடத்துக்கு வந்து சேரும் கன்னியாஸ்த்ரீ தேவாலயமும் மடமுமே தன் மொழி என நம்ப தலைப்படுகிறாள். இப்போது அவளுக்கு ஒரு விசயத்தில் ஆறுதல் கிடைக்கிறது. லௌகீக வாழ்வில் இருக்கும் பெண்களைவிட தான் அதிக சுதந்திரம் கொண்டளாக உள்ளதை அவள் அறிகிறாள். உடம்பின் மீதுள்ள உரிமையினால், அது தரும் தனித்துவத்தினால் ஒரு பெண் இழக்கும் சுதந்திரத்தை மற்றொரு பெண் முன்னதை இழந்து பெறுகிறாள்.
ஒரு கன்னியாஸ்த்ரீ தன் அங்கியை அணிந்து சிலுவையை மாரில் அணியும்போது பெறும் அந்த பாலியலற்ற தேகத்தின் சுதந்திரத்தையே ஆணும் சிறுவயது முதலே அனுபவிக்கிறான். அவனால் தெருவில் ஒன்றுக்குப் போக முடியும்; நடைபாதையில் முழுபோதையில் லுங்கி விலகியது கூடத் தெரியாமல் படுத்து தூங்க முடியும். ஆனால் அதைக் கடந்து நோக்கினால் அவனுக்கு இந்த சமூகத்துடன் உறவாட ஒரு மொழி இல்லை, பண்பாட்டுக் குறியீடுகளை எடுத்தாள ஒரு பயிற்சியோ சாத்தியமோ வெளியோ இல்லை. இதனாலே ஒரு ஆணும் கன்னியாஸ்த்ரீயும் ஒரே உடல்மொழியைக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு சூழலுக்குப் பொருந்துகிற உடல்வெளிப்பாடு என்பதையே நவீன அதிகாரம் நம்மிடம் கோருகிறது. இதை வலியுறுத்துகிற அதே சமயம் ஒரு சூழலுக்குப் பொருந்தாத உடல் வெளிப்பாட்டை அது பெண்களுக்கு மட்டுமே அனுமதிக்கிறது (ஜிம்முக்கு இறுக்கமான டிராக்பேண்ட், டிஷர்ட் அணிந்து வரும், கோயிலுக்குப் பளீரென பட்டுச்சேலையில் வரும் பெண்களை நினைவில் கொள்ளுங்கள்). பெண்களின் உடல் இயல்பாகவே எந்த ஒரு தர்க்க ஒழுங்குக்குள்ளும் ஒடுங்காத பேரொழுக்கு (அதுவே அவர்களின் மொழியாக இலக்கியத்திலும் உள்ளது). ஆனால் ஆண்களின் உடல்மொழியும், சமூக மொழியும் இருமைகளுக்குள் சிறைப்பட்ட இறுக்கமான ஒன்று என ஹெலன் சிக்ஸூ எனும் பெண்ணியவாதி தனது The Laugh of Medusa எனும் கட்டுரையில் சொல்கிறார். அதாவது கலகம் என்பது பெண் இருப்பின் அடிப்படையாக இயல்பாகவே உள்ளது. அதனால்தான் ஆண்களைப் போன்றே, formal attire அணியும் சந்தர்ப்பம் வரும்போது அவர்கள் சேலை அணிந்து வந்து அதிகாரத்தின் நோக்கத்தை முறியடிக்கிறார்கள்; கார்ப்பரேட் அலுவலகங்களில் சட்டை, கால்சராய் அணிந்து வரும் பெண்களும் தமது லிப்ஸ்டிக், கூந்தலின் ஸ்டைல், ஆளை அடிக்கிற ஒப்பனை, வாசனைத் திரவிய, உள்ளாடை மூலம் மாரை மேலெடுத்துக் காட்டுவது என அலுவலக வேலை கோரும் தர்க்கத்துக்கு நேரெதிரான அரசியலைத் தம் உடல்மொழியால் நிகழ்த்துகிறார்கள். கறாரான ஆவணங்கள், பி.பி.டி.யுடன் ஆண்கள் முறுக்கான எந்திரத்தனத்துடன் நடத்தும் அலுவலக கூட்டங்களில் வந்து விடும் இப்பெண்கள், அக்கூட்டங்களில் தம் சீரான பங்களிப்பை வழங்கியபடியே, ஒரு நொடியில் அதன் அரசியலை நேர்கீழாக மாற்றி விடுகிறார்கள்.
இங்கு நாம் கதராடையின் தனியாளுமை பற்றியும் பேச வேண்டும். அந்நிய ஆடையே மேன்மை என நம்பப்பட்ட காலத்தில் காந்தி உள்ளூர் கதராடையை நெய்வதை, அதை வாங்குவதை, அணிவதை அரசியலாக்கினார். கதர் என்பது பிரிட்டிஷ் அரசின் அரசியல் சரிநிலை மீதான பெரிய தாக்குதலாக மாறியது. எது இயல்பானது என பிரிட்டிஷார் நம்மை நம்ப வைத்தனரோ அதையே இயல்பற்றது என காந்தி நமக்குப் புரிய வைத்தார். வெள்ளையர்கள் உடம்பை முழுக்க மறைப்பதே நாகரிகம் என (விக்டோரிய ஒழுக்கவியலின் அடிப்படையில்) நம்பினால் தன்னை மிகக்குறைவாக மறைப்பதே எளிமை என காந்தி எதிர்-அரசியலை முன்னெடுத்தார். இந்த குறியீட்டுத் தாக்குதல் மெல்ல மெல்ல இந்தியாவில் “கால்மேல் காலிட்டு அமர்ந்திருந்த” பிடிட்டிஷ் சாம்ராஜ்யத்தை உருக்குலைத்தது.
ஆனால் சுதந்திரத்துக்குப் பிறகு கதராடை, குறிப்பாக அரசியல்வாதிகளின் வெள்ளை ஆடை, எந்திரமயமான இந்திய சமூகத்தில் மத்திய வர்க்கத்தின் ஆடைக்கலாச்சாரத்தில் இருந்து மெல்ல மெல்ல விலகிப் போனது. “தில்லுமுல்லு”, “மன்னன்”, “தர்மத்தின் தலைவன்” போன்ற படங்களில் ரஜினி கதராடையை வைத்து செய்த நகைச்சுவை இந்த அந்நியத்தன்மையின் பின்னணியில் தோன்றியதுதான். இன்று நாம் பொது சமூகத்தில் வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டி அணிவது அருகி வருகிற நிலையில் அந்த உடை ஒரு படாடோபமான, மேல்தட்டு, அதிகார உச்சத்தின் குறியீடாக மாறியது. மேலும் பளிச்சென்ற வெள்ளை வண்ணம் மத்திய வர்க்க மங்கலான ஆடை வண்ணங்களின் கலாச்சாரத்துக்கு எதிர்துருவமாக உள்ளது. ஒருவர் பளிச்சென்று ராம்ராஜ் வெள்ளையில் அலுவலகத்துக்கு வந்தால் அவர் தனித்து தெரிகிறார். அவருக்கு ஒரு ஒளிவட்டம் வருகிறது. அவருக்கே அது உறுத்தலாக மாறுகிறது. நான் சில நண்பர்களுடன் குர்தா வாங்குவதற்காக காதி கடைக்கு சென்றபோது வெள்ளை நிற குர்தா மிக அரிதாகவே இருந்ததைச் சுட்டிக் காட்டினேன். அப்போது நண்பர் சொன்னார், “வெள்ளை குர்தாவை நீ ஒரு விசேச நிகழ்ச்சிக்கு அணிந்து சென்றால் மட்டுமே பொருத்தம். அலுவலகத்தில் அது ரொம்ப படாடோபமாகத் தப்பாகத் தெரியும். அதை நிர்வாகம் விரும்பாது.” இப்படி ஆடைத்தேர்வில் எங்கெல்லாம் அதிகார சமக்குலைவு நேர வாய்ப்புண்டோ அங்கெல்லாம் ஆண்கள் அதைக் கவனமாகத் தவிர்க்கிறோம்.
இன்று தம்மை மத்திய வர்க்கத்துக்கு இணக்கமாகக் காட்டிக்கொள்ள விரும்பும் அரசியல்வாதிகள் (கெஜ்ரிவால்போல) சட்டை, கால்சராய் அணிகிறார்கள். திருமா, ரவிக்குமார் போன்ற தலித் தலைவர்கள் இதே வெள்ளை, சட்டை, கறுப்புக் கால்சராயை (மத்தியவர்க்க மேல்சாதி அதிகாரத்துக்கு எதிரான) எதிர்-அதிகார குறியீடாக அணிகிறார்கள். ஸ்டாலின் போன்ற வருங்கால முதல்வர்கள் நடைபயணத்தின் போது டிராக்சூட், டி-ஷர்ட் அணிகிறார்கள்; அதன் மூலம் வித்தியாசமான நவீனமான தலைவராக தம்மை மக்களுக்கு காட்டுகிறார்கள். இங்கு பிரதமர் மோடியின் ஆர்ப்பாட்டமான நளினமான ஆடைத் தேர்வு சுவாரஸ்யமானது.- தனது ஆடைகளுக்கு லட்சக்கணக்கில் செலவு செய்வதன் மூலம் அவர் தன்னைப் பாரம்பரியமான ஆனால் அதே நேரம் நவீன கார்ப்பரேட் உலகின் பிரதிநிதியாக, பாரத தேசத்தின் பெருமையைப் பறைசாற்றுகிற, அதே சமயம் மேல்மத்திய வர்க்கத்திற்கு இணக்கமானவராகக் காட்டிக் கொள்கிறார். அதாவது நமது பாலிவுட் நாயகர்கள் தொடர்ந்து முன்வைத்த ஒரு உடல் பிம்பத்தை நாட்டின் தலைவர் எடுத்து பயன்படுத்தி வருகிறார். இதன் மூலம் அவர் தன்னை, சுதந்திரத்துக்குப் பின்பான எல்லா பெருந்தலைவர்களையும் போல, மத்தியவர்க்க ஆடைத்தேர்வுக்கு நேர் எதிரானவராகக் காட்டிக் கொள்கிறார். அதிகாரம் அடக்கமான வண்ணங்களை, ஒடுங்கின உடல்மொழியை மத்தியவர்க்கத்திடம் எதிர்பார்க்கிறது; ஆனால் அதிகாரம் படைத்தவர்களோ அதற்கு நேரெதிரான வர்ணங்களை, உடல்மொழியைப் பயன்படுத்துகிறார்கள்.
இவர்களில் சில தலைவர்கள் தமது தனித்துவத்தைப் பேண தம் கொள்கைக்கும் அரசியலுக்கும் பொருந்ததாத எதுவோ ஒன்றைத் தம் தோற்றத்தில் வைத்திருப்பார்கள் – எம்.ஜி.ஆருக்குத் தொப்பியும் கண்ணாடியும், கலைஞருக்கு கறுப்புக் கண்ணாடியும் மஞ்சள் துண்டும். மக்களும் இந்தத் தனித்துவங்களைக் கொண்டே அதனோடு தர்க்கரீதியாக பொருந்தாத இந்த தலைவர்களின் அரசியலைப் புரிந்து கொண்டார்கள். -எம்.ஜி.ஆரின் தாராளமனத்துக்கு, ஹீரோயிசத்துக்கு அவரது கம்பளி குல்லா குறியீடாகியது; கலைஞரின் சமூகநீதி அரசியலுக்கு, சொல்லாற்றலுக்கு கறுப்புக் கண்ணாடி குறியீடாகியது. ஓ.பி.எஸ், எடப்பாடி போன்ற இரு தலைவர்கள் ஜெயலலிதாவுக்குப் பிறகு ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த போது தமது தக்கவைப்புக்கு தனித்துவ தோற்றம் எதிரானது என உணர்ந்திருந்தனர் – அவர்கள் ஒரு மத்திய வர்க்க ஊழியனைப் போன்றே தம்மைப் பத்தோடு பதினொன்றாக காட்டிக் கொண்டனர்.
பெண் தலைவர்கள் சிலரின் ஆடைத்தேர்வையும் நாம் இங்கு கவனிக்க வேண்டும் – சினிமாவில் தொடர்ந்து தன்னைத் தனியாக, ஆளுமை மிக்க அழகான பெண்ணாக காட்டிக் கொண்ட ஜெயலலிதா அரசியல் தலைவரானதும் தனது அதுவரையிலான பெண் அடையாளங்களைக் கழற்றி வைத்தார். அவரது “கவர்ச்சியின்மை” என்பது ஆண் அரசியல்வாதிகளின் பளிச்சென்ற வெள்ளை ஆடைகளைப் போன்றே மத்தியவர்க்க விழுமியங்களுக்கு முரணாகத் தோன்றியது. ஆண்களை விட அதிகாரமிக்க தலைவியாக அவரைக் காட்ட இது உதவியது. உபியில் மாயாவதியும் வங்காளத்தில் மம்தாவும் இதைத் தம் பாணியில் செய்தனர்.
எழுத்துலகில் வணிகப்புலத்தில் இயங்கியவர்களில் தம் ஆளுமையை எழுத்து வழி தனித்து ஒளிரச் செய்தவர்கள் தமக்கென ஒரு தோற்ற மரபையும் ஏற்படுத்தினவர்களே.- ஜெயகாந்தன், பாலகுமாரன் போன்றோரை உதாரணம் காட்டலாம். ஆனால் தம் ஆளுமையை எழுத்தில் ஒலிக்கும் குரலில் இருந்து தனித்துக் காட்ட விரும்பியவர்கள் தம் தோற்றத்தை மத்தியவர்க்கத்தின் தொடர்ச்சியாகவே வைத்துக் கொண்டார்கள். சினிமா இயக்குநர்களில் பாலுமகேந்திரா (தொப்பி), மிஷ்கின் (கறுப்புக் கண்ணாடி), ராம் (தாடி) என யீவீறீனீ ஸீஷீவீக்ஷீ பாணி இயக்குநர்கள் தாமே தம் சினிமா என ஒரு கதையாடலை உருவாக்குகிறார்கள்; இளையராஜா, ரஹ்மான் போன்ற இசையமைப்பாளர்கள் தம் இசை தாமே தான் என சேதியை விடுக்கிறார்கள்; இதற்குத் தம் தோற்றத்தில் ஒரு தனித்துவ அடையாளத்தை திரும்பத் திரும்ப முன்னிறுத்துகிறார்கள். ஆனால் வணிக சினிமாவின் தேவைகளுக்கு, இலக்கணத்துக்கு முழுக்கப் பொருந்தியவர்களாக தம்மைக் காண்பிக்கும் சங்கர், ரவிகுமார், ஹரி போன்றோர் தம் தோற்றத்தை முடிந்தளவுக்கு சாதாரணமாகவே வைத்துக் கொள்கிறார்கள். வணிகப்படங்களில் தனித்துவமான தரமான போக்கைக் கொண்டிருக்கும் மணிரத்னத்தைப் போன்றவர்கள் தம் ஆளுமையையும் படத்தின் மொழியையும் தனித்தனியாகக் காட்ட விரும்புவதால் தம் தோற்றத்தை தனித்துவமற்றதாக முன்வைக்கிறார்கள்.
விளையாட்டிலும் கிட்டத்தட்ட இதே அரசியல்தான்.- தனித்துவமான மேதைகள் தமது உடல்மொழியை, தோற்றத்தை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காண்பிப்பார்கள். சச்சினுக்கு சுருட்டை முடி, கங்குலிக்கு தலை உயர்த்திய நடை, தோனிக்கு ஆரம்ப காலத்தில் நீண்ட கேசம். நேர்மாறாக கவாஸ்கர் திராவிட் போன்றோர் தம்மை மத்தியவர்க்க விழுமியத்தின் பிரதிநிதியாகவே காட்டினர். கபில்தேவ், யுவ்ராஜ், சேவாக் துவங்கி ரோஹித் ஷர்மா வரை அலட்சியமான சோம்பலான உடல்மொழியும் மேதைமையும் துணிச்சலும் இணைக்கப்படும் கண்னிகளாக உள்ளன. இவர்கள் சாதாரணமாக ஆடினாலே நமக்கு அது அசாதாரணமாகத் தெரிகிறது; இவர்கள் சாதாரணமாக அவுட் ஆனால் சோம்பலுடன் அடித்து வெளியேறினதாகத் தோன்ற கோபம் வருகிறது. திராவிட்டுக்கு ஆர்ப்பரிக்காத நாம் சச்சினுக்கு இருக்கையை விட்டு எழுந்து துள்ளிக் குதித்துக் கைத்தட்டினது நமது கிணற்றுத்தவளை வாழ்க்கையில் நாம் செய்யத் துணியாத ஒன்றை இந்த சின்னப் பையன் பண்ணுகிறானே எனும் வியப்பில்தான். தோனி அந்த நீண்ட தலைமுடியுடன் அலட்சியமாக கம்பீரமாக தென்னாப்பிரிக்காவில் உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தை வென்று கோப்பையைத் தூக்கி நடந்தபோது அவரது ஆண்மையின் செருக்கு தன்னைக் கவர்ந்ததாக மனுஷ்ய புத்திரன் எழுதினது நினைவுள்ளது. ஆனால் அதே தோனி அணித்தலைவராகத் தொடர்வதற்கும் நீடிப்பதற்கும் தன் ஆட்டத்தின் போக்கை, பாணியை மாற்றிக் கொண்டார்; உடனே தோற்றத்தையும் நேர்மாறாக மாற்றினார். முழுமையான அதிகாரம் என்பது அதைப் பயன்படுத்துகிறவரை ஒரு கட்டத்தில் காயப்படுத்தும் என அவர் அறிந்திருந்தார் (மிகுந்த அதிகாரத்தை ஒருவர் தன் உடல்மொழியில் கட்டற்று வெளிப்படுத்துவதை சமூகமும் அணி வீரர்களும் விரும்ப மாட்டார்கள்); கோடிக்கணக்கான மக்கள் கவனிக்கும் அணியின் தலைவராக இருப்பதன் நெருக்கடிகளை விட்டேத்தியாக இருந்து கையாள்வதே சரி என அவர் உணர்ந்து கொண்டார். ஆகையால் அவர் அடிக்கடி பதுங்கிக்கொள்ள மத்தியவர்க்கத்தின் அடையாளமற்ற பொதுத்தன்மை வசதியாக இருந்தது. முடியை ஒட்டக் கத்தரித்து, எந்தப் பெருமை, தனித்துவத்தையும் கோராத முதிர்ச்சியான தலைவரானார். அதிரடி தோனி கேப்டன் கூல் ஆனார்.
இப்படித் தோற்றமானது நீ தனித்து தெரிய விரும்புகிறீர்களா, அதன் அதிகார பயன்மதிப்பு என்ன, நீங்கள் எந்தளவுக்கு அதிகாரத்துடன் நெருங்கிச் செல்ல விரும்புகிறீர்கள், எந்தளவுக்கு அதிகாரத்தில் இருந்தபடியே அதனால் கறைபடியாதவராக, அதிகாரம்படைத்த சாதாரணனாக உங்களைக் காட்டிக் கொள்ள விரும்புகிறீர்களோ அதைப் பொறுத்து அமைகிறது.
மீண்டும் பாரதி கிருஷ்ணகுமாருக்கு வருகிறேன்.
ஒவ்வொரு பெண்ணும் தன்னிச்சையாகவே காலுக்குமேல் காலிட்டு அமர விரும்புகிறார்கள். அவர்கள் அப்போது மக்கள் திரள் நிரம்பிய அரங்கில் கவிதையை முழங்கும் ஒரு கவிஞனைப் போல உணர்கிறார்கள். உலகின் மொத்த செல்வமும் தம் காலடியில் கிடப்பதாய் அவர்களுக்குத் தோன்றுகிறது. ஒரு ஆண், அரிதாகவே, காலுக்குமேல் காலிடுவான். அப்போது அவன் தன் உடலமைப்பே அதை அவசியப்படுத்தியது என ஒரு நியாயத்தை அதற்கு அளிக்கிறான் (பாரதி கிருஷ்ணகுமார் அப்படியே அன்று வலியுறுத்தினார்). ஆனால் ஒரு பெண்ணோ “எனக்கு அதுதான் பிடித்திருக்கிறது, நான் அப்போதுதான் இயல்பாக உணர்ந்தேன், எனக்கு யாரையும் புண்படுத்தும் நோக்கமில்லை” என தன்னம்பிக்கையுடன் துணிச்சலுடன் சொல்ல முடியும். கமல்ஹாசன் முன்னிலையில் தான் கால்மீது காலிட்டு அமர்ந்ததை லாஸ்லியா அப்படி அல்லவா நியாயப்படுத்தினார். இந்த இரண்டு காரணங்களுக்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் உள்ளன. ஒன்று (ஆணுடையது) தானாக இருக்க முடியாததன் தோல்வியை ஒப்புக்கொள்ளுதல்; மற்றொன்று (பெண்ணுடையது) தானாக இருப்பதே இயல்பு, அதில் கேள்வி எழுப்பவே யாருக்கும் இடமில்லை எனும் நம்பிக்கை.