தற்சமயம், தேசம் முழுக்க மக்கள் பெருந்திரளாக இந்தக் கொடுங்கோன்மை சட்டத்துக்கு எதிராக போராடி வருவதைப் பற்றி சில நண்பர்களுடன் உரையாடும்போது, ஒரு நண்பர் எல்லாரையும் நோக்கி இக்கேள்வியைக் கேட்டார்: “இதனால் பாஜக கதிகலங்குமா?” அதற்கு மற்றொரு நண்பர் “இல்லை” என்றார். ‘இடதுசாரித் தோழர்கள் சிலர் இந்த பெரும் எழுச்சியைக் கண்டு மனம் கனிந்தாலும், உத்வேகம் அடைந்தாலும் அது ஒரு வெற்று நம்பிக்கை என்றே தோன்றுகிறது. ஏனென சொல்கிறேன்…’ என அவர் விளக்கினார். முதலில் இந்த எதிர்ப்பை பாஜக எதிர்பார்த்திருக்கும், அவர்களின் கையை மீறி இது சென்றுவிட்டாலும்கூட. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தபோது இஸ்லாமியர் பெரும் திரளாக அதை எதிர்ப்பார்கள் என்றும் அதைவைத்து தேசத்தை இரண்டாகப் பிளக்கலாம் என்றும் பாஜக நம்பியிருக்கும்; ஆனால் அது பொய்த்தது; இப்போது குடியுரிமை திருத்தச் சட்டத்தை பொறுத்தமட்டில் அது நிகழ்ந்திருக்கிறது. அதேநேரம் இத்தகைய போராட்டங்களுக்கு அரசியல் விளைவுகள் இருக்குமா என்றால் இருக்காது என்றே “இல்லை” என்றே சொல்ல வேண்டும்.
பல்வேறு தரப்பட்ட மக்களுக்கு இந்தச் சட்டம் ஒரு அநீதியாகப்படுகிறது; ஆனால் தெளிவாக கருத்தியல்ரீதியாக இதன் பிரச்சனை அவர்களுக்குப் புரியவில்லை. இந்தியர்களின் குடியுணர்வு என்பது ஒற்றை தேசம் எனும் பிளாஸ்டிக்கான நம்பிக்கையின் அடிப்படையிலானது அல்ல. அது நம்பிக்கையின், நீதியின், நேசத்தின், கருணையின் அடிப்படையிலானது. இந்தச் சட்டம் அந்த உணர்வின் இதயத்தில் குண்டை பாய்ச்சுகிறது. மேலும் பெண்கள் உள்ளிட்ட இளைய சமூகத்தினர்மீது காவல்துறையின் வன்முறை அவிழ்த்துவிடப்பட்டது, நகரங்களில் இணையத்தொடர்பு ரத்து செய்யப்பட்டது, போராட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டது மக்களை மேலும் எழுச்சிகொள்ள வைத்தது. அதனால் மக்கள் பெருவாரியாக இதற்கு எதிராகத் திரண்டனர். ஆனால் இதே மக்கள் இந்துக்களாக தம்மை காண்பவர்களும் தாம்; இஸ்லாமியருடன் வாழலாம், ஆனால் அவர்கள் நாம் அல்ல என நம்புகிறவர்களும் தாம்.
இன்று இந்தச் சட்டத்துக்கு எதிராகப் போராடுகிறவர்கள் இந்துத்துவாவுக்கு எதிராக போராடுகிறவர்கள் அல்ல என்பதே கவலைக்குரிய விசயம், ஏனென்றால் இதற்குமுன்பு இந்த அரசு நிகழ்த்திய பல இந்துத்துவ ஆதரவு அவலங்களை இதே மக்கள் எதிர்க்கவில்லை; காஷ்மீர பண்டிட்டுகளை மீள்-குடியமர்த்தாமல், அவர்களுக்கு எந்த உதவியும் செய்யாமல் காஷ்மீரின் சிறப்புரிமையை மட்டும் ரத்து செய்யும் ஆபாச அரசியலை யாரும் எதிர்க்கவில்லை; புல்வாமாவில் தீவிரவாதிகள் படைவீரர்கள்மீது தாக்குதல் நடத்தி நாற்பதுபேருக்கு மேல் கொன்ற போது இந்த அரசு ஏன் படைவீரர்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கவில்லை, ஏன் அரசு இந்த தாக்குதலை தடுக்க முயலவில்லை என மக்கள் கேட்கவில்லை; மாறாக கோபம் முழுக்க பாகிஸ்தானுக்கு எதிராகவும் மத்திய அரசுக்கு ஆதரவாகவும் திரும்பியது. டிமானிடைசேனின் போதும் ஜனங்கள் பெருவாரியாக பாதிக்கப்பட்டார்கள்; ஆனால் அரசின் தவறான பொருளாதார நோக்கங்களை, அபத்தங்களை ஜனங்கள் புரிந்துகொள்ளவில்லை; ஜி.எஸ்.டி. போன்ற குழப்படியான, அபத்தமான வரிவிதிப்புகள் மேலும் மேலும் நமது எளிய வணிகர்களின் அடிமடியில் கைவைத்தன; இந்திய பொருளாதாரத்தை நிலைகுலைய வைத்துவிட்டு மோடி அரசு தொடர்ந்து என்ன பண்ணியது? அது பெருமுதலாளிகளுக்கு வரிவிலக்கை பல்லாயிரம் கோடிகளுக்கு அள்ளி வழங்கியது; இந்த முடிவுகளால் தொடர்ந்து பாதிக்கப்படும் அப்பாவி மத்தியவர்க்கமோ இந்த பாஜக அரசுக்கு பக்திரசம் சொட்டச் சொட்ட ஆதரவளித்தது. அவர்களுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வழங்கியது. இதற்கு ஒரு பிரதான காரணம், மக்கள் அரசியல்வயப்படாமல், அன்றாட பிரச்சனைகளுக்குள் சிக்கிக்கிடக்கிறார்கள் என்பது. இத்தகைய மக்களை உணர்வுரீதியாக திரட்டலாம் – அவர்கள் ஒரே சமயம் ஒரு கட்சியை எதிர்ப்பார்கள், ஆனால் மறுவாரமே அந்தக் கட்சியின் மடியில் படுத்தபடி கைகால்களை உதைத்து புட்டிப்பாலை வாங்கி உறிஞ்சுவார்கள்; இந்த அரசு இதை நன்கு உணர்ந்திருப்பதனாலே அது இப்போராட்டங்கள் ஓரளவுக்கு வரை எல்லைமீறாத வரை அஞ்சாது, கலங்காது, கள்ளச்சிரிப்புடன் மக்களின் உணர்ச்சிகள் வடிவதற்காக காத்திருக்கும். நாளை இதே உணர்ச்சிகளை ‘பாகிஸ்தானுக்கும்’, ‘இஸ்லாமியருக்கும்’ எதிராக கற்பனையாகத் திரட்ட முடியும் என மோடியும் ஷாவும் நன்கு அறிவார்கள்.
சொல்லப்போனால், இந்தப் போராட்டங்களினால் இன்று மக்கள் சந்தித்து வரும் பொருளாதார நெருக்கடியின் கோபாவேசத்தை, கசப்பை, அவநம்பிக்கையை திசை திருப்பிவிட முடியும். ஜல்லிக்கட்டு போராட்டங்கள் இதற்குத் தகுந்த உதாரணம் எனலாம் – அந்த போராட்டத்தினால் அதிமுக அரசு கவிழவோ, பாஜகவை மக்கள் நேரடியாக தாக்கும் நிலை ஏற்படவோ இல்லை (எப்போதும்போல பாஜக தொடர்ந்து தேர்தலில் உதை வாங்கியது என்றாலும்).
அந்தவிதத்தில், ஒவ்வொரு அரசும் அவ்வப்போது சில மக்கள் எழுச்சிகள் தனக்கு எதிராக நடப்பதையே விரும்பும். இந்த அரசை நோக்கி இரண்டுவிதமான எதிர்ப்புகள் வந்தால் மட்டுமே அது தடுமாறும்: 1) நிர்வாக ரீதியான குற்றச்சாட்டுகள் (ஊழல், பாலியல் உள்ளிட்ட குற்றங்கள்); 2) இந்துத்துவ எதிர்ப்பு அலை. ஏனென்றால் இரண்டுமே தெளிவான பொருண்மையான குற்றச்சாட்டுகளாக இருக்கும் – ஒரு அரசு பல்லாயிரம் கோடிகளைத் திருடுகிறது எனத் தோன்றினால் அந்த எண்ணிக்கை ஒவ்வொரு இந்தியனுக்கும் தீராத கோபத்தை ஏற்படுத்தும்; தான் ஒவ்வொரு காசாய் எண்ணி சிரமப்பட்டு வாழ்வதற்குக் காரணம், இந்தத் திருடர்கள் தாமே எனும் ஒரு நேரடியாக கோபம் தோன்றும் (2ஜி ஊழலை இப்படித்தான் எதிர்க்கட்சிகள் காங்கிரசுக்கு எதிராகப் பயன்படுத்தியது). இந்த அரசுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் தோன்றிய அடுத்த நாளே அதை பல சினிமாத்தன செயல்பாடுகள்மூலம் தேசியவாத வெறியை தூண்டிவிட்டு மறக்கடிக்க மோடி–ஷா கூட்டணிக்குத் தெரியும்.
காந்தியின் படுகொலைக்குப் பின்பு சில பத்தாண்டுகள் இந்துத்துவ கட்சிகளுக்கு எதிராக கடும் கோபம் பொதுமக்களிடம் ஏற்பட்டது; காங்கிரசுக்குள் இருந்த மென் இந்துத்துவர்கள் கூட அடங்கிப் போய் இந்து மகாசபாவுக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும் எதிராகப் பேசும் நிலை ஏற்பட்டது. அப்படி ஒரு கோபாவேசம் ஜனங்களுக்கு திரும்பவும் ஏற்பட்டால் மட்டுமே பாஜக அரசு அஞ்சும். அப்படி ஒரு வரலாற்றுத் திருப்புமுனை நிகழுமா என்பது சந்தேகமே.
இப்போது நிகழ்வதுபோன்ற பூடகமான சமூகக் கோபத்தின் ஒரு சிறப்பு அதில் பல்வேறு முரணான மக்கள் திரள்கள் பங்கேற்க முடியும் என்பது – இதில் இஸ்லாமியரும் இந்துக்களும் கைகோர்க்க முடிகிறது; இடதுசாரிகளும் மிதவாதிகளும் பரஸ்பரம் கொள்கைரீதியாக உடன்பட முடியாதவர்களும் கைகோர்க்க முடிகிறது. இந்த குடியுரிமை திருத்த சட்ட போராட்டங்கள் வெறுமனே இந்தச் சட்டத்துக்கு எதிரானவை மட்டும் அல்ல – இவை ஜனங்களை வெளிப்படையாகப் பிரிப்பதற்கு, அரச வன்முறைக்கு, ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களாக உருத்திரள்கின்றன. ஏரியில் ஒரு கல்லை எறிந்ததும் அலைகள் ஒன்றையொட்டி மற்றொன்று என வட்டவட்டமாய் தோன்றிப் பரவுவதைப் போன்றது இப்போராட்டங்கள். பொதுவெளியை மக்களுக்குப் போராட அனுமதிக்காமல், இணையத்தில் போராட்ட நெருப்பு பரவாமல் பார்த்துக் கொண்டால் இந்த அலைகள் தாமாக அடங்கி நீர்ப்பரப்பு முன்புபோல அமைதியாகிவிடும் என பாஜக அரசுக்குத் தெரியும். இந்த போராட்டங்களின் போது என்னை ஆச்சரியப்படுத்திய ஒரு விசயம் – சில விதிவிலக்குகளைத் தவிர்த்தால் – இளைஞர் படை இதை மோடிக்கு எதிரான போராட்டமாக அன்றி பாஜகவுக்கு எதிரான போராட்டமாக மட்டுமே பார்க்கிறது என்பது; சிகிகி = மோடி எனும் இணைப்பை நீங்கள் எந்த பதாகைகளிலும் கோஷங்களிலும் காணவில்லை. இந்தச் சட்டத்தை எதிர்க்கும் பல இளைஞர்களிடம் நான் உரையாடியபோது அவர்களின் மோடி பாசம் சற்றும் கறைபடாமல் அப்பழுக்கற்று இருப்பதை கவனித்து வியந்தேன்.
இங்கும் பிரித்தாளும் வியூகத்தில் பாஜக வென்றுள்ளது எனலாம். அமித் ஷா இஸ்லாமிய வெறுப்பை வெளிப்படையாகவே கக்க, மோடியோ மற்றொருபக்கம் “இந்தச் சட்டம் இஸ்லாமியருக்கு எதிரானது அல்ல” எனப் பேசுகிறார்; போராட்டக்காரர்களை அவர்களின் ஆடையை வைத்து அடையாளம் காணலாம் என வெறுப்பைத் தூண்டும்விதமும் அவர் மறுபக்கம் அறிக்கைகளை விடுகிறார். பாஜகவின் வன்முறையான முகம் என ஒருவரும் மென்மையான கனிவான முகம் என மற்றொருவரும் அடையாளம் காட்டப்படுகிறார்கள் – இருவருமே உறுதியான நிர்வாகிகள் எனும் பாவனையில் இணைந்த கரங்களாகவும் நாளை உருமாறுவார்கள். குடும்பத்தில் பிள்ளைகள் அப்பாவுக்கு எதிராக சண்டையிட்டால் அம்மா இருவருக்கும் இடையில் சமாதானம் பண்ணி குடும்பம் உடையாமல் பார்த்துக் கொள்வார். அம்மா, அப்பாவை மறைமுகமாகவோ நேரடியாகவோ ஆதரித்தாலும் பிள்ளைகளுக்கு அம்மாமீது கோபம் வராது. பிராயிட், தன் உளவியல் பகுப்பாய்வில் இந்த தந்தையை சூப்பர் ஈகோ என்றோ அம்மாவை ஈகோ என்றும் வகுத்தார். சூப்பர் ஈகோ வெளிப்படையான ஒடுக்குமுறையாளர்; அவரை சகித்துக்கொள்ள ஈகோ என சமாதானப் புறா அவசியம். பாஜகவின் ரெட்டைக்குழல் துப்பாக்கி இப்படித் தான் போராட்டக்காரர்களை நோக்கி தோட்டாக்களை அனுப்புகிறது, – ஒரு குழலில் இருந்து பாய்ந்த தோட்டாவில் சாயும் ஒருவர் அடுத்த குழலின் இருந்து வரும் ரோஜாவை கையில் ஏந்திக் கொண்டு கண்ணீர் மல்க உயிர்விடுகிறார் – அவர் சாவதற்கு பாஜகவுக்கு எதிராக என்றாலும் அவர் சாவது பாஜக ஆதரவுடன்தான் இருக்கும். பாஜகவின் இந்த உளவியல் தந்திரத்தில் பெரும்பான்மையான இந்து வாக்காளர்கள் விழுந்து விடுகிறார்கள்.
மற்றொரு விடயமும் இங்கு முக்கியமானது .- பூடகமான, நீதியுணர்வுடன் திரளும் போராட்டங்களில் போல மக்களுக்கு நாளை தெளிவான இலக்கை நோக்கிய, தூலமான பிரச்சனையை முன்வைத்த போராட்டங்களின்போது இணையமுடியாது என நினைக்கிறேன். அப்போது மக்கள் உடைந்துபோவார்கள் – இந்த நம்பிக்கை தான் பாஜகவை மிகுந்த தன்னம்பிக்கையுடன் விரித்த மார்புடன் இப்போராட்டங்களை உதாசீனிக்கத் தூண்டுகிறது. அதனாலே தான் சிகிகிஐ திரும்ப வாங்கமாட்டேன் என அமித் ஷா அறிவிக்கிறார். ஏன் அப்படி?
முதலில் பாஜக இதை தனது சட்டத்தின் பின்னுள்ள கொள்கைக்கு எதிரான போராட்டமாகக் காணவில்லை. தனது குறிப்பிட்ட செயல்பாடு ஒன்றுக்கு எதிரான போராட்டமாகவும் இதைக் காணவில்லை. மாறாக, எதிர்காலம் குறித்த ‘ஆதாரமற்ற’ பயத்தின் வெளிப்பாடாக, அந்தப் பதற்றத்தின்மீது கட்டமைக்கப்பட்ட போராட்டமாகக் காண்கிறது. தொடர்ந்து இரவு 12 மணிக்கு அதிரடி அறிக்கைகளை செய்து, கண்மூடித்தனமான மாற்றங்களைக் கொண்டுவந்து இந்த அரசு மக்களை அப்படி அச்சுறுத்தி வைத்திருக்கிறது. ஆனால் நாளை தூலமான மாற்றம் ஒன்று வரும்போது ஜனங்கள் இப்படி ஒட்டுமொத்தமாக பதறி தமக்கு எதிராக திரள மாட்டார்கள் என இந்த அரசு நம்புகிறது. இது, ஏன் என ஒரு உதாரணம்கொண்டு விளக்குகிறேன்:
கொடுங்கோல் தந்தையருக்கும் அவர்களின் அப்பாவி மகன்களுக்குமான உறவை எடுத்துக் கொள்ளலாம். கொடுங்கோல் தகப்பன்கள் அடித்தும் மறைமுகமாய் வதைத்தும் பிள்ளைகளை ஒடுக்கும்போது அவர்கள் மிகுந்த சகிப்புத்தன்மையுடன் அதை ஏற்பார்கள். ஆனால் என்றோ ஒருநாள் தாம் செய்த சிறிய குற்றத்துக்காக தகப்பனார் மிகப்பெரும் தண்டனை ஒன்றைத் தருவார் எனும் அச்சம் பிள்ளைகளை திடீரென கலகம் பண்ணத் தூண்டும் அல்லது வீட்டைவிட்டு ஓடிட வைக்கும். தகப்பனார் இதை இவ்வாறு எதிர்கொள்வார். – அவர், தனது தண்டனைகள் அத்துமீறியதாக இருக்காது என நம்ப வைப்பார். தண்டனைகள் மேலும் மேலும் இயல்பாக்கி பிள்ளைகளை அமைதிப்படுத்துவார். அமைதியானபின் பிள்ளைகளை வரிசையில் வந்து நின்று உதை வாங்குவார்கள். ஓடிப்போனவர்கள் திரும்பவந்ததும் தகப்பனார் அவர்களை அரவணைத்து விருந்து வைப்பார். ஆனால் அடுத்தடுத்த சிறிய குற்றங்களுக்கு கராறாய் தண்டனைகள் அளிக்க இதே பிள்ளைகள் எதிர்ப்பின்றி, குற்றவுணர்வுடன், அவற்றை வாங்கிக் கொள்வார்கள். மோடியும் தம் பிள்ளைகள் இவ்வாறே மீண்டும் தமது அரவணைக்கும் கரங்களை நாடி ஓடி வருவார்கள் என நம்புகிறார். அவர் இந்த கலகக்கார பிள்ளைகளின் தாய்; அவர் அமைதிப்படுத்தி இவர்களை கோபக்கார தந்தையார் அமித் ஷாவிடம் அனுப்பி விடுவார்.
சரி, இந்த தண்டனைகள்தாம் என்ன?
இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி பேசும் வேளைகளில், எல்லாம் அமித் ஷா பாராளுமன்றத்தில் இதை தேசிய குடிமக்கள் பதிவேட்டு சட்டத்துடன் பொருத்தி ‘எச்சரித்தார்.’ – அதாவது வெளியில் இருந்து வரும் அகதிகளின் குடியுரிமையை தீர்மானிப்பது மட்டுமல்ல உள்ளே மக்களோடு மக்களாகக் கலந்துவிட்ட ‘வந்தேறிகளை’ களைபறிப்பதும் தன் நோக்கமே என அவர் குறிப்புணர்த்தினார். சரி இந்த அகதிகள் என்பவர்கள் யார்? ‘வந்தேறிகள்’, ‘அந்நியர்கள்’ என்பவர்கள் யார்? மத்திய பாஜக அரசு இந்த இரு பதங்களையும் பூடகமாக குழப்பமாக கையாள்கிறது, அதன்மூலம் தனது இனவெறியை தந்திரமாகச் செயல்படுத்துகிறது.
‘அகதி’ என்பவர் ஒடுக்கப்படும் முஸ்லிம் அல்லாதவர் என உலகமே ஏற்காத ஒரு பழமையான வரையறையைக் கொண்டுவரும் இந்த அரசு ‘அந்நியர்’ எனும் பதத்தையும் அவ்வாறே வரையறுக்கும் என்பது வெளிப்படை,- அதற்காகவே குடியுரிமைச் சட்டத்தையும் குடிமக்கள் பதிவேட்டையும் அவர் ஒன்றுக்குள் ஒன்றை மடித்துவைத்து நமக்குத் தருகிறார் – இப்போது நீங்கள் குட்டி பாகிஸ்தான் என கேரளாவில் வர்ணிக்கும் ஒரு மாவட்டத்து ஜனங்களை அகதிகளாக, பாகிஸ்தானில் இருந்து வந்த, ஆவணங்கள் இல்லாத மக்களாக வரையறுத்து அவர்களை தடுப்பு முகாம்களுக்கு அனுப்ப முடியும். இஸ்லாமியர் அனைவரும் வந்தேறிகள் எனும் இந்துத்துவரின் நீண்டகால கதையாடலை சட்டமாக்க முடியும். அகதிகள் குறித்த கதையாடல் இன்றி நீங்கள் ஆவணமில்லை எனும் காரணத்தை வைத்து ஒரு சிறுபான்மையினர் கூட்டத்தை ‘வந்தேறிகள்’ என முத்திரை குத்த முடியாது. நமது பிரதமர் குடியுரிமை திருத்தச் சட்டம் இந்த நாட்டின் குடிமக்களான சிறுபான்மையினரை இலக்காக்காது என கூறுவதை நாம் இப்படியே புரிந்துகொள்ள வேண்டும். அவர்களை நேரடியாக அவ்வாறு இந்த அரசால் தேசப்பிரஷ்டம் செய்ய இயலாது – அதற்குத்தான் அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள அகதிகளை தனிமைப்படுத்தி அவர்களை தடுப்புமுகாமில் வைத்துவிட்டு அந்த அடையாளத்துக்குள் சிறுபான்மையினரில் பலரையும் திணித்து மக்களை குழப்பி இந்த அரசு குளிர்காய திட்டம் போடுகிறது. ஒரு உதாரணம் தருகிறேன்:
ஒரு ஊரில் உள்ள கறுப்பான மக்களை ஒடுக்குவதற்காக வெள்ளைத்தோல் கொண்ட பெரும்பான்மையினர் திட்டமிடுகிறார்கள். அதற்காக அவர்கள் முதலில் சில கறுப்புத்தோலினரைப் பிடித்து விசாரணை பண்ணி அவர்கள் திருடர்கள் எனப் பிரகடனம் பண்ணுகிறார்கள். அடுத்து, கறுப்புத்தோல்காரர்களால் நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைகிறது என அரசும் காவல்துறை ஆணையரும் தொடர்ந்து பேட்டி அளிப்பார்கள். கடைசியாகக் கறுப்பாகத் தெரியும் அத்தனை பேரையும், குற்றத்தடுப்பு மற்றும் விசாரணை நோக்கில், ஒட்டுமொத்தமாக கைது பண்ணி முகாம்களில் அடைத்து வைப்பார்கள். இப்போது இதை யாரும் இனவெறுப்பு என இதை பேசிவிட முடியாது; திருடன் + கறுப்புத் தோல் = கறுப்பானவர்கள் எல்லாம் திருடர்கள் எனும் சூத்திரத்தை உருவாக்கி மக்கள் மனத்தில் பீதியை அரசு உருவாக்கி இருக்கும். இதே தந்திரத்தைதான் பாஜக அரசு சிறுபான்மையினர்மீது பிரயோகிக்க உத்தேசிக்கிறது.
அகதிகள் எனும் கதையாடலுக்கு மற்றொரு நோக்கமும் உண்டு, சிறுபான்மையின மக்களை முத்திரை குத்தி குடியுரிமையும் வாக்குரிமையும் மறுத்த பிறகு என்ன பண்ணுவது?
அகதிகளை ஒரு அரசு அடையாளம் கண்டபின் அவர்களை தடுப்பு முகாம்களில் வைத்திருக்கும். இந்திய அரசு இதுநாள்வரையிலும் அகதிகள் எனும் அந்தஸ்தை இம்மக்களுக்கு அளிக்காமல், சட்டவிரோதமாய் வந்திருக்கும் அந்நியர் என்றே பார்க்கிறது; பார்த்து சிறையில் அடைக்கிறது. இந்த அரசு இந்த விசயத்தை ஒரு புதுச்சட்டம்மூலம் ஒரு பிரச்சார ஆயுதமாக முயல்கிறது. இப்போது நாடு முழுக்க பல்வேறு தடுப்பு முகாம்களைக் கட்டி வருகிறது. அஸ்ஸாமில் கோல்போரா மாநிலத்தில் ஏழு கால்பந்தாட்ட விளையாட்டரங்குகளின் பரப்பளவில் தடுப்பு முகாம் ஒன்றை கட்டி வருகிறது. கடந்த ஒரு வருடமாக இதற்கான பணி அங்கு நடந்துவருகிறது. இதில் 3000 அகதிகள் தங்க வைக்கப்படலாம். இதற்கான செலவு 45 கோடி. அஸ்ஸாம் அரசு மேலும் பத்து தடுப்பு முகாம்கள் கட்டுவதற்காக கோரிக்கை விடுத்துள்ளது. செலவு 450 கோடி என்றால் இவற்றில் சிறை வைக்கப்படுவோரின் எண்ணிக்கை 30,000 ஆக இருக்கும். ஆனால் அரசின் கணக்குப்படி 30,000 சிறிய தொகை. பத்து முகாம்கள் போதுமானவை அல்ல. இப்போதைய திருத்தப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டுக் கணக்கெடுப்புப் படி 19 லட்சம் பேர் அகதிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த மக்களில் இந்து வங்காளிகளும் கணிசமாக இருப்பதாலே பாஜக அரசு அவர்களுக்கு ஆவணமின்றியே குடியுரிமை அளிக்கும் சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. இப்போது அகதிகள் என வரையறுக்கப்பட்டோரில் இஸ்லாமியர் மட்டுமே வடிகட்டப்பட்டு முகாம்களில் சிறைவைக்கப்படுவார்கள் -The Hindu Business Line இந்த எண்னிக்கையை 5 லட்சம் என்கிறது. (இந்த அரசியலுக்கு எதிராகத்தான் அஸ்ஸாமில் பெரும் போராட்டங்கள் வெடித்துள்ளன) அரசு 160 தடுப்பு முகாம்களைக் கட்ட உத்தேசிக்கிறது. அங்கு ஐந்து லட்சம் அகதிகளை குடியமர்த்தி சோறு போடுவது, அவர்களின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது, அகதிகளை விசாரித்து தீர்ப்பு வழங்கும் நீதியமைப்புகளுக்கான செலவையும் சேர்த்துப் பார்த்தால் 1200 கோடி செலவாகும்.
அடுத்து நவி மும்பை, பெங்களூரு, கொல்கொத்தா எனப் பல மாநிலங்களில் தடுப்பு முகாம்கள் கட்டப்பட்டு வருகின்றன. இவ்வளவு ஆயிரம் கோடிகளை இந்த அரசு ஏன் தடுப்பு முகாம்களுக்குச் செலவிட வேண்டும்? அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் இவை ஒரு முக்கிய பிரச்சார மையமாக இருக்கப் போகிறது என்பதைத் தவிர வேறெதற்காக இதை பாஜக செய்யவேண்டும்? இந்த முகாம்களை அரசு அகதிகளுக்கான தற்காலிக குடியிருப்புகள் என நியாயப்படுத்தும். ஆனால் அகதியல்லாத சிறுபான்மை மக்களையும் இங்கு அனுப்புவதே அரசின் எதிர்காலத் திட்டமாக இருக்கும்.
அஸ்ஸாமில் அகதியென ஒருவரை தீர்மானிக்கும் உரிமையை நீதிபதிகள் அல்ல, சட்டம் படிக்காத மக்களும் அதிகாரிகளுமே கொண்டுள்ளார்கள். பாஜக அரசு இதே பாணியையே இந்தியா முழுக்க நடைமுறைப்படுத்த முயலும். ஒருவர், தான் இந்நாட்டின் பிரஜை என நிரூபிக்க இன்னின்ன ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அரசு அறிவிக்கிறது என்றால் இந்த ஆவணங்களை ஏற்பது முழுக்க அரசு அதிகாரிகளின் விருப்புரிமை மற்றும் மதிப்பீட்டின் அடிப்படையில் இருக்கும்; அஸ்ஸாமில் அப்படித்தான் நடந்துவருகிறது – கார்கில் போரில் செய்த வீரசாகசத்துக்காக ஜனாதிபதியிடம் தங்கப்பதக்கம் பெற்ற ஒருவரையே – அவர் முஸ்லிம் என்பதாலும், ஆவணக்குழப்பத்தாலும், தடுப்பு முகாமுக்கு அனுப்பிவிட்டார்கள். அரசு பரவலாக இதை நடைமுறைப்படுத்தும்போது இரண்டு விசயங்கள் நடக்கும்:
1) மாநில அரசின் பிரஜையாக தம்மை உணர்பவரும் மத்திய அரசின் அதிகாரத்தை தூலமாக தம் உடல்மீது உணர்வார்கள். மாநில அரசுகள், குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்ப்பதாய் சொல்லும் அரசுகள்கூட, செயலற்று நிற்க, மத்திய அரசு தன் இரும்புக்கரத்தால் மக்களை ஒருபக்கம் ஒடுக்கும்; மற்றொருபக்கம் அபயமும் அளிக்கும். இதன்மூலம் மத்திய அரசின் கருணையின் பெயரிலே தாம் குடிமகனாய் அங்கீகரிக்கப்படுவதாய் நம்பி ஜனங்கள் தம்மீது நன்றியுணர்ச்சி கொள்வார்கள் என மோடியும் ஷாவும் எதிர்பார்க்கிறார்கள். இவ்வாறு மத்திய அரசின் ஒற்றை இந்தியா அடையாளமும் வலுப்பெறும்.
2) தண்டனை தெளிவாக, நேரடியாக வரும்போது மக்கள் அதை சகஜமாக எடுத்துக் கொள்வார்கள் என மோடியின் அரசுக்குத் தெரிந்திருக்கிறது. – அதனாலே, வீட்டை விட்டு ஓடிப்போன மகனை நோக்கி தந்தை சொல்வதைப் போல, நாங்கள் அவ்வளவு கொடூரமானவர்கள் அல்ல, இந்நாட்டு பிரஜைகளுக்கு எந்த பாதிப்பும் வராது என மோடி ஆறுதலாகப் பேசுகிறார். நாளை தண்டனை ஒரு சட்டத்தின் வடிவில் நாடு முழுக்க பாயும்போது ஜனங்களுக்கு அது பெரிதாகத் தெரியாது. ரூபாய் நோட்டு செல்லாது எனச் சொல்லி கோடிக்கணக்கானோரை இந்த அரசு நடுத்தெருவில் நிறுத்தியபோதே அதை அமைதியாக இந்த மக்கள் ஏற்றுக் கொண்டனர் என்பதை மோடி அரசு பார்த்திருக்கிறது; ஆனால் ஆதாரமற்ற பயத்தினால் மக்கள் பதறிப் போய் தெருவுக்கு வந்து போராடுவார்கள், அவர்களுக்கு ஆதாரமான நேரடியான பயத்தைக் காட்டினாலோ சகஜமாக எடுத்துக் கொண்டு அடிபணிவார்கள் என்பதை பாசிச அரசு நன்கு புரிந்துவைத்துள்ளது.
மேலும் மக்களை ஆவணங்களை சமர்ப்பிக்கக் கேட்ட பின், குடிமக்கள் அல்லாதோர் வங்கிக்கணக்கு, வைத்திருக்கவோ, படிக்கவோ, வேலை பார்க்கவோ, செல்பேசி பயன்படுத்தவோ, இணையத்தொடர்பு பெறவோ, சமையல் எரிவாயு வாங்கவோ, வாக்களிக்கவோ, வாகன ஓட்டுநர் உரிமம் பெறவோ, ஒரு வாடகை வீட்டில் ஓட்டல் அறையிலோ தங்கமுடியாது என அச்சுறுத்திய பின், இந்த அரசு தொடர்ந்து தம் வலையில் மாட்டிக் கொண்ட ‘அந்நியர்கள்’, ‘பாகிஸ்தானியர்’, ‘தீவிரவாதிகளின்’ பட்டியலையும் அவர்கள் தடுப்பு முகாம்களுக்கு அனுப்பட்ட அறிக்கைகள், காணொளிகளையும் ஊடகங்களில் நேரலையாக வெளியிடும். அரை நூற்றாண்டாய் காங்கிரஸ் செய்யாத ‘களையெடுப்பை’ தாம் இப்போது பண்ணுவதாய் அமித் ஷா பாராளுமன்றத்தில் சூளுரைப்பார். இப்போது குடியுரிமை ஆவணம் வழங்கப்பட்டோர், தாம் கூடுதலாய் அங்கீகரிக்கப்பட்டதாய், மற்றமையாக உள்ளோர் சிறைப்பட்டதாய் உள்ளுக்குள் மகிழ்வர். சாலையில் ஒருவன் திருடன் என மக்களிடம் தர்ம அடி வாங்கும்போது அங்கு புதிதாய் திரள்வோரும் கேள்வியே கேட்காமல் தம் பங்குக்கு நாலு குத்து கொடுப்பார்கள் அல்லவா அந்த கும்பல் மனப்பான்மையை தான் பாஜக இப்போது இலக்காக்கி உள்ளது. இப்போது இஸ்லாமியன் என் சகோதரன் என தெருவுக்கு வந்து பதாகை உயர்த்தும் போராளிகள் அதே கருத்தை தடுப்பு முகாமில் சட்டரீதியாக அகதி என வரையறுக்கப்பட்டோரை நோக்கிக் கூறுவார்களா என்பதே பாஜகவின் கேள்வி. இதுவரை ஒருமுறைகூட நம் மக்கள் கைதிகளை, அவர்கள் ஆதாரமின்றி சிறைவைக்கப்பட்டாய் நம்பப்பட்டாலும், ஆதரித்துப் போராடியதாக வரலாறு இல்லையே! உங்கள் பக்கத்து வீட்டில் உள்ளவரைத் தேடி போலீஸ் வந்தால் அடுத்த நொடியே அவரை ஒரு குற்றவாளி என நமது மத்திய வர்க்க மனம் தீர்மானித்துவிடாதா என்ன! ஒரு சின்ன சட்டத் திருத்தம்மூலம் மக்களிடையே இப்போது கற்பனையாக உள்ள மதப்பிரிவினையை சட்டபூர்வமாக்கி நிரந்தரமாக, மறுக்கமுடியாததாக மாற்றலாம் என நினைக்கிறது இந்த அரசு.
மோடிக்கு அடுத்தபடியாய் பிரதமர் நாற்காலிக்கு அமித் ஷா நகர்வார் என்றால் அதற்கு அவர் தன்னை மோடிக்கு மாற்றாக, மோடியைவிட மேலான தலைவராக, மோடியின் சில குறைகளைக் காட்டி அதை நிவர்த்தி செய்கிற தலைமையாக தன்னை கட்டமைக்க வேண்டும். – மோடி கறாரானவர் ஆனால் இஸ்லாமியரை நேரடியாக தாக்காதவர்; மென்மையான ஆனால் உறுதியான இந்துத்துவர்; அமித் ஷாவோ இந்த தடுப்பு முகாம் அரசியலின்மூலம் தன்னை ஒரு இந்திய ராஜபக்ஷேவாக கட்டமைக்க முயல்வார். (ஒருவர் பயங்கர கறுப்பு, மற்றவர் கறுப்பாய் பயங்கரமானவர்) ஷாதான் மோடிகூட செய்யத் துணியாத களையெடுப்பை செய்தவர் தான் என பெயர் வாங்கி, அந்த ராணுவ அதிகாரத்தைக் கொண்டு தன்னை அடுத்த பிரதமராக அவர் முன்னிறுத்துவார். அவருக்குத் தேவையெல்லாம் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு ஒரு முள்ளிவாய்க்கால் ரத்த சரித்திரம்.
பாஜகவின் எதிர்கால அரசியல் முழுக்க முழுக்க ஹிட்லரின் ஜெர்மனியில் நடந்ததை மீளுருவாக்கம் பண்ணுவதாக இருக்கும் என நினைக்கிறேன். ஹிட்லர் எப்போதுமே தன் எதிரிகளை இரு முனைகளாய் கட்டமைத்தார் – வெளியே இருக்கும் சர்வதேச எதிரி தேசங்கள்; உள்ளே இருக்கும் யூத விரோதிகள். ஒருவர் தேசத்தின் எதிரி, மற்றவர் தேசவிரோதி. அவர் தொடர்ந்து ஆஸ்திரியா, போலந்து, யுகோஸ்லேவோக்கியா, சோவியத் யூனியன் ஆகிய நாடுகளைக் கைப்பற்றி வெளியே யுத்தச்சூழலை தக்கவைத்தார். அதன் மூலம் ஜெர்மனியின் சரியும் பொருளாதாரம் குறித்த பயங்களை மறக்கடித்தார். உள்ளுக்குள் வதைமுகாம்களை ஏற்படுத்தி யூதர்களை அங்கே அடைத்துவைத்து உள்-எதிரிகளையும் தொடர்ந்து தாக்கினார். இதன்மூலம் அவர் பெரும்பான்மை ஆரியர்களுக்கு தன்னை ஒரு ஹீரோவாக தொடர்ந்து சித்தரித்தார். பாஜகவுக்கு வெளிவிரோதி பாகிஸ்தான் என்றால் உள்விரோதி இஸ்லாமிய தேசவிரோதிகளும் அர்பன் நக்ஸல்களும்.
இதன் பொருள், ஷா ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும் முகாம்களுக்கு அனுப்புவார் என்பதல்ல. இங்கும் அவர் பிரித்தாளும் பல சூழ்ச்சிகளைக் கையாள்வார். இப்போது பாஜக தொடர்ந்து முன்னெடுக்கும் தர்க்கம், தம் கட்சியை எதிர்ப்பவர்கள் அனைவரும் ‘தேசவிரோதிகள்’ என்பது. இந்த தர்க்கத்தை தேசிய குடிமக்கள் பதிவேட்டைக் கொண்டு ஷா ஒரு சட்டமாக்க நினைக்கிறார் – இப்போது அரசை எதிர்ப்பவர்கள் உடனடியாக சட்டரீதியாக குடியுரிமையை இழப்பார்கள். இதன்மூலம் அரச / பாஜக எதிர்ப்பு என்பதே சட்டவிரோதம் எனும் எண்ணத்தை மக்களின் உளவியலில் ஷா திணித்துவிடுவார். அடுத்து எங்கெல்லாம் இஸ்லாமியர் வலுவாக பெரும்பான்மையாக இருக்கிறார்களோ அங்கெல்லாம் அவர்கள் பாஜகவை அங்கீகரிப்பதே நாட்டின் குடிமக்களாக இருக்கும் ஒரேவழி எனும் நிலையை ஏற்படுத்துவார். தம்மை தேசபக்தர்களாக காட்டிக் கொள்ள இஸ்லாமியர்கள் தம்மை பாஜக ஆதரவாளர்களாக, அமித் ஷாவை போற்றுபவர்களாக காட்டும் நிலை ஏற்படும். பாஜகவை எதிர்க்கும் இஸ்லாமியரை தேசவிரோதிகள் என இந்த ஆதரவு இஸ்லாமியரைக் கொண்டு அவர் சொல்லவைப்பார் (கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் இதற்கு ஒரு நல்ல உதாரணம்). ஒரு பகுதி இஸ்லாமியரை அகதிகளாக்கி மறுபாதியை குடிமக்களாக்கி பிரித்தாள்வார். மெல்ல மெல்ல இஸ்லாமியரும் தம் வழிக்கு வந்து இஸ்லாத்தை வெறுக்கும் இந்துத்துவ ஆதரவாளராக மாறூவார்கள் என பாஜக நம்புகிறது .- ஜெர்மனியில் ஒரு பகுதி யூதர்கள் ஹிட்லருக்கு தொடர்ந்து உதவியதை, ஆதரவாக இருந்ததை, வதைமுமாம்களுக்குள் கேப்போஸ் எனப்படும் சிறப்புரிமை பெற்ற யூதக் கைதிகள் தம் மக்களுக்கு எதிராகவே செயல்பட்டதை இதற்கு வரலாற்று ஒப்புமையாகக் காட்டலாம்.
தேசிய குடிமக்கள் பதிவேடு நிறைவேறும் நாள் இங்கு ஆயிரக்கணக்கான தடுப்பு முகாம்கள் வெளிப்படையாகவே செயல்படும். இலங்கையில் ராஜபக்ஷே நடத்திய இனவெறி அரசியல் இங்கு பலமடங்கு உக்கிரத்துடன், பெரும் ஒடுக்குமுறை வீச்சுடன் நடந்தேறும். நாம் அடுத்த பத்தாண்டுகளில் இந்த மக்கள் அழித்தொழிப்பின் வரலாற்றை கடந்து வந்தாலும்கூட அதன் ரத்தக்கறை நம் நெஞ்சங்களில் இருந்து நீண்ட காலத்துக்கு மறையாது. அந்த நாள் வரும்போது இப்படி ஒரு கட்டுரை எழுதியமைக்காக என்னையும் அகதியென அறிவித்து ஒரு தடுப்புமுகாமுக்கு அனுப்பிவிடுவார்கள். இக்கட்டுரையை ஏந்திய இதழை வைத்திருந்தமைக்காக உங்களையும் அகதியாக்கி அனுப்புவார்கள். நம் கைகள் கட்டப்படும், நம் கண்கள் இருட்டாக்கப்படும்.
இதைத் தடுக்க வேண்டுமெனில், நாம் முதலில் இந்த தடுப்பு முகாம்களை இடித்து தரைமட்டமாக வேண்டும். தேசிய குடிமக்கள் பதிவேடு பாராளுமன்றத்துக்கு கொண்டு வரப்படும்போது அதை முற்றுகையிட்டுப் போராட வேண்டும். உண்மையில், அத்தகைய போராட்டங்களே இந்த அரசை அசைக்கும், பதற்றமடையச் செய்யும். இப்போது நடக்கும் போராட்டங்கள் அல்ல.