என் பாகிஸ்தான் தொடர்புகள்

 

கோலமிட்டவர்களின் பாகிஸ்தான் தொடர்புகள்

கண்டறியப்பட்டுவிட்டன

துப்பறியும் காவலர் கண்ணில்

தேச விரோதிகள் எவரும் தப்பவியலாது

 

இன்னுமொரு துப்பும்கூட கிடைத்திருக்கிறது

கோலங்களில் இருப்பவை

கோடுகள் அல்ல

அவை ஆதி உருது மொழியின் வரிவடிவங்கள்

அதில் எழுதப்படுகின்றன

தேசவிரோத பயங்கரவாதிகள் தீட்டிய

ரகசிய சதியின் வரைபடங்கள்

 

எங்கே ஒளிந்துகொள்வதென்று தெரியவில்லை

எனக்கும் உண்டு

சில பாகிஸ்தானியத் தொடர்புகள்

சதக் ஹசன் மாண்டோவின்

மானுடப் பேரன்பின் கதை நிலங்களில்

நானும் தங்கியிருந்திருக்கிறேன்

ஃபெய்ஸ் அஹமது ஃபெய்ஸின்

கவிதையில் எரியும் கனலில்

நானும் எரிந்திருக்கிறேன்

நுசுரத் பதே அலிகானின்

கஸலின் பின்னே கண்ணீருடன் நடந்திருக்கிறேன்

 

இன்னும் ஒரு ரகசியத் தொடர்பும் உண்டு

நான் பிறப்பதற்கு முன்பு

எனக்கொரு பாகிஸ்தான் காதலி இருந்தாள்

பிரிவினையின் இருளில்

அவள் என்னைவிட்டுப் பிரிக்கப்பட்டாள்

என் துயரமான காதல் கவிதைகளின் அரசியாக

அவள் இன்றும் இருக்கிறாள்

கவிதையில் அவள் வாழ்வதால்

யௌவனம் தீராதிருக்கிறாள்

பாகிஸ்தானுக்கு என்னைப் போகச் சொல்லும்போதெல்லாம்

அது அவளைக் கண்டுபிடிக்கத்தான்

என்று தோன்றாமலில்லை

 

பொறுமையில்லை

 

என் பாகிஸ்தான் தொடர்பான குற்றங்கள்

இவ்வளவுதான்

 

எனக்குப் பொறுமையில்லை

ஒவ்வொரு அடியாய் எடுத்துவைத்து

நடைபழகுவதற்கு

துளித்துளியாய் இந்தக் காயங்கள்

ஆறுவதைக் காண்பதற்கு

கருணையை அன்பென்று

தொடர்ந்து சமாதானப்படுவதற்கு

பத்திய உணவை

வாழ்க்கை முறையாக்கிக்கொள்வதற்கு

யாருக்கெல்லாம் எதுவாக இருந்தேன் என்பதை

நானே திரும்பத் திரும்ப நினைத்துக்கொள்வதற்கு

தையல்கள் அழுந்தக்கூடாதென

பதுமைபோல ஒரேநிலையில் தூங்குவதற்கு

ஒப்வொன்றிற்கும் தயவு வேண்டி

எப்போதும் இன்முகத்துடன் இருப்பதற்கு

இழந்தவை திரும்புமென

நாளெல்லாம் காத்திருப்பதற்கு

இனியும் வசந்தங்கள் வருமென்று

வீணே நம்புவதற்கு

 

எனக்குப் பொறுமையில்லை

என்னோடு

நான் இருப்பதற்கு

 

இதயமற்ற காலத்தில்

 

நான் வீட்டில் இருக்கிறேன்

நான் சிகிச்சையிலிருக்கிறேன்

நான் ஓய்வில் இருக்கிறேன்

நான் ஒரு சிறிய சதுரத்தில் இருக்கிறேன்

 

நெட் பிலிக்ஸ் படம் பார் என்கிறார்கள்

பூமியில் விழும் இருளில்

பாதி இருள் என் நெஞ்சில் விழுகிறது

 

சங்கீதம் கேள் என்கிறார்கள்

காலத்தின் அழுகுரல்கள் என்னைத் துளைக்கின்றன

 

நகைச்சுவைக் காட்சிகளைக் கண்டு

மகிழ்ந்திரு என்கிறார்கள்

வேட்டை நாய்களின் குரைப்பொலிகள்

என்னை அமைதியிழக்க வைக்கின்றன

 

வெளியே செல்லாதே

கிருமிகள் தொற்றும் என்கிறார்கள்

கொள்ளை நோயின் சித்தாந்தத்திற்கு எதிராக

என் நண்பர்கள் தெருக்களில் அடிவாங்குகிறார்கள்

 

இதோ இந்த ஆப்பிளை சாப்பிடு என்கிறார்கள்

எங்கள் வயல்களை எலிகள் சூறையாடுகின்றன

 

பனியில் நில்லாதே என்றார்கள்

நீதியை உறைய வைக்கும் கொடும்பனியொன்று

எங்கும் இறங்கிக்கொண்டிருக்கிறது

 

சத்தமாகப் பேசாதே, இதயத்திற்கு நல்லதல்ல என்கிறார்கள்

இதயமற்ற காலத்தில்

கோழைத்தனத்தின் கிசுகிசுப்புகள்தானே

எங்கும் கேட்கிறது

 

என் நோய்மை என்னைக் கையாலாகாதவனாக்குகிறது

கையாலாகாத ஒரு காலத்தின்மேல்

பெரும் பிணியொன்று சூழ்கிறது

 

கோல பயங்கரவாதிகள்

 

வாசலில் இட்ட கோலத்தில்

அரசருக்கு எதிராக

வாசகம் எழுதிய பெண்களைக்

கைது செய்திருக்கிறது போலீஸ்

 

உங்களுக்குத் தெரியாதா

கோலங்கள் என்பவை

பெண்களின் சங்கேத மொழி என்று

காலங்காலமாக

அதில் தினமும் எழுதுகிறார்கள்

தங்கள் உடைந்த கனவுகளை

முறிந்த மனோரதங்களை

அரசனும் கடவுளும் படிக்கமுடியாதபடி

தங்கள் அந்தரங்க ஆசைகளை

 

துப்பறியும் போலீஸ்

கோல பயங்கரவாதிகளின்

சங்கேத மொழிகளைத்

தரையில் அமர்ந்து உற்றுப் பார்க்கிறது

அதில் காதை வைத்து உற்றுக் கேட்கிறது

அவசர அவசரமாக

பூட்ஸ் காலால் அழிக்கிறது

 

மண்ணில் இட்ட கோலங்கள்

பூகம்பங்களை உண்டாக்குமா?

கோலத்தில் வரைந்த சொற்கள்

சிம்மாசனங்களை அசைக்குமா?

 

கோலத்தின் கோடுகள்

நாகங்களாகி நெளிகின்றன

 

அதே நாள்

 

சென்ற ஆண்டின் காயங்கள் எதுவும்

இந்த ஆண்டில் கூடாதென்றுதான்

புத்தாண்டின் முதல் நாளில்

எவர் கண்ணிலும் பட்டுவிடாமல்

ஒரு பழைய மரப்பெட்டியில்

ஒளிந்துகொண்டிருந்தேன்

 

சென்ற ஆண்டின்

வாள் முனைகள் எதுவும்

இந்த ஆண்டில் கீறிவிடக்கூடாதென்றுதான்

புத்தாண்டு மழையில்

என்னையும் ஒரு மழைத்துளியாக்கொண்டு

மறைந்து கொண்டிருந்தேன்

 

புத்தாண்டின் முதல் நாள் முடிய

இன்னும் கொஞ்ச நேரம்தானே இருக்கிறது என

கொஞ்சம் கவனக்குறைவாக இருந்துவிட்டேன்

என் அன்பின் இதயத்தைக்

கொஞ்சம் திறந்துகாட்டிவிட்டேன்

என் நியாயத்தின் குரலைக்

கொஞ்சம் உயர்த்திவிட்டேன்

மரக்கட்டையாக கிடந்தது அலுத்து

மரமாகக் கொஞ்சம் துளிர்த்துவிட்டேன்

 

என் விரல் நுனிகளில் பிசுபிசுக்கிறது

அதே குருதிப் பெருக்கு

என் நாக்கில் கரிக்கிறது

அதே கண்ணீரின் உப்பு

 

இதை ஒரு புது வருஷமென்று

அவசரப்பட்டு நம்பிவிட்டேன்

பழையதெல்லாம் கொஞ்சம்

புதிதாகி இருக்குமென

நானும் ஒரு புதுச்சட்டை அணிந்துகொண்டுவிட்டேன்

 

இந்த வாழ்க்கை அவ்வளவு கருணையுடையதாகுமெனில்

அதற்குப் பின்

அது இந்த வாழ்க்கையே அல்ல

 

டிஜிட்டல் வாழ்த்திற்குப் பதில்

 

இந்த டிஜிட்டல் வாழ்த்திற்குப் பதில்

வாசலில் உதிர்ந்துகிடக்கும்

ஒரு மரத்தின் மலரையோ இலையையோ

ஒரே ஒரு நிமிடம் எடுத்து நுகர்ந்து பார்

ஒரே ஒரு நிமிடம் நீ வாழ்த்த விரும்புகிற ஆணை

மனதார நினைத்துக்கொள்

உன் வாழ்த்து அந்த மனிதனுக்குப் போய் சேர்ந்துவிடும்

 

இந்த ‘யீஷீக்ஷீஷ்ணீக்ஷீபீ’ வாழ்த்திற்குப் பதில்

சாலையில் உன் வீட்டிலிருந்து தெருமுனைவரை

இந்தப் பனியில் நடந்துவிட்டு வா

ஒரே ஒரு நிமிடம் நீ வாழ்த்த விரும்புகிற பெண்னை

அப்போது மனதார நினைத்துக்கொள்

அது இந்தப் புத்தாண்டு இரவில்

அவளைத் தேடிச் செல்வதற்குச் சமம்

அவள் எங்கோ இருக்கும் உனக்கு

ஒரு தேனீர் தயாரிப்பாள்

 

உயிரற்ற பதிலிகளால்

இந்த வாழ்வு நிரம்பி வழிகிறது

ஒரு குப்பைத் தொட்டியாக

 

கடைசியாக

 

இந்த ஆண்டில்

இந்தப் பத்தாண்டில்

எல்லோருக்கும்

கடைசியாகச் செய்ய

எவ்வளவோ இருக்கிறது

இதுதான் கடைசி காபி

இதுதான் கடைசி செல்பி

இதுதான் கடைசி சினிமா

இதுதான் கடைசி முத்தம்

இதுதான் கடைசிப் புணர்ச்சி

இதுதான் கடைசி பீர்

இதுதான் கடைசி ஷாப்பிங்

இதுதான் கடைசி வேலை நாள்

இதுதான் கடைசி ஞாயிற்றுக்கிழமை

இதுதான் கடைசி துரோகம்

இதுதான் கடைசி பிரார்த்தனை

 

ஒவ்வொன்றையும்

இதுவே கடைசி என வியப்புடன்

நினைத்துக்கொள்கிறார்கள்

எல்லோருக்கும்

கடைசியாக ஒன்றைச் செய்வதில்

அவ்வளவு கிளர்ச்சியாக இருக்கிறது

ஒரு வருஷம் முடிகிறபோது

எல்லாம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டால்

நல்லது என்பதுபோல

 

எனக்கு எப்போதும்

கடைசியாகச் செய்ய

ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது

அது ஒரு கடைசிக் கவிதையை எழுதுவது

‘பிரேக் அப்’க்கு முன்

 

தூக்கம் கலைந்த அதிகாலையில்

வெப் சீரிஸ் ஒன்றில்

அந்த உரையாடலைக் கேட்டேன்

 

“‘பிரேக் அப்’புக்கு முன்

கடைசியாக ஒருமுறை

நாம் கூடிக்கொள்ளலாமா?”

என்றாள் அவள்

 

“எதற்காக?”

என்றான் அவன்

 

“ஒரு நினைவிற்காக”

என்றாள் அவள்

 

பிறகு அவர்கள்

நின்ற நிலையில்

கூடிக்கொண்டார்கள்

பிறகு அவர்கள்

பிரிந்து சென்றார்கள்

பிரிவின் மலர்களைவிட

பிரிவின் கண்ணீரைவிட

பிரிவின் கசந்த சொற்களைவிட

அது சிறந்ததாக இருந்தது

 

இந்த நூற்றாண்டில்

எல்லாப் புணர்ச்சிகளும்

பிரிவுக்கு பிந்தைய

நினைவுகளுக்காக மட்டும்தானே

என்றொரு வசனம்

அந்த நாடகத்தில் இடம் பெற்றிருக்க வேண்டும்

 

இருபத்தோராம் நூற்றாண்டு பிறந்து

இருபதாண்டுகள்தான் முடிந்திருக்கின்றன