மே மாதம் உதய்பூரில் நடந்து முடிந்த இந்திய தேசிய காங்கிரசின் மூன்று நாள் ‘ சிந்தனை அமர்வு’ அந்த இயக்கத்தினை மீள உயிர்ப்போடு இயங்கச் செய்வது குறித்து தீவிரமாக விவாதித்தாக சொல்லப்படுகிறது. நெருங்கிப் பார்க்கும் போது, அதன் உள்முரண்களை களைவதே நோக்கமாக இருந்திருக்கிறது. அந்த அமைப்பின் உள் முரண் , ’கொள்கை’ அடிப் படையிலானதாக இல்லாமல், நபர் சார்ந்ததாக இருந்திருக்கிறது. இந்தத் தகவல் கூட பொதுவெளியில், ஊடகங்களின் வாயிலாகத் தெரிய வந்த ஒன்றுதான். காங்கிரசின் இளந்தலைவர் ராகுல்,2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் இந்திய தேசிய காங்கிரஸ் தலைமையேற்று தேர்தலைச் சந்தித்தவர், அந்தத் தேர்தலில் காங்கிரசின் இரண்டாவது முறையான படுதோல்விக்குப் பிறகு தனது பதவி உதறினார். உத்தரப் பிரதேசத்தின் அமேதி தொகுதியில் ராகுல் தோல்வியடைந்தார். எழுபதுகளில் சஞ்சய் காந்தி தொகுதியாக, அதன் பின்னர் ராஜிவ் , ராகுல் என ஐம்பது ஆண்டுகளாக ‘ நேரு-காந்தி ‘ குடும்பத்தின் அசைக்க முடியாத ஆதரவுகளமாக இருந்த தொகுதி, முதல் முறையாக ‘ தோல்வியைப்’ பரிசளித்தது. ராகுல் இரண்டு தொகுதிகளில் போட்டியிடத் தீர்மானித்தபோதே எழுந்த சந்தேகம் உறுதியானது. தென் மாநிலமான கேரளாவின் வயநாடு தொகுதி அவருக்குப் பெருவெற்றியை வழங்கியது. இந்தத் தென் மாநில நகர்வு இந்திய அரசியலில் மிக முக்கியமான ‘குறியீட்டு’ ரீதியான செய்தியை உள்ளே பொதிந்துள்ளது. இந்திய வாதம் (தேசியவாதம் என்ற புனித வாதத்தை தவிர்க்கிறேன்) எதிர் மாநிலவாதம் (பிரதேசவாதம் எனும் கொடுஞ் சொல்லை தவிர்க்கிறேன்) (Nationalism Vs Regionalism) எனும் எதிர்வுகளின் பண்பு வேறுபாடு எத்தனை மேட்டிமையானது என்பதை இறுதியாகப் பார்க்கலாம். இப்போதைக்குச் சுருக்கமாக, இந்த எதிர்வுகளை முன்வைப்பவர்கள் ‘ இந்தியவாதத்தை’ உயர்த்தியும், ’மாநில வாதத்தை’ தாழ்த்தியும் மொழிவார்கள். அதிலும் வெள்ளைப் பரங்கிப் பார்ப்பனர்கள் ஆங்கிலத்தில் இயல்பாக, ‘ regional’ என்றால் parochial ‘ (குறுகிய நோக்கம் கொண்ட) என எழுதிக் கடப்பார்கள். இந்தியவாதம் விசாலமான பார்வையும், அகவெளிச்சமும் கொண்டது எனப் பொருள். அதாவது இந்துத்துவா இந்திய வாதம் விசாலம், மாநிலங்களின் இன/மொழி/ உரிமைகள் குறுகலானது ‘. நிற்க.
இந்திய அரசியல் வரலாற்றில் தலைமையமைச்சர் பதவியேற்றவர்கள் 99% உத்தரப்பிரதேச மாநில நாடாளுமன்ற உறுப்பினர்களே. நேரு துவங்கி லால் பகதூர் சாஸ்திரி ஊடாக இந்திரா அம்மையார், ராஜிவ் வரை காங்கிரஸ் தலைமையமைச்சர்கள் அங்கேயிருந்தே வந்தனர். மாற்றாக உருவான சௌத்ரி சரண்சிங், வி.பி.சிங் ஆகியோரும் அம்மாநிலத்தவரே. 1977 ஆம் ஆண்டில் மொரார்ஜி அவர்கள் அதை குஜராத்திற்கு மாற்றிய சாதனையைச் செய்தார். 90 களின் ராஜிவ் மரணத்திற்குப் பின்னரான, இந்திய அரசியலின் தகிடுதத்தங்களின் புதிரான காலங்களின் ‘ வெடிப்பாக’ அரசியல் ஓய்விலிருந்து மீண்டு நரசிம்ம ராவ் எனும் ஆந்திரர் அந்தப் பதவியைப் பெற்றார். 90களின் இடைக்கால கூட்டணி அரசுகளின் பரிசோதனைக் கூடத்தில், கர்நாடகாவின் தேவகௌடாவும், பஞ்சாபின் ஐகே குஜ்ராலும். ஆனால் கவனம், கட்சி மாறினாலும் காட்சி மாறாது. பாஜகவின் வாஜ்பேயி உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்தான். அவர் லக்னோ தொகுதியில் வென்றது சரி, அது ஏன் குஜராத்தை வானுக்கு உயர்த்திய ‘குஜராத்தி மண்ணின் மைந்தர் ‘ தற்போதைய நரேந்திர தாமோதர் மோடி காசி/வாரணாசிக்குப் ‘புலம் பெயர்ந்தார்’ என்ற கேள்விக்கான பதிலில் உள்ளது விவகாரம். ஆக, இந்தியாவின் ‘இதயம்’ இயங்கும் இடம் உத்தரப் பிரதேசம். அதாவது இந்தியாவின் ஆட்சி மற்றும் அதிகாரம் இயங்கும் தளம் உத்தரப் பிரதேசமும் குஜராத்தும் மட்டுமே.
ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளிற்கு மேலாக கட்சி, சோனியா அம்மையாரின் ‘ தற்காலிகத் தலைமையில்’ இயங்குகிறது. நியாயமாக பாஜக/ ஆர்.எஸ்.எஸ். பாசிச சக்திகளை எதிர்கொள்வதற்கான செயல்திட்டங்களை வகுக்கும் நிலையில் அந்தக் கட்சி இல்லை. 2014-ல் துவங்கிய தோல்விகளில் துவண்டு போயுள்ளது கட்சி. தோல்விகள் தொடர்வது மட்டுமல்ல, படிப்படியாக மோசமடைந்தபடி உள்ளது. காங்கிரஸ் கட்சி வரலாற்றில் தோல்விகள் துவங்கி ஐம்பதிற்கும் மேலான காலங்களாகி விட்டது. அந்தத் தோல்விகளின் வழி கட்சி பலவீனமடைந்த போதும், அதன் விளைவாக பல கட்சிகள் உருவாகக் காரணமாகவும் இருந்தது. இந்திரா அம்மையார் காலம் வரையான பிளவுகளின் தன்மையும், அவருக்குப் பின்னரான பிளவுகளும் விளைவுகளும் முற்றிலுமாக மாறுபட்டன.
இந்திரா காலத்தில் விலகிய/ விலக்கப்பட்ட மொரார்ஜி, காமராஜர், சௌத்ரி சரண்சிங், இன்னும் பலர் மாநிலங்களின் நலனை முன்னிறுத்திய அரசியலை செய்யவில்லை. தேசியத்தின் மாற்றாகவே தங்களை தகவமைத்தனர். காமராஜர் போன்றோர் மீண்டும் இந்திராவுடன் கைகோர்க்கத் தயங்கவில்லை. ஆனால் மொரார்ஜி உள்ளிட்டோரின் 1977 ஆம் ஆண்டின் ஜனதா தளம் இன்றைய பாசிச பாஜகவின் முன்னோடி அமைப்பான ஜனசங்கத்திற்கு அரசியல் அங்கீகாரம் வழங்குவதில் முடிந்தது. ஒய்.பி. சவான் மராட்டியத்தில் முடங்கிவிட, பாபு ஜெகஜீவன் ராம் போன்றோர் அரசியலிலிருந்து கட்டாய ஓய்விற்குத் தள்ளப்பட்டனர். சரண்சிங், தேவிலால் ஆகியோர் தேசியவாத மாற்றாக இருந்து ஓய்ந்தனர்.
ராஜிவ் காந்தி எனும் பயில்நிலை அரசியல்வாதியின் (அமெச்சூர் அரசியல்வாதி) ஆட்சிக்காலம் நேரு/ இந்திரா வகை அரசியலை முடிவிற்குக் கொண்டு வந்தது என்பதே எனது பார்வை. ஒரு முறையான புரிதலற்ற அரசியல் தலைவருக்குக் கிடைத்த வரலாறு காணாத வெற்றி , நேரு குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட இறுதிக் காணிக்கை எனவே கருத வாய்ப்புள்ளது. இந்திரா காந்தி அவர்களின் கொலை அந்தக் காணிக்கை செலுத்துவதற்கான உடனடிக் காரணமானது. இந்திய நாடாளுமன்றத்தில் இறுதியான/ கடைசியான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கொண்ட அரசு உருவானது. 1984 ஆண்டிற்குப் பிறகு முப்பது ஆண்டுகள் கடந்து 2014 ஆம் ஆண்டில்தான் மீண்டும் ஒரு கட்சி நாடாளுமன்றத்தின் அறுதிப் பெரும்பான்மை பெற்றது என்பது கவனத்திற்குரியது . ஆனால் அந்த நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையை பாரதீய ஜனதா கட்சி பெற்ற போது, காங்கிரஸ் வரலாற்றின் மிக மோசமான தோல்வியைப் பெற்று , வெறும் 42 உறுப்பினர்களை மட்டுமேகொண்ட கட்சியாகி, நாடாளுமன்ற எதிர்க்கட்சி ஆகும் வாய்ப்பையும் இழந்து விட்டிருந்தது. 1989 ஆம் ஆண்டிற்குப் பின் இன்று வரை காங்கிரஸ் தொடர்ந்து தேய்ந்தபடியே இருப்பதே உண்மை.
ராஜிவ் ஆட்சிக்காலம் ஒரு நவீன தொழில்நுட்ப யுகத்திற்கான திறப்பை உருவாக்கியது என்பதை மறுக்க முடியாது. சாம் பெட்ரோடா போன்றவர்களின் பங்கு முக்கியமானது. 1984-89 காலம் உலகம் பலவிதமான மாற்றங்களிற்கு உள்ளான காலம். அநேகமாக இருதுருவ பனிப்போர் தனது அந்திமத்தை நோக்கி நகரத் துவங்கி விட்டிருந்தது. அதுவரையான சோசலிச சார்பு நிலைப்பாடுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டியதானது. நாடாளுமன்றத்தில் இருந்த அசுர பல அறுதிப்பெரும்பான்மை ராஜிவ் அவர்களை பலவகையிலும் தடுமாறச் செய்தது. அவரது நெருங்கிய நண்பர்களும், உறவினர்களுமே அரசியல் எதிரிகளாயினர். 1987 ஆம் ஆண்டில் வி.பி.சிங், அருண் நேரு, முப்தி மொஹம்மது சயீத், அருண் சிங் எனப் பலரும் பதவி நீக்கம் செய்யப்படுவதும், பதவி விலகுவதுமானது. தயங்கித் தயங்கி பெரும் விருப்பமின்றி அரசியலில் நுழைந்தவர், ஆச்சர்யமான வகையில் தனது கடும் நடவடிக்கைகளால் அரசியல் எதிர்ப்புகளிற்கு ஆளானார். போபர்ஸ் ஊழல் எனும் பெரும் பூதம் அவரைத் துரத்தத் துவங்கியது. அதுவரையான நேரு/ இந்திரா கால அரசியல் சாமர்த்தியங்கள் அற்றவரால் அவற்றை எதிர்கொள்ள இயலவில்லை. அதைவிட இவரது முன்னாள் நண்பர்களே அரசியல் ரீதியான விரோதிகளானதும், அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளால் அன்றி, ராஜிவ் மீதான குற்றச்சாட்டுகளே காரணமானது அவரது மிக மோசமான பலவீனமானது.
அவரது மிகப் பிழையான அரசியல் நகர்வுகளில் அயல்நாட்டு உறவுகளும் ஒன்றானது. பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற அண்டை நாடுகளுடனான முரண்கள் பெரிதாக இல்லாத காலத்தில் , இலங்கையின் ஈழ விடுதலைப் போர் தொடர்பிலான புரிதலற்ற அவரது நடவடிக்கை மிக பயங்கரமான விளைவுகளிற்குக் காரணமானது. அவரது அன்னை இந்திரா அவர்கள் உருவாக்கிய / ஆதரித்த விடுதலைப் போராளிக் குழுக்களை கையாண்ட முறை முற்றிலும் தவறாகிப் போனது. அமைதிப் படை என்ற பெயரில் இந்திய ராணுவத்தை இலங்கைக்கு அனுப்பியது மாபெரும் வரலாற்றுப் பிழையானது. ராஜிவ்- ஜெயவர்த்தனே ஒப்பந்தம் குறித்து , இலங்கை பிரதமர் ஜெயவர்த்தனே சொன்ன கருத்து , ராஜிவ் அவர்களின் போதாமையை அப்பட்டமாகப் பேசியது. ‘ எனது அரசியல் அனுபவத்தின் வயது, ராஜிவின் வயதை விடக் கூடுதலானது ‘ என ஏளனம் செய்தார் ஜெயவர்த்தனே. அமைதிப் படைக்கு எதிராக போராளிகள் இலங்கை ராணுவத்தின் துணையோடு போரிட்ட விபரீதத்தில் முடிந்தது அந்த விபத்து. அரசு மற்றும் போராளிகள் என இருதரப்பிற்கும் எதிரான போரில் இந்தியா சிக்குண்டது. அதன் மிக விரும்பத்தகாத விளைவாக அவரது உயிரையே இழந்தார் ராஜிவ். ராஜிவ் அவர்களின் கொடுமையான மரணத்தின் விளைவை தமிழ்நாடும் காங்கிரஸ் கட்சியும் இன்னும் கடக்கவியலாமல் தவிக்கிறது.
1991 ஆம் ஆண்டில் நடந்த ராஜிவ் கொடும் மரணம், அதன் பின்னணி இன்னும் தெளிவற்ற ஒன்றாகவே தொடர்கிறது. கொலைப் பலியை விடுதலைப் புலிகள் ஏற்றுக் கொண்ட போதும், அந்தச் சதிச் செயலின் சூத்திரதாரிகள் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை என்ற கருத்து வலுவாக நிலவுகிறது. நிற்க. ராஜிவ் மரணத்திற்கு பின்னான தேர்தலும் அதன் முடிவுகளும் பெரிய அளவில் காங்கிரசை வலுப்படுத்திவிடவில்லை. அறுதிப் பெரும்பான்மையற்ற அரசை வெற்றிகரமாக நடத்தினார், அரசியல் கட்டாய ஓய்விலிருந்து மீண்டு வந்த நரசிம்மராவ். பாஜக ஆதரவோடு தொடர்ந்த ஆட்சியில் பாஜக வின் மதவாத முன்னெடுப்பும் பாராமுகமாக ஆதரவு பெற்றது. நரசிம்ம ராவ் அரசின் கண்முன்னே ‘பாப்ரி மஸ்ஜித் இடிப்பு ‘ பயங்கரம் அரங்கேறி, இந்தியாவின் மதவாதப் பிளவை ஆழமாக்கி, இந்துத்துவ பெரும்பான்மைவாத வன்முறை அரசியலுக்கு கால்கோள் நடப்பட்டது. உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் கொள்கைகளை கையாள்வதன் மூலம் இந்தியப் பொருளாதாரத்தின் முகத்தையே மாற்றிய கதையும் அரங்கேறியது.
ஆனால் காங்கிரஸ் எனும் கட்சி முற்றிலுமாக நிலை குலைந்து போனது. இந்தக் காலம் மற்றும் இதைத் தொடர்ந்த காலங்களிலான காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் பலவிதமான பிளவுகளைச் சந்தித்தது. சோனியா அம்மையாரிடம் கட்சியைப் பொறுப்பேற்று நடத்தும்படி கோரப்படவில்லை. அவரும் அதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தவும் இல்லை. ராகுலும், பிரியங்காவும் குழந்தைகளாக இருந்தனர். ஓரளவில் தலைமையற்ற நிலை தொடர்ந்த கட்சியின் வலுவான மாநிலத் தலைவர்கள், தெளிவான பார்வையற்ற அல்லது ரகசியமான திட்டம் கொண்ட நரசிம்ம ராவ், என். டி. திவாரி போன்ற தலைமைகளை தூக்கி எறித்து விட்டு மாநில நலன் கருதிய கட்சிகளைத் துவங்கினர். தமிழ்நாட்டில் ஜி.கருப்பையா மூப்பனார் தலைமையில் தமிழ் மாநிலக் காங்கிரசும், மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜியின் ‘ திரிணாமுல் காங்கிரஸ் ‘ கட்சியும் உதயமாகின. தென் மாநிலங்களில் ஓரளவு வலுவான நிலை கொண்ட காங்கிரஸ் தேவையற்ற குழப்பவாத நடவடிக்கைகளால் ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் கட்சியை காணாமல் போகச் செய்துவிட்டது. தென் மாநிலங்களில் பாஜக காலூன்ற வகை செய்ததும் காங்கிரஸ் குழப்பவாதங்களே. அங்கு கட்சி ஓரளவில் இருப்புக் கொண்டதாக இருந்தாலும் கூட்டணிக் கட்சிகளை, குறிப்பாக தேவ கௌடாவின் ஜனதா தளம் கட்சியை கையாள்வதில் குழப்பங்கள் தொடர்வதே பாஜகவின் பலம்.
2004 ஆம் ஆண்டில் எதிர்பாராத நிலையில் அவர்கள்தலைமையில் அமைந்த ஒன்றிய ஆட்சி 2014 வரை நீண்டதன் விளைவு அந்தக் கட்சியினரை வெகுவாகக் குழப்பி விட்டது என்றே கருத வாய்ப்புள்ளது. அதிலும் 2004 ஆம் ஆண்டின் நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக் கையை(145), 2009 ஆம் ஆண்டில் கூடுதலாக்கி சுமார் இருநூறு ( 204 ) என்ற இலக்கை அடைந்தது கட்சியை/ கட்சியினரை நிலைகுலையச் செய்தது. இப்போது நமது நம்பிக்கை நாயகனாகத் தோன்றும் ராகுல் காந்தி அவர்களே மாபெரும் அரசியல் பிழைகளிற்கு காரணமானார். அப்போது ‘ லாலு மசோதா ‘ என அறியப்பட்ட, நீதிமன்றங்களால் ‘தண்டனைக்குள்ளாக்கப்பட்ட’ நாடாளுமன்ற / சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பிலான நடைமுறைகளில் சில மாற்றங்களைச் செய்ய உத்தேசித்த அவசரச் சட்டம் அது. ஒன்றிய அமைச்சரவையின் தீர்மானத்தின்படி 2013 ஆம் ஆண்டில் லல்லு பிரசாத் யாதவ் அவர்கள் தண்டனைக்குள்ளான போது அந்த அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களிற்கு அனுப்பப்பட்டது. அந்த அவசரச் சட்டம் தொடர்பிலான அவரது கருத்து என்னவானாலும், அது மிகச் சரியானதாக இருந்தபோதும்,காங்கிரசின் துணைத் தலைவராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த ராகுல், ஒரு பொது நிகழ்ச்சியில், அந்த அவசரச் சட்டத்தை ‘ நான்சென்ஸ் ‘எனக் குறிப்பிட்டு, ‘அது கிழித்தெறியப்பட வேண்டியது’ என்று கோபாவேசமாகப் பேசினார். 2009 -2014 காலங்களில் ஆட்சியில் பங்கேற்ற கூட்டணிக் கட்சிகளை கையாண்ட விதம் மிக அற்பமாக இருந்தது. அதிலும் சிறந்த நிர்வாகி, நேர்மையான மனிதர் என்ற போதும் மன்மோகன் சிங் எனும் ‘ நிர்வாகத் தலைமையமைச்சரின்’ (Executive (?) Prime Minister ) தலைமையிலான அரசு பல பாதகமான செயல்பாடுகளை ‘அரசியல் ரீதியாக’ எதிர்கொள்ளத் தவறியதன் விளைவை இன்னும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. பாஜக சங்பரிவார் கூலிப்படையான ‘வினோத் ராய்’ எனும் சி.ஏ.ஜி. கிளப்பிய பூதத்தை, நாடாளுமன்றக் குழு விவாதப் பொருளாக்காமல், ஊடகங்களின் தீனியாக அனுமதித்ததும், இன்று பாஜக வின் ‘கைப்பாவையாக’ ஆடும் சிபிஐ அமைப்பின் பார்ப்பன அதிகாரிகளை பாஜக சதித்திட்டத்திற்கு உதவ அனுமதித்ததும் பெரும் பிரளயமாகமாறியது. இதோ இப்போது மோடியின் அரசில் ‘ரஃபேல்’ ஊழல் எவ்வளவு தெளிவாக சிபிஐ/ உச்சநீதிமன்றம் என அனைத்து தன்னாட்சி அமைப்புகளின் சீரிய துணையோடு எவ்வளவு குறுகிய காலத்தில் ஆழப் புதைக்கப்பட்டு, ஊடகங்களின் துணையோடு மறக் கடிக்கவும் பட்டுவிட்டிருக்கிறது. அரசியல் ரீதியான சதிச் செயல்களை முறியடிக்க ‘ அரசியல்’ வழிதான் சிறந்தது என்பதை மன்மோகன் சிங் மட்டுமல்ல, ராகுல் காந்தியும் உணரவில்லை.
இந்திய தேசியம் எது? அதன் ஆன்மா எங்கே இருக்கிறது. அதன் குவிமையம் எங்கே இருக்கிறது. பாஜக ‘தேசியத்தின்’ உயிர்நாடி இயங்குமிடம் ‘நாக்பூர்’. அது இந்து, இந்தி, இந்தியா எனும் பாசிசக் கோட்பாட்டு அடிப்படை கொண்டது. ஆனால் அந்த உயிர்நாடியை ‘உயிர்ப்போடு’ வைத்திருப்பது குஜராத். குஜராத் குஜராத்திகளின் தாயகம். குஜராத்தின் இயங்குதளம் உலகளாவியது. அது எல்லைகளற்று இயக்கம் கொள்ளும் தன்மை கொண்டது. எந்த நாட்டின் குடியுரிமை பெற்றவராயினும், அவர்கள் ‘ குஜராத்திகளின் மானசீக வாழ்விடம்’ குஜராத் மட்டுமே. இந்தியப் பொருளாதாரம் அவர்களின் விரலசைவிற்கு திசை மாறும். அவர்களுக்கான மதிமந்திரிகள் இந்திய சனாதனப் பார்ப்பனர்கள். அரசு, ஆட்சி, அரசியல் எனும் தளங்களை நிர்வகிக்கும் காலாட்படை / கூலிப்படை உபயம் ஆர்.எஸ்.எஸ். இப்போதைக்கு தலைமையமைச்சராக ஒரு தலைசிறந்த மேடைக் கலைஞனான மோடியை வழங்கியிருக்கிறது. அவரை தினசரியாக நெறியாளுகை செய்ய குஜராத்தி ஜெயின் பனியா அமீத் ஷா. பொக்கிஷதாரர் இன்னொரு ஜெயின் பனியா கௌதம் அதானி.
நாக்பூர் இந்துத்துவா தேசியம் சனாதன பார்ப்பன மேலாண்மையை லட்சியமாகக் கொண்டது . அதுதான் “ஒற்றையாட்சி’’ குஜராத்திகளின் தேசியம் ‘கொள்ளை லாப மூலதனம்’ தான். இன்னும் சொல்லப் போனால், குஜராத்தி ஜெயின்/ இந்து பனியா, சிந்திகள், மார்வாரிகள் ஆகியோரின் ‘மதமே’ (RELIGION ) மூலதனப் பெருக்கம்தான். ‘‘ஒற்றையாட்சி நாணயத்தின் இருபக்கங்கள் சனாதன மேலாண்மையும், கொள்ளை மூலதனமும்’’ தான். உலகெங்கும் பரவி கொள்ளை லாபமடையும் சமூகம் எதற்காக ‘தேசம், தேசியம்’ என்ற சிடுக்குகளில் தன்னை சிக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்ற நியாயமான கேள்வி எழவே செய்யும். உலக மூலதனச் சந்தையில் பலவிதமான சித்து வேலைகளைச் செய்யும் குஜராத்திகளுக்கு இந்தியா போன்ற இரண்டாவது மக்கள் தொகைப் பெருக்கம் கொண்ட நாட்டின் மீதான இரும்புப் பிடி மிக மிக அவசியம்.
பெயரளவிலேனும் உலகின் மிகப் பெரிய மக்களாட்சி நாடு என்ற நிலையும், அதன் பெரும் சந்தையும் அவர்களிற்கு மிகப் பெரிய பலம். கொள்ளை மூலதனத்தின் ‘ரத்தக் கறையை’ கழுவ மும்பை பங்குச் சந்தை போன்ற சூதாட்டக்களம் தேவை. இங்கு ஒன்றை வெளிப்படையாக தெரிந்து/ குறித்துக் கொள்வது நல்லது. ஆட்சியாளர்கள் யாராய் இருந்தாலும் குஜராத்திகளின் இரும்புப் பிடியிலிருந்து இந்தியப் பொருளாதாரம், மூலதனம் தப்பவே முடியாது. ஆனால் ஆர்.எஸ்.எஸ். உடனான ஒப்பந்தப்படி பாஜகவை கையகப்படுத்தி மோடி போன்ற ‘பொம்மைத் தலைமையைக்’ கொண்டு இந்திய ஆட்சியை அவர்கள் கையாள்வது கொள்ளை லாபத்தை நூறு மடங்காகப் பெருகச் செய்வதற்கு எளிதான வழி. அதைவிடக் கூடுதலாக ‘இந்துத்துவா தேசியவாதம் ‘ எனும் கொலை ஆயுதம் அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்தால், வெளிநாட்டு எதிரிகளையும், உள்நாட்டு எதிரிகளையும் ‘கட்டமைக்க’ எளிதான வழி. பாகிஸ்தானை/ உள்ளூர் இஸ்லாமியரை எதிரிகளாக தினப்படி சித்தரிப்பதும், சமஸ்கிருதம்/ இந்தி என மொழி தேசியம் பேசி மாநிலங்களை கவனச் சிதைவிற்குள் தள்ளுவதும் இதன் பொருட்டே.
உண்மையாகவே குஜராத்தி மாஃபியாவின் ஆகப் பெரிய ஆவல் ‘ஒற்றையாட்சி’ என்பதை உருவாக்குவதே. மாநிலங்களை முற்றாகக் கலைத்து விடுவது அவர்களது பெருங்கனவு. அதுவே நாக்பூர் பார்ப்பன/ சனாதன இந்துத்துவ தேசியமும், குஜராத்தி கொள்ளை மூலதன தேசியமும் சந்திக்கும் புள்ளி. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பானமையை தேர்தல் வழியாக வென்றெடுத்துவிட்டால், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை குப்பைக் கூடையில் வீசிவிடத் திட்டம். இதனை எதிர்கொள்ள இந்தியாவின் அரசியல் கட்சிகள் தயார் நிலையில் இருக்கின்றனவா என்பதே நம் முன் இருக்கும் கேள்வி. அதிலும் இந்திய தேசிய காங்கிரசின் பங்கு இந்த எதிர் அரசியலில் எந்த அளவில் இருக்கப் போகிறது என்பதே மிகப் பெரிய கேள்வி.
இந்திய தேசியக் காங்கிரசின் ‘ தேசியம்’ என்ன? அப்படியொன்று இருக்கிறதா? அந்த இயக்கத்தின் வரலாற்று தொடர்ச்சியிலிருந்து எதையாவது மீட்டெடுக்க வழிவகை இருக்கிறதா? என்னளவில் இன்றைய காங்கிரஸ் கட்சி வரலாற்றுத் தொடர்ச்சி என்பதே நேரு-காந்தி Legacy ( மரபுரிமைச் செல்வம் ? ) மட்டுமே. அதன் அத்தனை பரிமாணங்களும் முற்றாக நேர்மறையானது அல்லதான். ஆனாலும் நேரு , இந்திரா எனும் ஆளுமைகள் இன்றி இன்றைய இந்தியா ஒருபோதும் சாத்தியமாகியிருக்காது என்பது உறுதி. ஆனால் அந்த ‘ மரபு தான்’ தினசரியாக சங்பரிவார் கூட்டத்தின் தாக்குதலுக்குள்ளாகி வருகிறது. நேரு எனும் ஆளுமையை இந்திய அரசியல் உரையாடலில் இருந்து அறவே நீக்கி விடாமல் தங்கள் செயல்திட்டம் தொழிற்படாது என்பதை பாஜக/ ஆர்.எஸ்.எஸ். தெளிவாக உணர்ந்திருக்கிறது. இந்திரா காந்தி போன்ற ஆளுமையின் நேர்மறை வெற்றிகளை, நெருக்கடி நிலை என்ற அரசியல் பிழையால் சமன்படுத்திவிட முடியுமென எண்ணும் சங்கிகளுக்கு, நேரு எனும் மதசார்பற்ற சோசலிசவாதியை எளிதாகக் கையாள முடியவில்லை.
இரட்டை நெருக்கடி நிலைத் தன்மையில் ஆட்சி செய்யும் மதவாத தீவிரவாதிகளுக்கு இந்திராவின் ‘நெருக்கடி நிலை’ விமர்சனம் செய்யவே தகுதியில்லை. ஆனாலும் அதைக் கொண்டே இன்றைய காங்கிரசின் தலைமையிலிருக்கும் ராகுலை எதிர்கொள்ளத் துணிகிறது பாஜக. போதாக்குறைக்கு எந்தவிதமான சொந்த அரசியல் பலமுமற்ற காங்கிரஸ் உட்கட்சி எதிரணியும் பலகுரலில் பேசி பலவீனம் செய்ய முயல்கிறது. பல வேளைகளில் அந்த அணியினர் பாஜக வின் குரலாகவும் ஒலிப்பதைக் காண முடிகிறது.
இதையெல்லாம் கடந்து 2024 ஆம் ஆண்டிற்கான மாபெரும் சவாலை எதிர்கொள்ள ராகுல் தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறாரா என்ற கேள்வி , இந்தப் பாசிச சக்திகள் மீளவும் வென்று விட்டால் என்ன ஆகும் என உணர்ந்து அச்சமுற்று வாழ்வோர் மத்தியில் பெரும் அக்கறை சார்ந்த ஒன்றாக உள்ளது. 2019 தோல்விக்குப் பின்னர் பெரும் நம்பிக்கை வழங்குபவராக இந்திய கூட்டாட்சி சிந்தனைகளைப் பேசினார் ராகுல். உண்மையாகவே காங்கிரஸ் இயக்கத்தின் மிக அரிதான குரலாக அது ஒலித்தது. மிகச் சரியாக பாஜக வின் ‘ஒற்றையாட்சி’ குரலுக்கு மாற்றாக ஒலித்தது அந்தக் குரல். இப்போதும் அதிலிருந்து பெரிதாக விலகிவிட்டதாக கருதுவதற்கான காரணங்கள் இல்லை. காங்கிரஸ் சிந்தனை அமர்வில் அவர் பேசிய சில கருத்துகள் சந்தேக விதைகளை விதைத்துள்ளது. அதாவது மாநிலக் கட்சிகளால் தேசிய நலன் கருதிய கொள்கைகளை அடிப்படையாக்கிக் கொள்ள முடியாது, தேச நலனை முன்னெடுக்க தேசம் தழுவிய இருப்புக் கொண்ட காங்கிரஸ் போன்ற அமைப்புகளால் மட்டுமே அதனைச் சாதிக்க முடியும் எனும் பொருள்படப் பேசியிருப்பதாகத் தெரிகிறது. அவரது பழைய நடவடிக்கைகள், பேச்சுகளின் நினைவை மீளவும் கிளறியிருப்பது உண்மை. எனவே இந்தியா எனும் கூட்டாட்சிக் குடியரசு சிந்தனை மட்டுமே பாஜக/ ஆர்.எஸ்.எஸ். பாசிசத்தை எதிர்கொள்ளும் வலுவான ஆயுதமாக இருக்கும் என்பது கருதி சில கருதுகோள்களைத் தொகுக்கலாம்.
முதலில் ராகுல் அவர்கள் காங்கிரசின் பலவீனங்களால் உருவானவையே மாநிலக் கட்சிகளாக இயங்குவதை என்னவாகத் தொகுத்துக் கொள்வார். இந்தியாவில் இன்று மாநில நலன் பேசும் கட்சிகளின் மூலம் காங்கிரஸ்தான் என்பதில் ஐயமில்லை. ஆனால் அது ஏன் நேர்ந்தது என்பது குறித்த நேர்மையான உளப் பரிசோதனையை ராகுல் அவர்கள் முயல வேண்டும். ராகுல் அவர்களின் பொறுமையாகக் கேட்கும் தன்மை குறித்து பலரும் சொல்லக் கேட்டிருக்கிறோம். ஏற்கனவே தொகுத்துக் கொண்டது போல தேசியவாதம்/ இந்தியவாதம் என்பது எந்தவகையிலும் மேன்மையானது.
இந்திய நலன் என்பது ஒருபோதும் மாநிலங்களின் நலனை/ உரிமையை மறுப்பதாக இருக்க முடியாது. அதைவிட அவை ஒன்றிற்கொன்று எதிரானதாகவும் இருக்க முடியாது. தெளிவான மாதிரிக்கு காஷ்மீர் மாநிலத்தை எடுத்துக் கொள்வோம். இந்தியா எனும் ஒன்றியத்தில் அவர்களை இணைத்துக் கொள்ள வழங்கப்பட்ட சிறப்புரிமையான அரசமைப்புச் சட்ட விதி எண் 370 ஐ நீக்குவது எந்தவகையில் இந்திய ஒன்றியத்தை வளப்படுத்திவிடும். இதோ மூன்று ஆண்டுகள் கடந்த பின்னும் அங்கே நிலங்களை வாங்க முதலீடுகள் கொட்டிவிடவில்லையே. ஒரு மாநிலத்தை ‘ ஒன்றியத்தின் ஆளுகைப்பகுதியாக்குவது ‘ மாநில நலனா? வேதனையான செய்தி, காங்கிரஸ் ஆட்சியும், பாஜக ஆட்சியும் காஷ்மீரை ‘ கையாள’ எடுத்த எந்த முயற்சியும் வெல்லவில்லை. பாதுகாப்புச் செலவினத்தை கூட்டு வதற்கு மட்டுமே உதவியது. ஆனால் காஷ்மீர் தீவிரவாதம் ‘ இந்திய தேசியவாதத்தை உயிர்ப்போடு’ வைத்திருக்க உதவியது. வேடிக்கை, இதே ‘தேசியவாதம்’ வடகிழக்கு மாநிலங்களிற்கு இதே நில உரிமையை வழங்கி கௌரவித்து பெருமை கொள்கிறது. இந்தியாவின் எதிரியாக பாகிஸ்தானை தினசரியாக முன்னிறுத்தும் பாஜக தலைமையமைச்சர் மறந்தும் கூட ‘சீனா’ எனும் பெயரை உச்சரிக்க மாட்டார். பனியா பார்ப்பன தேசியவாதம் யாரை எதிரியாக்குவது என்பதில் கறாராக இருக்கும். தேசியம் தனக்கான ‘எதிரிகளாக’ கட்டமைப்பது ஒரு சீரானதாக அமைவது.இந்து/ இந்தி/ இந்தியாவிற்கு ‘எக்காலத்திலும்’ இஸ்லாமிய உருது / பாகிஸ்தான் என்பதே ஆபத்து. இங்கே ‘எதிரி’ எல்லைக்கு உள்ளும் வெளியேயும் ஒரேவிதமாக இருப்புக் கொள்வதான பாவனையே தேசியத்தின் ஆதாரம். இதன் நீட்சியாகவே மாநில உரிமைகள் கோருவது இந்திய ஒருமைப்பாட்டிற்கு ஆபத்து.தமிழ் உட்பட்ட ‘தாய்’ மொழியுரிமை கோரிக்கைகள் சனாதன சமஸ்கிருத ‘தந்தை’ மொழிக்கு ஊறு விளைவிப்பது எனும் வம்புகள் பேசப்படுகிறது.
இந்தப் புள்ளியில் ஒன்றைத் தெளிவுபடுத்திக் கொள்வோம். இன்றும் இந்தியாவின் பெரும் அரசியல் கட்சிகள் காங்கிரசும், பாஜகவும்தான். காங்கிரஸ் தனது வரலாற்றின் சுவடுகளிலிருந்து பெறுவதற்கு நிறைய உண்டு. அது இந்தியாவிற்கு விடுதலை வாங்கிக் கொடுத்த கட்சி என்ற எண்ணத்தை மறந்தாக வேண்டும். இந்திய விடுதலைக்குப் பின்னரான காங்கிரசுக்கு ‘விடுதலை’ எனும் விதைமுதல் பெரும் பலமாக இருந்தது என்பது உண்மையென்றாலும், அதன் போக்கில் அமைப்பும், கட்சியும் பல பரிமாணங்களை பெற்று மாற்றமடைந்து விட்டிருக்கிறது. அதன் போக்கில் பலவீனங்கள் மற்றும் தோல்விகளின் வழியாக தனது சாயலிலான பல மாற்றுகளை உருவாக்கியுள்ளது. ஆனால் அவை தமக்கான ‘விதைகளை’ வட்டார/மாநில நலன் சார்ந்தே தேடிக்கொண்டிருக்கின்றன. காங்கிரசின் சாயல், ஆனால் அதற்கான வட்டார மாற்றாக. காங்கிரசின், குறிப்பாக நேரு அவர்களின் மத சார்பின்மை, சோசலிச சமத்துவம் போன்ற கொள்கை மூலங்களே ‘விதை முதல்’. காங்கிரஸ் மையப்படுத்த அதிகாரத்தை வலுப்படுத்திய போது, அதன் கொள்கை மூலாதாரங்கள் மாநில வடிவம் ஏற்றன. இந்தக் கூறினையே ராகுல் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்தியாவின் ‘மாநில உரிமை’ என்ற குரலின் அடிப்படைகளை உருவாக்கியது திராவிட இயக்கம் என உறுதியாகச் சொல்லலாம். ‘திராவிட நாடு’ கோரிக் கையை கைவிட்ட போது, அண்ணா எனும் மாபெரும் அரசியல் சிந்தனையாளர், உருவாக்கிய கூட்டாட்சி சிந்தனை மாநில உரிமைகளை பதியனிட்டது. அந்த சிந்தனையின் பாதிப்பு, உரிமைகள் மறுக்கப்பட்ட/ பகிர்வில் சமத்துவமின்மையை எதிர்ப்பது மாநிலங்களின் குரலாக ஒலித்தது. ஒன்றை தெளிவாக விளக்கி விடவேண்டும். இந்தியாவின் இன்றைய மதசார்பின்மை அரசியலை முன்னெடுக்கும் கட்சிகளில், இடது சாரிகள் உட்பட அனைத்தும் ஏதோ ஒருவகையில் காங்கிரஸ் தேசியவாதத்தின் (மதசார்பற்ற சோசலிச சமத்துவம்) பயிற்சியை நேரடியாகவோ, மறை முகமாகவோ பெற்றவையே. அதாவது இன்று பாசிச பாஜக வின் பேராபத்தை உணர்ந்து ‘தேசியவாதத்தை’ பொறுப்பாகக் கையாளும் கட்சிகளே ஒருநாளில் தேசியவாதம் எனும் உன்னதத்தை ஏற்றுக் கொண்டவர்களே. ஆனால் ‘தேசியம்’ என்ற கருத்தாக்கத்தின் பாசிச முகத்தை தோலுரித்தவர்களில் அம்பேத்கரும், பெரியாரும், ரவீந்திரநாத் தாகூரும் மூத்த முன்னோடிகள். அம்பேத்கர் இந்துமதம்/ பார்ப்பனியம் எனும் சூழ்ச்சிகளை’ அம்பலப்படுத்தியவர், தாகூரின் பார்வை ‘சர்வதேச’ நோக்கு கொண்ட அறிவார்த்தம். ஆனால் பெரியாரின் பார்வை இன்று பூதாகாரமாக எழுந்து நிற்கும் ‘முதலீட்டிய கொள்ளை பனியா- சனாதன அதிகார வெறி பார்ப்பனீய’ தேசியத்தை துள்ளியமாக அடையாளம் கண்டு அதனை வேரறுக்க விடுக்கப்பட்ட அறைகூவல். அந்த அறைகூவல் இன்னும் தமிழ்மண்ணில் ஒலித்தபடி இருப்பதுதான் ‘பனியா/பார்ப்பன தேசியவாத’ பாஜக இங்கு காலூன்ற முடியாமல் இருப்பதற்கான தடை. இன்று பல தலைவர்களையும் தங்கள் விஷ வியூகத்தின் பகுதியாக்கிவிடத் துடிக்கும் சங்பரிவார் ஒருபோதும் நெருங்க முடியாத/ தமதாக்கிக் கொள்ள வாய்ப்பளிக்காத சிந்தனைகள் பெரியாருடையவை. எனவே இந்தியாவின் எதிர்காலத்தை நிச்சயமான இருளில் தள்ளிவிடத் துடிக்கும் பாஜகவின் சதியை முறியடிக்க துணியும் ஒவ்வொருவரும் அம்பேத்கரின், பெரியாரின், தாகூரின் ‘தேசியவாத’ மறுப்பு சிந்தனைகளை உள்வாங்க வேண்டும்.இந்துத்துவா பாசிசவாதத்திற்கெதிரான போரில் எப்போதும் அவர்களது சிந்தனைகளே ஆயுதம்
பாஜக எனும் கட்சி தனது சாயலிலான ‘ வட்டார மாற்றுகளை ’ எங்கேயாவது உருவாக்கியிருக்கிறதா? இந்து மஹா சபா, ஜனசங்கம், பாரதிய ஜனதா எல்லாம் ஒன்றேதான். ஆர்.எஸ்.எஸ். எனும் சனாதன பார்ப்பன அதிகாரத்துவ வெறியின் வெகுமக்கள் தள அரசியல் முகங்கள். அவ்வளவுதான். ‘‘ஒற்றை” தான் அதன் நோக்கம் வடிவம் எல்லாம். சனாதனம் எனும் ஒற்றை தன்னில் ஒருபோதும் பன்மைத்துவத்தின் இருப்பிற்கு இடமளிக்காது. பாஜக ‘ஒற்றை’க்கு எதிரான’ பன்மைத்துவத்தை’ அதிலும் ஒருவகையில் தன்னிலிருந்து கிளைத்த, கிளைக்காத (திமுக, அகாலி தளம், முஸ்லீம்லீக் போன்றவை) பன்மைத்துவத்தின் ஒருங்கிணைக்கும் விசையாக தன்னை உருமாற்றிக் கொள்ள முனைய வேண்டும். விசை என்றால் ஆதார விசை’ என்ற பொருளில் அல்ல. இசைவான இயக்கத்திற்கான தளமாக தன்னைத் தகவமைத்துக் கொள்ள வேண்டும்.
இந்தியவாதம் எனும் தேசியவாதம் பொய்மையானது. தேசியவாதம் தன்னை இருத்திக்கொள்ள, பொருள்படுத்திக் கொள்ள எதிரிகளை கட்டமைத்தாகவேண்டும். பாஜக / ஆர்.எஸ்.எஸ். ‘ஒப்பந்தம்’ நேரடியானது. ஆர்.எஸ்.எஸ். தேசியம் இந்துத்துவ தேசியம். இந்துத்துவா கோட்பாட்டுப்படி இந்திய மண்ணில் பிறக்க நேர்ந்த அனைவரும் இந்துக்களே. அவர்கள் எந்தவிதமான ‘மத நம்பிக்கை’ கொண்டவர்களானாலும் இந்துக்களே. அப்படியானால் ஏன் இந்துத்துவா எனும் கோட்பாடு வன்முறையாகப் பிறர் மீது திணிக்கப்படுகிறது. உணவு, உடை என அனைத்தின் மீதும் எதற்கு கண்காணிப்பு. எத்தனை அரச பயங்கரவாதங்கள் நடத்தப்பட்டாலும் அனைத்துத் தரப்பையும் ஒடுக்கிவிடும் முயற்சியில் இதுவரை எந்தப் பாசிசமும் வென்றதாகச் சரித்திரமில்லை.எல்லை மீறிய பாசிசங்கள் சுயமாகவே அழிவைத் தேடிக் கொண்டதுதான் வரலாறு. ஆனால் இறுதியில் ஒழிந்து போகும் என்பதால் நிகழ்காலத்தின் நெருக்கடியை ஏற்க முடியுமா?
அதற்கான மாற்றிற்கான சாத்தியம் மாநிலங்களின் இன/மொழி/கலாச்சார ஓர்மைகளில்தான் கண்டடைய இயலும். தேசியம் எந்த வடிவில் வந்தாலும் பாசிசம்தான். மொழி தேசியம் பேசுபவன் ஜாதியவாதி. பாசிசத்தின் வடிவம் ஜாதியத்தையும் மதவாதத்தையும் எளிதில் பொருந்திவிடும். வட்டார/ மாநில உரிமைகளே எதிரிகளை ‘கட்டமைக்க’ வேண்டிய தேவையற்றவை. இன/மொழி/கலாச்சார/ பண்பாட்டு பன்மைத்துவம் உயிர்ப்புக் கொள்ளும் ‘‘வெளி” மாநிலங்களே. அந்தப் பன்மைத்துவத்தை அழித்தொழிக்கும் அமிலப் பாய்ச்சலே அனைத்துவகை தேசியங்களும். நாடு எனும் அமைப்பில் இன்று மாநிலங்களாக அறியப்படும் அலகுகள், திட்டமிட்டு ‘கட்டமைக்கப்பட்டவை’ அல்ல. அவற்றின் பன்மைத்துவத்தின் பரிமாணங்கள் தொடர்ந்த இருப்பின் வழியாகத் தொகுத்துக் கொள்ளப்பட்டவை.
எனவே இந்திய அளவிலான இருப்பு கொண்ட காங்கிரசும் அதன் தலைவர் ராகுல் அவர்களும், பாசிச பாஜகவின் ‘இந்துத்துவ தேசியவாதத்திற்கெதிரான போரில், இந்தியக் கூட்டாட்சியின் ‘குரலாக’, பன்மைத் துவத்தின் ‘குரலாக’, மாநில உரிமைகளின் ‘குரலாக’ ஒலிப்பதே அவர்களின்/ அந்த அமைப்பின் வரலாற்றுப் போக்கின் நவீன மாதிரியாக இருக்கும் வாய்ப்பு. ஏற்கனவே நாடாளுமன்றத்தில் ‘தமிழ்நாடு’ போன்றவை எழுப்பும் உரிமைக்குரலை உங்களால் ஒருபோதும் ஒழித்துவிட முடியாது என சங்பரிவார் பயங்கரவாதத்திற்கு அறிவுறுத்தியவர் நீங்கள். தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவின், காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களின் “தனித்தன்மைகளை” ஏற்று கூட்டாக, கூட்டாட்சி எனும் ‘மேலாதிக்க மறுப்பு’ அரசியலை முன்னெடுப்பதே இந்தியக் குடியரசைக் காப்பதற்கான பாதை என்ற குரலாக ராகுல் தொடர்ந்து ஒலிக்கவேண்டும்.