பாபு தற்செயலாக அவளை அந்தக் கடைவீதியில்பார்த்தான். அவளுடைய கூடுதல் பார்வையும்சிரிப்பும் அவளைக் காட்டிக் கொடுத்தன. பாபு அவளை நெருங்கிச் சிரித்துக்கொண்டே தன்னுடன் வரமுடியுமா என்று கேட்டான். அவள் வருவதற்குச் சம்மதம் தெரிவிக்கும் முன் தன்னுடைய ஊதியம் இவ்வளவு என்று சொன்னாள். அவன் “சரி” என்றான். கையில் அவள் இரண்டு கட்டைப் பை வைத்திருந்தாள். அதில் ஏதோ பொருட்கள், காய்கறிகள் இருந்தன.

அவள் பைகளைக் காண்பித்து இதை வீட்டில்கொடுக்கவேண்டும் என்றும் கொடுத்துவிட்டு அவன் கூப்பிடும் இடத்திற்கு வருவதாகவும் கூறினாள்.

“என்னிடம் கார் இருக்கிறது. நான் உங்களை வீட்டில் இறக்கிவிடறேன். பிறகு நான் சொல்லும் இடத்திற்கு என்கூட நீங்கள் வரலாம்” என்றான்.

அவள் சற்று யோசித்துவிட்டு, “சரி” என்றாள். அவன்கூட நடந்துவந்தாள். அவன் அவள் வைத்திருந்த ஒரு பையை வாங்கிக்கொண்டான். இருவரும் காரை நோக்கி நடந்தார்கள்.

“எங்கு போகவேண்டும்” என்று பாபு கேட்டான். அவள் இடத்தைச் சொன்னாள்.

பிறகு இருவரும் மௌனமாகவே நடந்துவந்தார்கள். காரை அடைந்தாயிற்று. காரின் பின் கதவைத் திறந்து, அவனிடமிருந்த பையையும் வாங்கிப் பின்புற ஸீட்டில் வைத்துவிட்டு அவள் உட்கார்ந்துகொண்டாள். கார் ஸ்டார்ட் ஆகியது. அவள் வழியைச் சொன்னாள். கார் குறுகிய சாலைகளின் வழி சென்றது. ஓர் இடத்தில் காரை நிறுத்தச் சொன்னாள். “இந்த சந்திற்குள் செல்ல வேண்டும். கார் உள்ளே வரமுடியாது. நான் போய் பைகளைக் கொடுத்துவிட்டு வந்துவிடுகிறேன். இப்படி ஓரமாக நிறுத்தி வைத்துக்கொள்ளுங்கள்” என்றாள்.

அவள் காரிலிருந்து இரண்டு பைகளையும் எடுத்துக் கொண்டு பாபுவைப் பார்த்துச் சிரித்தாள். பிறகு பைகளுடன் சந்திற்குள் திரும்பினாள். பாபு காரிலேயே அமர்ந்து பாட்டுக் கேட்டுக்கொண்டிருந்தான். பிறகு இறங்கி சந்துக்குள் திரும்பி வீடுகளைப் பார்த்தான். சந்தின் இருபுறமும் அசுத்தங்களாக இருந்தன. போர்ஷன் வீடுகள் சில தெரிந்தன. திரும்பி வந்து காருக்குள் உட்கார்ந்து பாட்டுக் கேட்டான்.

சற்று நேரத்தில் அவள் வந்தாள். ஆடை மாற்றியிருந்தாள். முகம் கழுவி பவுடர் போட்டிருந்தாள்.

“ரொம்ப நேரமாயிருச்சா.”

“இல்லை. சீக்கிரமாவே வந்துட்டே.”

“போர்ஷன் வீடா.”

“ஆமாம்.”

“கூட யார் இருக்காங்க.”

“அம்மா இருக்காங்க. நோயாளி.”

“அப்பா.”

“எங்கேயிருக்கார்னு தெரியலை.”

“கூடப்பிறந்தவங்க…”

“ஒரு அண்ணன். எங்கேயிருக்கார்னு தெரியலை.”

“இன்னைக்கு இரவு என்கூட நீ தங்கணும்.”

“சரி. நான் சொல்லிட்டுத்தான் வந்தேன் .காலையிலும் வரலாம். லேட்டாவும் வரலாம்னு அம்மாவுக்கு டிபன் எடுத்து வைச்சுருக்கேன். பிரச்சினையில்லை. தங்கலாம். நான் உங்கிட்டே சொன்னது ஒரு இரவு தங்கறதுக்கான பணம் இல்லை. அதுக்குன்னா கூட ஆகும்.”

“பரவாயில்லை. முதல்லே எனக்கு அந்த எண்ணம் இல்லை. இப்ப இரவு தங்கலாம்னு தோணுது.”

“உங்க விருப்பம் போல இருக்கேன்” என்றாள். அவன் மனம் இந்த வார்த்தைகளால் கிளர்ச்சியடைந்தது. பெரிய ஹோட்டலின் வளாகத்திற்குள் கார் நுழைந்தது.

“பெரிய ஹோட்டலா இருக்கே” என்றாள்.

“ஆமாம். பெரிய ஹோட்டல்தான். ரூம் வசதியா இருக்கும்.”

“நான் துண்டுகூட எடுத்து வரலை” என்றாள்.

“துண்டு, சோப், டூத்பேஸ்ட், எல்லாம் ரூம்லேயே இருக்கும்” என்றான்.

இருவரும் அறைக்குள் நுழைந்தார்கள். சோபாவில் அவளை அமரச் சொன்னான். அந்தப் பகட்டான சூழ்நிலைக்கு அன்னியமானவளாக அவள் உணர்ந்திருந்ததினால் ஒடுங்கி உட்கார்ந்திருந்தாள். அவன் அவளை நன்றாகச் சௌகரியமாக உட்காரச் சொன்னான்.

“உன் பெயரென்ன” என்று அவன் கேட்டான்.

அவள் “சுந்தரி” என்றாள்.

“நான் உன்னை ‘சுசித்ரா’ என்று கூப்பிடுவேன்” என்றான் பாபு. அவள் “சரி” என்றாள்.

“சுசித்ரா பாத்ரூம் போறதுன்னா போயிட்டு வா” என்றான்.

சுசித்ரா எழுந்து பாத்ரூம் சென்றாள். பாத்ரூமிற்குள் சென்று பாத்ரூம் சுத்தமாக இருப்பதைப் பார்த்தாள். சிறுநீர் கழித்தாள். கண்ணாடியில் முகம் பார்த்துக்கொண்டாள். கூந்தலைச் சரிசய்துகொண்டாள். வேறு சேலை கட்டி வந்திருக்கலாமே என்று அவளுக்குத் தோன்றியது. அவன் சோபாவில் அமர்ந்து ஸ்டூலில் காலை நீட்டி அமர்ந்து டி.வி. பார்த்துக்கொண்டிருந்தான். அவள் சோபாவில் அமர்ந்தாள். பாபு சோபா அருகே வந்து அவளை சோபாவிலிருந்து எழச் சொன்னான். அவளை இறுக்கமாகக் கட்டிக்கொண்டான். அவனுடைய இறுக்கம் தாளாமல் சற்று திணறினாள். அவன் இறுக்கத்தைத் தளர்த்தினான். அவன் இப்போது அவளை இறுக்கக் கட்டினான். “சுசித்ரா” என்று முணுமுணுத்தான்.

“காலையில் ஒரு விஷயம் சொல்றேன் . நீ சம்மதிக்கணும்” என்று அவள் காதருகே கிசுகிசுப்பாகக் கூறினான். அவள் “சரி” என்றாள்.

காலையில் இருவருக்குமே உடல் அலுப்பு இருந்தது. இருவருக்குமே மாற்று ஆடைகள் இல்லை. இருவரும் குளித்துவிட்டு ஆடைகள் அணிந்துகொண்டார்கள்.

“யாருங்க அந்த சுசித்ரா. ராத்திரி நூறு தடவையாவது சொல்லியிருப்பீங்க. உணர்ச்சி வர்றப்பல்லாம் அந்தப் பேரைச் சொன்னீங்க.”

“அந்த ‘சுசித்ரா’ நீதான்” என்றாள் பாபு.

“காலையிலே ஏதோ சொல்றதா சொன்னீங்களே.”

“ஆமாம் சுசித்ரா. நான் ஊருக்கு வெளியே ஒரு வீடு பாத்து உன்னை வைத்துக்கொள்கிறேன். உன் அம்மாவும் உன்கூட இருக்கட்டும். நாம் மாடியிலும் உன் அம்மா கீழேயும் இருக்கலாம். இரவில் தங்குவது பெரும்பாலும் எனக்குச் சிரமம். பெரும்பாலும் மதிய வேளைகளில் வந்து செல்வேன். வீட்டு வாடகை, குடும்பச் செலவு, பிற செலவுகள் எல்லாத்துக்குமான பணத்தை உன்னிடம் கொடுத்துவிடுவேன். நீ வேற யாரிடமும் செல்லக்கூடாது. சுசித்ரா என் மனைவி மாதிரி.”

சுசித்ரா அவனை அணைத்து முத்தமிட்டாள்.

போர்ஷன்வாசி ஒருவர் மாலில் சுசித்ராவைப் பார்த்தார். அவள் பளபளப்பாக செழிப்புடன் நகைகள் அணிந்து இருந்தாள். அவளை சந்தேகத்துடன் பார்த்த போர்ஷன்வாசி, “நீ சுந்தரிதானே” என்றார்.

“இல்லை. என் பெயர் சுசித்ரா” என்றாள்.

 

 

 

அவர் படுக்கையில் படுத்திருந்தார். மனைவியை அழைத்தார். நான்கு முறை அழைத்தும் அவள் வரவில்லை. படுக்கைக்குப் பக்கத்தில் ஒரு பஸ்ஸர் வைக்கச் சொல்லியிருந்தார். பஸ்ஸர் ஒலி தனக்குப் பிடிக்காது என்று மனைவி மறுத்துவிட்டாள். செல்போனில் கூப்பிடலாம். கூப்பிடும் நேரத்தில் பெரும்பாலும் அவள் வேறு யாரிடமோ பேசிக்கொண்டிருப்பாள். அவர் கூப்பிடுவதை செல்போன் மூலம் அறிந்தாலும், யாரிடம் பேசிக்கொண்டிருக்கிறாளோ அதை முடித்துவிட்டு, செல்போனிலேயே அவரைக் கூப்பிடுவாள். ஓரே வீட்டிற்குள் இருந்து கொண்டு இப்படி செல்போனில் பேசிக்கொள்வது அவருக்கு எரிச்சலாக இருக்கும். இருந்தாலும் தன் தேவையை அவர் சொல்வார். காபி வேண்டும் என்று

சொல்வார். காபி தாமதமாகத்தான் வரும். அவர் எதிர்பார்த்துக்கொண்டே இருப்பார். ஆனால் காபி வந்துவிடும்.

அவருக்கு உயிரின் இருப்பு பெரிய பிரச்சி னையாக இருந்தது. உயிர் போய்விடும் என்றுதான் ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார். காலையில் வருபவர், வந்து டயபர் மாற்றிவிட்டு ஈரத்துணியால் உடலைத் துடைத்துவிட்டுச் சென்றுவிட்டார். அவர் மனைவியுடன் சில விஷயங்கள் பேச நினைத்திருந்தார். அவள் பொறுமையாகக் கேட்கவேண்டும்.

மனைவி வந்தாள். “என்ன” என்று அதட்டலாகக் கேட்டாள். அவர் பயந்தார். அவளைத்தான் உணவுக்கும் பிற விஷயங்களுக்கும் நம்பி இருக்கவேண்டியுள்ளது. சேரைப் பத்து அடி தள்ளிப்போட்டு உட்கார்ந்தாள்.

“நான் உயிருடன் இருப்பது எனக்கும் பிரச்சினை. உனக்கும் பிரச்சினை. நான் ஒரு முடிவுக்கு வந்துள்ளேன். என் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தினால், என்னையறியாமல் உடல் திணறும். அதைப்பற்றியோசிக்காமல் தொடர்ந்து அழுத்தினால் என் உயிர்அடங்கிவிடும். எனக்கு உதவி செய்வதாக நினைத்துக்கொள்.”

“உங்கள் திட்டம் எனக்குத் தெரியும். எனக்குக் கொலைப்பட்டம் கட்டி ஜெயிலுக்குள் தள்ளவேண்டும் என்பதுதானே. நீங்கள் வாட்ஸ்அப்பிலோ மெசேஜிலோ இத்தகவலைப் பிறருக்குத் தெரிவித்து என்னை மாட்டிவிடுவீர்கள். உங்களைப்பற்றி எனக்குத் தெரியாதா.”

“இல்லை. சத்தியமாக நான் அப்படிச் செய்யமாட்டேன். என் செல்போனை நீ எடுத்து வைத்துக்கொள்.”

“உங்கள் தந்திரம் தெரியாதா. என்னிடம் செல்போனைக் கொடுத்துவிடுவீர்கள். ஆனால் யாரிடமாவது சொல்லி வைத்திருப்பீர்கள். மரணத்திற்குப் பின் சந்தேகமரணம் என்று புகார் கொடுக்கும்படி. என்னை மாட்டிவிடத் திட்டம் போடுகிறீர்களா.”

“இல்லை. அப்படியெல்லாம் செய்யவில்லை. என்னை நம்பு. உடம்பு சரியில்லாமல் கிடப்பதால் யாருக்கும் சந்தேகம் வராது.”

“இல்லை. உங்களை நம்பமுடியாது . நான் இருக்கறப்ப அந்தத் தேவடியா முண்டையை சேத்து வைச்சிருந்திங்களே. என்னை எவ்வளவு திட்டியிருப்பீங்க. எவ்வளவு கொடுமைப்படுத்தியிருப்பீங்க. அப்ப எனக்கு வேற வழி இல்லை. இப்ப ரெண்டு மகன்ங்க இருக்காங்க. நீங்க போனதுக்கப்பறம் நான் போய் ஜம்முனு அவங்ககிட்டே இருந்துக்குவேன். நீங்க மனசுலே ஈரம் இல்லாத ஆளு. புள்ளைகள்கிட்டே என்னைக்காவது பாசமா பேசியிருப்பீங்களா. நல்லவேளை, படிக்க வைச்சிங்க. அது காலத்தோட கட்டாயம். இப்ப என் காலம். என்னை நம்பித்தான் நீங்க இருக்கீங்க.”

“என்னைப் பழிவாங்குறியா?.”

“ஆமாம்னு வைச்சுக்குங்க.”

“எனக்கு காபி கிடைக்குமா?.”

“கொண்டு வர்றேன்.” அவள் எழுந்து சென்றாள். ‘பட்டினி போட்டுக் கொன்றுவிடலாம். அந்தப் பாவம் வந்து சேருமே’ என்று வழக்கம்போல யோசித்துக்கொண்டே அடுக்களைக்குச் சென்றாள்.

காபி கொண்டுவந்தாள். அவளுக்கு நெஞ்சு வலிக்கிறாற் போல இருந்தது. காபியை அவர் படுக்கையருகே இருந்த ஸ்டூலில் வைக்கும்போது அவளுக்குக் கடுமையாக நெஞ்சு வலித்தது. பத்தடி தள்ளியிருந்த சேரில் உட்கார்ந்தாள். நெஞ்சைப் பிடித்துக்கொண்டிருந்தவளின் கை துவண்டு விழுந்தது. சேரிலேயே சரிந்த நிலையில் இருந்தாள். அவர், அவளுடைய பெயரைச் சொல்லி அழைத்தார். அவளிடம் அசைவில்லை.

அவர் உடனே செல்போன் மூலம் அருகிலிருப்பவர்களுக்குத் தகவல் சொன்னார். காபியைக் குடித்தார். அவள் பிழைத்துவிடுவாளா அல்லது இறந்துவிட்டாளா என்பது தெரியவில்லை.

ஒருவேளை இறந்துவிட்டால், எங்காவது ஹோமில் கொண்டுபோய் தன்னைச் சேர்த்துவிடுவார்களே என்ற கவலை ஏற்பட்டது. அதற்கு அவள் கூட இருப்பதே தேவலை என்ற எண்ணம் ஏற்பட்டது. அருகிலிருந்தவர்கள் வரும் சத்தம் கேட்டது. அவளைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனை சென்றார்கள்.

சுகமாகி வந்துவிடுவாளா அல்லது இறந்துவிட்டாளோ என்று குழப்பம் ஏற்பட்டது. சுகமாகி வந்துவிட்டால்  நல்லது என்றே அவருக்குத் தோன்றியது.

 

 

 

தொலைக்காட்சிப் பெட்டியில் நடிகை ராகச்சந்திரா பாடிக்கொண்டிருக்கும் காட்சி. சினிமாவில் தாய், தந்தையின் அறுபதாவது மணவிழா அல்லது யாரேனும் ஒருவருக்குப் பிறந்தநாள் விழா வாக இருக்கவேண்டும். சுந்தரத்திற்கு சுகன்யா நினைவு வந்தது. சுகன்யாவின் தோற்றமும் முகமும் நடிகை ராகச்சந்திராவின் தோற்றமும் முகமும் ஒன்றாக இருப்பது போலவே அவனுக்குத் தோன்றும். அந்தக் காலத்தின் பதின் பருவத்தில், ராகச்சந்திராவின் புகைப்படம் ஒன்றைப் பத்திரிகையில் பார்த்தான். அந்தப் படத்தை சுகன்யாவின் படமாக நினைத்துக்கொண்டான்.

பீரோவில் ஒரு டைரியில் பத்திரிகையிலிருந்து கத்தரித்து எடுக்கப்பட்ட அந்தப் படத்தை வைத்திருந்தான்.

சுந்தரத்தின் மனைவி சேனலை மாற்றினாள். சுந்தரம் பதறிப் போனான். “ஏன் மாத்தறே. திரும்ப அதை வை” என்றான்.

“ராகச்சந்திராவைப் பாக்கணுமாக்கும்” என்றாள்.

“அப்படி இல்லை. இந்தப் பாட்டு கேக்க நல்லா இருக்கு.”

“பொய் சொல்லாதிங்க. நீங்க பாட்டைக் கேக்கறீங்களா, அவளைப் பாக்குறிங்களா.”

இந்த சந்தர்ப்பத்தில் மனைவியைக் குஷிப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு, “ராகச்சந்திராவைப் பாத்தா உன்னைப் பாத்த மாதிரி இருக்குல்ல…”

“பொய் சொல்லாதிங்க. அவ வேறே யார் மாதிரியோ இருக்கா. அந்த அவளை நினைச்சு உருகி இந்த நடிகையைப் பாத்துக்கிட்டு இருக்கிங்க.”

சுந்தரத்துக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

“பீரோவுலே உள்ள பழைய டைரிக்குள்ளே பத்திரிகையிலிருந்து எடுத்த ராகச்சந்திரா படத்தை வைச்சுருக்கறதை நான் பாக்கலைன்னா நினைச்சுகிட்டிருக்கிங்க?.”

“அந்த நடிகை மேலே அந்த வயசிலே இருந்த அபிமானத்துலே அந்தப் படத்தை வைச்சிருக்கேன். நீ வேற யாரோடையோ அந்த நடிகையைத் தேவையில்லாமல் கனெக்ட் பண்றே.”

“உங்க மனசைத் தொட்டுச் சொல்லுங்க. அந்த ராகச்சந்திரா நீங்க காதலிச்ச பொண்ணு மாதிரி இல்லைன்னு.”

“நான் யாரையும் காதலிக்கலையே. என்னை யாரு காதலிப்பா.”

“நீங்க காதலிச்சிருக்கலாம்லே.”

சுந்தருக்கு சுகன்யா நினைவு வந்தது. ஏதாவது உளறிவிடுவதற்கான சந்தர்ப்பம் இது என்றும் இந்தச் சந்தர்ப்பத்தை மனைவி சாமர்த்தியமாகப் பயன்படுத்திக் கொள்வதாகவும் தோன்றியது. தொலைக்காட்சிப் பெட்டியில் வேறு காட்சி மாறிவிட்டது.

“என்ன நான் சொன்னதுக்குப் பதிலே காணோம்.”

“ஏதாவது இருந்தாத்தானே சொல்றதுக்கு.”

“சரி. காபி கொண்டுவரவா.”

அப்பாடா என்றிருந்தது சுந்தரத்துக்கு. மனைவி அறையிலிருந்து வெளியேறினாள். காபி தயார் செய்து எடுத்துவந்து அவனிடம் கொடுத்தாள். அவன் காபியை அருந்திக்கொண்டே தொலைக்காட்சிப் பெட்டியில் ஓடும் காட்சிகளைப் பார்த்துக்கொண்டிருந்தான். மனைவி தன் அறைக்குள் சென்று கதவைத் தாழிட்டாள். பீரோவிற்குள் துணிகளுக்குக் கீழ் இருந்த ஒரு நோட்டைப் பிரித்து அதில் இருந்த பத்திரிகையில் வெட்டி எடுத்த சினிமா நடிகரின் படத்தைப் பார்த்துவிட்டு மீண்டும் நோட்டை அதே இடத்தில் ஒளித்து வைத்தாள்.